உடலுக்குள் ஒரு ராணுவம் - 37: மருந்து அலர்ஜி ஆவது எப்படி?

உடலுக்குள் ஒரு ராணுவம் - 37: மருந்து அலர்ஜி ஆவது எப்படி?

“எனக்கு பெனிசிலின் அலர்ஜி” என்றும், “சல்பா மாத்திரைகள் எனக்கு ஒத்துக்கொள்ளாது” என்றும் பேச்சு வழக்கில் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மருந்து என்பது ஒரு வேதிப்பொருள். ஆகவே, எந்த மருந்தும் எவருக்கும் அலர்ஜி ஆகலாம். சாதாரண அரிப்புப் பிரச்சினையில் தொடங்கி உயிருக்கே ஆபத்து ஏற்படுத்துவது வரையிலான கடுமையான பாதிப்புகளையும் அது ஏற்படுத்தலாம்.

காரணம் என்ன?

இந்தக் கொடுமைக்கும் தடுப்பாற்றல் ராணுவத்தின் ‘குளறுபடி’தான் காரணம். மருந்து என்பது திரவ மருந்து, ஊசி மருந்து, மாத்திரை, களிம்பு, மேற்பூச்சு மருந்து (Lotion) எனப் பல வடிவங்களில் கிடைக்கிறது. பொதுவாக, ஒரு மருந்தின் மூலக்கூறுப் பொருளுக்கு அலர்ஜி ஆவது வழக்கம். அல்லது அதைத் தயாரிக்கும்போது சேர்க்கப்படும் சில கலப்புப் பொருட்களுக்கும் அலர்ஜி ஆகலாம்.

உதராணமாக, கேப்சூல் மாத்திரைகளில் உள்ள உறைகூட அலர்ஜி ஆகிறது. மருந்துகளுக்கு நிறம் கொடுக்கும் பொருட்களும் அலர்ஜியை ஏற்படுத்தலாம். மஞ்சள் நிறம் தருகிற டார்ட்ரசீன், சிவப்பு நிறம் தருகிற அமராந்த் இதற்குச் சில உதாரணங்கள். இதுபோல், மருந்துகள் கெட்டுப்போகாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் சோடியம் பென்சோவேட், ஹைட்ராக்சி பென்சோவேட், சல்பர் டை ஆக்ஸடு போன்றவையும் அலர்ஜி பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

இங்கு ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்வது நல்லது. மருந்துகளுக்கு அலர்ஜி ஏற்படுவது வேறு. பக்கவிளைவுகள் ஏற்படுவது வேறு. ஒரு மருந்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும்போதும், இரண்டு மூன்று மருந்துகளைச் சேர்த்துச் சாப்பிடும்போதும், மருந்துகளின் பக்கவிளைவாகவும் சில அறிகுறிகள் தோன்றும். இவற்றிலிருந்து அலர்ஜிக்கான அறிகுறிகளை வேறுபடுத்தத் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு மருந்தைச் சாப்பிடும்போது வாய்க்குள் புண் வரலாம். சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இவை அந்த மருந்தின் பக்கவிளைவுகள்; அலர்ஜியால் இல்லை.

அலர்ஜி ஏற்படுவது எப்படி?

அலர்ஜியில் உடனடி அலர்ஜி, திசு சார்ந்த அலர்ஜி, தடுப்பாற்றல் சார்ந்த அலர்ஜி. தாமதமான அலர்ஜி எனப் பலதரப்பட்ட வகைகள் உள்ளன. (பார்க்க: பெட்டிச் செய்தி). நாம் பயன்படுத்தும் மருந்தைப் பொறுத்து மருந்து அலர்ஜியில்தான் எல்லா வகை விளைவுகளும் ஏற்படுகின்றன.

உடனடி அலர்ஜி என்பது தடுப்பாற்றல் ராணுவத்தில் ஐஜிஇ (IgE) எதிரணு வீரர்கள் தயாராவதால் ஏற்படுவது. பெனிசிலின் ஊசி மருந்துக்கு இவ்வகை அலர்ஜி ஏற்படும். இது சாதாரண அரிப்பில் ஆரம்பித்து, உயிருக்கு ஆபத்து ஏற்படும்வரை பல அறிகுறிகளைத் தோற்றுவிக்கும். ஐஜிஎம் (IgM) அல்லது ஐஜிஜி (IgG) எதிரணு வீரர்கள் தயாரானால் திசு சார்ந்த அலர்ஜி ஏற்படுகிறது. இதன் விளைவால் உடலில் ஏதாவது ஒரு உறுப்பு பாதிக்கப்படும். உதாரணமாக, பெனடாயின் மருந்தால் அலர்ஜி ஏற்படும்போது சிறுநீரகம் பாதிக்கப்படும். ஐஜிஜி (IgG) எதிரணு வீரர்கள் தயாராகும்போது தடுப்பாற்றல் சார்ந்த அலர்ஜி ஏற்படுகிறது. இதற்கு ஓர் உதாரணம், சல்பனாமைடு மருந்து அலர்ஜியால் ருமட்டாய்டு மூட்டுவலி வருவது. தாமதமான அலர்ஜி என்பது தோலில் சிறிய வீக்கம், தோல் சிவப்பது போன்ற சாதாரண அறிகுறிகளைத்தான் ஏற்படுத்தும்.

