உடலுக்குள் ஒரு ராணுவம் 28: எதிரணுக்கள் – ஏன், எதற்கு, எப்படி?

உடலுக்குள் ஒரு ராணுவம் 28: எதிரணுக்கள் – ஏன், எதற்கு, எப்படி?

செயற்கைத் தடுப்பாற்றலின் வகைகள் தொடர்பில் சென்ற வாரம் விரிவாகப் பார்த்தோம். உடலுக்குள் உருவாகிற தடுப்பாற்றல் வினை (Immune response) என்பது, அது இயற்கையோ செயற்கையோ எதுவானாலும், ‘திரவத் தூண்டல் தடுப்பாற்றல்’ (Humoral immunity), ‘செல் தூண்டல் தடுப்பாற்றல்’ (Cellular immunity) எனும் இரண்டே பிரிவுகளில் அடங்கிவிடும். இவற்றை இந்த வாரம் புரிந்துகொள்வோம்.

திரவங்களில் ஒரு போராட்டம்!

உடலுக்குள் ரத்தம், பித்தம், கபம் (சளி) என மூன்று வகையான திரவங்கள் இருப்பதை ஆதிகாலத்திலிருந்தே சொல்லிவருகின்றனர். உடலுக்குள் நுழையும் கிருமிகள் முதலில் இந்தத் திரவங்களில்தான் சுற்றுகின்றன. அவற்றுக்கு எதிராக உடலுக்குள் உண்டாகிற தடுப்பாற்றலைத் ‘திரவத் தூண்டல் தடுப்பாற்றல்’ என்கிறோம். இன்னும் சொன்னால், செல்களுக்கு வெளியில் ‘மேடை’ போடும் கிருமிகளுக்கு எதிராகக் ‘கொடி’ தூக்கும் தடுப்பாற்றல் இது.

இந்தத் தடுப்பாற்றல் ராணுவத்தின் ‘தளபதி’, ‘பி’ செல். ஆன்டிஜெனைக் காட்டிக்கொடுக்கும் செல்களின் வழியாகவும், துணை ‘டி’ செல் ஒற்றர்கள் வழியாகவும் குறிப்பிட்டதொரு இனக் கிருமியின் ஆன்டிஜென் உறுதிசெய்யப்பட்டால், அந்தத் தகவல் ‘பி’ செல்லுக்கு வருகிறது. உடனே, அது ‘பிளாஸ்மா செல்’களைத் (Plasma cells) தூண்டுகிறது. இந்த பிளாஸ்மா செல்கள் எதிரணுக்களை (Antibodies) உற்பத்தி செய்து ரத்த நதிக்கு அனுப்புகின்றன. பூட்டில் நுழையும் சாவிபோல் அந்த ஆன்டிஜென்களுக்குள் எதிரணுக்கள் நுழைகின்றன. ஓர் எதிரணுவில் நூற்றுக்கும் அதிகமான ‘புரதக் கழிவுகள்’ (Amino acid residues) இருக்கின்றன. அவை அந்த ஆன்டிஜென்களுக்கு விஷமாகின்றன.

செல்லுக்குள் ஒரு கலகம்!

‘செல் தூண்டல் தடுப்பாற்றல்’ (Cellular immunity) சற்றே மாறுபட்டது. தொற்று செல்களின் தூண்டுதலால் உருவாகும் தடுப்பாற்றல் இது. இதன் ‘தளபதி’, ‘டி’ செல். தொற்று செல்லில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆன்டிஜெனை அல்லது அந்த ஆன்டிஜென், செல்லின் மீது ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை ‘டி’ செல்கள் கவனித்து, MHC class II ‘ராணுவ கேப்டன்’களிடம் தகவலைச் சொல்லும். அவர்கள் ‘செல்நச்சு ‘டி’ செல்கள்’ (Cytotoxic T cell) எனும் சிறப்பு சிப்பாய்களைத் தேர்வு செய்து அனுப்ப, செல்லுக்குள் ஒரு கலகம் நிகழும். அதில் தொற்று செல்கள் இறந்துவிடும். இதனால், தொற்று செல்களிலிருந்து கிருமிகள் உடலுக்குள் பரவுவது தடுக்கப்படும். வைரஸ் போன்ற வேகமாக வளர்கிற கிருமிகளை அழிக்க இந்தத் தடுப்பாற்றல் உதவுகிறது.

