சமூக ஊடக வானவில் 02: சமூக ஊடகத்தின் பூர்வ கதை

சமூக ஊடக வானவில் 02: சமூக ஊடகத்தின் பூர்வ கதை

சைபர்சிம்மன்
enarasimhan@gmail.com

சமூக ஊடகத்தைக் கண்டுபிடித்தது யார் எனும் கேள்விக்குப் பதில் அளிப்பது கடினமானது. ஏனெனில், இணையம் போலவே சமூக ஊடகமும், குறிப்பிட்ட எந்த ஒரு தனிமனிதராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. இணைய வளர்ச்சியின் போக்கில், சமூக ஊடகம் என்பது படிப்படியாக உருவானது. இதற்குப் பல்வேறு தொடக்கப் புள்ளிகளும், கிளைக்கதைகளும் இருக்கின்றன. 

சமூக ஊடகத்தைக் குறிக்கும்   ‘சோஷியல் மீடியா’ எனும் ஆங்கிலப் பதம், தற்போது நாம் அறிந்த வகையில், 2004-ல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டதாக ‘மெர்ரியம் வெப்ஸ்டர் டிக் ஷ்னரி’ தெரிவிக்கிறது. ஆனால், அதற்கு முன்பாகவே சமூக ஊடகம் எனும் கருத்தாக்கம் வேர்விடத் தொடங்கிவிட்டது.

வரையறை என்ன?

சமூக ஊடகம் எனும் பதத்தை முதலில் பயன்படுத்தியதாக, டிஜிட்டல் மார்க்கெட்டிங் முன்னோடியான புகைப்படக் கலைஞர் டெட் லியோன்சிஸ் உள்ளிட்ட ஒரு சிலர் சொந்தம் கொண்டாடினாலும், இவர்கள் யாரும் சமூக ஊடகக் கருத்தாக்கத்துக்கு வித்திட்டதாகவோ வளர்த்தெடுத்ததாகவோ கருத முடியாது. சமூக ஊடகத்தின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது இதைத் தெளிவாக உணரலாம். அதற்கு முன், சமூக ஊடகத்துக்கான வரையறையைப் பார்த்துவிடலாம். அதாவது சமூக ஊடகம் என்றால் என்ன எனும் கேள்விக்கான பதிலைப் பார்க்கலாம்.

சமூக ஊடகம் என்பது பலவிதமாக வரையறுக்கப்படுகிறது. எனினும், பயனாளிகள் தங்களுக்கான இணையச் சமூகத்தை உருவாக்கிக் கொண்டு, உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலமும், பகிர்ந்துகொள்வதன் மூலமும் பரஸ்பரம் தொடர்புகொள்வதற்கான இணையம் சார்ந்த தகவல் தொடர்புவழியே சமூக ஊடகம் என்பதே பொதுவான புரிதலாக இருக்கிறது.

உள்ளடக்கம்

சமூக ஊடகத்துக்கான விளக்கத்தில், இணையச் சமூகம் என்பதும், இணையத் தகவல் தொடர்பு என்பதும் முக்கியமாகின்றன. அதேபோல, உள்ளடக்கம் என்பதும் முக்கியமாகிறது. அதாவது, சமூக ஊடகமாக அறியப்படும் சேவையைப் பயன்படுத்துபவர்கள் அதன் மூலமாகத் தங்களுக்கான மெய்நிகர் சமூகத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். அந்தச் சமூகத்தில் புழங்குகின்றனர். அதில் நட்பு வளர்த்துக் கொள்கின்றனர். இந்த நட்பு வளர்த்தல் என்பது கருத்துப் பரிமாற்றம் மூலமாக மட்டும் அல்ல, உள்ளடக்க உருவாக்கம் மூலமும் நிகழ்கிறது.

சமூக ஊடகச் செயல்பாட்டில், உள்ளடக்க உருவாக்கம் என்பதும் முக்கிய அம்சமாகிறது. உண்மையில், இணையவழித் தகவல் தொடர்பு வசதியுடன், பலவகையான உள்ளடக்கத்தை உருவாக்கிப் பகிர்ந்துகொள்வதற்கான வசதியே சமூக ஊடகத்தின் தனித்தன்மையாக அமைகிறது. முந்தைய ஊடகங்களிலிருந்து சமூக ஊடகங்களை வேறுபடுத்தும் அம்சமும் இதுதான்.

உள்ளடக்கம் என்பது எழுத்து வடிவில் இருக்கலாம், புகைப்படமாக அல்லது காணொலியாக அல்லது ஒலி வடிவமாகவோ இருக்கலாம். உதாரணமாக, யூடியூப் சேவை மூலம் வீடியோக்களை உருவாக்கிப் பகிர்ந்துகொள்ள முடிவதால், அதைச் சமூக ஊடகம் எனக் கொள்கிறோம். புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ள முடிவதால் இன்ஸ்டாகிராமைச் சமூக ஊடகம் எனக் கொள்கிறோம். இவற்றுக்கு எல்லாம் முன்னர், ‘ப்ளாக்’ (blog) எனப்படும் வலைப்பதிவுகள் மூலம் எழுத்து வடிவில் உள்ளடக்கத்தை உருவாக்கிப் பகிர்ந்துகொள்வது சாத்தியமானதால், வலைப்பதிவு சேவைகளைச் சமூக ஊடகம் எனக் கொள்கிறோம்.

ஆக, சமூக ஊடகச் செயல்பாட்டை உற்றுக் கவனித்தால் அதில், பயனாளிகள் வெறும் நுகர்வோராக மட்டும் அல்லாமல், உருவாக்குபவர்களாகவும் இருப்பதை உணரலாம்.

