ரஜினி சரிதம் 30: ஆறிலிருந்து எழுபது வரை- முரட்டுக்காளையும் மூன்று பிரம்மாண்டங்களும்!

ரஜினி சரிதம் 30: ஆறிலிருந்து எழுபது வரை- முரட்டுக்காளையும் மூன்று பிரம்மாண்டங்களும்!

ஒரே நேரத்தில் தமிழ், இந்தி அல்லது தெலுங்கு என இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளில் படங்களைத் தொடங்கி, ஒரே ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்தப் படங்களின் படப்பிடிப்பையும் குழப்பம் இல்லாமல் நடத்துவதில் கில்லாடி மட்டுமல்ல; முன்னோடித் தயாரிப்பாளராகவும் விளங்கினார்  சாண்டோ சின்னப்பா தேவர்.

அப்படித்தான் 1978-ல் ஊட்டியில் ரஜினி நடிக்க ‘தாய் மீது சத்தியம்’,  அமிதாப் பச்சன் நடிக்க  ‘தோ அர் தோ பான்ச்’ (Do Aur Do Paanch) ஆகிய 2 படங்களின் படப்பிடிப்பை ஒரேநேரத்தில் ஒருநாள் இடைவெளியில் தொடங்கினார் தேவர். ஊட்டிக்கு அமிதாப் வரப்போகிறார் என்று தெரிந்ததும், ரஜினியின் மனம் ஆனந்தத் துள்ளல் போட்டது.

காரணம் இல்லாமல் இல்லை. தனித்துவமான ஸ்டைல், நடிப்பில் காட்டும் அலாதியான அமைதி, அப்பாவித்தனமான நகைச்சுவை ஆகிய அம்சங்களைக் கொண்டிருந்த அமிதாப்பின் நடிப்பு பாணி, ரஜினிக்குள்ளும் ஆழமானத் தாக்கத்தை உருவாக்கியிருந்தது. அதனால் அமிதாப் மீது தனித்த மரியாதையை மனதில் வரித்துகொண்டிருந்த ரஜினி, அவரது படத்தின் படப்பிடிப்பும் தனது படத்தின் படத்தின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடக்க இருப்பதை எண்ணி மகிழ்ந்தார். ஊட்டியில் அமிதாப்பை சந்திக்கும் தருணத்துக்காக ஆவலுடன் காத்திருந்தார். ஆனால், சின்னப்பா தேவர், திடீர் உடல்நலக் குறைவால் இறந்துவிட, ஊட்டி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

படத் தயாரிப்புக்கு வாங்கிய ஃபைனான்ஸுக்கான வட்டி எகிறிக்கொண்டுபோனதில், ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே தேவருக்கு ‘ஹார்ட் அட்டாக்’ வந்தது என்கிற செய்தி அரசல் புரசலாக அமிதாப்பின் காதுக்கும் வந்து சேர்ந்தது. இதனால், உடனடியாக சென்னைக்கு வந்த அமிதாப், தேவர் பிலிம்ஸ் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கே தேவரின் மகன் தண்டாயுதபாணியும் மருமகன் இயக்குநர் ஆர்.தியாகராஜனையும் சந்தித்து, “தோ அர் தோ பான்ச்’ (Do Aur Do Paanch) படத்தை ஒரே மூச்சில் முடித்துவிடலாம் நான் தயார்” என்றார். பில்லா வெளியாகி ஒரு மாதம் கடந்திருந்த நிலையில், அதன் வெற்றியைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த அமிதாப், மும்பையிலிருந்து புறப்படும்போதே ‘பில்லா’ படத்தைப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். அந்த விசிட்டின் போது, “ரஜினியையும் பார்க்க விரும்புகிறேன்” என்றார் அமிதாப். அதற்கு முன்னதாக ‘பில்லா’வை ஏவி.எம் பிரிவியூ தியேட்டரில் பார்க்கத் தொடங்கினார் அமிதாப். ஏவி.எம் பள்ளி மைதானத்தில் ‘முரட்டுக் காளை’ படப்பிடிப்பில் இருந்த ரஜினிக்கு இந்தத் தகவல் போனது. அமிதாப் ‘பில்லா’ படத்தைப் பார்த்துவிட்டு வரவும் ரஜினி மாலை ஷூட்டிங் முடிந்து பேக் -ஆப் ஆகி கிளம்புவதற்கும் நேரம் சரியாக இருந்தது.  அமிதாப்பை சந்திக்கப்போகிறோம் என்ற உற்சாகம் மனதில் அலையடிக்க, தேவர் பிலிம்ஸ் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார் ரஜினி. அங்கிருந்த அமிதாப் அவரை அப்படியே கட்டி அணைத்துக்கொண்டார்.

