உடலுக்குள் ஒரு ராணுவம் - 29: எதிரணுக்கள் உருவாவது எப்படி?

உடலுக்குள் ஒரு ராணுவம் - 29: எதிரணுக்கள் உருவாவது எப்படி?

உடலுக்குள் உண்டாகிற தடுப்பாற்றல் வினை குறித்தும் ஐந்து விதமான எதிரணுக்கள் குறித்தும் அவற்றின் மகத்துவம் குறித்தும் கடந்த இதழில் விரிவாகப் பார்த்தோம். இந்த இதழில் எதிரணுக்கள் உருவாகிற ரகசியத்தைத் தெரிந்துகொள்வோம். அதற்கு முன்னால், தடுப்பாற்றல் வினை (Immune response) தொடர்பில் சென்ற இதழில் சொல்லாமல் விட்ட சில விஷயங்கள் இந்த வாரம்...

மூன்று செல் கூட்டணி

உடலுக்குள் ஒரு தடுப்பாற்றல் வினை உருவாக வேண்டுமானால் மூன்று வகையான செல்கள் கூட்டணி சேர்ந்து காரியத்தில் இறங்க வேண்டும். ஆன்டிஜெனைக் காட்டிக் கொடுக்கும் செல்கள் (Antigen Presenting Cells-APC), ‘டி’ செல்கள், ‘பி’ செல்கள். அந்த மூன்று செல் கூட்டணி இதுதான். தேர்தலில் ஜெயிப்பதற்காக, ஒரு பெரிய கட்சியோடு சில சிறிய கட்சிகள் இணைந்துகொள்வதுபோல தடுப்பாற்றல் வினையை வேகப்படுத்துவதற்காக, ஆன்டிஜெனைக் காட்டிக் கொடுக்கும் செல்களில் மேக்ரோபேஜ் ஒற்றர்களும் டென்ட்ரிடிக் செல் சிப்பாய்களும் (Dendritic cells) சேர்ந்துகொள்கின்றனர்.

இந்த இடத்தில் ‘டி’ செல் தளபதிகளைக் கொஞ்சம் நினைவுபடுத்திக்கொள்வோம். இவர்களுக்கு எலும்பு மஜ்ஜைதான் பூர்விகம் என்றாலும், ‘தைமஸ் அகாடமி’யில் பயிற்சி பெற்றவர்கள். அதனால், ‘டி’ செல் என்று பெயர் பெற்றவர்கள். நம் உடலுக்குள் செயற்கைத் தடுப்பாற்றல் மேம்படுவதற்குப் பேராதரவு கொடுப்பவர்கள். இவர்களுக்குத் துணையாக துணை ‘டி’ செல்கள் (Helper T cells), சாகடிக்கும் ‘டி’ செல்கள் (Killer T cells), ஒழுங்குபடுத்தும் ‘டி’ செல்கள் (Regulatory T cells), நினைவு ‘டி’ செல்கள் (Memory T cells) எனப் பலதரப்பட்ட சிப்பாய்களும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் நிணத் திசுக்கள் (Lymph nodes) தொடங்கி ‘நிணநீர்ச் சாலை’ முழுவதிலும் இரவு பகல் பாராமல் கண்ணில் எண்ணெய்யை ஊற்றிக்கொண்டு உஷாராக இருக்கிறார்கள்.

போர்க்களத்தில் வீரர்கள்

இப்போது உடலுக்குள் ஏதோ ஒரு இனக் கிருமி நுழைகிறது என வைத்துக்கொள்வோம். அந்தக் கிருமியை அறிந்த மேக்ரோபேஜ் ஒற்றர்களும் டென்ட்ரிடிக் செல் சிப்பாய்களும் ‘டி’ செல் தளபதிகளுக்குத் தகவல் தெரிவிக்கின்றனர். தளபதிகள், துணை ‘டி’ செல் சிப்பாய்களுக்கு அந்தத் தகவலைப் பகிர்கின்றனர். உடனே, துணை ‘டி’ செல் சிப்பாய்கள் கலைக்கப்பட்ட தேனீக்கள்போல் பரபரப்பாகச் செயல்படுகின்றனர். ஒரு மணி நேரத்தில் பல்லாயிரக்கணக்கான சிப்பாய்களைத் தங்கள் துணைக்கு அழைத்துக்கொள்கின்றனர். பிறகு, கிருமி புகுந்துள்ள போர்க்களத்துக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்.

