உடலுக்குள் ஒரு ராணுவம் -26: எதிராளியை அறிவது எப்படி?

உடலுக்குள் ஒரு ராணுவம் -26: எதிராளியை அறிவது எப்படி?

நம் உடலுக்குள் இருக்கும் தடுப்பாற்றல் ராணுவத்துக்கு எதிராளிகளைக் காட்டிக் கொடுக்கும் ஓர் அடையாள அட்டையாக ‘ஆன்டிஜென்’ இருக்கிறது என்று கடந்த வாரம் பார்த்தோம். கூடவே, பலதரப்பட்ட ரத்த வகை ஆன்டிஜென்களைப் பார்த்துவிட்டோம். இனி, மற்ற ஆன்டிஜென்கள் தொடர்பாகப் பார்ப்போம். முதலில், பாக்டீரியா ஆன்டிஜென்கள்.

ஆன்டிஜென் ஒரு ரசாயனக் கலவை

பொதுவாக, ஒரு பாக்டீரியாவின் உடலில் செல் சுவர் இருக்கும். அதைச் சுற்றி ஒரு ‘பொதியுறை’ (Capsule) கொண்ட பாக்டீரியாவும் உண்டு. கசையிழை (Flagellum) சில பாக்டீரியாக்களுக்குத் தனி அடையாளம் காட்டும். இந்த மூன்றுமே நம் தடுப்பாற்றல் ராணுவத்துக்கு ஆன்டிஜென்கள்தான். இவை எல்லாமே சர்க்கரை, கொழுப்பு, புரதம் என மூன்றுவித ரசாயனக் கலவையில் தயாரானவைதான். இந்தக் கலவை ஒவ்வொரு பாக்டீரியா இனத்துக்கும் மாறும். அதை வைத்து பாக்டீரியா இனத்துக்குத் தனித்தனியாகப் பெயர் வைப்பதும் உண்டு.

வழக்கமாக, பாக்டீரியாவின் செல் சுவரில் சர்க்கரையும் கொழுப்பும் இருக்கும். அதன் பொதியுறையில் சர்க்கரை அல்லது புரதம் இருக்கும்; கசையிழையில் புரதம் மட்டுமே இருக்கும். பகைவர்கள் கையில் இருக்கும் போர்க் கருவிகளைப் பொறுத்து அம்பு வீசுகிறவர்கள், வாள் கொண்டு போரிடுகிறவர்கள், வேல் வீரர்கள் என்று பல பெயர்களில் அவர்களை அழைப்பதுபோல், இந்த மூன்று ஆன்டிஜென்களுக்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு. செல் சுவர் ஆன்டிஜெனுக்கு ‘ஓ’ ஆன்டிஜென்; பொதியுறை ஆன்டிஜெனுக்கு ‘கே’ ஆன்டிஜென்; கசையிழை ஆன்டிஜெனுக்கு ‘ஹெச்’ ஆன்டிஜென். இந்த மூன்றையும் பாக்டீரியாக்கள்தான் சுரக்கின்றன. அல்லது பாக்டீரியாக்கள் இறக்கும்போதோ உடலுக்குள் நடக்கும் போரில் அவை அழிக்கப்படும்போதோ வெளிப்படுகின்றன. இவற்றில் புரதச் சுரப்புள்ள ஆன்டிஜென்தான் மிகவும் மோசமானது. இந்த மூன்றின் அடையாளமும் நம் தடுப்பாற்றல் ராணுவத்துக்குத் தெளிவாகத் தெரியும். அது எப்படி என்பதை இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துகொள்வீர்கள்.

வைரஸ் ஆன்டிஜென்கள்

பாக்டீரியா ஆன்டிஜென்களோடு ஒப்பிடும்போது வைரஸ் ஆன்டிஜென்கள் கொஞ்சம் மாறுபட்டவை. வைரஸுக்கு செல் சுவர் கிடையாது; பொதியுறை மட்டுமே இருக்கும். பாக்டீரியாவைவிட வைரஸின் உடலளவு மிகச் சிறியது என்பதால் இது ரத்தச் சுற்றோட்டத்தில் சுற்றித்திரிவது தடுப்பாற்றல் ராணுவத்துக்கு உடனடியாகத் தெரியாது. இது இருப்பதை அது தெரிந்துகொள்வதற்குள் நம் உடல் செல்களில் வைரஸ் புகுந்துவிடும். அப்போது அந்த செல்களின் வெளிப்பக்கத்தில் சில மாற்றங்கள் தெரியும். அந்த மாற்றங்கள்தான் ஆன்டிஜென்கள் என்று தடுப்பாற்றல் ராணுவம் தெரிந்துகொள்ளும். ‘ஆஹா… வைரஸ் எதிரி உடலுக்குள் நுழைந்துவிட்டானே! என்று உஷாராகிவிடும்.

