உடலுக்குள் ஒரு ராணுவம் - 38: தடுப்பூசி எனும் தாழ்ப்பாள்

உடலுக்குள் ஒரு ராணுவம் - 38: தடுப்பூசி எனும் தாழ்ப்பாள்

இரண்டு வருடங்களுக்கு முன்பு கரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியபோது உலகளவில் இரண்டு வார்த்தைகள் பிரபலமாயின. ஒன்று, நோய்த் தடுப்பாற்றல். மற்றொன்று, தடுப்பூசி.

இதற்குக் காரணம், கரோனா தொற்று உடலில் தடுப்பாற்றல் இல்லாதவர்களைத்தான் அதிகம் பாதிக்கிறது என்கிற செய்தி. அதிக இறப்பு ஏற்பட்டதும் தடுப்பாற்றல் இல்லாதவர்களுக்குத்தான். ஆகவே, இந்த வார்த்தை பரவலானது. தடுப்பாற்றலின் மகிமையையும் அதேநேரத்தில் அது ஏற்படுத்தும் ‘குளறுபடி’களையும் இதுவரை விரிவாகவே பார்த்துவிட்டோம்.

அடுத்து நாம் பார்க்க வேண்டியது, தடுப்பூசி குறித்த விவரங்கள். கரோனா பெருந்தொற்று காரணமாக உலகமெங்கிலும் லட்சக்கணக்கில் கொத்துக்கொத்தாக உயிர்ப்பலிகள் ஆவதைப் பார்த்தும் கேட்டும் கதிகலங்கிப்போன பொதுச் சமூகம் ‘இந்தக் கொடுமையிலிருந்து விடுதலை கிடைக்காதா?’ என ஏங்கத் தொடங்கியபோது, வராது வந்த மாமணிபோல் வந்தது கரோனா தடுப்பூசி! கரோனாவை ஒழிக்க வந்த பேராயுதமாக இந்தத் தடுப்பூசி கணிக்கப்பட்டது. அதனால், தடுப்பூசி எனும் அருஞ்சொல் படித்தவர் முதல் பாமரர் வரை அனைவரின் வாய்ச்சொல்லிலும் இடம்பிடித்துவிட்டது.

தடுப்பூசி என்பது என்ன?

சுருக்கமாகச் சொன்னால், தடுப்பூசி என்பது நமக்கு நோய் வராமல் தடுக்கும் ஒரு தாழ்ப்பாள்; நம் உடலுக்குள் இயங்கும் தடுப்பாற்றல் ராணுவத்துக்குப் பலம் சேர்க்கும் ஒரு துணை ராணுவப் படை. முள்ளை முள்ளால் எடுக்கும் வித்தைதான் தடுப்பூசி. ஒரு தொற்றை ஒழிக்க வேண்டுமானால், அந்தத் தொற்றை ஏற்படுத்தும் கிருமியையே உடலுக்குள் அனுப்பினால் போதும், அந்தத் தொற்று காலியாகிவிடும் எனும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது இது. இந்த உண்மையை இந்த நூற்றாண்டில் கரோனா பெருந்தொற்றை கரோனா தடுப்பூசிகளால் கட்டுப்படுத்தியதை வைத்து நாம் அனுபவத்தில் அறிந்திருக்கிறோம்.

ஆனால், இந்த ரகசியத்தை முதன்முதலில் அறிந்திருந்தவர்கள், சீனப் பழங்குடிகள்தான். சீனாவில் ‘வேரியோலா’ எனும் வைரஸ் பாதிப்பின் மூலம் பெரியம்மை (Small pox) பரவியபோது அந்த நோயைத் தடுக்க அவர்கள் கையாண்ட உத்தி என்னவென்றால், அந்தக் கிருமியையே அடுத்தவர்களுக்குச் செலுத்துவது. அதாவது, ஒருவருக்குப் பெரியம்மை வந்திருக்கிறது என்றால், அவருடைய உடலில் தோன்றும் அம்மைக் கொப்புளங்களில் இருந்து அம்மைப் பாலை எடுத்து அடுத்தவர்கள் உடலில் தோலைக் கீறி தோலுக்கு அடியில் செலுத்துவது. இந்த வகை நோய்த் தடுப்பு முறைக்கு ‘வேரியோலேஷன்’ (Variolation) என்று பெயரிட்டார்கள். தமிழில் சொன்னால், ‘அம்மைப் பால் குத்துதல்’.