இருவழிப் பாதை

முந்தைய ஊடகங்கள் எல்லாம் ஒருவழிப் பாதையாக இருந்தன என்றால், சமூக ஊடகம் இருவழிப் பாதையாக அமைந்திருக்கிறது. அதாவது, இதில் பயனாளிகள் தகவல்களை அல்லது செய்திகளைப் பெறுபவர்களாக மட்டும் நின்றுவிடுவதில்லை. அவர்களே தகவல்களை அல்லது செய்திகளை உருவாக்கிப் பகிர்பவர்களாகவும் இருக்கும் வகையில் சமூக ஊடக மேடைகள் வழிசெய்கின்றன.

ஆக, சமூக ஊடகம், ஒருவருடன் மற்றொருவர் தொடர்பு கொள்வதற்கு வழிசெய்வதோடு, ஒருவர் பலருடன் தொடர்பு
கொள்ளவும் வழிசெய்கிறது. அதாவது வெகுமக்களை அடையவும் வழிசெய்கிறது. இதை வெளியீட்டு அல்லது ஒளிபரப்பு வசதியாகக் கருதலாம். இதன் காரணமாகவே, பலரும், பலருடன் தொடர்புகொள்ளும் தன்மை சமூக ஊடகத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.

ஆங்கிலத்தில் இது ‘மெனி டு மெனி’ (many to many) எனச் சொல்லப்படுகிறது. ஓரிடத்திலிருந்து பலரை அல்லது எண்ணற்ற வர்களைச் சென்றடையும் வெகுமக்கள் ஊடகத்தின் தன்மையிலிருந்து சமூக ஊடகம் வேறுபடும் புள்ளியாகவும் இது அமைகிறது. வெகுமக்கள் ஊடகத்துடன் போட்டியிடும் அம்சமாகவும் இது அமைகிறது.

சமூக ஊடகத்தின் இந்தத் தனித்தன்மைதான், நம் காலத்தில் அரபு வசந்தம் தொடங்கி ஜல்லிக்கட்டு போராட்டம் வரையிலான இணையப் புரட்சிகளுக்கு வித்திட்டுள்ளன. தகவல்களை நுகர்வோராக மட்டும் இருந்த சாமானியர்கள் ஊடகத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு ‘உருவாக்குனர்க’ளாகவும் அவதாரம் எடுத்துள்ளனர்.

தாங்களே படைப்பாளியாவதன் மூலம், தங்களுக்கான ஆதரவாளர் களைத் தேடிக்கொண்டு நட்சத்திர அந்தஸ்து பெற முடிகிறது.
வெளியீட்டு வசதி அல்லது ஒலிபரப்பு வசதி சமூக ஊடகங்களை வெகுமக்கள் ஊடகத்துக்குப் போட்டியாகக் கருதச் செய்கின்றன என்றாலும், தகவல் தொடர்புக்கான வழியாக இருப்பதே இவற்றின் ஆதார அம்சமாக அமைகிறது. இந்த அம்சத்தின் மூலம், இணையம் சார்ந்த மெய்நிகர் சமூகத்தை உருவாக்கிக்கொள்ள வழிவகுக்கிறது. அந்தச் சமூகத்தில் கருத்துகளைப் பகிரும் வசதியானது வெளியீட்டுத் தன்மையின் பலனையும் அளிக்கிறது.

நம்மில் பெரும்பாலானோர் சமூக ஊடகத்தின் இந்த ஆற்றலால் கவரப்பட்டு அவற்றைப் பயன்படுத்துகிறோம். உண்மையில் சமூக ஊடக உருவாக்கத்தில் பங்களித்த முன்னோடிகள் பலரும், இணையம் ஏற்படுத்தித் தரும் சாத்தியங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வேட்கையில் உருவாக்கிய இணையச் சேவைகளே சமூக ஊடக வளர்ச்சிக்கு வழிவகுத்தன. இந்த வரலாற்றையும், இதில் சமூக வலைப்பின்னல்களின் வருகையையும் தொடர்ந்து பார்க்கலாம்!

இணைய கிணறு!

சமூக ஊடகம் என்பது, அடிப்படையில் இணையச் சமூகம் சார்ந்ததாகவே அமைகிறது. சமூக ஊடகத்தைப் பயன்படுத்துபவர்கள், இணையச் சமூக வெளியிலேயே தங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்கின்றனர். இந்த வகையான இணையச் சமூகங்களுக்கு எல்லாம் முன்னோடியாக அமைவது ‘தி வெல்’ (The WELL) என அழைக்கப்படும் வலைப்பின்னல். ஸ்டூவர்ட் பிராண்ட் மற்றும் லாரி பிரில்லியன்ட், 1980-களில்உருவாக்கிய ‘ஹோல் எர்த் எலக்ட்ரானிக் லிங்க்’ (Whole Earth 'Lectronic Link) என்பதன் சுருக்கமான ‘தி வெல்’ (https://www.well.com/), இணையத்தின் ஆரம்பகால மெய்நிகர் சமூகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. புதுயுகத் தகவல் களஞ்சியமான ‘ஹோல் எர்த் கேட்லாக்’ (Whole Earth Catalog) இதழை உருவாக்கியவர்கள் இவர்கள் இருவரும். இணையம் மூலமான கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுத்த இந்தச் சேவையும் சமூக ஊடகத்துக்கான முன்னோடிச் சேவைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in