புற்றுநோய் செல்களிலும் ஆன்டிஜென்கள் இருக்கும் என்று சென்ற வாரத்தில் பார்த்தோம். புற்றுநோய் என்பது என்ன? ஓர் இயல்பான திசுவானது திடீரென்று கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து மாறுபட்ட திசுவாக மாறுவது. அப்படி மாறும்போது, அந்தத் திசுவானது அதன் செல்களில் மட்டும் மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை; அது சுரக்கும் நொதிகள், திரவங்கள், அதில் அடங்கியிருக்கிற உணர்வு ஏற்பிகள் (Sensory receptors) போன்றவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். செடிகளின் கொடிகளில், இலைகளில் பழுப்பேறிவிட்டால் நோய் விழுந்திருக்கிறது என்று தெரிந்துகொள்கிறோமல்லவா? அதுமாதிரி, இதுவரை இல்லாத அந்தப் புதிய மாற்றங்களைத் தடுப்பாற்றல் ராணுவம் ஆன்டிஜென்களாக அடையாளப்படுத்திக்கொள்ளும்.

ஆக, எதிரிகளாகக் கருதப்படும் ஆன்டிஜென்கள் நம் உடலுக்குள்ளும் இருக்கின்றன. வெளியிலிருந்தும் வருகின்றன. அப்படியானால், அவை நமக்கு எதிரிகள்தான் என்று எப்படி உறுதிசெய்வது? இதற்கும் உடலுக்குள் வழி இருக்கிறது.

உயிருள்ள டிடெக்டர்கள்!

விமானத்தில் ஏறுவதற்கு முன் அல்லது கோயிலுக்குள் நுழைவதற்கு முன் ஒரு மெட்டல் டிடெக்டர் கொண்டு நம்மைச் சோதனை செய்கிறார்கள். அப்போது கொண்டுசெல்லக்கூடாத பொருள் ஏதாவது நம்மிடம் இருந்தால் அது ‘பீப்... பீப்’ என்று சத்தமிட்டுக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. அதுபோலத்தான், ஒரு ஆன்டிஜென் உடலுக்குள் இருந்தாலும் சரி, வெளியிலிருந்து வந்தாலும் சரி, அது உடலுக்குப் புதிதாக இருந்தாலோ, அந்நியமாகத் தெரிந்தாலோ அதை ரத்தத்தில் உலவிக்கொண்டிருக்கும் மேக்ரோபேஜ் ஒற்றர்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கும் ‘டி.எல்.ஆர்.’ (Toll-like receptors) எனும் ‘உயிருள்ள டிடெக்டர்கள்’ மூலம் முகர்ந்து பார்க்கிறார்கள்.

அப்போது, எப்போதுமில்லாத வியர்வை நாற்றம்போல அந்த ஆன்டிஜென்கள் உணரப்படும். உடனே, அவை உஷாராகி, ‘எதிரி வந்திருக்கு’ என்று சைட்டோகைன் புரதங்களுக்குச் செய்தி அனுப்பும். அந்தச் செய்தியை சைட்டோகைன் மற்ற செல்களுக்குப் பகிர்ந்துகொள்ளும். இப்படி, உடலுக்குள் நுழைந்துள்ளது ஓர் எதிராளிதான் என்பது உறுதி செய்யப்படும். இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு உடம்பிலும் வியர்வை நாற்றம் வித்தியாசப்படுவதைப்போல், ஒவ்வொரு கிருமியும் வெளிவிடுகிற ஆன்டிஜென் வித்தியாசப்படும். அதை வைத்து அந்தக் கிருமி பாக்டீரியாவா, வைரஸா, பூஞ்சையா, புரோட்டாசோவாவா என்பதுகூட தடுப்பாற்றல் ராணுவத்துக்குத் தெரிந்துவிடும். இதற்கு ‘microbial pattern recognition’ என்பது மருத்துவப் பெயர். அதாவது, ‘நுண்ணுயிரி இனம் காணல்’!