இந்த முறையில் ஒரு பாதிப்பும் இருந்தது. அதாவது, அம்மைப்பாலைக் குத்துவதன் மூலம் அவருக்கு பெரியம்மை நோய் வருகிறது. அப்போது அவருக்குப் பெரியம்மைக்கு எதிராக இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடுகிறது. அதற்குப் பிறகு அவருக்குப் பெரியம்மை வருவதில்லை. அதேசமயம் நோய் தீவிரமானால், அவருக்கு இறப்பும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இந்தப் பழங்குடி மருத்துவமுறையை அறிவியல் ரீதியாக உறுதி செய்ததோடு இறப்புகளைத் தவிர்க்கவும் வழி சொன்னவர், எட்வர்ட் ஜென்னர். இவர் ஓர் ஆங்கில மருத்துவர். இவருக்கு அம்மைப் பால் குத்தும் யோசனை வந்தது ஒரு தனிக்கதை.

உலகின் முதல் தடுப்பூசி!

அது 1765-ம் ஆண்டு, ஜூன் மாதம். ஒரு மதியப் பொழுதில் இங்கிலாந்தில் பிரிஸ்டல் (Bristol) நகரத்திற்கு அருகில் இருந்த சோட்பரி (Sodbury) எனும் சிறு நகர மருத்துவமனைக்கு வருகிறார், ஓர் இளம் பெண். அங்கு டேனியல் லுட்லோ (Daniel Ludlow) எனும் மருத்துவரைச் சந்திக்கிறார். அந்த இளம் பெண்ணின் பிரச்சினை இதுதான்… சில நாள் காய்ச்சல், கொஞ்சமாக உடலெங்கும் சிறு கொப்புளங்கள்.

டேனியல் லுட்லோ அவருக்குப் பெரியம்மை வந்திருப்பதாகச் சந்தேகப்படுகிறார். அதை அந்தப் பெண்ணிடம் தெரிவிக்கிறார். ‘அப்படி இருக்க வாய்ப்பில்லை, மருத்துவரே’ என்று மறுக்கிறார் அந்தப் பெண். மருத்துவருக்குக் கோபம் வருகிறது. ‘இதை எதை வைத்துச் சொல்கிறாய்?’ எனக் கேட்கிறார். ‘எனக்கு ஏற்கனவே பசு அம்மை (Cow pox) வந்துவிட்டது. அதனால் பெரியம்மை வர வாய்ப்பில்லை!’ என்கிறார். இதை அந்த மருத்துவரால் நம்ப முடியவில்லை. காரணம், அப்போது அவருக்குப் பசு அம்மைக்கும் பெரியம்மைக்கும் உள்ள தொடர்பு தெரிந்திருக்கவில்லை. சில மருந்துகளைக் கொடுத்து அந்தப் பெண்ணை அனுப்பிவிடுகிறார். இந்த உரையாடலை அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தவர், எட்வர்ட் ஜென்னர். டேனியல் லுட்லோக்கு அப்போது உதவி மருத்துவராக இருந்தவர் அவர்.

 எட்வர்ட் ஜென்னர்
எட்வர்ட் ஜென்னர்

எட்டு ஆண்டுகள் கழித்து, எட்வர்ட் ஜென்னர் தனக்குச் சொந்தமாக ஒரு மருத்துவமனையைத் தொடங்கியபோது, அந்த இளம் பெண்ணின் உரையாடல் அவருக்கு ‘ரீவைண்ட்’ ஆனது. அதை உறுதிப்படுத்த விரும்புகிறார் ஜென்னர்.

