உடலுக்குள் ஒரு ராணுவம் - 25: ‘ஆன்டிஜென்’ அறிவோம்!

உடலுக்குள் ஒரு ராணுவம் - 25:  ‘ஆன்டிஜென்’ அறிவோம்!

இந்த வாரம் உங்களுக்கு ‘ஆன்டிஜென்’ (Antigen) எனும் ஆங்கிலப் பதத்தை அறிமுகம் செய்யப்போகிறேன். மிகச் சுருக்கமாகச் சொன்னால், தடுப்பாற்றல் ராணுவத்துக்கு எதிராளிகளைக் காட்டிக்கொடுக்கும் ஓர் ‘அடையாள அட்டை’ இது. இந்த ‘அட்டை’ மட்டும் இல்லை என்றால், தடுப்பாற்றல் ராணுவத்தின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவிவிட்டு எதிராளிகள் எளிதாக நம் உடலுக்குள் ‘நோய் அரங்க’த்தை அமைத்துவிடுவார்கள்.

‘ஆன்டிஜென்’ என்பது என்ன?

பொதுவாக, ஒரு நாட்டின் ராணுவத்தை யாரெல்லாம் சீண்டுகிறார்களோ அவர்கள் எல்லோரும் அந்த நாட்டுக்கு எதிரிகள் ஆகிறார்கள், இல்லையா? அதுமாதிரி, நம் உடலுக்குள் இருக்கிற தடுப்பாற்றல் ராணுவத்தை எதுவெல்லாம் சீண்டுகிறதோ அல்லது உசுப்பிவிடுகிறதோ, அந்தப் பொருளை ‘ஆன்டிஜென்’ என்று அழைக்கலாம் என்கிறது நவீன மருத்துவம். அந்தப் பொருள் உயிருள்ளதாகவும் இருக்கலாம்; உயிரில்லாததாகவும் இருக்கலாம். உதாரணத்துக்கு, வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, குடல் புழு ஆகியவை உயிருள்ள ஆன்டிஜென்கள். அதேசமயம், பூக்களின் மகரந்தம், தூசு, மருந்து, பலதரப்பட்ட ரசாயனங்கள், உணவுப் புரதங்கள், நச்சுகள் போன்றவை உயிரில்லாத ஆன்டிஜென்கள்.

முக்கால்வாசி ஆன்டிஜென்கள் நம் உடலின் வெளியிலிருந்தே வருகின்றன. நாம் சாப்பிடும் உணவு, அருந்தும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று, செலுத்திக்கொள்ளும் ஊசி மருந்து ஆகியவற்றின் மூலம் கிருமிகள் மற்றும் நச்சுகள் உடலுக்குள் நுழைகின்றன. அதேசமயம் சில ஆன்டிஜென்கள் நம் உடலுக்குள்ளேயும் உருவாகின்றன. உதாரணத்துக்கு, ரத்த செல்களில் உருவாகிற ஆன்டிஜென்களையும் புற்று செல்களில் உருவாகிற ஆன்டிஜென்களையும் சொல்லலாம்.

ஆன்டிஜெனின் பண்புகள்

‘ஆன்டிஜென்’ (Antigen) எனும் ஆங்கிலப் பதத்துக்கு இணையாக ‘எதிரணு ஊக்கி’ என்று ஒரு தமிழ்ப் பதம் உண்டு. ஆன்டிஜென்கள் என்பவை உடலுக்குள் எதிரணுக்கள் (Antibodies) உருவாவதற்கு ஊக்கசக்திகளாக இருப்பவை என்பது இதன் பொருள். ஆங்கிலத்தில் ‘Antigen’ என்று பெயர் எப்படி வந்தது என்பதைத் தெரிந்துகொண்டால் இதைப் புரிந்துகொள்வது எளிது. அதாவது, ‘Antibody generator’ என்பதைத்தான் சுருக்கமாக ‘antigen’ என்று அழைக்கிறார்கள்.

அடுத்து இதுவும் முக்கியம். ஒரு பொருளை ஆன்டிஜென் என்று அடையாளப்படுத்துவதற்கு அந்தப் பொருளின் முழுத்தன்மையும் இருக்க வேண்டும் என்பதில்லை. அதன் ஏதாவது ஒரு பகுதி இருந்தால்கூட போதும். அந்தப் பொருள் குறித்த அத்தனை தன்மைகளையும் நம் தடுப்பாற்றல் ராணுவம் தீர விசாரித்துத் தெரிந்துகொள்ளும். உதாரணத்துக்கு, வைரஸ் ஓர் ஆன்டிஜென் என்றால், அதன் ஒரு பகுதியான ஆர்.என்.ஏ. (RNA) புரதம் மட்டும் இருந்தால் போதும், அதன் வகை என்ன, எந்த வழியில் அது உடலுக்குள் புகுந்து, எப்படி ரகளை செய்யும் என்பது போன்ற பல விவரங்கள் தடுப்பாற்றல் ராணுவத்துக்கு அத்துப்படி ஆகிவிடும்.

