சமூக ஊடக வானவில் 01: அது ஒரு ஆர்குட் காலம்

சமூக ஊடக வானவில் 01: அது ஒரு ஆர்குட் காலம்

சைபர்சிம்மன்
enarasimhan@gmail.com

உங்களில் பலருக்கு ‘ஆர்குட்’ சேவையை நினைவிருக்கலாம். பத்தாண்டுகளுக்கு முன் இணையத்தில் புகழ்பெற்று விளங்கிய சமூக ஊடக சேவை அது. இன்று சமூக ஊடகம் என்றாலே ஃபேஸ்புக், ட்விட்டர் என்று ஆகிவிட்டாலும், இவற்றுக்கு எல்லாம் முன்பே அறிமுகமான சமூக ஊடக சேவைகளில் ஒன்றான ஆர்குட், பயனாளிகளின் விருப்பத்துக்குரிய சேவையாக இருந்தது.

அதிலும் குறிப்பாக இந்தியர்களுக்கு ஆர்குட் இன்னும்கூட சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. ஏனெனில், ஆர்குட் பிரேசிலிலும், இந்தியாவிலும்தான் அதிகப் பயனாளிகளைப் பெற்றிருந்தது. இணையம் மூலம் பழைய நண்பர்களைத் தொடர்புகொள்ளவும், புதிய நட்பை வளர்த்துக்கொள்ளவும் இந்தியப் பயனாளிகள் ஆர்குட்டை நாடினர்.

ஆரம்ப கால ஜாம்பவான்கள்

ஆர்குட்டை அறிந்தவர்கள், ‘அடடா, என்ன அருமையான சேவை!’ என பழைய நினைவுகளில் மூழ்கலாம். அதேநேரத்தில், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற இன்றைய சமூக ஊடகங்களை மட்டுமே அறிந்திருக்கும் இளம் தலைமுறையினர் ஆர்குட் எனும் பெயரைக் கேட்டு, இப்படி ஒரு சமூக ஊடக சேவை இருந்ததா என வியக்கலாம்.

ஆர்குட் மட்டுமல்ல... வேறு சில சமூக ஊடகங்களும் பயன்பாட்டில் இருந்தன. புத்தாயிரமாண்டின் தொடக்கத்தில் சமூக ஊடகப் பரப்பு என்பது ‘மைஸ்பேஸ்’ (Myspace ) கோட்டையாக இருந்தது எனும் தகவல் இன்னும்கூட நம்ப முடியாததாக இருக்கலாம்.  ‘மைஸ்பேஸ்’ முன்னணி சமூக ஊடக சேவையாக இருந்ததோடு, இணையவாசிகள் மத்தியில் மிகுந்த செல்வாக்கும் பெற்றிருந்தது. நட்பு வலைப்பின்னலை விரிவாக்கும் ஆற்றலும் அதற்கு இருந்தது. அதன் காரணமாக, ரசிகர்களால் அண்ணாந்து பார்க்கப்பட்ட பாப் நட்சத்திரங்களும், திரைப்பட நட்சத்திரங்களும், அந்த வலைப்பின்னலில் இணைந்து ரசிகர்களுடன் உரையாடினர்.  

இணைய உலகில் மைஸ்பேஸ் பெற்றிருந்த செல்வாக்கு காரணமாக, சர்வதேச ஊடகத் துறை ஜாம்பவான் ரூபர்ட் முர்டாக் அந்தச் சேவையை பெரும்தொகைக்கு விலைக்கு வாங்கினார். மைஸ்பேஸ்தான் எதிர்காலம் எனக் கருதப்பட்ட காலம் அது.

கொட்டிக் கிடக்கும் சமூக ஊடகங்கள்

ஆர்குட், மைஸ்பேஸ் போன்ற சேவைகளைப் பின்னுக்குத் தள்ளி முன்னணி சமூக ஊடக சேவையாக ஃபேஸ்புக் உருவானது சுவாரசியமான கதை என்றாலும், இந்தத் தொடரில் நம்முடைய நோக்கம் அதைப் பற்றிப் பேசுவதல்ல. ஃபேஸ்புக்குக்கு முன்பாகவே முக்கிய சமூக ஊடக சேவைகள் உருவாக்கப்பட்டிருந்தன என்பதோடு, ஃபேஸ்புக்குக்குப் பின்னரும்கூட எண்ணற்ற சமூக ஊடக சேவைகள் உருவாக்கப்பட்டுள்ளன, இன்னமும் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதே கவனிக்க வேண்டிய விஷயம்.

பொதுவாக நன்கறியப்பட்ட முன்னணி சமூக ஊடக சேவைகள் தவிர, பரவலாக அறியப்படாத ஆனால் தன்னளவில் தனி இணைய சமூகமாக விளங்கும் நூற்றுக்கணக்கான சமூக ஊடக சேவைகள் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு துறைக்கும் எனத் தனித்தனியே சமூக ஊடக சேவைகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, கதை எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்கு என்று  ‘வாட்பேட்’ எனும் சமூக ஊடக சேவை இருக்கிறது. அதேபோல வீடியோ காம்பியரிங் செய்பவர்களுக்கு என்று பிரத்யேகமான சமூக ஊடக சேவை உண்டு.

பரந்து விரிந்த உலகம்

இவற்றில் பெரும்பாலானவற்றைக் குறிப்பிட்ட பிரிவு அல்லது ஆர்வம் சார்ந்த சேவை எனக் கருதினாலும்கூட, ‘ரெட்டிட்’, ‘குவோரா’,  ‘ஸ்லேஷ்டாட்’,  ‘குட்ரீட்ஸ்’ என அனைத்துத் தரப்பினராலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக ஊடக சேவைகளும் அநேகம் இருக்கின்றன.