பசுக்களிடமிருந்து பரவுவது பசு அம்மை. முக்கியமாக, பால் பண்ணைத் தொழிலாளர்களுக்கு இந்த அம்மை வருவதுண்டு. அதேசமயம் இவர்களுக்குப் பெரியம்மை வருவதில்லை. அப்படியே வந்தாலும் மிகவும் சிறிய அளவில்தான் பாதிப்புகள் காணப்பட்டன. அதற்குக் காரணம் என்ன? இதை அறிய விழைகிறார், எட்வர்ட் ஜென்னர்.

அது 1796-ம் ஆண்டு. மே 14. பால் பண்ணைக் கூலிப் பெண் சாரா நேம் (Sarah Nelms) என்பவர் பசு அம்மைக் கொப்புளங்களுடன் ஜென்னரின் மருத்துவமனைக்கு வருகிறார். அவருடைய அம்மைக் கொப்புளத்திலிருந்து அம்மைப் பாலை எடுத்து பிப்ஸ் (Phipps) எனும் எட்டு வயது அநாதைச் சிறுவன் கையில் செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து அவனுக்குச் சிறிய அளவில் காய்ச்சல் வந்தது. மிகச் சிறிதாகக் கொப்புளங்களும் வந்தன. ஆனால், மற்றவர்களுக்கு ஏற்பட்டதைப்போல் அதிக பாதிப்பு இல்லை. பசு அம்மை வந்த பத்தாம் நாளில் அவன் குணமாகிவிடுகிறான்.

அடுத்து 1796, ஜூலை 1-ம் தேதி. மருத்துவ வரலாற்றில் ஒரு திருப்புமுனை உண்டான தினம். அநாதைச் சிறுவன் பிப்ஸ் தடுப்பூசி வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்த தினம். ஆம், அன்றுதான் பெரியம்மை வந்த ஒரு நோயாளியிடமிருந்து பெரியம்மைப் பாலை எடுத்து அவனுக்குச் செலுத்தினார் ஜென்னர். அந்தச் சிறுவனுக்குப் பெரியம்மை நோய் வந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், பெரியம்மை அவனுக்கு வரவே இல்லை. எட்வர்ட் ஜென்னரின் இந்த ஆய்வுதான் தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு ஆரம்ப விதை போட்டது. முள்ளை முள்ளால் எடுக்கும் வித்தை உண்மையானது. உலகில் முதல் தடுப்பூசி உருவானது.

தடுப்பூசி எப்படித் தயாரிக்கப்படுகிறது?

இதைத் தெரிந்துகொண்டால் அது எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஒரு தடுப்பூசியை உயிருள்ள, வீரியம் குறைந்த நோய்க் கிருமிகளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். அல்லது அழிக்கப்பட்ட கிருமிகளை அல்லது வீரியம் நீக்கப்பட்ட கிருமிகளை முழுவதுமாகவோ, ஒரு பகுதியாகவோ பயன்படுத்தியும் தயாரிக்கலாம். அல்லது அவற்றின் முறிக்கப்பட்ட நச்சுக்களைக் கொண்டும் தயாரிக்க முடியும். இந்த மூலக்கூறுகளை நாம் 'ஆன்டிஜென்' (Antigen) என்கிறோம். இவைதான் ரத்தத்தில் 'எதிரணுக்க'ளின் (Antibodies) உற்பத்தியைத் தூண்டுகின்றன. இந்த எதிரணுக்கள் உடலுக்குள் நுழையும் கிருமிகளுடன் போராடி நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகின்றன.

