உடலுக்குள் ஒரு ராணுவம் -32: சேய்க்கு எதிரியாகும் தாயின் ரத்தம்!

உடலுக்குள் ஒரு ராணுவம் -32: சேய்க்கு எதிரியாகும் தாயின் ரத்தம்!

கர்ப்பமாகி, பத்து மாதம் காத்திருந்து, ஆசை ஆசையாகப் பெற்றுக்கொள்ளப்போகும் குழந்தைக்குத் தாயின் ரத்தமே எதிரியாகிவிடுகிறது என்று சொன்னால், உடலே பதறுகிறது இல்லையா?

ஆனால், அது குறித்தெல்லாம் கவலைப்படாமல், நம் தடுப்பாற்றல் ராணுவத்தில் திடீரென்று ஒரு ‘தீவிரவாதக் கும்பல்’ புகுந்து, தாயின் ரத்தத்தைக் குழந்தைக்கு எதிரியாக மட்டுமல்லாமல் பல நேரங்களில் எமனாகவும் மாற்றிவிடுகிறது என்பதுதான் இந்தக் கட்டுரையின் பேசுபொருள்.

இரண்டு வகை ஆர்ஹெச் ரத்தம்

நம் ரத்தத்தில் ஏ, பி, ஏபி, ஓ (A, B, AB, O) என 4 முக்கியமான வகைகள் உண்டு என்று ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அதே மாதிரி, நம் எல்லோரின் ரத்தத்திலும் ‘ஆர்ஹெச் பாசிட்டிவ்’ (Rh positive), ‘ஆர்ஹெச் நெகட்டிவ்’ (Rh negative) என்று இரண்டு வெவ்வேறு வகை இருக்கிறது என்றும் அறிந்திருக்கிறோம்.

குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கும் ஒரு பெண்ணுக்கு ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் இருந்தால், அவள் பெற இருக்கும் குழந்தைக்கு அது ஒரு யுத்தக் களமாகி, அதன் உயிரையே பறித்துவிடக் கூடிய அளவுக்குக் கொடுமையாகிவிடுகிறது. உடலில் அலர்ஜி ஏற்படுவதைப்போல நம் தடுப்பாற்றல் ராணுவத்தில் ஏற்படுகிற மற்றுமொரு விரும்பத்தகாத எதிர்வினை இது.

அதேவேளையில் இந்தியாவில் ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம் உள்ளவர்கள் சுமாராக 85 சதவீதம் பேர்; ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் உள்ளவர்கள் 15 சதவீதம் பேர் மட்டுமே என்பதில் சிறிய ஆறுதலும் அடையலாம்.

என்ன காரணம்? என்ன பிரச்சினை?

தம்பதிகள் இருவரும் ஒரே வகை ரத்தம் உள்ளவர்களாக இருந்தால் பிரச்சினை இல்லை. அதாவது, கணவருக்கும் ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம், மனைவிக்கும் ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம்; அல்லது கணவருக்கும் ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம், மனைவிக்கும் ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் என்றால் பிரச்சினை இல்லை. கணவரின் ரத்தம் ஆர்ஹெச் பாசிட்டிவ், மனைவியின் ரத்தம் ஆர்ஹெச் நெகட்டிவ் என்றால்தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். எப்படி?

கணவரின் ரத்தம் ஆர்ஹெச் பாசிட்டிவ், மனைவியின் ரத்தம் ஆர்ஹெச் நெகட்டிவ், பிறக்கும் குழந்தைக்கு ஆர்ஹெச் பாசிட்டிவ் என ரத்த வகை அமைந்துவிட்டால், பிரசவ நேரத்தில் சிக்கல் ஆகிவிடும். இதைக் கொஞ்சம் விரிவாகவே பார்ப்போமே!

கருவில் வளரும் சிசுவுக்குத் தேவையான உணவு, ஆக்ஸிஜன் போன்ற சங்கதிகள் எல்லாமே ரத்தம் வழியாக தாயிடமிருந்துதான் போகின்றன என்று பொதுவாகச் சொன்னாலும், எந்தக் கட்டத்திலும் தாயின் ரத்தச் சிவப்பணுக்களும் சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களும் கலந்துவிடுவதில்லை. இந்தக் கலப்பைத் தடுப்பதற்குச் சீனப் பெருஞ்சுவர் மாதிரி தாயின் கருப்பையில் நஞ்சுக்கொடி (Placenta) உள்ளது.