மேக்ரோபேஜ் ஒற்றர்கள் போலவே இன்னும் சில ஒற்றர்கள் நம் உடலுக்குள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ‘டென்ட்ரிட்டிக்’ செல்கள் (Dendritic cells) என்று பெயர். ‘ஆன்டிஜெனைக் காட்டிக் கொடுக்கும் செல்கள்’ (Antigen presenting cells) என்று ஒரு பட்டப் பெயரும் அவர்களுக்கு உண்டு. இந்த செல் ஒற்றர்கள் நம் சருமம் முழுவதிலும் இருக்கின்றனர். நிணத்திசுக்கள், மண்ணீரல், தைமஸ் ஆகியவற்றிலும் இவர்கள் குடியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஆக்டோபஸ் போன்ற நீண்ட கரங்களையும் இவர்கள் பெற்றிருக்கின்றனர். அதனால்தான் நம் கிருமிப் பகைவர்களில் பெரும்பாலானோர் இவர்களிடமிருந்து தப்பிக்க முடியாமல் திணறிப்போகின்றனர். தவிரவும், பல சமயங்களில் தைமஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற ‘டி’ செல் (T cell) சிப்பாய்களும் ஒற்றர்களாக வேலை செய்வதால், தடுப்பாற்றல் ராணுவத்துக்குக் கூடுதல் பலம் கிடைத்துவிடுகிறது. எனவே, கிருமிப் பகைவர்கள் எந்த வழியிலும் தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொள்கின்றனர்.

சரி, இந்த ‘ஒற்றர்கள்’ கிருமிகளை எப்படிக் காட்டிக்கொடுக்கின்றனர்?

பொதுவாக, கிருமிகள் என்பவையே நம் உடலுக்குப் புதியவர்கள்தானே! ‘டென்ட்ரிட்டிக்’ செல்கள் நம் உடலுக்குள் நுழையும் இந்தப் புதியவர்களைப் பார்த்ததும் அவை பகைவர்கள்தானா என்று சந்தேகம் கொள்ளும். அந்தச் சந்தேகம் வலுத்ததும், முதலில் கிருமிகளைக் கவ்விக் கைது செய்துவிடும். பிறகு, அவை தப்பித்துவிடக் கூடாது என்பதற்காகத் தங்கள் வாய்க்குள் திணித்துக்கொள்ளும்; திமிறினால், அவற்றை அடித்துத் துவம்சம் செய்துவிடும். உளவாளிகள் சந்தேகப்படும் குற்றவாளிகளைக் குற்றப்பிரிவு காவல் துறையிடம் ஒப்படைப்பதைப் போல நிணத்திசு முகாம்களில் இருக்கிற MHC class II ‘ராணுவ கேப்டன்’களிடம் ஒப்படைத்துவிடும். அவர்கள் ‘துணை டி செல்கள்’ (Helper T cells) எனும் சிப்பாய்களை அழைத்து அவை நம் எதிரிகள்தானா என்பதை விசாரிக்கச் சொல்லும். அந்தச் சிப்பாய்கள் உடலுக்குள் பல இடங்களுக்குப் பயணித்து, உடற்கூறுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, இவர்கள் நமக்குப் புதியவர்கள்தான்; நம் எதிரிகள்தான் என்பதை உறுதி செய்யும்.

உதாரணமாக, பாக்டீரியா என்றால் அதில் நீண்ட இழைபோல் துருத்திக் கொண்டிருக்கும் கசையிழையானது நம் உடலுக்குள் எந்த செல்லிலும் இல்லை. ஆகவே, இது உடலுக்குப் புதியது என்பதைப் புரிந்துகொண்டு, அது நம் எதிராளிதான் என்ற முடிவுக்கு வரும். வைரஸ் என்றால் நம் செல்களின் மேற்பரப்பில் உண்டாகியிருக்கும் புதிய மாற்றங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து இந்தக் கிருமிகள் செய்த வினைதான் என்று முடிவுக்கு வரும். வாசலில் புதிதாக ஒரு ஜோடி செருப்பு இருந்தால் விருந்தாளி வந்திருக்கிறார் என்று புரிந்துகொள்வதுபோல்தான் இது.

இந்தச் செய்திகள் அனைத்தும் சைட்டோகைன் புரதங்கள் வழியாக ‘டி’ 4 செல்கள் (T 4 Cells) எனும் தளபதிகளுக்கு உடனுக்குடன் சென்றுவிடும். உடனே அவர்கள் ‘அந்த எதிராளிகளைத் துவம்சம் செய்து துரத்துங்கள்’ என்று ஆணையிடுவார்கள். உடலுக்குள் ஒரு மௌனமான போர் தொடங்கும். இயற்கை வழியில் ‘சாகடிக்கும் டி செல் வீரர்கள்’ (Killer T cells) போரட்டக்களத்துக்கு வருவார்கள். பகைவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த வீரர்கள் வரிசைகட்டி வர வர போர் தொடரும். தடுப்பாற்றல் ராணுவம் சரியாகச் செயல்பட்டால் தேவையான வீரர்கள் தொடர்ந்து வருவார்கள். கிருமிக்கு எதிரான இந்தப் போரில் தடுப்பாற்றல் வீரர்கள் ஜெயித்துவிடுவார்கள்.