ஒரு தடுப்பு மருந்தை ஊசி மூலம் செலுத்தினால், அது 'தடுப்பூசி' (Injectable vaccine). அதையே சொட்டு மருந்தாக வாய்வழி கொடுத்தால், 'வாய்வழித் தடுப்பு மருந்து' (Oral vaccine). விவசாயம் செய்யப்படும் சோளக்காடுகளில் பறவைகளை விரட்ட சட்டை போட்ட மனித பொம்மைகளை நிறுத்தியிருப்பார்கள். அந்தப் பொம்மைகளைப் பார்க்கும் பறவைகள், அவற்றை மனிதர்கள் என்று எண்ணி பயந்து, சோளக் கதிர்களைத் தின்ன வராது. சோளக்காட்டு பொம்மைகளைப்போலத்தான் தடுப்பூசிகளும்.

இவற்றில் உள்ள கிருமிகள் உடலுக்கு நோய் ஏற்படுத்தும் அளவுக்கு வீரியமுள்ளவை அல்ல. ஆனாலும், நம் தடுப்பாற்றல் மண்டலம், இந்தக் கிருமிகள் உடலில் நோய்களை உண்டாக்கிவிடக்கூடாதே என்று எச்சரிக்கையாக இருந்து, எதிரணுக்களை உற்பத்தி செய்து, நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. ஆக மொத்தம், ஓர் அலாரம் அடிக்கும் வேலையைச் செய்வதுதான் இந்தக் கிருமிகளின் வேலை.

ஒற்றைத் தடுப்பூசியும் கூட்டுத் தடுப்பூசியும்

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் ஒரே ஒரு ஆன்டிஜெனை மட்டும் பயன்படுத்தி, தடுப்பூசி தயாரித்தனர். இந்த வகைத் தடுப்பூசிக்கு 'ஒற்றைத் தடுப்பூசி' (Single vaccine) என்று பெயர். இந்தத் தடுப்பூசி மூலம், குறிப்பிட்ட ஒரு நோய்க்கான எதிர்ப்பு சக்தியை மட்டுமே பெற முடிந்தது. உதாரணமாக, டைபாய்டு தடுப்பூசி.

தற்போது உள்ள அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் ஒரே தடுப்பூசியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆன்டிஜென்களைப் பயன்படுத்தி, ஒரே நேரத்தில் பல நோய்களைத் தடுக்கும் வகையில் தடுப்பூசிகளைத் தயாரிக்கின்றனர். இந்த வகைத் தடுப்பூசிக்குக் 'கூட்டுத் தடுப்பூசி' (Combination vaccine) என்று பெயர். பைவேலன்ட், டிரைவேலன்ட், டெட்ராவேலன்ட், பென்டாவேலன்ட் தடுப்பூசி என்றெல்லாம் சொல்கிறார்கள் அல்லவா? அவை எல்லாம் கூட்டுத்தடுப்பூசிக்கான உதாரணங்கள்.

கூட்டுத் தடுப்பூசி தரும் நன்மைகள்

சரி, கூட்டுத் தடுப்பூசிகளின் அவசியம்தான் என்ன? கேட்க நினைக்கிறீர்கள்தானே? சொல்கிறேன். ஒற்றைத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும்போது, ஒரு நோய்க்கு மட்டும் பாதுகாப்பு கிடைக்கிறது. கூட்டுத் தடுப்பூசியால் ஒரே நேரத்தில் பல நோய்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது. தனித்தனியாகத் தடுப்பூசிகள் செலுத்தப்படும்போது, உடலில் பல இடங்களில் தடுப்பூசிகளைக் குத்த வேண்டியது வரும். அப்போது அந்த இடங்கள் வலிக்கும். கூட்டுத் தடுப்பூசியால் குத்தப்படும் இடங்களையும் வலியையும் குறைக்கலாம். ஒற்றைத் தடுப்பூசியைப் பயன்படுத்தினால், ஒவ்வொரு தடுப்பூசிக்கும் தனித் தனியாக மருத்துவமனைக்குச் சென்றுவர வேண்டும். கூட்டுத் தடுப்பூசியால், மருத்துவமனைக்குச் சென்று வரும் பயணங்களையும் குறைக்க முடியும்; பணச்செலவும் குறையும்.