‘பாம்பாட்டிப் பாம்பு’கள்

வழக்கத்தில், பிரசவ நேரத்தில் நஞ்சுக்கொடி வெளியில் வந்துவிடுவதால், இடைப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தையின் ரத்தமும் தாயின் ரத்தமும் கலந்துவிடுகின்றன. அப்படிக் கலக்கும்போது, பாசிட்டிவ் - நெகட்டிவ் கலப்பு ஒத்துப்போகாது என்பதால், குழந்தையின் ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம் தாயின் ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தத்தில் ‘ஆர்ஹெச் எதிரணுக்களை’ உருவாக்கிவிடுகிறது. இவற்றைத்தான் நான் ஆரம்பத்தில் ‘தீவிரவாதக் கும்பல்’ என்று சொன்னேன்.

இந்த எதிரணுக்களைப் ‘பாம்பாட்டிப் பாம்பு’களோடு ஒப்பிட்டால் இந்த நிகழ்வை இன்னும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். பாம்பாட்டி வீட்டில் பாம்பு வளர்த்தால், அது அவரையோ அவரது வீட்டில் இருப்பவர்களையோ ஒன்றும் செய்வதில்லை (விதிவிலக்குகள் இருக்கலாம்). ஆனால், வீட்டுக்குள் அடுத்தவர்கள் யாராவது நுழைந்தால், அவர்களை ‘எதிராளி’யாக நினைத்துக் கொத்திவிடும்.

அப்படித்தான், தாயின் ரத்தத்தில் ஆர்ஹெச் எதிரணுக்கள் உற்பத்தியான பிறகு உருவாகும் குழந்தை அந்த ரத்தத்துக்கு ‘எதிராளி’யாகி விடுகிறது. எனவேதான், கருப்பையில் சிசுவானது தங்கி வளர ஆரம்பித்தவுடன், தாயின் ஆர்ஹெச் எதிரணுக்கள் கொண்ட ரத்தம் சிசுவின் ரத்தத்தை எதிராளியாக நினைத்து, சிசுவின் சிவப்பணுக்களைச் ‘சுனாமி’போல் அழித்துவிடுகிறது. இதன் விளைவாக, சிசுவுக்குக் கடுமையான ரத்தஅழிவுச்சோகை (Haemolytic anaemia), மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இதனால், சில குழந்தைகள் இறந்துபோகின்றன.

எப்போது பாதிப்பு?

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், தாய்க்கும் குழந்தைக்குமான இந்த ‘ரத்தக் கலப்பு’ முதல் குழந்தையின் பிரசவ நேரத்தில் நிகழ்வதால், முதல் குழந்தைக்கு மேற்சொன்ன பாதிப்புகள் எதுவும் ஏற்படுவதில்லை. பெரும்பாலும் இரண்டாவது குழந்தைக்குத்தான் இந்தப் பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம். இந்த நிலைமைக்கு ‘ஆர்ஹெச் பொருந்தாமை’ (Rh incompatibility) என்பது மருத்துவப் பெயர்.

அதேநேரம், ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் உள்ள பெண்களுக்குக் கீழ்க்காணும் சூழல்களில் ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தத்துடன் கலப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அப்போது முதல் குழந்தைக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அவை:

· தவறுதலாக ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம் தாய்க்குச் செலுத்தப்படும்போது.

· கருச்சிதைவு ஆகும்போது.

· கருக்கலைப்பு மேற்கொள்ளும்போது.

· கருப்பையை விட்டு வேறு இடங்களில் சிசு உருவாகும்போது.

· கோரியானிக் வில்லஸ் சாம்பிளிங் (Chorionic villus sampling), பனிக்குட நீர்ப் பரிசோதனை (Amniocentesis) போன்ற கருப்பைக்குள் ஊசி செலுத்திப் பரிசோதிக்கும் பரிசோதனைகளின்போது.

· கர்ப்பகாலத்தில் பிறப்பு உறுப்பில் ரத்தப்போக்கு ஏற்படும்போது.

· முத்துப்பிள்ளை கர்ப்பத்தின்போது.

எப்படித் தடுப்பது?