அங்கு இயற்கைத் தடுப்பாற்றல் வீரர்கள் கிருமிகளோடு போராட முடியாமல் ரொம்பவே சோர்ந்து போயிருப்பார்கள். அதை அறிந்துகொண்ட துணை ‘டி’ செல் சிப்பாய்கள் சாகடிக்கும் ‘டி’ செல் சிப்பாய்களை முன்னால் அனுப்பி அந்தக் கிருமிகளைச் சாகடிப்பார்கள். அதைத் தொடர்ந்து மேக்ரோபேஜ் ஒற்றர்கள் இப்போது ‘மாவிழுங்கி வீரர்’களாக மாறிக்கொள்வார்கள். அவர்கள் அங்கு மரித்துப்போன அந்நியக் கிருமிகளை அப்படியே விழுங்கி அந்த இடத்தைச் சுத்தப்படுத்திவிடுவார்கள். இவை எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவது, ஒழுங்குபடுத்தும் ‘டி’ செல் சிப்பாய்களின் வேலை.

இப்படியான போரில் இவர்கள் வெற்றி பெற்றதும் மீதமுள்ள சிப்பாய்களில் கொஞ்சம் பேர் ‘நினைவு செல் சிப்பாய்’களாக மாறிவிடுவார்கள். இதற்கு என்ன அவசியம்? அடுத்த முறை இதே இனக் கிருமி உடலுக்குள் நுழைந்தால் அதை நினைவில் ஏற்றிக்கொண்டு, எடுத்த எடுப்பிலேயே பதிலடி கொடுத்துத் தூக்கி எறிய வேண்டும் அல்லவா? அதற்குத்தான்!

இதுவரை சொன்னது எல்லாக் கிருமிகளுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான ஒரு போராட்டம். இது தவிர, குறிப்பிட்ட கிருமிக்கு எதிராகவும் போராட்டம் நடைபெறுகிறது. அந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்குபவர்கள், ‘பி’ செல் தளபதிகள். இவர்கள் ‘நட்சத்திர’ தளபதிகள். ‘டி’ செல் தளபதிகளோடு ஒப்பிடும்போது ‘பி’ செல் தளபதிகள் போராடும் விதம் தனித்தன்மை வாய்ந்தது. அதையும்தான் பார்த்துவிடுவோமா?

நட்சத்திர தளபதிகள்

‘பி’ செல்கள் தளபதிகளுக்கு எலும்பு மஜ்ஜைதான் பூர்விகம். இவர்கள் பயிற்சி பெற்ற இடமும் அதுதான். இவர்கள் ‘பிளாஸ்மா செல்கள்’ எனும் ‘ஆளெடுப்பு இடங்’களுக்குச் செல்வார்கள். அங்கு எதிரணு சிப்பாய்களைத் தேர்வு செய்து போராட்டக்களத்துக்கு அனுப்புவார்கள்.

அடுத்து, ‘பி’ செல் தளபதி ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இனக் கிருமியின் உண்மையான வடிவம், வேஷம் எல்லாம் புரியும்; எந்த வழியில் அவை உடலுக்குள் நுழையும் என்பதும் தெரியும். நம் உடலுக்குள் ஏறத்தாழ 1,000 கோடி ‘பி’ செல் தளபதிகள் இருக்கின்றனர். இப்படி மொத்தத்தில் பார்த்தால் ‘பி’ செல் தளபதிகளுக்கு எல்லாவிதக் கிருமிகளும் அத்துப்படி ஆகியிருக்கும். தவிரவும், ஒரு விநாடியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எதிரணு சிப்பாய்களை மொத்தமாகக் கொண்டுவந்து வரிசைப்படுத்திவிடுகிற ஆற்றலும் இவர்களுக்கு உண்டு. இந்த எதிரணுச் சிப்பாய்கள் எல்லோரும் ‘பி’ செல் தளபதிகளின் ஆணைப்படி ரத்த நதியிலும் நிணநீர்ச் சாலைகளிலும் வரிசைகட்டி நிற்பார்கள்.

எது தேவை? பீரங்கியா... ஏவுகணையா?