அறிகுறிகள் என்னென்ன?

மருந்து அலர்ஜியால் ஏற்படும் அறிகுறிகள் பல வகைப்படும். இவை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக ஏற்படும். காரணம், உடலுக்குள் எந்த இடத்தில், எந்த மாதிரி ஐஜிஇ, ஐஜிஎம், ஐஜிஜி எதிரணு வீர்ர்களும் மாஸ்ட் செல் வீரர்களும் எதிர்க்கிறார்களோ, அதைப் பொறுத்து அலர்ஜிக்கான அறிகுறிகள் தோன்றும்.

தோலில் ஏற்படும் அறிகுறிகள்: தோலில் பல இடங்களில் அரிப்பு உண்டாகும். தோல் தடித்துச் சிவந்துவிடும். சிலருக்கு இந்தத் தடிப்பு நிரந்தரமாகிவிடும். கண் இமை, உதடு, காது வீங்கிவிடும்.

சுவாச மண்டல அறிகுறிகள்: அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, மூக்கு அரிப்பு, இருமல், இளைப்பு, ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

வயிற்றில் ஏற்படும் அறிகுறிகள்: மருந்தைச் சாப்பிட்ட அரை மணிநேரத்திலிருந்து இரண்டு மணி நேரத்துக்குள் வாய் மற்றும் உதட்டில் அரிப்பு ஏற்படும். நாக்கும் உதடும் வீங்கிவிடும். பிறகு, தொண்டை அடைக்கும். விழுங்குவதற்குச் சிரமம் ஏற்படும். வயிற்றைப் பிசைகிற மாதிரி வலி, குமட்டல், வாந்தி வரும். வயிற்றுப்போக்கு ஏற்படும்.

உறுப்பு சார்ந்த பிரச்சினைகள்: அலர்ஜியானது ரத்தக் குழாயைப் பாதித்தால், ரத்தக்குழாய் அழற்சி வரும். கல்லீரலைப் பாதித்தால் காமாலை வரும். சிறுநீரகத்தைப் பாதித்தால், சிறுநீரக அழற்சி வரும். ரத்தத்தையே பாதித்தால் ரத்தசோகை மற்றும் ‘சீரம் சிக்னஸ் நோய்’ (Serum sickness disease) வரும்.

அதிர்ச்சிநிலை அலர்ஜி (Anaphylaxis): மருந்து அலர்ஜியால் ஏற்படும் கேடுகளில் மிகவும் மோசமானது இதுதான். பாதிக்கப்பட்டவருக்கு ரத்த அழுத்தம் குறைந்து, சுவாசக்குழாய் சுருங்கி, மூச்சுத் திணறல் உண்டாகி, மயக்கம் ஏற்படும். இதற்கு உடனடியாக சிகிச்சை கிடைக்காவிட்டால், உயிருக்கு ஆபத்து நேரும்.

என்ன சிகிச்சை?

அலர்ஜிக்கான அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கு சிகிச்சை தரப்படுவது நடைமுறை. சாப்பிட்ட மாத்திரையை மருத்துவரிடம் காண்பித்தால், அதன் தன்மையைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சையைத் தர முடியும்; மாத்திரை, திரவ மருந்துகளைவிட ஊசி மருந்துக்குத்தான் உடனடி அலர்ஜி ஏற்படும். ஆபத்தும் அதிகம். வெளியிடங்களில் ஊசி போட்டு அலர்ஜி ஆகிவிட்டால், எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் செல்கிறோமோ அவ்வளவு விரைவாக ஆபத்தையும் தவிர்க்கலாம். பொதுவாக, ஊசி போட்ட பின் அரை மணி நேரம் மருத்துவமனையில் காத்திருந்து சென்றால், அலர்ஜி ஆபத்துகளைத் தவிர்க்கலாம். ஊசி மருந்துக்கு அலர்ஜி இருந்தால், மற்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன்பு, ‘சோதனை மருந்தை’ (Test Dose) செலுத்திப் பார்த்த பிறகே பயன்படுத்த வேண்டும். மருந்து அலர்ஜி உள்ளவர்களுக்குக் கூருணர்ச்சி நீக்கல் சிகிச்சை (Desensitization) மூலமும் இமுனோதெரபி (Immunotherapy) மூலமும் சிகிச்சை தரப்படும்.