‘ஆன்டிஜென்’ என்பதற்கு ‘இமுனோஜென்’ (Immunogen) என மாற்றுப் பெயரும் உண்டு. தமிழில் சொன்னால், ‘தடுப்பாற்றல் ஊக்கி’. இங்கே ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘ஆன்டிஜென்’ என்று நாம் அழைப்பதெல்லாமே ‘இமுனோஜென்’ ஆக முடியாது. காரணம், பல ஆன்டிஜென்களால் தடுப்பாற்றல் ராணுவத்தை உஷுப்ப முடியாது. அதனால் அவை ‘தடுப்பாற்றல் ஊக்கி’களாகச் செயல்பட முடியாது. எந்தவொரு ஆன்டிஜென் தடுப்பாற்றலை ஊக்கப்படுத்துகிறதோ அது மட்டும்தான் ‘தடுப்பாற்றல் ஊக்கி’யாகச் செயல்பட முடியும். தமிழ்நாட்டில் நாம் ‘கமல்’ என்று அழைத்தால் பொதுவாக நடிகர் கமல்ஹாசனைத்தான் குறிக்கும். அதற்காக ‘கமல்’ என்று பெயருள்ளவர்கள் எல்லோரும் கமல்ஹாசன் ஆக முடியாதல்லவா? அதுபோலத்தான் இது.

இன்னொன்று. சில ஆன்டிஜென்களால் சுயமாகத் ‘தடுப்பாற்றல் ஊக்கி’யாகச் செயல்பட முடியாது. ஹோமம் வளர்ப்பதற்கு விறகு மட்டும் போதாது; நெய்யும் ஊற்ற வேண்டும். அப்போதுதான் அது ‘திபுதிபு’வென எரியும். அதுமாதிரி சில ஆன்டிஜென்களால் சில ரசாயனங்களின் உதவியுடன்தான் தடுப்பாற்றல் வினையில் ஈடுபட முடியும். அவற்றுக்குப் பெயர் ‘ஹேப்டன்கள்’ (Haptens). தமிழில், ‘தனித்தூண்டுத் திறனிலிப் புரதங்கள்’.

ஆன்டிஜென்களில் பல விதம் உண்டு. பாக்டீரியா ஆன்டிஜென், வைரஸ் ஆன்டிஜென், வளர்கரு ஆன்டிஜென் (Embryonic antigen), ரத்தவகை ஆன்டிஜென். இப்படி இன்னும் பல… அவற்றில் ரத்த வகை ஆன்டிஜென்களை இப்போது பார்ப்போம். காரணம், இது ஒரு வித்தியாசமான ஆன்டிஜென். எப்போதும் நமக்கு இது எதிராளி இல்லை. எப்போது அப்படி ஆகும் என்பதைக் கடைசியில் சொல்கிறேன்.

வியப்பூட்டும் ரத்த வகை

ரத்தம் எல்லோருக்கும் ஒரே நிறம்தான். ஆனால், ஒரே வகை கிடையாது. மனித ரத்தத்தில் இருபதுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அவற்றில் ஏ, பி, ஏபி, ஓ எனும் நான்கு வகைகள் முக்கியமானவை.

இந்த இடத்தில் ஆஸ்திரிய நாட்டு விஞ்ஞானி கார்ல் லான்ஸ்டீனர் (Karl Landsteiner) என்பவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏன்? அவர்தான் 1901-ல் நம் ரத்த வகைகளைக் கண்டுபிடித்தவர். அதற்காக அவருக்கு 1930-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது ஒரு தனிக்கதை.

பள்ளிக் குழந்தைகள் தங்கள் அடையாள அட்டையைச் சட்டையின் முன்பக்கத்தில் தொங்கப்போட்டுக் கொள்வதுபோல நம் ரத்தச் சிவப்பணுக்களின் மேற்பரப்பில் ‘ஆன்டிஜென்’ எனும் உயிர்ப்பொருள் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இது பெற்றோரிடமிருந்து மரபு வழியாக நமக்கு வருகிறது. ஏ, பி, எம், என் எனப் பலதரப்பட்ட ஆன்டிஜென்கள் உள்ளன. ரத்தச் சிவப்பணுவில் என்ன வகை ஆன்டிஜென் இருக்கிறதோ அதைப் பொறுத்து ஒருவருக்கு ரத்தவகை அமைகிறது.