‘எதிரணு சிப்பாய்களில்தான் ‘ஐஜிஏ’ (IgA), ‘ஐஜிஎம்’ (IgM), ‘ஐஜிஜி’ (IgG), ‘ஐஜிஈ’ (IgE), ‘ஐஜிடி’ (IgD) எனப் பல ரகங்கள் இருக்கிறார்களே! அவற்றில் எந்த எதிரணு சிப்பாய் தேவை என்பது தடுப்பாற்றல் தளபதிகளுக்கு எப்படித் தெரியும்?’ என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. சொல்கிறேன்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் என்றால், அவற்றின் போர்க்களமாக கெர்சன் நகரும், டோன்டஸ்க் நகரும் இருந்த மாதிரி, நம் எதிரியான கிருமிக்கும் நம் உடலுக்கும் நடக்கும் போரில் குடல், சருமம், நுரையீரல்... இப்படி ஏதோ ஒன்று போர்க்களமாக இருக்குமல்லவா? அந்தப் போர்க்களத்தில் இருக்கிற ‘டென்ட்ரிடிக் செல்கள்’ அங்கு கும்மாளமிடும் கிருமிகளின் மாதிரியைக் கவ்விக்கொண்டு வந்து துணை ‘டி’ செல் சிப்பாய்களிடம் ஒப்படைத்துவிடும். அந்தத் தகவல் ‘பி’ செல் தளபதிகளுக்குச் சென்றுவிடும். அவர்கள் முதற்கட்டமாக ‘ஐஜிஎம்’ எதிரணு சிப்பாய்களைத் தேர்வு செய்து அந்தப் போர்க்களத்துக்கு அனுப்பிவைப்பார்கள். இந்தச் சிப்பாய்கள் அவசரத்துக்கு உதவுவார்களே தவிர அதிகம் தாக்குப்பிடிக்க மாட்டார்கள்; சீக்கிரம் களைத்துவிடுவார்கள். ஆகவே, ‘பி’ செல் தளபதிகள் அடுத்தகட்ட காரியத்தில் இறங்குவார்கள்.

அதாவது, துணை ‘டி’ செல் சிப்பாய்கள் அடுத்தடுத்துக் கொண்டுவரும் கிருமி மாதிரியைக் கூர்ந்து பார்த்து, அது எங்கிருந்து வந்தது என்பதை அவர்கள் ஆராய்வார்கள். அது மூக்கிலிருந்து வருகிற கிருமியென்றாலோ, குடலிலிருந்து வருகிற கிருமியென்றாலோ, உடனடியாக ‘ஐஜிஏ’ சிப்பாய்களை அனுப்பிவைப்பார்கள். ஒரு போர்க்களத்தில் பீரங்கியும் இருக்கிறது; ஏவுகணையும் இருக்கிறது என்றால், அவற்றை எதிர்த்துப் போராட பீரங்கியை மட்டும் அனுப்பிப் பயனில்லை! ஏவுகணையை எதிர்க்கவும் ஆயுதம் தேவைப்படும். அதுமாதிரி, போர்க்களம் குடலாக இருந்தாலும், கிருமியானது குடல் புழுவாக இருக்கிறது எனத் தெரிந்தால், அப்போது ‘ஐஜிஏ’ சிப்பாய்களால் அதை அழிக்க முடியாது. ‘ஐஜிஈ’ சிப்பாய்களையும் அங்கு அனுப்புவார்கள்.

ஹனுமன் பலம்

சரி, ஒருவேளை கடுமையான பாக்டீரியா இனம் ஒன்று உடலுக்குள் புகுந்து நாசம் செய்கிறது என வைத்துக்கொள்வோம். அப்போது எந்த ரகச் சிப்பாய்கள் தேவைப்படுவார்கள்? நீங்கள் யோசிக்கும் அந்தக் கேள்விக்கான பதிலை ‘பி’ செல் தளபதிகள் ஏற்கெனவே யோசித்துவைத்திருப்பார்கள். ‘ஊஹும், ‘ஐஜிஎம்’, ‘ஐஜிஏ’, ‘ஐஜிஈ’ சிப்பாய்கள் எல்லாம் பாக்டீரியாவுக்குத் தூசு மாதிரி! அலேக்காகத் தூக்கி எறிந்துவிடும்’ என்று ‘பி’ செல் தளபதிகளுக்கு நன்றாகவே தெரியும். அதனால், பாக்டீரியாவுக்கு எதிராகப் போராட ‘ஐஜிஜி’ சிப்பாய்களை அனுப்பிவைப்பார்கள். இதுபோல், உடலுக்குள் புகுந்துள்ள கிருமி வைரஸ் வகை என்றாலும், ‘ஐஜிஜி’ சிப்பாய்களைத்தான் அனுப்புவார்கள். ஏன்? இவர்கள்தான் போர்க்களத்தில் அதிக நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கும் ஜெகஜால வீரர்கள்; எந்த எதிரியையும் தூக்கி எறிகிற ஹனுமன் பலம் பெற்றவர்கள்.