“பில்லாவின் 30 நாள் வசூல் பற்றிக் கேள்விப்பட்டேன். படத்தையும் பார்த்தேன் ரஜினி. இந்தப் படம் முற்று முழுவதும் உங்களுடைய தனிப்பட்ட நடிப்புத் திறமையால் நிற்கிறது. படத்தில் உங்களில் என்னைப் பார்த்தேன். உங்களுக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் பாலாஜிக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்று மனதாரப் பாராட்டினார் அமிதாப். அவ்வளவுதான் அந்தக் கணத்தில் சட்டென்று அமிதாப்பின் காலைத் தொட்டு வணங்க ரஜினி எத்தனிக்க, சட்டென்று ரஜினியைத் தடுத்த அமிதாப்,  “நீங்கள் பெரிய ஸ்டார்.. உங்களின் இந்தப் பணிவை நானும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

தேவர் பிலிம்ஸுக்கு வந்தால், ரஜினி விரும்பிச் சாப்பிடும் இடியாப்பம் பாயா அன்று அமிதாப்புக்கும் பரிமாறப்பட்டது. இந்த 2 சூப்பர் ஸ்டார்களின் நட்பும் சந்திப்புகளும் இன்றும் சூடும் சுவையுமாக அப்படியே தொடர்கின்றன. அன்று தேவர் பிலிம்ஸில் சொன்னதுபோலவே, ‘தோ அர் தோ பான்ச்’ (Do Aur Do Paanch) படத்தை ஒரே மூச்சில் நடித்துக்கொடுத்தார் அமிதாப்.

முரட்டுக்காளை - மூன்று பிரம்மாண்டங்கள்

ரஜினி - எஸ்பி.முத்துராமன்- பஞ்சு அருணாசலம்  கூட்டணி எப்போதுமே சோடை போனதில்லை. அப்படித்தான் ‘முரட்டுக் காளை’ ரஜினியின் சினிமா பயணத்தில், அவரைப் பொழுதுபோக்கு சினிமாவின் அத்தாரிட்டி என்பதுபோல் மாற்றியது. இந்தப் படத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெல்லும் ரஜினியை ஊர் மக்கள் தோளில் சுமந்துகொண்டு கொண்டாடும் பாடல் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’. ஊர்ப் பெண்களின் குலவை ஓசையை இணைத்து, கிராமிய இசையை திரையில் மெல்லிசையாக வார்த்தெடுத்த இளையராஜா, கொண்டாட்டத்தின் மனநிலையை இந்தப் பாடலில் உரத்து ஒலிக்கும்படி மெட்டமைத்தார்.

‘இந்தப் பாடலின் வரிகளை ’ ரஜினியின் இன்றைய இயல்பான குணாதிசயங்கள்’ வெளிப்படும்படி அப்போதே எழுதினார் பஞ்சு அருணாச்சலம். அன்று தொடங்கி இன்று வரை ரஜினியின் ரசிகர்களும் தங்களுடைய நிகழ்ச்சிகளில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடலை ஒலிக்கவிடுகிறார்கள். அந்த அளவுக்கு ரஜினியின் தனிப்பட்ட குணாதிசயத்துக்கும்  அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு ‘ரஜினி கீதமாக’ இந்தப் பாடல் மாறியதில் வியப்பொன்றுமில்லை.

இந்தப் பாடல் இடம்பெற்ற முரட்டுக்காளை படம், பொள்ளாச்சி தமிழ் சினிமாவின் இரண்டாவது கோடம்பாக்கமாக மாறிட அச்சாரம் போட்டுக்கொடுத்தது. ஆம்! முரட்டுக்காளை படத்தின் கதைப்படி, வயல்வெளி, ஆறு, மலைப் பகுதி, வனம் ஆகிய லொக்கேஷன்கள் தேவைப்பட்டன. இதற்காக இயக்குநர் லொக்கேஷன் தேடியபோது பொள்ளாச்சியின் சமத்தூர் ஜமீன், ஊத்துகுளி ஜமீன் கிராமங்களைச் சுற்றியே இந்த லொக்கேஷன்கள் எல்லாம் அமைந்தன. இந்தப் பகுதிகளில் படப்படிப்பு நடத்த சமத்தூர் ஜமீன் பெரிய வானவராயர், சின்ன வானவராயர் உதவியை நாடினார் இயக்குநர் எஸ்பி.முத்துராமன். ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பு, ரஜினி கதாநாயகன் என்றதும் வானவராயர் இரண்டு பேருக்குமே சந்தோஷம் தாங்கவில்லை. “ரஜினி எங்கள் வீட்டில்தான் தங்கவேண்டும்” என்று அன்புக் கட்டளை போட்டார்கள்.

