உடலுக்குள் ஒரு ராணுவம் - 17: ரத்த நதியும் நிணநீர்க் கால்வாயும்!

உடலுக்குள் ஒரு ராணுவம் - 17: ரத்த நதியும் நிணநீர்க் கால்வாயும்!

சென்ற வாரம் உடலில் ஏற்படும் ஒரு காயத்தின் பின்னணியைப் பார்த்தோம். சமயங்களில், காயம் ஏற்படும் போது கழுத்து, தொடை போன்ற இடங்களில் நெரிகட்டுவதைக் கவனித்திருப்பீர்கள். அது என்ன?

நெரிகட்டுவதன் அறிவியல் புரிய வேண்டுமானால், நிணநீர்க் கால்வாயைத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு முன்னால் நம் ரத்த நதியின் சில அதிசயங்களைச் சொல்ல வேண்டும்.

70 கிலோ எடையுள்ள ஒருவரின் உடலில் சுமார் 5 லிட்டர் ரத்தம் இருக்கிறது. ரத்தம் ஒரு திரவத் திசு. இதில் 55 சதவீத பிளாஸ்மா எனும் திரவம்தான் இருக்கிறது. மீதி இருப்பவை சிவப்பணுக்கள் (Erythrocytes), வெள்ளையணுக்கள் (Leucocytes), தட்டணுக்கள் (Platelets). பிளாஸ்மாவில் 90 சதவீதம் தண்ணீர் இருக்கிறது. ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு, உணவுச்சத்துகள், நோய் எதிர்ப்புப் புரதங்கள், ஹார்மோன்கள், உடல் கழிவுகள் எனச் சக பயணிகள் பலரும் ‘பிளாஸ்மா படகி’ல் பயணம் செய்கின்றனர்.

சிவப்பணு என்பது உடலுக்கு ஆற்றல் தரும் அரிய ஆலை. இதில் ‘ஹீமோகுளோபின்’ எனும் இரும்புப் புரதம் இருக்கிறது. இது சிவப்பாக இருக்கிறது. அதனால், நம் ரத்தமும் சிவப்பாக இருக்கிறது. சாதாரணமாக ஒருவருக்கு இதன் அளவு 100 மில்லி ரத்தத்தில் 15 கிராம் வரை இருக்க வேண்டும். 18 வயதைக் கடந்த ஆண்களின் ரத்தத்தில் ஒரு கன மி.மீ-க்கு 52 லட்சம் வரை சிவப்பணுக்கள் இருக்கும். இது பெண்களுக்கு 45 லட்சம். இந்தச் சக்தி ஆலையின் வேலை என்ன தெரியுமா? உடல் செல்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனைச் சுமந்து செல்வது. நுரையீரல் வழியாக கார்பன்-டை-ஆக்ஸைடு கசடை வெளியில் தள்ளுவது.

ரத்தக்கசிவு நிற்பது எப்படி?

உடலில் சிறிய காயங்கள் ஏற்பட்டு ரத்தம் கசியும்போது சிறிது நேரத்தில் அந்தக் கசிவு நின்றுவிடுகிறதே, எப்படி? தட்டணுக்கள் செய்யும் மாயாஜாலம்தான் அது. வீட்டில் தண்ணீர்க் குழாய் கசிந்தால் ‘எம்சீல்’ பசையைப் பூசி அடைக்கிறோம். அதுமாதிரிதான், காயம்பட்ட இடத்தில் தட்டணுக்கள் திராட்சைக் கொத்துபோல் குவிந்து, ‘ஃபைப்ரின்’ (Fibrin) இழைகளைப் பரப்பி, கசியும் ரத்தக்குழாயை மூடிவிடுகிறது. இப்படி, உடலில் ரத்தம் வீணாகாமல் தடுப்பதில் தட்டணுக்களின் பங்கு மகத்தானது.

சிக்கன் பிரியாணி சமைக்க வேண்டுமானால் பத்துக்கும் மேற்பட்ட மசாலாப் பொருட்கள் தேவை. அவற்றில் ஒன்று குறைந்தாலும் ருசி குறைந்துவிடும். அதுமாதிரி, ரத்தம் உறைவதற்கு மொத்தம் 13 மூலப்பொருட்கள் தேவை. இவற்றில் ஒன்று குறைந்தாலும் ரத்தம் உறையாது; காயத்திலிருந்து ரத்தம் கசிவது நிற்காது. பொதுவாக, ஒரு கன மி.மீ ரத்தத்தில் 1.5-லிருந்து 4 லட்சம் வரை தட்டணுக்கள் இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் உள்ளவரின் சருமத்தில் ரத்தக்கசிவுக் கோடுகளைக் காணலாம். தட்டணுக்களின் எண்ணிக்கை அதலபாதாளத்துக்குச் சென்றுவிடுவதுதான் அதற்குக் காரணம்.

