சிறகை விரி உலகை அறி 11: அழிவும் நம்பிக்கையும் 

சிறகை விரி உலகை அறி 11: அழிவும் நம்பிக்கையும் 

ஒரு நகரை பகலும் இரவும் இருவேறு அழகில் காட்டுகிறது. பத்தோடு பதினொன்றாக பகலில் தெரிந்த பல இடங்கள் இரவில் பவித்திரமாக மின்னுகின்றன. சூரியச் சூட்டில் நெற்றிப்பொட்டுச் சுருக்கி ஓடிய கால்கள் மின்னொளியில் நின்று நிதானமாக ரசிக்கச் செய்கிறது. இருளில் துலங்கும் அமைதி மனதெல்லாம் பரவுகிறது. 

பாங்காக் நகரில் சுட்டெரித்த வெயிலோடு ‘கம்பீரமான அரண்மனை’யைச் சுற்றிப் பார்த்துவிட்டு, உடலில் நீர்ச்சத்துக் குறைந்த நேரத்தில் அறைக்கு வந்து சேர்ந்தேன். தண்ணீர் குடித்து, வெகுநேரம் குளித்து உடலை குளிரச்செய்த பிறகு இரவு உணவுக்குக் கிளம்பினேன்.

இரவின் ஒளியில் ஒளிரும் நகரம்

பாங்காக் சென்று சாவ் ஃபிராயா நதியில் பயணித்தபடி இரவு உணவைச் சுவைக்காவிடில் பயணம் முழுமை அடையாது. நகரும் கப்பலில் அமர்ந்து, மின்னொளியில் மின்னும் கம்பீரமான அரண்மனை, அதிகாலையின் கோவில் (Wat Arun), பிரமாண்டமான பாலம் என நகரின் வனப்பை ஒன்றரை மணிநேரம் கருவிழியில் கவிதையாக்கிக்கொண்டே சாப்பிடுவது அலாதி சுகம்.
பாங்காக்கில் பல்வேறு கப்பல் நிறுவனங்கள் இருக்கின்றன. இணையத்தில் தேடி உங்களுக்குப் பிடித்தக் கப்பலில் பயணச்சீட்டு வாங்க வேண்டும். வாங்கும்போதே, “நேரடியாக கப்பல்துறைக்கு வருகிறீர்களா? அல்லது விடுதியில் வந்து அழைத்துச் செல்லவா?” என கேட்பார்கள். சிலவேளைகளில் ஏதாவதொரு முக்கிய சந்திப்பிற்கு வரச்சொல்லி அங்கிருந்தும் அழைத்துச் செல்வார்கள்.  நான் பணம் கொஞ்சம் கூடுதலாகச் செலுத்தியதால் விடுதியில் வந்து அழைத்துச் சென்றார்கள். 

மிதக்கும் கப்பலில் மணக்கும் உணவு

கப்பலில் தரைத்தளமும் முதல் தளமும் இருந்தனு. குடும்பத்தோடு வந்திருந்தவர்களை தனித்தனி மேசையில் அமர வைத்தார்கள். என்னைப் போல தனியாகவோ அல்லது இருவராகவோ வந்தவர்களுக்கு, அம்மேசைகளில் விடுபட்டுள்ள இருக்கைகளில் இடம் கொடுத்தார்கள். யாரென்றே தெரியாதவர்களுடன் நட்பாகப் பேசி, சிரித்து, பலவற்றைப் பகிர்ந்து மகிழ்ந்து இயற்கையுடன் சஞ்சரிக்கும் இனிமை தனிப் பயணருக்கு (Solo Traveler) மட்டுமே கிடைக்கும் வரம். 

கப்பலின் நடுவில் இருந்த நீளமான மேசையில் பல்வேறு நாட்டு உணவு வகைகள், சூப்புகள், பழங்கள், இனிப்புகள் இருந்தன. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். உணவுக்கென்று தனியாகப் பணம் கட்டத் தேவையில்லை. கப்பலின் முகப்பில் பெண்கள் தாய்லாந்தின் பாரம்பரிய நடனம் ஆடினார்கள். சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் கப்பல் பணியாளர்கள் சிலர் வண்ண உடை உடுத்தி ஒவ்வொரு மேசையாக வந்து, பிறந்தநாள் கொண்டாடும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வாழ்த்துப் பா பாடினார்கள். கப்பல் பயணம் முடிந்து மகிழுந்தில் திரும்பி வரும்போது போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த பவுல் - சான்ரா தம்பதியரின் நட்பு கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் போர்ச்சுக்கல் சென்றபோது அவர்கள் வீட்டில் தங்கினேன் என்பது கூடுதல் தகவல். 