சிவப்பணுக்களில் ‘ஆன்டிஜென்’ இருப்பதுபோல், ரத்த பிளாஸ்மாவில் ‘ஆன்டிபாடி’ எனும் ஓர் உயிர்ப்பொருள் இருக்கிறது. இது ஆன்டிஜெனுக்கு எதிரான ஓர் உயிர்ப்பொருள். இதை வைத்தும் ரத்தவகை பிரிக்கப்படுகிறது.

சிவப்பணுவில் ‘ஏ ஆன்டிஜென்’ இருப்பவர்கள் ‘ஏ ரத்த வகை’யைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பிளாஸ்மாவில் ‘ஆன்டிபாடி – பி’ (Antibody-B) இருக்கும். ‘பி ஆன்டிஜென்’ கொண்டவர்கள் பி ரத்த வகையினர். இவர்களுக்கு ‘ஆன்டிபாடி – ஏ’ (Antibody-A) இருக்கும். சிலருக்கு ஏ, பி இரண்டு ஆன்டிஜென்களும் இருக்கும்; ஆனால், எந்த வகை ஆன்டிபாடியும் இருக்காது. இவர்கள் ‘ஏபி ரத்த வகை’ உடையவர்கள். இன்னும் சிலருக்கு எந்த ஆன்டிஜெனும் இருக்காது. ஆனால், இரண்டு வகை ஆன்டிபாடிகளும் இருக்கும். இவர்கள் ‘ஓ ரத்த வகை’யைச் சேர்ந்தவர்கள். ஏ ரத்த வகையில் ‘ஏ1, ஏ2’; ஏபி ரத்த வகையில் ‘ஏ1பி, ஏ2பி’ எனத் துணை வகைகளும் உண்டு.

இந்த மாதிரி ரத்த வகையைப் பிரிப்பதற்கு ‘ஏபிஓ ரத்த வகை முறை’ (ABO Blood System) என்று பெயர். இதன்படி அந்தந்த ரத்த வகை உள்ளவர்களுக்கு அதே ரத்த வகையாளரிடமிருந்து ரத்தத்தைப் பெற்று சிகிச்சை அளிக்கும் முறை நவீன மருத்துவத்தில் பின்பற்றப்பட்டது. ஆனால், இதன் ஆரம்பகட்டத்தில் சிலருக்கு அவர்களுடைய ரத்த வகையைச் செலுத்தினால்கூட பொருந்தவில்லை. அதற்கு என்ன காரணம் என்பதும் முதலில் தெரியவில்லை. புரியாத இந்தப் புதிருக்கு விடை கண்டுபிடிக்க கார்ல் லான்ஸ்டீனரோடு கைகோத்தவர் அமெரிக்க விஞ்ஞானி வெய்னர் (Weiner).

இந்த இருவரும் இணைந்து 1937-ல் இதற்குக் காரணம் கண்டுபிடித்தனர். சிவப்பணுக்களில் ‘ஆர்ஹெச்’ எனும் இன்னோர் ஆன்டிஜென் இருப்பது அப்போது அவர்களுக்குத் தெரியவந்தது. இதற்கு ‘ஆர்ஹெச் காரணி’ (Rh factor) அல்லது ‘டி-ஆன்டிஜென்’ (D-antigen) என்று பெயர் சூட்டினர். ஆனால், இந்தச் சிறப்பு ஆன்டிஜென் எல்லோருடைய ரத்தத்திலும் இருப்பதில்லை. ஆகவே, இந்தக் காரணி இருப்பவர்களின் ரத்தம் ‘ஆர்ஹெச் பாசிட்டிவ்’ என்றும், இது இல்லாதவர்களின் ரத்தம் ‘ஆர்ஹெச் நெகட்டிவ்’ என்றும் பிரிக்கப்பட்டது. இந்த வகையில் ரத்தத்தை வகைப்படுத்தும் முறைக்கு ‘ஆர்ஹெச் ரத்த வகை முறை’ (Rh Blood System) என்று பெயர். சரி, இதற்கு ‘ஆர்ஹெச்’ என்று ஏன் பெயர் வைத்தார்கள், தெரியுமா? முதன்முதலில் ‘ரீசஸ்’ எனும் குரங்கு இன ரத்தத்தில் ‘ஆர்ஹெச் காரணி’ கண்டுபிடிக்கப்பட்டதால், இதற்கு ‘Rhesus factor’ என்று ஆங்கிலத்தில் பெயரிட்டனர்.

சரி, ரத்த வகைகளுக்கு என்ன முக்கியத்துவம்?