சிப்பாய் ரக வெள்ளையணுக்கள்

உடலுக்குள் இருக்கும் தடுப்பாற்றல் ராணுவத்தின் சிப்பாய்ப் படைகள்தான் வெள்ளையணுக்கள். இந்தச் சிப்பாய்கள் பல ரகத்தைச் சேர்ந்தவர்கள். நோய் எதிர்ப்புப் பொருட்களைத் (Antibodies) தயாரித்தளிக்கும் சமையல் சிப்பாய்கள்; அந்நியர்களைச் சாகடிக்கும் இயற்கைக் கொலையாளி சிப்பாய்கள்; இறந்துபோன அந்நியர்களை அப்புறப்படுத்தும் துப்புரவுச் சிப்பாய்கள். அந்நியர்களை காலம்காலமாக நினைவில் கொள்ளும் நினைவகச் சிப்பாய்கள்… இப்படி, ஒரு கன மி.மீ ரத்தத்தில் சாதாரணமாக 4 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரை வெள்ளையணுச் சிப்பாய்கள் இருக்கின்றனர். நோய்கள் நம்மைத் தாக்கும்போதும், புற்றுநோய் பாதிப்பின்போதும் வெள்ளையணுச் சிப்பாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். அப்போது நாம் உஷாராகிவிட வேண்டும்.

‘தைமஸ்’ ஒரு பாடசாலை

எதிரிகளோடு போராடும் வெள்ளையணுச் சிப்பாய்களில் நியூட்ரோபில், ஈசினோபில், பேசோபில், லிம்போசைட், மோனோசைட் என 5 பிரிவினர் முக்கியமானவர்கள். இவர்களில் ‘லிம்போசைட்ஸ்’ (Lymphocytes) எனும் ‘நிணவணுக்கள்’ முதல் வரிசை சிப்பாய்கள். இவர்களில்கூட ‘பி’ நிணவணுக்கள் (B–Lymphocytes), ‘டி’ நிணவணுக்கள் (T–Lymphocytes) என இரு உபபிரிவினர் உண்டு. ‘பி’ நிணவணுக்கள் எலும்பு மஜ்ஜை பள்ளியிலும் ‘டி’ நிணவணுக்கள் தைமஸ் சுரப்பி (Thymus gland) பள்ளியிலும் ‘படித்த’வர்கள். நாட்டில் ராணுவப் பள்ளிகள் பல இருந்தாலும் போர் உத்திகளைக் கற்றுத் தருவதற்கென ஒரு மையம் இருக்குமல்லவா? அதுமாதிரி, உடலில் நிணவணுச் சிப்பாய்கள் அனைவரும் போர் உத்திகளைக் கற்றுக்கொண்டது தைமஸ் சுரப்பி பள்ளியில்தான். எப்போது?

நாம் 10 மாதச் சிசுவாக அம்மாவின் கருப்பையில் இருந்தபோதுதான், இந்தச் சிப்பாய்கள் தடுப்பாற்றல் குறித்த அரிச்சுவடியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். நமக்கு இதயம் உருவானதுமே, அதன் மேற்புறத்தில் ஒரு தலையணைபோல் ‘தைமஸ் சுரப்பி’ உருவாகிறது. நாம் பிறக்கும்போது இதன் எடை 12 கிராம். இது 12 வயது வரை மட்டுமே வளர்கிறது என்பது இதன் ஸ்பெஷாலிட்டி. அப்போது இதன் எடை 36 கிராமாக இருக்கிறது.

தைமஸ் சுரப்பியைத் தடுப்பாற்றலுக்கானச் சிறப்புப் பாடசாலை என்றால் மிகையில்லை. அங்கேதான் நிணவணுச் சிப்பாய்களுக்கு ‘நம் நண்பர்கள் யார்?’, ‘எதிரிகள் யார்?’, ‘எந்த ரூபத்தில் அந்நியர்கள் வருவார்கள்?’, ‘எப்படிப் போராடுவது?’, ‘எப்படி எதிராளிகளை அப்புறப்படுத்துவது?’, ‘எந்த மாதிரி அவர்களை நினைவில் வைத்துக்கொள்வது?’ போன்ற பாடங்களைத் தொடர்ந்து நடத்துவார்கள். பல பயற்சிகளையும் தருவார்கள். வகுப்புகளில் பாஸானதும், அவர்கள் ரத்த நதிக்கும் நிணநீர்க் கால்வாய்க்கும் வருவார்கள்.