அப்போது பொள்ளாச்சியில் இரண்டே இரண்டு தங்கும் விடுதிகள் மட்டுமே இருந்தன. இதனால் தங்களின் அரண்மனை போன்ற வீட்டில் ரஜினியைத் தங்கவைத்துக் கொள்கிறோம் என்று வானவராயர்கள் சொன்னது படக்குழுவுக்கு பெரிய ரிலீஃப் ஆகிவிட்டது. இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் பயணியர் விடுதியில் தங்கிக்கொள்ள, படக்குழுவினர் திருமண மண்டபத்தில் தங்கிக்கொண்டார்கள்.

ரஜினி வானவராயர் வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற செய்தி பரவியதும், ரஜினியை நேரில் பார்த்தே தீருவது என்று அக்கம்பக்கத்து கிராம மக்கள் வேலைகளை அப்படி அப்படியே போட்டுவிட்டு அங்கே குழுமத் தொடங்கினார்கள். அவர்களைக் கட்டுப்படுத்தி காட்சிகளை எடுப்பது சிரமமாகிப் போனது.

நம்மை நம்பி வந்திருக்கும் படக்குழுவினருக்கு இடைஞ்சல் செய்யாமல் இருக்கும்படி, பெரிய வானவராயர் கேட்டுக்கொள்வதாக தண்டோரா போடப்பட்டது. அதன் பின்னரே, மக்கள் கப் சிப் என்று அவரவர் வேலைகளைப் பார்க்கப் போனார்கள். இதைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டுப்போனது படக்குழு.

 முரட்டுக்காளைப் படத்தின் மூன்று பிரம்மாண்டங்கள் என்றால், ஒன்று ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு காட்சிகள், அடுத்து ரேக்ளா ரேஸ், மூன்றாவது, ஓடும் ரயிலில் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சி. இவற்றில் ரேக்ளா ரேஸ் பொள்ளாச்சியில் பெயர் பெற்ற ஒன்று. அதைப் படமாக்க வேண்டும் என்று இயக்குநர் விசாரித்தபோது அந்தப் போட்டியை  வருடா வருடம் ஒருங்கிணைத்து நடத்துகிறவரே சின்ன வானவராயர் என்று தெரியவந்தது. உடனே அதற்கும் அவரின் உதவியைக் கேட்டார் இயக்குநர். அவ்வளவுதான்... வசனக் காட்சிகள் எல்லாம் படம்பிடித்து முடித்துவிட்டு, கடைசி நாள் ரேக்ளா ரேஸைப் படமாக்கலாம் என்று சின்ன வானவராயரிடம் சொன்னார் இயக்குநர்.

சினிமாவுக்காக நடத்தப்படும் ரேக்ளா ரேஸ் குறித்து, முதல் நாளே சுற்றுப்பட்டு கிராமங்களில் தண்டோரா போட ஏற்பாடு செய்தார் சின்ன வானவராயர். மறு நாள் காலையில் பொள்ளாச்சியில் வழக்கமாக ரேக்ளா ரேஸ் தொடங்கும் இடத்தில் சுமார் 60 ரேக்ளா வண்டிகளும், பந்தயக் குழுவினரும் குவிந்துவிட்டனர். இயக்குநர் எஸ்பி.முத்துராமனுக்கும் ஒளிப்பதிவாளர் பாபுவுக்கும் பிரமிப்பு தாங்கவில்லை. ரஜினி ரேக்ளா பந்தயத்தில் கலந்துகொண்டு ஜெயிப்பது போல மிகப் பிரம்மாண்டமாக காட்சிகளைப் படம் பிடித்தார்கள். ரேக்ளா ரேஸைப் பார்க்க கூட்டம் வந்ததோ இல்லையோ... ரஜினியைக் காண ஒட்டுமொத்த பொள்ளாச்சி சுற்றுவட்டாரமே திரண்டு வந்துவிட்டது. ரேக்ளா வாண்டியின்கீழே கேமராவைக் கட்டி ஒளிப்பதிவாளர் பாபு, வித்தியாசமான பல கோணங்களில் ரேக்ளா ரேஸைப் படம் பிடித்தார்.

முரட்டுக்காளை படப்பிடிப்புக்குப் பிறகு, பொள்ளாச்சி இரண்டாவது கோடம்பாக்கமாக மாறிப்போனது. அங்கே ஸ்டார் கிளாஸ் தங்கும் விடுதிகள் பல எழுந்தன. உள்ளூர் லொக்கேஷன் மேனேஜர்களும் உருவானார்கள். பல உள்ளூர் புரொடக்‌ஷன் யூனிட்டுகளும் உருவாகின.

(சரிதம் பேசும்)
படங்கள் உதவி: ஞானம்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in