இதே தேதி... முக்கியச் செய்தி: அன்பு நிறைந்த சிறுமி ஆன் பிராங்க் வதைமுகாமுக்கு அனுப்பப்பட்ட தினம்!

ஆன் பிராங்க்
ஆன் பிராங்க்

'இவை எல்லாவற்றுக்கும் பிறகும், நான் இன்னும் நம்புகிறேன். மனிதர்கள் மனதால் உண்மையிலேயே நல்லவர்கள்தான்' - ஹிட்லரின் நாஜிப் படைகள் நடத்திய வதைமுகாமில் இறந்துபோன யூதச் சிறுமி ஆன் பிராங்க் எழுதிய வரிகள் இவை. மனிதத்தின் மீது அபார நம்பிக்கை வைத்திருந்த அந்தச் சிறுமி உட்பட ஏராளமானோரை இனவெறி கொண்ட நாஜிக்கள் அழித்தொழித்தது வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் ஒன்று.

ஹிட்லரின் கொடுங்கோன்மைக்கு முக்கியச் சான்றாக இருந்தது, வதைமுகாம்களில் யூதர்கள், ஜிப்ஸிகள் என ஏராளமானோர் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதுதான். விஷவாயு செலுத்தி மொத்தமாகக் கொல்வது, துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது என அவர்களைப் படுகொலை செய்த நாஜிப் படையினர், அவர்கள் வாழ்ந்த எஞ்சிய நாட்களில் வார்த்தைகளில் அடங்காத கொடூரங்களை அவர்களுக்கு இழைத்தனர்.

யூதர்கள் மீது ஹிட்லருக்கு ஏன் இத்தனை வன்மம்? மத்தியக் காலத்திலிருந்தே ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மீது வெறுப்புணர்வு வளரத் தொடங்கியிருந்தது. 19-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் மதம் என்பதைத் தாண்டி இனம் எனும் அடிப்படையில் யூதர்கள் மீது வெறுப்புணர்வு பரவியிருந்தது. கிறிஸ்தவர்களாக மதம் மாறிய யூதர்கள் மீது இனவெறுப்பின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்பட்டது. இவற்றையெல்லாம் இளம் வயதிலிருந்தே இயல்பாக உள்வாங்கியிருந்த ஹிட்லருக்கு யூதர்கள் மீது வெறுப்புணர்வு ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. இத்தனைக்கும் அடிப்படையில் ஓவியரான ஹிட்லர் வியன்னாவில் இருந்த காலகட்டத்தில் அவரது ஓவியங்களைத் தொடர்ந்து வாங்கியவர் ஒரு யூதர்தான்.

ஹிட்லரின் யூத வெறுப்புக்கு வரலாற்று ரீதியிலான சான்றுகள் இல்லை. ‘ஹிட்லரின் மூதாதையர்களில் யூதர்களும் உண்டு; அதை அவமானமாகக் கருதிய ஹிட்லர் யூதர்களை அழிக்கத் தலைப்பட்டார்’ என்றுகூட ஒரு கருத்து நிலவுகிறது. இப்படி வெவ்வெறு ஊகங்கள் நிலவுகின்றன. எது எப்படி இருந்தாலும், திட்டமிட்டு அவர் நிகழ்த்திய இனப்படுகொலையை யாராலும் மறுக்க முடியாது.

அவரது இனவெறிக்குப் பலியான சிறுமிதான் ஆன் பிராங்க். ஜெர்மனியில் வசித்துவந்த ஓட்டோ பிராங்க் எனும் தொழிலதிபரின் மகள் அவர். 1929 ஜூன் 12-ல் பிறந்த ஆன் பிராங்க் அழகும் அன்பும் அறிவும் நிறைந்த சிறுமியாக அறியப்பட்டவர். அவரது 12-வது பிறந்தநாளின்போது ஒரு ஆட்டோகிராப் புத்தகம் அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டது. அதை ஒரு நாட்குறிப்பாக அவர் பயன்படுத்தத் தொடங்கினார். யூதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் உட்பட தான் நேரில் கண்ட பல விஷயங்களை அதில் அவர் பதிவுசெய்துவந்தார். குறிப்பாக, மறைவிடத்தில் பதுங்கியிருந்த நாட்களில் அந்த நாட்குறிப்பில் அவர் எழுதியவை பின்னாட்களில் போரின் கொடுமைக்கு உயிர் சாட்சியமாக மாறின.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் குடும்பத்துடன் நெதர்லாந்துக்குத் தப்பிச் சென்றவர் ஓட்டோ பிராங்க். ஆனால், ஐரோப்பிய நாடுகளைக் கைப்பற்றிவந்த நாஜிப் படையினர் அங்கு பதுங்கியிருந்த யூதர்களைக் கைதுசெய்து வதைமுகாம்களுக்கு அனுப்பினர். அப்படித்தான் 1944 ஆகஸ்ட் 4-ல், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் மறைவிடத்தில் பதுங்கியிருந்த ஓட்டோ பிராங்கின் குடும்பத்தை நாஜியின் ரகசியக் காவல் பிரிவான கெஸ்டபோ கைதுசெய்தது. உடனடியாக, அவர்களை வெஸ்டர்போர்க் தற்காலிக முகாமுக்கு அனுப்பிவைத்தது.

ஆன் பிராங்க்
ஆன் பிராங்க்

சில நாட்கள் அங்கு தங்கவைக்கப்பட்ட அக்குடும்பத்தினர் உட்பட ஏராளமானோரை 1944 செப்டம்பர் 3-ம் தேதி, ஜெர்மனியின் ஆதிக்கத்தில் இருந்த போலந்து நாட்டில் அமைக்கப்பட்டிருந்த ஆஷ்விட்ஸ் - பிர்கெனாவ் வதை முகாமுக்கு ரயில் மூலம் அனுப்பினர் ஜெர்மனி ராணுவத்தினர்.

சில நாட்களுக்குப் பின்னர் ஆன் பிராங்கும் அவரது அக்கா மார்கோட்டும் அங்கிருந்து ஜெர்மனியின் பெர்கென் - பெல்ஸன் வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு வசித்த இருவரும் டைஃபஸ் என்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மார்கோட் மரணமடைந்தபோது அவரது வயது 19. ஆன் பிராங்க் தனது 15-வது வயதில் உயிரிழந்தார்.

மீப் கீஸுடன் ஆன் பிராங்கின் தந்தை ஓட்டோ பிராங்க்
மீப் கீஸுடன் ஆன் பிராங்கின் தந்தை ஓட்டோ பிராங்க்

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு அந்து வதை முகாம்களில் எஞ்சியிருந்தவர்கள் மீட்கப்பட்டனர். ஆன் பிராங்க் குடும்பத்தில் அவரது தந்தை ஓட்டோ பிராங்க் மட்டும்தான் உயிருடன் இருந்தார். ஆம்ஸ்டர்டாமில் முன்பு அவர் நடத்திவந்த நிறுவனத்தில் பணிபுரிந்த மீப் கீஸ் எனும் பெண் தான், அங்கு மறைவிடத்தில் அந்தக் குடும்பம் வசிக்க உதவிசெய்தார். ஆன் பிராங்கின் நாட்குறிப்பு மீப் கீஸிடம் பத்திரமாக இருந்தது.

டச்சு மொழியில் எழுதப்பட்ட அந்த நாட்குறிப்பு பின்னர் புத்தகமாக வெளிவந்தது. அதன் பின்னர் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அந்தப் புத்தகம் அதிக விற்பனை கண்ட புத்தகமாக வரலாற்றில் பதிவாகியிருக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in