அது என்ன நிணநீர்க் கால்வாய்?

உடலில் ரத்த நதியின் ஒரு பகுதியாக ‘நிணநீர்க் கால்வாய்’ (Lymphatic system) ஓடுகிறது. இது உடலுக்குள் பல மைல் தூரம் பயணிக்கிறது. இதில் காபி டிக்காஷன் இறக்குகிற உத்தியில் ‘நிணநீர்’ (Lymph) உருவாகிறது. பொதுவாக, ரத்தத் தந்துகிகளின் (Capillaries) தமனிப் பகுதி ரத்தம் அதிக அழுத்தத்துடன் இருக்கிறது. அந்த ரத்தத்திலிருந்து சிறிதளவு பிளாஸ்மா, நிணவணுக்கள், சில புரதங்கள், செல்களின் சில கழிவுகள், சில கரைசல் பொருட்கள் ஆகியவை தந்துகிகளிலிருந்து வடிகட்டப்பட்டு, ஒரு வெளிர்த் திரவமாக திசுக்களிலுள்ள செல்களுக்கு இடையே வருகிறது. இதுதான் ‘நிணநீர்’. நாளொன்றுக்கு 2-லிருந்து 3 லிட்டர் வரை நிணநீர் சுரக்கிறது.

இது உடலில் ஆங்காங்கே சிறு சிறு நிண நாளங்களில் சேகரிக்கப்படுகிறது. பல சிறிய நிண நாளங்கள் ஒன்று சேர்ந்து, பெரிய நிண நாளமாக உருவாகிறது. கிராமத்திலிருந்து பெருநகரத்துக்குச் செல்லவேண்டுமானால், சிற்றுந்தில் ஏறி, நகரத்துக்கு வந்து, ஆம்னி பேருந்தில் மாறிச்செல்வதுபோல்தான் இது. பேருந்துப் பாதையில் பல பேருந்து நிறுத்தங்கள் இருப்பதைப்போல், இந்த நாளங்கள் செல்லும் பாதையில் ‘நிணக்கணுக்கள்’ (Lymph nodes) இருக்கின்றன. குறிப்பாக, தலை, கழுத்து, அக்குள், வயிறு, தொடை இடுக்குகள் ஆகிய இடங்களில், தோலுக்கு அடியில், ஒரு பட்டாணி அளவில் சுமார் 600 நிணக்கணுக்கள் இருக்கின்றன.

உடலெங்கும் ஒரு சங்கிலித் தொடர்போல் அமைந்துள்ள நிண நாளங்கள் தாம் கொண்டுவரும் நிணநீரை அருகில் உள்ள நிணக்கணுக்களில் சேர்க்கின்றன. அந்த நிணக்கணுக்களில் இருந்து புதிய நிண நாளங்கள் புறப்படுகின்றன. அவற்றில் மறுபடியும் நிணநீர் பயணிக்கிறது. இறுதியில் இந்த நாளங்கள் வலது, இடது கழுத்துப் பட்டை எலும்பின் அடியிலுள்ள சிரைக்குழாய்களில் (Subclavian veins) இணைகின்றன. அதன் வழியே ரத்த நதியில் நிணநீர் கலக்கிறது.

நிண நாளங்களில் வால்வுகள் இருப்பதால், நிணநீர்ப் போக்குவரத்து ஒரு திசைப் பயணமாக இதயத்தை நோக்கியே செல்கிறது. நிண நாளங்களைச் சுற்றியுள்ள தசைகளின் இயக்கத்தால் இந்தப் போக்குவரத்து சாத்தியமாகிறது. அப்போது திசுக்களிலிருந்து பாக்டீரியா போன்ற சில நுண்ணுயிரிகளை நிணநீர் உறிஞ்சிக்கொள்கிறது. அவற்றை நிணக்கணுக்கள், மண்ணீரல், தைமஸ் போன்ற நிண உறுப்புகள் வடிகட்டி வெளியேற்றுகின்றன.