விபத்தில் அடிபட்டு நம் உடலிலிருந்து ரத்தம் வெளியேறும்போது, சில நோய்கள் காரணமாக உடலில் ரத்த இழப்பு ஏற்படும்போது, அறுவை சிகிச்சையின்போது எனப் பல அவசர நிலைகளில் நமக்கு ரத்தம் செலுத்தப்பட வேண்டிய அவசியம் வரலாம். அப்போது ரத்த வகையை மாற்றிச் செலுத்திவிடக் கூடாது. ஒரே வகை ரத்தம்தான் செலுத்தப்பட வேண்டும். அதற்குத்தான் ரத்த வகையைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

பொதுவாக, ‘ஓ நெகட்டிவ்’ ரத்த வகை அனைவருக்கும் பொருந்தும். ஓர் அவசரத்துக்கு இதைக் கொடுக்கலாம். இவர்களை ‘எல்லோருக்குமான கொடையாளர்கள்’ (Universal donor) என்கிறோம். ‘ஏபி பாசிட்டிவ்’ ரத்த வகை உள்ளவர்கள் எந்த வகை ரத்தத்தையும் ஏற்றுக்கொள்வார்கள். இவர்களை ‘எல்லாம் ஏற்றுக்கொள்கிறவர்கள்’ (Universal Recipient) என அழைக்கிறோம்.

‘பாம்பே’ ரத்த வகை

மனித ரத்த வகையில் மிக அரிதான ரத்த வகைகளும் இருக்கின்றன. அவற்றில் ‘பாம்பே ரத்த வகை’ (Bombay blood group) முக்கியமானது. இதை முதன்முதலில் 1952-ல் மும்பையில் (அப்போதைய பாம்பே) டாக்டர் பெண்டே (Dr. Bhende) என்பவர் கண்டுபிடித்ததால் இந்தப் பெயர் வந்தது. பொதுவாக, ஏ, பி ஆன்டிஜென்களின் உற்பத்திக்குத் துணை செய்வது சிவப்பணுக்களில் இருக்கிற ‘ஹெச் ஆன்டிஜென்’ (H antigen). ஏ, பி ஆன்டிஜென்களை உற்பத்தி செய்ய சிவப்பணுக்களில் ‘ஹெச் ஆன்டிஜென்’ இருக்க வேண்டியது அவசியம். இது இல்லாவிட்டால் ஏ, பி ஆன்டிஜென்கள் உற்பத்தியாகாது. இவ்வாறாக ஹெச் ஆன்டிஜென் மற்றும் ஏ, பி ஆன்டிஜென்கள் இல்லாத ஒரு விசித்திரமான ரத்த வகை ‘பாம்பே ரத்த வகை’. இந்தியாவில் மும்பையில்தான் இந்த அரிதான ரத்த வகை உள்ளவர்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.

ரத்தம் எதிராளி ஆவது எப்போது?

ஒருவருக்கு ரத்தம் செலுத்தப்படும்போது அவருடைய ரத்த வகை உள்ள ரத்தத்தைத்தான் செலுத்த வேண்டும். மாறாக, மாற்று வகை ரத்தம் செலுத்தப்பட்டால் அது அவருக்கு எதிரியாகிவிடும். காரணம், அவருடைய தடுப்பாற்றல் ராணுவம் மாற்றுவகை ரத்தச் சிவப்பணுக்களில் இருக்கிற ஆன்டிஜெனை தன்னுடைய எதிராளியாக நினைத்துவிடும். அதற்கு எதிரணுக்களை அனுப்பி எதிர்ப்பு தெரிவிக்கும். அப்போது ரத்தம் பொருந்தாமல் போய்விடும். அலர்ஜி ஆகும்.

(போர் ‘புரி’வோம்)

படித்தவரின் பதிவு...

செறிவானது, குறிப்பெடுக்க வேண்டியது!

மருத்துவம் தொடர்பான தகவல்களைத் தமிழில் பேசுவதும் எழுதுவதும், சற்றே சவாலான பணி. ஆங்கிலப் பதங்களுக்கு இணையான, எளிமையான தமிழ்ப் பதங்களைப் பயன்படுத்துவதில் மருத்துவர்கள் பலரும் சிரமப்படுவதுண்டு. பெரும்பாலும், சில சிக்கலான மருத்துவச் சொற்களை ஆங்கிலத்திலேயே மருத்துவர்கள் சொல்லிச் செல்வதுண்டு. மருத்துவர் கு. கணேசன், அந்தச் சவாலை மிக லாகவமாகக் கடந்து முத்திரை பதிக்கிறார். மருத்துவத் தகவல்களை எளிமைப்படுத்துகிறேன் என்ற பெயரில், அவற்றின் சாரம் நீர்த்துப்போக அவர் அனுமதிப்பதில்லை. பரபரப்பான மருத்துவப் பணிக்கு இடையே, தமிழில் கட்டுரை எழுதவும் நேரத்தை ஒதுக்கும் மருத்துவர் கு. கணேசனுக்குத் தமிழ் வாசகர்கள் சார்பில் நன்றி.

- க. முத்துலட்சுமி, இல்லத்தரசி, சிங்கப்பூர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in