(போர் ‘புரி’வோம்)

தடுக்கும் வழிகள்

· எந்த மருந்துக்கு அலர்ஜி ஆகிறதோ அதை அவர்கள் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தக்கூடாது.

· அலர்ஜி ஆகும் மருந்தோடு தொடர்புடைய மற்ற மருந்துகளையும் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அவற்றையும் தவிர்ப்பது நல்லது.

· அலர்ஜி ஆகும் பொருள் துளி இருந்தால்கூட அதன் அறிகுறிகளைக் காட்டும். எனவே, அந்த மருந்து உள்ள களிம்பு, லோஷன் என எதையும் பயன்படுத்தக்கூடாது.

· அலர்ஜி ஆகும் மருந்துகளின் பெயர்களை ஒரு அட்டையில் எழுதி வைத்து, அதை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.

· மருத்துவரிடம் சிகிச்சைக்குச் செல்லும்போது முதலில் அந்த அட்டையைக் காண்பித்துவிட வேண்டும்.

· மருந்து அலர்ஜி உள்ளவர்கள் சாதாரண காய்ச்சல், தலைவலிக்குக்கூட மருந்துக் கடைகளில் சுயமாக மருந்து வாங்கிச் சாப்பிடக்கூடாது.

ஸ்டீவன்ஸ் ஜான்சன் சின்ட்ரோம்! (Stevens-Johnson Syndrome):

மருந்து அலர்ஜி காரணமாக தோலில் ஏற்படும் மிக மோசமான நோய் இது. இந்த நோய் வந்தவர்கள் 100-ல் 30 பேர் மரணமடைகின்றனர். இது பெரும்பாலும் பெரியவர்களுக்கே வருகிறது. காய்ச்சல், தலைவலி, இருமல் என நோய் தொடங்கும். முகம், முதுகு, மார்பு ஆகிய இடங்களில் நீர் கோத்த கொப்புளங்கள் தோன்றும். கண், நாக்கு, பிறப்பு உறுப்புப் பகுதிகளிலும் ஆழமான பெரிய அளவிலான கொப்புளங்கள் உண்டாகும். இந்த இடங்களில் தோல் எரிந்துபோன மாதிரி காணப்படும். இவற்றில் நோய்த் தொற்று ஏற்பட்டு நச்சு உருவாகும். இது ரத்தத்தில் கலந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். நோயை எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் கண்டறிந்து சிகிச்சை பெறுகிறோமா, அந்த அளவுக்கு உயிருக்கு நேரும் ஆபத்து குறையும். இதற்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

அலர்ஜி வகைகள்

அலர்ஜிக்கு ’மிகைக்கூறுணர்வு” (Hypersensitivity) என்று ஒரு பெயரும் உண்டு. இதில் நான்கு வகை உண்டு.

1. உடனடி அலர்ஜி (Immediate Hypersensitivity)

ஓர் ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழைந்த 15 நிமிடங்களில் அதற்கான அலர்ஜி குணங்கள் தொடங்கிவிடும். தடுப்பாற்றல் ராணுவத்தில் IgE எதிரணு வீரர்கள் தயாராவதால் ஏற்படும் அலர்ஜி இது. பெரும்பாலும் இந்த குணங்கள் சாதாரண உடல் அரிப்பில் தொடங்கி உயிருக்கு ஆபத்து தருவது வரை மோசமான அலர்ஜியை உண்டாக்குவதாக இருக்கும். ஒவ்வாத பொருள் எந்த வழியில் நுழைகிறதோ அதைப் பொறுத்து அறிகுறிகள் ஏற்படும். விஷக்கடி போன்றவற்றில் தோல் வழியாக ஒவ்வாத பொருள் நுழைகிறது. அப்போது தோலில் அரிப்பும், சிவப்பு நிறத் தடிப்புகளும் ஏற்படும். தூசு மூலம் மூக்கு வழியாக இது நுழைகிறது என்றால், அங்குள்ள ரத்தக்குழாய்கள் விரிந்து அடுக்குத் தும்மலும் மூக்கு ஒழுகலும் ஏற்படும். சுவாசத்தின் மூலம் நுரையீரலுக்குள் அது நுழைந்துவிட்டால், மூச்சுக்குழல்கள் சுருங்கி சுவாசிக்க முடியாமல் ஆஸ்துமா ஏற்படும். நுழைவது வாய் வழி என்றால், உதடு வீங்குவது, வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஏற்படுவது போன்ற குணங்களைக் காண்பிக்கும். உடலுக்குள் நுழைவது கடுமையான அலர்ஜி மருந்தென்றால் சமயங்களில் அது உயிரையே மாய்த்துவிடும்.

