ஏனெனில்: 4- பாப்பாபட்டி: சமூக மாற்றங்கள் ஒரேநாளில் நிகழ்வதில்லை!

ஏனெனில்: 4-
பாப்பாபட்டி: சமூக மாற்றங்கள் 
ஒரேநாளில் நிகழ்வதில்லை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்.2 அன்று, மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். வரலாற்றிலேயே முதல் தடவையாக, ஒரு முதல்வர் கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான காரணத்தையும் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்: “2006-ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் உள்ளிட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத சூழல் நிலவியது. அதன் பிறகு, உள்ளாட்சித் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்ட வரலாறு நிகழ்ந்தது.”

முதல்வரின் உரையில் உண்மை இல்லாமலும் இல்லை. ஆனால், அது பாதி உண்மையாக இருக்கிறது. பாப்பாபட்டியில் தேர்தல் நடத்த முடியாத நிலைமை அதற்கு முந்தைய திமுகவின் 1996 ஆட்சிக்காலத்திலேயே உருவாகிவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அப்போதுதான் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அரசமைப்புச் சட்டத்தின் 72 மற்றும் 73-ம் திருத்தங்களுக்குப் பிறகு நாடு முழுவதுமே உள்ளாட்சி அமைப்புகள் வலுப்பெற்றன. தமிழ்நாட்டில் திமுகவை அடுத்து 2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோதும் பாப்பாபட்டியில் தேர்தல் நடத்த முடியவில்லை. நாம் வாழும் காலத்திலேயே நடந்த நிகழ்வுகள்தான். ஆனாலும், முதல்வரின் பேச்சு திமுக ஆட்சிக்காலத்தின் பெருமை பேசுவதாக மட்டுமே அமைந்துவிட்டது.

இரண்டாயிரத்தின் தொடக்க ஆண்டுகளில், ‘இந்தியா டுடே’ தமிழ் இதழில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர் பத்தியொன்றை எழுதிக்கொண்டிருந்தார். தலைப்பு ‘நெற்றிக்கண் திறப்பினும்’. சாதிய அடிமைத்தளையிலிருந்து மீட்சி என்ற ஒற்றைப்புள்ளியை மையமிட்டு அவர் சுழன்றாடிக்கொண்டிருந்த காலம் அது. பட்டியலினச் சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட பாப்பாபட்டி உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் 5 பஞ்சாயத்துகளில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத நிலையையும் அதை மீறிய மேலவளவு முருகேசன் கொல்லப்பட்டதையும் பற்றி அவர் அடிக்கடி அந்தப் பத்தியில் எழுதிவந்தார்.

2001 உள்ளாட்சித் தேர்தலையொட்டி திருமாவளவன் எழுதியது: ‘எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் இம்மாதிரி பிரச்சினைகளில் அரசின் அணுகுமுறை ஒரே மாதிரிதான். கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது திமுக ஆட்சி. அப்போது இதே கீரிப்பட்டி, பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம், மருதங்குடி, மேலவளவு ஆகிய 5 பஞ்சாயத்துகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்தனர். மேலவளவில் மட்டும் விடுதலைச் சிறுத்தைகளின் துணையோடு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு முருகேசன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊர்க்கட்டுப்பாட்டை மீறினார் என்பதற்காக அவரோடு 7 பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். மீண்டும் இராஜா என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மேலவளவின் சேரி மக்களுக்கான அரசியல் உரிமை நிலைநாட்டப்பட்டது. ஆனால், இதர 4 இடங்களிலும் ஐந்தாண்டுகள் முடியும் வரை தேர்தலே நடத்த முடியவில்லை. வேட்பு மனுவையே தாக்கல் செய்யவிடாமல் தடுத்த சாதிய சக்திகளை ஒடுக்குவதில் திமுக ஆட்சியும் அக்கறை காட்டவில்லை’. (‘இந்தியா டுடே’, அக்டோபர் 24, 2001).