மரண ரயில் பாதை

களைப்பு நீங்க தூங்கி எழுந்த நான் காஞ்சனாபுரிக்குப் புறப்பட்டேன். அணுகுண்டு விழுந்த இடங்களைப் பார்ப்பதற்காக ஜப்பான் புறப்பட்டதுபோல, காஞ்சனாபுரிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நான் தாய்லாந்துக்குச் சென்றேன். சயாம்-பர்மா மரண ரயில் பாதையில் நடக்கவும் வேதனையின் மிச்சத்தை உணரவும் விரும்பினேன். 

அதென்ன மரண ரயில் பாதை? வேலை தேடி மலேசியா, குவைத், கத்தார் என்று தமிழர்கள் இப்போதும் செல்வதுபோல 1800-ஆம் ஆண்டு வாக்கில் எண்ணற்ற தமிழர்கள் மலேசியா சென்றார்கள். ஆசை காட்டி தமிழர்களை அழைத்துச் சென்ற பிரிட்டிசார் ரப்பர் தோட்டங்களில் தமிழர்களை அடிமைகளாக்கினார்கள். திடீரென சூழ்நிலை மாறியது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிடம் பிரிட்டன் தோற்றது. பிரிட்டிசார் கட்டுப்பாட்டில் இருந்த சயாம், அதாவது இன்றைய தாய்லாந்து, மற்றும் பர்மா ஜப்பானின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. மக்களுக்கு அளப்பெரிய மகிழ்ச்சி. ஆனால், காட்டாற்றில் நடந்து நெருப்பாற்றில் கால் வைத்த கதையாயிற்று அவர்களின் வாழ்க்கை. வேலை இல்லை. உணவு இல்லை. பொருட்களின் விலை குறையவில்லை. சுண்ணாம்பு வாசம் வீசிய அரிசியை சமைத்துப் பிள்ளைகளுக்குக் கொடுக்க பெற்றோருக்கு மனம் சம்மதிக்கவில்லை. 

அதேவேளை, 1942-ஆம் ஆண்டு சயாம் மற்றும் பர்மா இடையே 415 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாலம் கட்டும் வேலையை ஜப்பான் தொடங்கியது. மலைகளைக் குடைந்து பெருங்காடுகளைக் கடந்து குறுக்கிடும் எண்ணற்ற ஆறுகளைக் கடந்து இப்பாலம் அமைக்க ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பிடிக்கும் என்பதால் பிரிட்டிசார் கைவிட்ட திட்டம் இது. இவ்வேலைக்காக ஜப்பானியர் ஆள் பிடிக்க வந்தபோது, உணவில்லாமல் பிள்ளைகள் வாடுவதைப் பொறுக்க முடியாத பெற்றோர், பெற்றோரின் துயரம் துடைக்க நினைத்த பிள்ளைகள் முன்வந்தார்கள். வராதவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்லப்பட்டார்கள். 

சயாமில் இருந்து ஏழு நாட்கள் ரயில் பயணம். பெட்டியில் நிற்கக்கூட முடியாத நெருக்கடி. அவசரத் தேவைகள் வரக்கூடாது என்பதற்காக மலத்துவாரத்தில் மருந்து வைத்து அடைத்த கொடூரம். இறங்கிய இடத்தில் இருந்து வேலை தொடங்கும் இடத்திற்கு மரங்களுக்கிடையேயும், மலைகளின் ஊடேயும்  பல  கிலோமீட்டர் நடை. ஒரு நாளைக்கு 20 மணி நேர வேலை. போதிய உணவு இல்லை. உணவில் சத்து இல்லை. காயம் அடைந்தவர்களை, நோயுற்றவர்களை சீக்காளி கொட்டகையில் அடைத்தார்கள். கொட்டகை நிறைந்ததும் உயிருடன் தீ வைத்து கொளுத்தினார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரைப் பலிகொடுத்து பதினாறே மாதத்தில் கட்டி முடித்ததால் இது மரண ரயில் பாதை என  அழைக்கப்படுகிறது. 