இவ்வளவு ஏன், இப்போது இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘கிளப் ஹவுஸ்’ சேவை என்பது அடிப்படையில் பார்த்தால், சமூக ஊடகங்களின் ஒரு அங்கமான ‘பாட்காஸ்டிங்’ சேவையின் நீட்சியாகவே கருதப்பட வேண்டியதாக இருக்கிறது. (‘பாட்காஸ்டிங்’ என்பதை ஒருவிதமான இணைய வானொலி அல்லது தேடிவரும் வானொலி எனப் புரிந்துகொள்ளலாம்). அதேபோல, புகைப்படப் பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் பற்றிப் பேசும்போது புகைப்படங்கள் சார்ந்த வலைப்பின்னலான  ‘ஃபிளிக்கர்’ சேவை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது.

ஆக, சமூக ஊடக சேவகளைப் பட்டியல் போட்டாலே அது ஒரு மினி களஞ்சியம் போல இருக்கும். இவற்றில் பல சேவைகள் காலாவதியாகிவிட்டன என்பதை மீறி, பல சேவைகள் குறிப்பிட்ட ஆர்வம் கொண்டவர்களுக்கானவை என்பதை மீறி, சமூக ஊடகப் பரப்பு என்பது எத்தனை பரந்து விரிந்ததாக இருக்கிறது என்பதை நாம் பொருட்படுத்தியே ஆக வேண்டும்.

ஃபேஸ்புக்கின் அபாரமான வளர்ச்சியும், அதன் பயனாகக் கிடைத்துள்ள வீச்சும், பலருக்கு இணையம் என்றாலே ஃபேஸ்புக் எனும் மயக்கத்தைக் கொடுப்பதாக அமைந்திருக்கும் சூழலில், இணையம் மட்டும் அல்ல, சமூக ஊடகம் என்பதுகூட ஃபேஸ்புக்கைவிட மிகப் பெரியது என்பதைப் புரியவைக்க வேண்டியிருக்கிறது.

சேவைகள் பலவிதம்

இன்னொரு முக்கியமான விஷயம், சமூக ஊடகம் எனும் கருத்தாக்கமே பரந்துவிரிந்தது. வலைப்பதிவு, விக்கி, இணைய சமூகம், குறும்பதிவு, புக்மார்க்கிங் சேவை, விவாதக் குழுக்கள் எனப் பலவகையான சேவைகள் சமூக ஊடகம் எனும் ஒரு குடையின்கீழ் வருகின்றன. இவற்றில் ஒரு அங்கமாகவே சமூக வலைப்பின்னல் தளங்கள் கருதப்படுகின்றன. இதன்கீழ்தான் ஃபேஸ்புக் போன்ற சேவைகள் வருகின்றன.

ஃபேஸ்புக் தவிர முக்கியமான சமூக வலைப்பின்னல் சேவைகளையும், அவற்றின் பயன்பாட்டையும்தான் இந்தத் தொடரில் அறிமுகம் செய்துகொள்ள இருக்கிறோம். அதற்கு முன், சமூக ஊடக சேவை எனும் கருத்தாக்கத்தையும், அதன் அங்கமான சமூக வலைப்பின்னல் சேவையின் தன்மையையும் புரிந்துகொள்வது அவசியம்.

பறவைகள் பலவிதம் என்று சொல்வதுபோல, சமூக வலைப்பின்னல் சேவைகளும் பலவிதம்தான். அவற்றின் நோக்கங்களும் வேறுபட்டவை. அந்த வகையில், பலவிதமான சமூக வலைப்பின்னல் சேவைகளை அறிமுகம் செய்துகொண்டு அவற்றின் வண்ணங்களைப் பார்த்து வியக்கலாம். வாருங்கள்!

மெய்நிகர் முன்னோடி!

சமூக ஊடகங்களின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள விரும்பும் எவரும், ஹாவர்டு ரியின்கோல்டு (Howard Rheingold) பற்றி அறிந்துகொள்ள வேண்டும். இணைய முன்னோடிகளில் ஒருவரான ரியின்கோல்டு, இணையத்தின் சமூக அம்சம் பற்றி ஆழமாகவும் விரிவாகவும் எழுதிவருபவர். இவர் எழுதிய  ‘நெட் ஸ்மார்ட்: ஹவ் டு த்ரைவ் ஆன்லைன்’ (Net Smart: How to Thrive Online)  எனும் புத்தகம் சமூக ஊடக சேவைகளைத் திறம்படப் பயன்படுத்துவது எப்படி என விவரிக்கிறது. மேலும், இணையப் பரிவர்த்தனை மூலம், பயனர்கள் உருவாக்கிக்கொள்ளும் இணைய சமூகம் பற்றியும் இவர் எழுதியிருக்கிறார். இதற்கான மெய்நிகர் சமூகம் (virtual community) எனும் பதத்தை உருவாக்கியவர் என்றும் கருதப்படுகிறார்.  சமூக ஊடகங்கள் மூலம் அணிதிரளும் கூட்டத்தைப் புத்திசாலிக் கூட்டம் (smartmobs) என வர்ணித்து வழிகாட்டிய பெருமையும் இவருக்கு உண்டு.  மேலும் அறிய: https://www.rheingold.com/howard/

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in