(போர் ‘புரி’வோம்)

பெட்டிச் செய்தி :

‘பெர்ஃபியூம்’ போட்டுக்கொள்ளும் பாக்டீரியா!

உடலுக்குள் நுழையும் எதிராளிகளை அறிய நம் தடுப்பாற்றல் ராணுவம் எத்தனையோ பிரயத்தனங்களைச் செய்தாலும், அதன் கண்களிலிருந்து தப்பித்து, உடலுக்குள் புகுந்து ரகளை செய்யும் பாக்டீரியாக்களும் இருக்கின்றன. அப்படிப் புகுவதற்கு அவை புதுமையான உத்திகளைக் கையாள்கின்றன. உதாரணத்துக்கு, ‘கிளப்சியெல்லா நிமோனியே’ (Klebsiella pneumoniae). இது ‘நிமோனியா’ நோயை உண்டாக்குகிற கிருமி. நம் நுரையீரல்களைத் தாக்கும் ஒரு கடுமையான நோய் நிமோனியா. இது காய்ச்சல், இருமல், சளி, நெஞ்சுவலி எனப் பலதரப்பட்ட தொல்லைகள் கொடுத்து நோயாளியைப் பாடாய்ப் படுத்திவிடும்.

அத்தனை மோசமான நோய்க்குக் காரணமான கிளப்சியெல்லா கிருமி நம் தடுப்பாற்றல் ராணுவத்துக்கு எளிதாகப் ‘பெப்பே’ காட்டிவிடுகிறது என்பதுதான் துயரம். எப்படி? பாக்டீரியாவின் உடலில் ‘ஆன்டிஜென் வியர்வை’ சுரப்பது தெரிந்தால்தானே தடுப்பாற்றல் ராணுவம் அதை முகர்ந்து பார்த்து உணர்ந்துகொள்ளும்? அந்த நாற்றம் தெரியாத அளவுக்கு ஒரு வாசனைத் திரவியம் (‘பெர்ஃபியூம்’) போட்டுக்கொண்டால் தடுப்பாற்றல் ராணுவம் ஏமாந்துவிடுமல்லவா? இந்த உத்தியைப் பயன்படுத்தி தடுப்பாற்றல் ராணுவத்திலிருந்து அது தப்பித்துவிடுகிறது. அதனால் நமக்கு ‘நிமோனியா’ வருகிறது. இதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கிறதா? விளக்குகிறேன்.

தடுப்பாற்றல் ராணுவம் முகர்ந்து பார்க்கும் தன்னுடைய உடலின் மேற்பகுதியை சர்க்கரையாலான மெல்லிய பொதியுறையால் ‘கிளப்சியெல்லா’ பாக்டீரியா மூடிக்கொள்கிறது. இந்த உறையின் சிறப்புத்தன்மை என்னவென்றால் இது அமிலத்தன்மை வாய்ந்தது என்பது. இந்த அமில வாசனை ‘கிளப்சியெல்லா’வில் வெளிப்படும் ‘ஆன்டிஜென் வியர்வை’ நாற்றத்தை மறைத்துவிடுகிறது. ‘ஆன்டிஜென் நாற்ற’த்தை மறைக்கும் இந்த அமிலத்தைத்தான் ‘பெர்ஃபியூம்’ (Perfume) என்று சொன்னேன்.

படித்தவரின் பதிவு...

வியக்க, விழிப்புணர்வு பெற ஒரு தொடர்!

மருத்துவர் கு.கணேசன் எழுதி வரும் ‘உடலுக்குள் ஒரு ராணுவம்‘ தொடர் வியப்பூட்டும் தகவல்களைத் தருவதோடு விழிப்புணர்வையும் ஊட்டுகிறது. ‘ஆன்டிஜன் அறிவோம்‘ என்ற கட்டுரையில் ‘ஆன்டிஜென்’ என்று நாம் அழைப்பதெல்லாமே ‘இமுனோஜென்‘ ஆக முடியாது என்ற கருத்தை விளக்க அவர் கையாண்ட எடுத்துக்காட்டு சுவாரசியமானது. தமிழ்நாட்டில் நாம் ‘கமல்’ என்று அழைத்தால் பொதுவாக நடிகர் கமல்ஹாசனைத்தான் குறிக்கும் .அதற்காக ‘கமல்’ என்று பெயருள்ளவர்கள் எல்லோரும் கமல்ஹாசன் ஆக முடியாதல்லவா? என்ற ஒப்பீட்டை வாசிக்கையில் ரசிக்கவும் முடிகிறது; சிந்திக்கவும் முடிகிறது.

- ஆர்.எஸ்.மணி, பாரத ஸ்டேட் வங்கி (பணி நிறைவு) திண்டுக்கல்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in