இப்படிக் கிருமி வகை அறிந்து ‘போர்க்கள’த்துக்குத் தேவைப்படும் சிப்பாய்களைத் தேர்வு செய்யும் ஆற்றல் நம் தடுப்பாற்றல் மண்டலத்துக்கு இருப்பதால்தான், ஒவ்வொரு நிமிடமும் பலவிதக் கிருமிகளின் பாதிப்பிலிருந்து நம்மால் தப்பிக்க முடிகிறது.

(போர் ‘புரி’வோம்)

பெட்டிச் செய்தி:

உற்சாகப்படுத்தும் காரணிகள்!

உடலுக்குள் தடுப்பாற்றல் வினையை உற்சாகப்படுத்தவும் எதிரணுக்களை உற்பத்தி செய்யவும் பல காரணிகள் இருக்கின்றன. அவை…

1. மரபுப் பண்புகள்: தடுப்பாற்றலை மேம்படுத்தவும் கட்டுப்படுத்தவும் நம் உடலுக்குள் தனி மரபணுக்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றன. அதனால்தான் ஆளுக்கு ஆள் தடுப்பாற்றல் அளவு வேறுபடுகிறது. இந்த மரபணுக்கள் சரியாகச் செயல்பட்டால் தடுப்பாற்றலும் சரியாகவே இருக்கும்.

2. வயது: குழந்தைக்கு 6 மாதம் ஆகும்போது, அம்மாவிடமிருந்து அது பெற்ற இயற்கைத் தடுப்பாற்றல் குறையத் தொடங்கிவிடும். அதற்குப் பிறகு தடுப்பூசிகள் மூலம்தான் அது தடுப்பாற்றலைப் பெற முடியும். அல்லது ஒரு குறிப்பிட்ட கிருமி உடலுக்குள் புகும்போது அந்தக் கிருமிக்குரிய தடுப்பாற்றலைக் குழந்தை பெற முடியும். வயது ஆக ஆக இந்த வகையில் பெறப்படும் தடுப்பாற்றல் அளவு குறையும்.

3. உணவூட்டம்: உடலில் சத்துக்குறைபாடு இருந்தால் அது தடுப்பாற்றலைப் பாதிக்கும். காரணம், உடலுக்குத் தடுப்பாற்றலைத் தரும் எதிரணுக்கள் எல்லாமே புரதங்கள். எதிரணுக்கள் சரியாக உற்பத்தியாக வேண்டுமானால், புரதச்சத்து நாம் சாப்பிடும் உணவில் சரியாக இருக்க வேண்டும். அடுத்து, வேதிப்பண்பின்படி புரதங்கள் எல்லாமே அமினோ அமிலங்களின் கலவை. எனவே, நம் உணவில் அமினோ அமிலங்கள் குறைந்தாலும் தடுப்பாற்றல் குறையும்; வைட்டமின்கள் குறைந்தாலும் இந்த நிலைமைதான்.

4. கிருமி நுழையும் வழி: நம் உடலுக்குள் கிருமிகள் நுழைகிற வழியைப் பொறுத்தும் தடுப்பாற்றல் வினை தூண்டப்படும். ரத்த நதியில் நேரடியாகக் கலக்கும் கிருமிகளுக்குத் தடுப்பாற்றல் வினை உடனே செயலுக்கு வரும். மற்ற வழிகளில் நுழைகிற கிருமிகளுக்கு ஒப்பீட்டளவில் சற்றே தாமதமாகத் தடுப்பாற்றல் வினை உருவாகும்.

5. கிருமிகளின் அளவு: உடலுக்குள் நுழைகிற கிருமிகளின் வகை மற்றும் அளவைப் பொறுத்தும் தடுப்பாற்றல் வினை உருவாகிறது. அவற்றின் அளவு அதிகரிக்கும்போது தடுப்பாற்றல் வினையும் அதிகரிக்கும்.

படித்தவரின் பதிவு...

வியப்பின் உச்சிக்குச் செல்கிறேன்!

மருத்துவம் சார்ந்த தொடர்களில் தனித்துவம் வாய்ந்த தொடராக 'உடலுக்குள் ஒரு ராணுவம்' தொடர் மிளிர்கிறது. கடந்த வாரம் எதிரணுக்களின் வகை, வடிவம் மற்றும் செயல்பாடுகளை மருத்துவர் கு.கணேசன் மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் விவரித்திருந்தார். பூட்டில் நுழையும் சாவிபோல் ஆன்டிஜென்களுக்குள் எதிரணுக்கள் நுழைகின்றன என்பதை அறிந்து வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டேன்.

- ரா. ரக் ஷனா, வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், சென்னை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in