மேலும், இப்படி இறந்த செல்கள் உடல் திரவங்களில் சுற்றிவரும்போது அவை ஆன்டிஜென்களாகவும் நம் தடுப்பாற்றல் மண்டலத்துக்குத் தெரிகின்றன. அவற்றைத் தாக்கி அழிக்க ‘திரவத் தூண்டல் தடுப்பாற்றல்’ காரியத்தில் இறங்குகிறது. அதன் பலனால், எதிரணுக்கள் உருவாகின்றன. அப்போது ரத்த நதியிலும் ஒரு போர் நடக்கிறது. அந்தப் போரில் ரத்தத்தில் சுற்றும் கிருமிகளை எதிரணுக்கள் துவம்சம் செய்து அழித்துவிடுகின்றன. ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

இப்போது, சொல்லுங்கள்… தடுப்பாற்றல் ராணுவத்தின் ‘விஐபி’ போர் வீரர்கள் யார்? எதிரணு சிப்பாய்கள்தானே!

‘ஐஜி’ எனும் தடுப்புப் புரதம்

நாட்டின் ராணுவத்தில் ஒரு சிப்பாய்க்கென்று பொதுவான தகுதிகள் இருப்பதைப்போல உடலுக்குள் இருக்கிற எதிரணு சிப்பாய்க்கும் பொதுப் பண்புகள் பல உண்டு. முக்கியமான பண்பு அதன் பெயரிலேயே இருக்கிறது. அதாவது, ‘இமுனோகுளோபுலின்’ (Immunoglobulin) என்பது எதிரணு சிப்பாய்க்குப் பொதுவான பெயர். வேதிப்பண்பின்படி, ‘கிளைக்கோ புரதம்’ (Glycoprotein) எனும் குளுக்கோஸ் - அமினோ அமிலக் கலவையால் உருவான ஒரு தடுப்பாற்றல் புரதம் இது. இதன் சுருக்கமான ஆங்கில நாமகரணம், ‘ஐஜி’ (Ig). உடலுக்குள் மொத்தம் இருக்கிற பிளாஸ்மா புரதங்களில் 20 சதவீதம் ‘ஐஜி’க்கள்தான் என்றால், இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

இந்த இடத்தில் நாம் ராட்னி போர்ட்டர் (Rodney Porter), ஜெரால்டு ஏடெல்மென் (Gerold Edleman) என்ற இருவரைப் போற்றிப் பாராட்ட வேண்டும். என்ன காரணம்? அவர்கள்தான் 1950 – 1960-களில் ஒரு ‘ஐஜி’ எந்த வடிவத்தில் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்த அறிவியலர்கள்; அதற்கு 1972-ல் நோபல் பரிசும் பெற்றவர்கள்.

ஒரு ‘ஐஜி’ எப்படி இருக்கும்?

ஒவ்வொரு ‘ஐஜி’யும் பார்ப்பதற்கு ஆங்கில எழுத்து ‘ஒய்’ (Y) போலிருக்கும். ஆன்டிஜென் எனும் பூட்டுக்குள் நுழையும் சாவி என்று இதைச் சொன்னோமல்லவா? இதன் வடிவத்தின் முன்பகுதியில் கவட்டைபோல் ஒரு பிரிவு இருக்கிறது பாருங்கள், அதுதான் ஆன்டிஜெனுக்குள் நுழையும் சாவி முனை. இதன் முழு உடலும் ஏகப்பட்ட அமினோ அமிலங்களால் ஆன ஒரு புரதச் சங்கலி. இந்தச் சங்கிலியில் இருவிதக் கொக்கிகள் உண்டு. ஒன்று, எடை குறைவானது (Light chain). மற்றொன்று, எடை அதிகமானது (Heavy chain). ஒரு சங்கிலியில் இருக்கிற அமினோ அமிலங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ‘ஐஜி’க்களை வகை பிரிக்கிறார்கள். இந்தக் கொக்கிகளை இணைப்பது ஒரு ரசாயனப் பாலம். ‘டைசல்பைடு பாண்ட்’ (Disulfide bond) என்று அதற்குப் பெயர்.