பனாமா கால்வாய் தென்அமெரிக்காவையும், வடஅமெரிக்காவையும் இணைக்கிற மாதிரி நிணநீர், நிண நாளங்கள், நிணக்கணுக்கள், தைமஸ், மண்ணீரல், எலும்பு மஜ்ஜை, டான்சில், குடல் மற்றும் சுவாச மண்டல நிணத்திசுக்கள் என அனைத்தையும் இணைக்கிறது நிணநீர்க் கால்வாய். இது, நாம் சாப்பிடும் சிக்கன் கொழுப்பைக் குடலில் உறிஞ்சிக் கல்லீரலுக்குக் கொடுக்கிறது; நிணநீரில் கலக்கும் உடல் கழிவுகளை நீக்குகிறது; நோய்க்கிருமிகளை அழிக்கிறது; அந்நியப் பொருட்களை அகற்றிச் சுத்தப்படுத்துகிறது; சுத்தப்படுத்திய நிணநீரை ரத்தத்துக்கு அனுப்புகிறது; இப்படி, நோய் காக்கும் காவலனாகவும் இருக்கிறது.

நெரிகட்டு என்பது என்ன?

பொதுவாக, ஒரு போரில் அந்நியர்களின் பலம் அதிகமென்றால், போர்க்களத்தில் சிப்பாய்களைக் குவித்து ஆங்காங்கே கூடாரங்கள் அமைப்பார்கள். போர் முடிந்ததும் அந்தக் கூடாரங்களைக் காலி செய்துவிடுவார்கள். உடலில் நெரிகட்டு ஏற்படுவதை இந்தச் சிப்பாய்க் கூடாரங்களுக்கு ஒப்பிடலாம். எப்படி? ஒரு நோய்த்தொற்று ஏற்படும்போது, உடலுக்குள் புகுந்துகொள்ளும் அந்நியக் கிருமிகளின் ஆக்கிரமிப்பு அதிகமென்றால், அவற்றை அழிப்பதற்கு நிணக்கணுக்கள் நிறைய நிறைய நிணவணுச் சிப்பாய்களைத் துணைக்கு அழைத்துக்கொள்கின்றன. அதனால், இயல்பில் பட்டாணி அளவிலிருந்த நிணக்கணுக்கள் கோலிக்குண்டு அளவுக்குப் பெரிதாகின்றன. இந்த நிலைமையைத்தான் ‘நெரிகட்டு’ என்கிறோம். தமிழில், ‘நிணக்கணு வீக்கம்’ (Lymphadenitis). இது ஒரு நோய் காட்டும் அம்சம்.

உதாரணமாக, காலில் புண் வந்தால் தொடை இடுக்கில் நெரி கட்டும். மார்பில் பிரச்சினை என்றால் அக்குளில் நெரிகட்டும். கிருமிகளின் பாதிப்பு மிக அதிகமாக இருந்து, அது நிண நாளங்களை அடைத்துக்கொள்ளுமானால், திசுக்களில் நீர் கோத்து, வீங்கிவிடும். பாதங்களில் நோய்த்தொற்று ஏற்படும்போது கால் முழுவதும் சிவந்து வீங்கிச் சூடாவது இப்படித்தான். ‘ஆன்டிபயாடிக்’ படைகளின் துணையோடு கிருமிகளை அழித்த பிறகு இந்த நெரிகூடாரங்கள் ‘கலைந்து’விடும். ஆகவே, கவலையில்லை.

(போர் ‘புரி’வோம்)

படித்தவரின் பதிவு

கைப்பிடித்துக் கற்றுத் தரும் ஆசான்!

ஒரு காயம் ஏற்பட்ட பின்பு நிகழும் உயிரியல் நிகழ்வுகளைக் காவல் துறையுடன் பொருத்தமாக ஒப்புமை செய்து நம் புரிதலை எளிமையாக்கியிருக்கிறார் மருத்துவர் கு.கணேசன். மருத்துவ அறிவியலின் மகத்தான கண்டுபிடிப்புகள் ஏராளமாக இருந்தாலும் அடிப்படை மருத்துவ அறிவைச் சாமானியனும் பெறுதல் வேண்டும் எனும் இவரது உயரிய நோக்கம் போற்றுதலுக்குரியது. இவர், ஒவ்வொரு வாரமும் ‘காமதேனு’ வாசகர்களின் கைப்பிடித்து மரு‌த்துவ அறிவியலைக் கற்றுத் தரும் ஆசானாகத் திகழ்வதை எத்தனை பாராட்டினாலும் தகும்.


- ச. வனஜா, நூலகர் மற்றும் தகவல் அலுவலர், சென்னை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in