ஒரு ராணுவத்தில் புகுந்துவிட்ட தீவிரவாதிகளைக் களையெடுத்தால் மட்டுமே ராணுவத்தில் கலகம் செய்வதைத் தடுக்க முடியும். அதுபோல், தாயின் உடலுக்குள் ‘ஆர்ஹெச் பொருந்தாமை’ ஏற்படுவதைத் தடுத்தால் மட்டுமே குழந்தைக்குப் பாதிப்புகள் உண்டாவதைத் தடுக்க முடியும். அதற்கு தாயின் ரத்தமும் குழந்தையின் ரத்தமும் கலப்பதற்கு வாய்ப்புள்ள பிரசவம், கருச்சிதைவு, கருக்கலைப்பு, கருப்பைக்கு வெளியில் குழந்தை உருவாவது, கர்ப்பகாலத்தில் மேற்கொள்ளப்படும் சிறப்புப் பரிசோதனைகள் ஆகிய நேரங்களில் ‘ஆன்டி – டி இமுனோகுளோபுலின்’ (Anti-D immunoglobulin) எனும் தடுப்பூசியைத் தாய்க்குச் செலுத்திவிட வேண்டும்.

இது குழந்தையின் ஆர்ஹெச் பாசிட்டிவ் ஆன்டிஜென்கள் தாயின் ரத்தத்தில் ஆர்ஹெச் எதிரணுக்களை உற்பத்தி செய்வதைத் தடுத்துவிடுகிறது. இதன் பலனால், குழந்தையின் ரத்தச் சிவப்பணுக்கள் அழிவதும் தடுக்கப்படுகிறது; அதன் உயிரும் காக்கப்படுகிறது.

பரிசோதனை அவசியம்!

இன்னொன்று. தாயின் ரத்தத்தில் ஆர்ஹெச் எதிரணுக்கள் ஏற்கெனவே உற்பத்தி ஆகாமல் இருந்தால் மட்டுமே ‘ஆன்டி – டி இமுனோகுளோபுலின்’ தடுப்பூசியைச் செலுத்துவது பலனளிக்கும். அதனால், அதைச் செலுத்துவதற்கு முன்பு, கர்ப்பிணியின் ரத்தத்தில் ஆர்ஹெச் எதிரணுக்கள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு ‘மறைமுக கூம்ப்ஸ் பரிசோதனை’ (Indirect Coomb’s test) செய்யப்படும். இதன் முடிவு ‘நெகட்டிவ்’ என்றால், அந்தக் கர்ப்பிணிக்கு ஆர்ஹெச் எதிரணுக்கள் இல்லை என்றும், ‘பாசிட்டிவ்’ என்றால், ஆர்ஹெச் எதிரணுக்கள் இருக்கின்றன என்றும் பொருள். வழக்கத்தில், இந்தப் பரிசோதனை முடிவு ‘நெகட்டிவ்’ என்று வந்த கர்ப்பிணிகளுக்கு 28-லிருந்து 36 கர்ப்ப வாரங்களில் ‘ஆன்டி – டி இமுனோகுளோபுலின்’ தடுப்பூசியைச் செலுத்திவிடுவார்கள்.

எப்போது பரிசோதனை மேற்கொள்வது?

முதல் மும்மாத கர்ப்பத்தில் (First trimester) முதல் ‘செக்கப்’புக்கு டாக்டரிடம் செல்லும்போது, கணவர், மனைவி இருவரின் ரத்தத்திலும் ஆர்ஹெச் வகைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். கணவருக்கு ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம், மனைவிக்கு ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் என்றால், முதல் குழந்தை பிறந்ததும் அதன் ஆர்ஹெச் வகையைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம் என்றால், குழந்தை பிறந்த 24 - 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ‘ஆன்டி – டி இமுனோகுளோபுலின்’ தடுப்பூசியைச் செலுத்திவிட வேண்டும். கர்ப்பகாலத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டால்கூட இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வது நல்லது. அதேநேரத்தில், குழந்தைக்கு ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் என்றால் தாய்க்கு இதைச் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

ஒருமுறை இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டால், அது அந்தக் கர்ப்பத்துக்கு மட்டும்தான் பலன் தரும். அடுத்தமுறை கர்ப்பமுற்றால், மறுபடியும் இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும்.

கர்ப்பத்தடை செய்துகொள்பவர்களுக்கு

பிரசவத்தைத் தொடர்ந்து கர்ப்பத்தடை செய்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்தத் தடுப்பூசியைச் செலுத்த வேண்டியதில்லை. என்றாலும், அரிதாகச் சிலருக்கு கருத்தடைமுறை தோற்றுப்போகும்; அப்போது மீண்டும் கர்ப்பமடையலாம் அல்லது பிற்காலத்தில் கருத்தடையை நீக்கிவிட்டு மறுபடியும் கர்ப்பம் அடைய முடிவெடுக்கலாம். இம்மாதிரியான சூழல்களில் அப்போது இந்தத் தடுப்பூசியைச் செலுத்த முடியாது. எனவே, பாதுகாப்பாக இப்போதே இதைச் செலுத்திக்கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு.