ராணுவச் சிப்பாய்களில் தரைப்படைச் சிப்பாய், கடற்படைச் சிப்பாய், விமானப் படைச் சிப்பாய் எனப் பல வகை இருப்பதுபோல், ‘ஐஜி’க்களில் 5 வகை உண்டு. அவற்றை ‘ஐஜிஏ’ (IgA), ‘ஐஜிஎம்’ (IgM), ‘ஐஜிஜி’ (IgG), ‘ஐஜிஈ’ (IgE), ‘ஐஜிடி’ (IgD) என்கிறோம். நம் கையில் ஐந்து விரல்கள் இருக்கின்றன என்றாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அதுபோல ‘ஐஜி’ ஒவ்வொன்றும் அதனதன் அமைப்பிலும் செயல்பாட்டிலும் வேறுபடுவதுண்டு. அந்த வேறுபாடு ஏன், எதற்கு, எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

சளிப்படல ‘ஐஜிஏ’

சன்னல் கம்பிகளில் துரு ஏறாமலிருக்க பெயின்ட் பூசுவதுபோல் உடலில் இருக்கிற சளிப்படலங்களில் (Mucus membranes) இயற்கையாகவே பூசப்பட்டிருக்கிற பூச்சுப் புரதம், ‘ஐஜிஏ’. மூக்கு முதல் நுரையீரல் வரை, வாய் முதல் மலக்குடல் வரை, சிறுநீர்ப் பாதை முதல் பிறப்புறுப்பு வரை இதுதான் கோலோச்சுகிறது. இத்தோடு விட்டதா? உமிழ்நீர், தாய்ப்பால், கண்ணீர் ஆகிய திரவங்களிலும் இது குடியிருக்கிறது. தாய்ப்பாலில் ‘ஐஜிஏ’ இருப்பதால்தான், தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவது பெரும்பாலும் தடுக்கப்படுகிறது.

மொத்தமுள்ள ‘ஐஜி’க்களில் 10 - 15 சதவீதம் இந்த வகைதான் இருக்கிறது. இதைச் சாதாரணமாக அழித்துவிட முடியாது. நொதியோ, மருந்தோ எதுவானாலும் அதைத் தாக்குப்பிடிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. அதனால்தான் காற்றின் மூலமும் உணவின் மூலமும் உடலுக்குள் நுழையும் கிருமிகளைச் சளிப்படத்தில் ஒட்டவிடாமல் இது தடுத்துவிடுகிறது. அப்படியே ஒட்டினாலும், தன்னிடம் உள்ள புரதக் கழிவுகள் மூலம் அவற்றை அழித்துவிடுகிறது.

பேருருவ ‘ஐஜிஎம்’

நாம் அம்மாவின் வயிற்றில் 20 வாரச் சிசுவாக இருக்கிறபோது உற்பத்தியாகிற முதல் ‘ஐஜி’ இதுதான். கிருமிகளுக்கு எதிரான போரில் முதல்நிலைத் தடுப்பாகவும் (Primary response) இது நிற்கிறது. நான்கு கால் விலங்குகளில் யானைக்கு ஒரு பிரம்மாண்டம் இருப்பதுபோல், 5 வகை ‘ஐஜி’க்களில் இதுதான் மிகப் பிரம்மாண்டமானது. அதனால், ‘பேருருவகுளோபுலின்’ (Macroglobulin) எனும் புனைப்பெயரும் இதற்கு உண்டு; மகாபாரத பீமன் போல் ஒரே நேரத்தில் 10 ஆன்டிஜென்களைக் ‘கட்டி’ப்பிடித்து அவற்றை அழித்துவிடுகிற வலிமை கொண்டது. மேலும், இதன் பேருருவம் காரணமாக, மற்ற உறுப்புகளுக்குச் செல்ல முடியாமல் ‘ரத்தமே கதி’ என்று இருக்கிறது. முக்கியமாக, சிசுவின் கருக்கொடிக்குள் இதனால் நுழைய முடியாது என்பது ஒரு பெருங்குறை. ஆனாலும், சிசுவுக்குத் தடுப்பாற்றல் தேவைப்படும்போது ‘ஐஜிஎம்’மை அதுவாகவே தயாரித்துக்கொள்கிறது. பிறந்த குழந்தைக்கு ‘ஐஜிஎம்’ இருந்தால், தாயிடமிருந்து ஏதோ ஒரு பிறவி நோய் வந்திருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

ஆயுள் கெட்டி ‘ஐஜிஜி’