திமுகவின் 1996-2001 ஆட்சிக்காலத்தில், 6 முறை தேர்தல் அறிவிப்பு செய்தும்கூட வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சொன்னது. அடுத்த அதிமுக ஆட்சியிலும் அதே நிலை தொடர்ந்தது. அப்போது திருமாவளவன் எழுப்பிய கேள்வி முக்கியமானது: ‘எந்தவொரு கட்சியும் அந்தத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தத் துளியும் அக்கறை காட்டவில்லையே! அத்தொகுதிகளில் ஒரு கட்சியில் கூடவா தாழ்த்தப்பட்டோர் யாருமில்லை? தலித் அமைப்புகள் தலையிட்டால் சாதிக் கலவரமாய் மாறுகிறது என்று எண்ணுகிறவர்கள் தங்கள் கட்சிகள் பொதுவானவைதான் என்றால் சாதிக்கலவரம் வராமலேயே பிரச்னைக்குத் தீர்வு காணலாமே!’ ( ‘இந்தியா டுடே’, ஜனவரி 30, 2002).

திருமாவளவனின் இந்தக் கேள்விகள் திமுகவையும் நோக்கி எழுப்பப்பட்டதுதான். அன்று ‘சங்கரனார்க்கு ஏது குலம்’ என்று சீறிச் சினப்பவராக அவர் இருந்தார். இப்போது பொற்றாமரைக் குளத்தில் மூழ்கியெழுந்து கைதொழுது நிற்கும் நக்கீரரின் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

அதிமுகவின் 2001 ஆட்சிக் காலத்தின்போது பாப்பாபட்டி, கீரிப்பட்டி, கொட்டகச்சியேந்தல், நாட்டார்மங்கலம் பஞ்சாயத்துகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலினச் சமூக வேட்பாளர்கள் உடனடியாகத் தங்கள் பதவியிலிருந்து விலகிவிட்டனர். அதனால், 2003 அக்டோபரில் மீண்டும் ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலுக்கு முன்பாக, மேற்கண்ட கிராமங்களில் சுமுகமான சூழலை உருவாக்குவதற்காக அன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவும் அமைக்கப்பட்டது. எனவே, பாப்பாபட்டியின் மனமாற்றம் ஒரேநாளில் நடந்துவிடவில்லை.

இந்த முறை, பாப்பாபட்டிக்குச் செல்லும் வழியில் வயல்வெளியில் நாற்று நட்டுக்கொண்டிருந்த பெண்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியதும் அவர்களது கோரிக்கைகளைக் கேட்டதும்கூட பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ‘கொசுக்கடியில கிடக்கிறோம். நிம்மதியாகப் பிள்ளை குட்டிகளோடு தூங்க ஒரு இடம் இருந்தால் போதும்’ என்பதுதான் அந்த உழைக்கும் பெண்கள் முதல்வரிடம் முன்வைத்த கோரிக்கை. ‘சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது’ என்கிறது விவிலியம். ஸ்டாலினை நோக்கிய இந்தக் கோரிக்கைகள் விளைநிலத்திலிருந்தே விடுக்கப்பட்டிருக்கின்றன.

மு.கருணாநிதியின் சொந்த ஊருக்குச் சென்று அவரைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து தனது ‘நதிமூலம்’ தொடரில் ஒரு கட்டுரையாக்கினார் மூத்த பத்திரிகையாளர் மணா. கருணாநிதியைக் குறித்து அவரது குடும்பத்துக்கு நெருக்கமானவராக இருந்த திருக்குவளை பாவாடைசாமியின் வார்த்தைகள் இவை: “இங்கே இருக்கும்போது தாழ்த்தப்பட்டவங்க வீடுகளிலெல்லாம் தீவைத்துக் கொளுத்தப்படுவதை நேரடியாக உணர்ந்ததால்தான், அவர்களுக்குத் தீப்பிடிக்காத வீடுகள் கட்டிக் கொடுக்கணும்னு அதைச் செயல்படுத்தினார்.” (மணா, ‘கலைஞர் என்னும் மனிதர்’). ‘நான் கலைஞரின் மகன், சொன்னதைச் செய்வேன்’ என்று உறுதிசொல்பவர் ஸ்டாலின். நம்புவோம்.

(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.