தடுப்பூசி போடப்படவில்லை என்றால்?

ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் உள்ள பெண்ணுக்கு முதல் பிரசவத்தில் முன்னேற்பாடாகத் தடுப்பூசி போடப்படவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்வது? அவருடைய அடுத்த கர்ப்பத்தில் ‘மறைமுக கூம்ப்ஸ் பரிசோதனை’ பாசிட்டிவ் என்றால், கர்ப்பகாலம் முழுவதும் மிகவும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, 5 கர்ப்ப மாதங்களுக்குப் பிறகு, சிசுவுக்கு ரத்தசோகை ஏற்படுகிறதா, ரத்தச்சுழற்சி சரியாக இருக்கிறதா என்பதை அறிய ‘பல்ஸ் டாப்ளர் ஸ்கேன்’ (Pulse Doppler Scan) பரிசோதனை மேற்கொள்ளப்படும்; பிரச்சினை இருந்தால், இந்தப் பரிசோதனை அடிக்கடி தேவைப்படும். ரத்தசோகை கடுமையாக இருந்தால், சில சிறப்பு மகப்பேறு மருத்துவமனைகளில் சிசுவுக்கு ரத்தம் செலுத்தப்படுகிற நவீன சிகிச்சையையும் இப்போது மேற்கொள்கின்றனர். இதன் மூலம் சிசுவுக்கு ஏற்படுகிற உயிராபத்தைத் தடுத்துவிடுகின்றனர்.

ஒருவேளை, பிரசவ நேரம் நெருங்கும் காலத்தில்தான் குழந்தைக்கு ரத்தசோகை இருப்பது தெரியவருகிறது என்றால், பிரசவத் தேதிக்கு முன்னரே குழந்தை பிறக்கத் தூண்டப்படுவதுண்டு அல்லது சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதுண்டு. அப்படிப் பிறந்த குழந்தைக்கு மஞ்சள்காமாலை இருந்தால் சிறப்பு நீலவிளக்கொளி சிகிச்சையில் (Phototherapy) அதைச் சரிப்படுத்துகின்றனர். வெகு அரிதாக சில குழந்தைகளுக்கு மாற்று ரத்தம் செலுத்தப்படுவதும் உண்டு.

பயம் வேண்டாம்!

ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் உள்ள எல்லாப் பெண்களுக்கும் இந்தப் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை; சில விதிவிலக்குகளும் உண்டு. எனவே, பயப்படத் தேவையில்லை. அதேநேரத்தில், இது உயிர் தொடர்பான விஷயம் என்பதால், இதில் கவனமாக இருந்து, விளைவுகள் மோசமாகாமல் தடுத்துக்கொள்ள வேண்டும். இந்த எச்சரிக்கை உணர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டியது முக்கியம்!

(போர் ‘புரி’வோம்)

மருத்துவர் செ. நாகேஸ்வரி
மருத்துவர் செ. நாகேஸ்வரி

படித்தவரின் பதிவு...

என் அறிவுரைக்கு அணி சேர்க்கிறது!

சென்ற இதழில், மருத்துவர் கு. கணேசன் அவர்களது அலர்ஜி குறித்த விளக்கம் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் தெளிவாக உள்ளது. அலர்ஜி என்பது எப்படி, எதனால், எங்கு ஏற்படுகிறது என்ற விளக்கம் அருமை. நம் உடல் எதிர்வினை ஆற்றுவதே அலர்ஜி என்று சுருக்கமாகச் சொல்லி புரியவைத்த விதம் சிறப்பு. அதேபோல அலர்ஜியைத் தடுக்க குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தருவது அவசியம் என்பதையும், வெளிவுலகிற்கு அவர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் உடலில் எதிர்ப்புசக்தியை வளர்க்க முடியும் என்பதையும் இதைவிடச் சிறப்பாக யாரும் விளக்கிவிட முடியாது. வீட்டில் என் பேரக்குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், சாக்லேட் எதுவும் தரமாட்டார்கள் என் பிள்ளைகள். ஆனால், அவர்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது. குழந்தைகளுக்கு எல்லாம் கொடுத்துவளர்த்தால் தான் அலர்ஜி ஏற்படாது என்பேன். மருத்துவர் கணேசன் கட்டுரையில் சொல்லியிருக்கும் Hygiene Hypothesis என் அறிவுரைக்கு அணி சேர்க்கிறது.

- மருத்துவர் செ. நாகேஸ்வரி, சென்னை

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in