முதன்மைத் தடுப்பூசி

ஒருவருக்கு முதல்முறையாகச் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு 'முதன்மைத் தடுப்பூசி' (Primary vaccine) என்று பெயர். இது 24 மணி நேரத்திலிருந்து 2 வாரங்களுக்குள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கத் தொடங்கிவிடும். அதேநேரத்தில், தடுப்பூசியைப் பொறுத்து, சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும்போது, இந்த எதிர்ப்பு சக்தியின் அளவு குறையத் தொடங்கும். ஆகவே, மீண்டும் அதே தடுப்பூசியைக் குறிப்பிட்ட இடைவெளிகளில் செலுத்த வேண்டும். இப்படி உடலுக்குத் தேவையான அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதற்காக மீண்டும் செலுத்தப்படுகிற தடுப்பூசிக்கும் 'முதன்மைத் தடுப்பூசி' என்றுதான் பெயர். வீட்டுக்குச் சரியான காவலாளி அமையும்வரை ஒருவர் மாற்றி ஒருவர் எனக் காவலாளிகளைப் பணியில் அமர்த்துவதைப்போலதான் இதுவும். கரோனா கிருமிக்கு எதிராக முதலில் இரண்டு முறை தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டோமல்லவா? அவை முதன்மைத் தடுப்பூசிகள்.

ஊக்கத் தடுப்பூசி

சில தடுப்பூசிகளை முதன்மைத் தடுப்பூசியாகப் பல முறை போட்ட பிறகும்கூட குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த நோய்களுக்குரிய நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும். அந்த நேரத்தில் மீண்டும் அதே தடுப்பூசி போடப்பட வேண்டும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். இவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்காக, மீண்டும் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு 'ஊக்கத் தடுப்பூசி' (Booster vaccine) என்று பெயர். வீட்டில் காவலாளி இருப்பார். ஆனால், அவர் காவல் நேரத்தில் தூங்குவார். அப்போது அவரைத் தட்டி எழுப்புகிறோம். அதுமாதிரிதான் இது. இப்போது கரோனாவுக்கு எதிராக மூன்றாம் முறையாக ‘முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி’ (Precaution dose) எனும் பெயரில் செலுத்தப்படுவது 'ஊக்கத் தடுப்பூசி'யைச் சேர்ந்ததுதான்.

(போர் ‘புரி’வோம்)

படித்தவரின் பதிவு

பயனுள்ள விழிப்புணர்வுப் பதிவு

சென்ற வாரம் மருந்தினால் ஏற்படும் நான்கு வகை ஒவ்வாமைகளையும் அதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகளையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளக்கியிருந்தார் மருத்துவர் கு. கணேசன். இந்த விழிப்புணர்வுப் பதிவு காமதேனு வாசகர்கள் அனைவருக்கும் பயன்பட்டிருக்கும் என்பது திண்ணம். ஏற்கெனவே, மருந்து ஒவ்வாமை இருந்தால், அதை மருத்துவரிடம் முதலிலேயே தெரிவித்துவிட வேண்டும் என்ற ஆலோசனையைப் பெரிதும் வரவேற்கிறேன். அப்போதுதான் அந்த மருந்தை அடுத்தமுறை பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும் என்பதும், ஒவ்வாமை மருந்துக்கு மாற்று மருந்து கொடுக்க மருத்துவரால் முடியும் என்பதும் ஒவ்வொரு வாசகரும் அறிந்திருக்க வேண்டிய செய்திகள்.

- எஸ். கே. சுப்பிரமணியன், கூடுதல் செயலர் (பணி நிறைவு), தமிழக அரசு நிதித்துறை, சென்னை

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in