காஞ்சனாபுரிக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலா நிறுவனத்தில் நானும் என்னைப்போல வெளிநாட்டினர் பலரும் முன்பதிவு செய்திருந்தோம். இந்தப் பயணம் மூன்று முக்கிய இடங்களை உள்ளடக்கியது. 1. ஜீத் போர் அருங்காட்சியகம் 2. குவாய் நதியின் மீதுள்ள பாலம் 3. போரில் இறந்த வீரர்களின் கல்லறை. 

ஜீத் போர் அருங்காட்சியகம்

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிடம் போர்க் கைதிகளாகளாகி மரண ரயில் பாதை பணியில் உயிரிழந்த ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் ஹாலந்து நாட்டு வீரர்களுக்கான அருங்காட்சியகம் இது (JEATH). இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் புத்த துறவிகள் அமைத்த இந்த அருங்காட்சியகம் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம், போரில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆயுதங்கள், கருவிகள், சீருடைகள் மற்றும் பதக்கங்கள் போன்றவை இருக்கின்றன. ரயில் பாதையைச் சிதைக்க வீசப்பட்ட குண்டுகளில், வெடிக்காத 500 பவுண்ட் எடையுள்ள ஒரு குண்டு இங்கே வைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலே உள்ள சுவரில், “மன்னிக்கிறோம் ஆனால் மறக்கவில்லை” என எழுதப்பட்டுள்ளது. 

மறுபக்கம், போர்க் கைதிகள் வாழ்ந்த குடிசையின் மாதிரியை மூங்கிலால் செய்து அதனுள் எண்ணற்ற படங்களை வைத்துள்ளார்கள். உணவுக்காக அவர்கள் அடைந்த துயரம், பெரிய மரக் கட்டைகளை ஆற்று நீரில் சுமந்து மறு கரைக்கு வருவது, உடலில் ஏற்பட்ட காயங்களை ஆற்ற மருந்து இல்லாததால் ஆற்று நீருக்குள் இறங்கிய வீரர்களின் புன்களை மீன்கள் தின்று சுத்தப்படுத்துவது, போன்ற படங்கள் உள்ளன. கொடுர தண்டனைகளாக, மரத்தின் பின்னால் கைகளைக் கட்டி நிற்க வைப்பது, இரண்டு கைகளையும் மரக் கிளையில் கட்டி தொங்க விடுவது, பாறையில் முழந்தாலிட்டு கையில் பாறைக் கல்லை சுமக்க வைப்பது, வாயில் குழாய் வழியாக தண்ணீர் செலுத்தி வயிறை வீங்கச் செய்வது, நோயுற்றவரின் வயிற்றின் மீது ஏறி குதித்து சாக வைப்பது போன்ற கொடூரங்களைக் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

மூங்கில் கொட்டகைக்கு வெளியே, ‘உலக அமைதி நினைவுத்தூண்’ இருக்கிறது. இரண்டு கைகள் கூப்பியுள்ள அந்தத் தூணின் இடது பக்கத்தில், “ஒரு தாளின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் போல, தன்னையும் பிறரையும் ஒருபோதும் யாராலும் வேறுபடுத்த இயலாது, வேறுபடுத்தவும் கூடாது” என பொறிக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் பார்த்துவிட்டு வேதனையோடு நம்பிக்கையையும் தாங்கி அடுத்த இடத்துக்குக் கிளம்பினோம்.

குற்றமுள்ள நெஞ்சினன்!

ஜீத் போர் அருங்காட்சியகத்தின் வளாகத்தில் தகாஷி நகாசே (Mr. Takashi Nagase) எனும் ஜப்பானியரின் சிலை இருக்கிறது.  பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது இவர் ஜப்பான் இராணுவத்தில் சேர்ந்தார். மரண ரயில் பாதை கட்டுமானத்தின் போது ஜப்பானிய இராணுவ காவலர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இங்கு வந்தார். போர் முடிந்த பிறகு போர்க் கைதிகளின் கல்லறைகளைத் தேடிய குழுவில் ஒருவராக இருந்தார். கல்லறைகளைத் தேடியபோது தன் நாடு செய்த அநியாயம் குறித்து மிகவும் வருந்தினார். சமூகத்துக்காகப் பணியாற்ற முடிவு செய்து புத்த துறவியாக தீட்சை பெற்றார். ‘குவாய் ஆறு அமைதி அறக்கட்டளை’ தொடங்கி காஞ்சனாபுரியின் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கு பல ஆண்டுகள் உதவி செய்தார்.

(பாதை நீளும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in