உடலின் ரத்த நதியில் மிக அதிகமாகக் காணப்படுகிற ‘ஐஜி’ இது. சுரக்கும் வேகத்தை ஒப்பிட்டால், இது குற்றால அருவி; மற்றவை கும்பக்கரை அருவி. இதன் ஆயுள் ஏறத்தாழ 23 நாட்கள். கருக்கொடியைத் தாண்டிச் சென்று சிசுவுக்குத் தடுப்பாற்றலைத் தருகிற ஒரே ‘ஐஜி’ இதுதான். எனவே, சிசுவுக்கு இயற்கைத் தடுப்பாற்றல் உண்டாகும் வரை, ‘ஐஜிஜி’தான் மிகப் பெரிய பாதுகாப்புக் கேடயம். மேலும், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை என எல்லா இனக் கிருமிகளையும் அழிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. தடுப்பாற்றல் செயல்முறையில் இது இரண்டாம் நிலைத் தடுப்பாக (Secondary response) இருக்கிறது. அது சரி, ‘இரண்டாம் நிலைதானே’ என்று இதை ஏளனமாகப் பார்க்காதீர்கள். உடலுக்குள் மாதக்கணக்கில் நீடிக்கும் ‘ஐஜி’ இது ஒன்றுதான். பலவித வைரஸ்களுக்குப் பரம ‘வைரி’ இது என்பதும் தெரிந்தால் ‘சபாஷ்’ போடுவீர்கள்.

ஒவ்வாமை ‘ஐஜிஈ’

நம் குடலுக்குள் புழுக்கள் இருப்பதை உறுதி செய்யும் ‘ஐஜி’ இது. உடலில் ஒவ்வாமை (Allergy) இருக்கிறது என அறிவிக்கும் அலாரம் என்றும் இதைச் சொல்லலாம். ஒவ்வாத பொருள் ஒன்று உடலுக்குள் முதல்முறையாக நுழையும்போது, அந்த ஒவ்வாமைப் பொருளை ‘ஐஜிஈ’ கைது செய்துவிடும். அதேசமயம் ரத்தத் திசுவில் உள்ள ‘மாஸ்ட் செல்’களை (Mast cells) அது தூண்டும்; அதன் காரணமாக, ஹிஸ்டமின், லுயூக்கோட்ரின் (Leukotriene) போன்ற பல ரசாயனங்கள் பீச்சியடிக்கும்; அவை அங்குள்ள ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்யும்; நரம்பு முனைகளைத் தாக்கும். அப்போது, தும்மல், மூக்கொழுகல், மூச்சிளைப்பு, அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்ற அறிகுறிகள் தோன்றும்; சிலருக்கு உயிர் போகும் அளவுக்கு மோசமாவதும் உண்டு.

தனித்துவமான ‘ஐஜிடி’

‘ஐஜி’க்களில் மிகவும் குறைந்த அளவில் உற்பத்தியாகிற ‘ஐஜி’ இது. கிணற்று நீரைக் கோயில் சொம்புக்குள் ஊற்றியதும் தீர்த்தமாகித் தனித்துவம் பெறுவதுபோல், இதன் தடுப்பாற்றல் பணியும் தனித்துவமானது. எப்படி என்கிறீர்களா? ‘ஐஜிஎம்’ புரதங்கள் சில வகை ஆன்டிஜென்களோடு இணைய முடியாமல் தவிக்கும். அப்போது, ‘ஐஜிடி’தான் அதற்குக் ‘கைகொடுத்து’ உதவும்.

சரி, இந்த ‘ஐஜி’க்கள் எல்லாம் எப்படி உருவாகின்றன? ‘காமதேனு’ வாசகர்கள் இந்தக் கேள்வியைக் கேட்காமல் விடமாட்டார்கள். அவர்களுக்காக அடுத்த வாரம்.

(போர் ‘புரி’வோம்)

படித்தவரின் பதிவு...

கடினத்தை உடைத்தெறியும் எழுத்து!

தடுப்பாற்றல் குறித்த பாடங்கள் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கே கடினமாக இருக்கும் என்று ஒரு பொதுவான கருத்து உண்டு. ‘உடலுக்குள் ஒரு ராணுவம்’ தொடரில் மருத்துவர் கு. கணேசன் அந்தக் கடினத்தை எளிய உதாரணங்கள் மூலம் சாதாரணமாக உடைத்தெறிகிறார். நோய், மருத்துவம் குறித்தான அறிவியலை சாமானியருக்கும் அருமையாகக் கடத்திவிடுகிறார். ஒரு கடுமையான அறிவியல் தொடரை இவ்வளவு சுவாரசியமாக இவரால் மட்டுமே எழுத முடியும் என்றால் அது மிகையில்லை.

- மருத்துவர் பெ. ராமேஸ்வரன், பல் மருத்துவர், திருவில்லிபுத்தூர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in