2. திசுக்கள் சார்ந்த அலர்ஜி (Tissue bound Hypersensitivity)

இந்த வகை அலர்ஜியில், ஓர் ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழைந்த சில மணி நேரத்தில் அதற்கான அலர்ஜி குணங்கள் தொடங்கிவிடும். தடுப்பாற்றல் ராணுவத்தில் IgM அல்லது IgG எதிரணு வீரர்கள் தயாராகும்போது இந்த வகை அலர்ஜி ஏற்படுகிறது. இது உடல் உறுப்புகளின் திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால் சில நிரந்தர நோய்கள் உண்டாகின்றன. உதாரணத்துக்கு, ரத்த அழிவு ரத்தசோகை, நெப்ரான் அழற்சி எனும் சிறுநீரக நோய்.

3. தடுப்பாற்றல் சார்ந்த அலர்ஜி (Immune - complex Hypersensitivity)

இந்த வகை அலர்ஜி ரத்தச் சுற்றோட்டத்தில் மட்டும் நிகழலாம். அல்லது தனிப்பட்ட உடல் உறுப்பைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழைந்த மூன்றிலிருந்து பத்து மணி நேரத்துக்குள் அதற்கான அலர்ஜி குணங்கள் தொடங்கிவிடும். தடுப்பாற்றல் மண்டலத்தில் IgG எதிரணு வீரர்கள் தயாரானால் இந்த வகை அலர்ஜி ஏற்படுகிறது. இதற்கு ஓர் உதாரணம், ருமட்டாய்டு மூட்டுவலி.

4. தாமதமான அலர்ஜி (Delayed Hypersensitivity)

இதில் ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழைந்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து அலர்ஜி குணத்தைக் காட்டும். இந்த குணங்களால் உடலுக்கு அவ்வளவாக பாதிப்பு ஏற்படுவதில்லை. தோலில் சிறிய வீக்கம், தோல் சிவப்பது போன்ற சாதாரண அறிகுறிகள்தான் காணப்படும். இந்த அலர்ஜியில் வழக்கமான எதிரணுக்கள் ஈடுபடுவதில்லை. பதிலாக, தைமஸ் நிண அணுக்கள் இதை ஏற்படுத்துகின்றன. காசநோய் உள்ளதா என்பதை அறிய மேன்டோ பரிசோதனை செய்யப்படுவதை இந்த அலர்ஜிக்கு உதாரணமாகச் சொல்லலாம்.

படித்தவரின் பதிவு

மூட்டுவலி முழுமையாகப் புரிந்தது!

அன்றாட வாழ்வில் அனைத்துத் தரப்பு மக்களையும் வாட்டி வதைக்கும் கடுமையான ஆரோக்கியப் பிரச்சினை மூட்டுவலி. சென்ற வாரக் கட்டுரையில் மூட்டுவலியை முழுவதுமாகப் புரியும்படி எழுதியிருந்தார் மருத்துவர் கு. கணேசன். குறிப்பாக, முதுமையில் ஏற்படும் மூட்டுவலிக்கும் ருமட்டாய்டு மூட்டுவலிக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெளிவாகக் கூறியிருந்தார், ருமட்டாய்டு மூட்டுவலிக்கான அறிகுறிகளையும், அழற்சி ஏற்படும் விதத்தையும் அவர் விளக்கியுள்ள விதம் அருமை. மூட்டுவலிக்குப் பெரும்பாலானோர் மாத்திரை, மருந்துகளை மட்டுமே நம்பியுள்ளனர். அது மட்டும் போதாது. உடற்பயிற்சிகளும் ஊட்டச்சத்துள்ள உணவும் அவசியம் என்பதை அவர் வலியுறுத்தியுள்ள விதம் மூட்டுவலியைத் தீர்ப்பதற்கான வழியைப் புரிய வைத்ததோடு பலருடைய அச்சத்தையும் போக்க உதவியது.

- எஸ். ஆராதனா, மென்பொருள் பொறியாளர், சென்னை

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in