சமயம் வளர்த்த சான்றோர் 34: மணவாள மாமுனிகள்

சமயம் வளர்த்த சான்றோர் 34: மணவாள மாமுனிகள்

கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

அழகிய மணவாளன், உபய வேதாந்தாசிரியர், கோவிந்தராசப்பன் என்று அழைக்கப்படுபவர் மணவாள மாமுனிகள். நாதமுனிகள் கொண்டு தொடங்கும் வைணவப் பெரியோர்களின் பரம்பரைகளில் நிறைவாகக் கருதப்படும் இவர், ஆர்த்திப் பிரபந்தம், உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி ஆகிய நூல்களை தமிழில் அளித்துள்ளார்.

வைணவ ஆச்சாரியரான நம்மாழ்வார் அவதரித்த குருகூர் என்று அழைக்கப்படும் ஆழ்வார் திருநகரியில், திகழக்கிடந்தான் திருவாவீறுடைய பிரான் – ரங்கநாச்சியார் தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 1370-ம் ஆண்டு ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆதிசேஷனின் அவதாரமாக அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்ற ஆண்மகன் பிறந்தார்.  

இவரது முதலாவது பிறந்தநாள் விழா, ரங்கநாச்சியாரின் பிறந்த ஊரான சிக்கிலில் நடைபெற்றது. விழா முடிந்து ஆழ்வார் திருநகரி திரும்பி வந்ததும், தன் தந்தையிடம் வேத, வேதாந்த சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தார் மணவாளர். பின்னர் பிள்ளை லோகாச்சாரியாரிடம் சாஸ்திர சம்பிரதாயங்களை கற்றுக் கொண்டார்.  

அப்போது பிள்ளை லோகாச்சாரியாரின் சீடர் திருவாய்மொழிப் பிள்ளை, வைணவ சம்பிரதாயங்களை அனைத்து இடங்களிலும் பரப்ப வேண்டும் என்று எண்ணம் கொண்டார். அதற்குத் தகுந்த சீடரைத் தேடிக் கொண்டு ஆழ்வார் திருநகரி வந்திருந்தார். குருநாதரின் ஞான பூர்த்தியை அறிந்த மணவாளர், அவர் இருக்கும் இடம் சென்று, ஆழ்வார்களின் அருளிச் செயல்களைக் கற்றார்.  

பதினாறு வயதில் மணமுடிக்கும் முன்பாகவே நாலாயிர திவ்ய பிரபந்தங்களை, தன் பாட்டனாரிடம் இருந்து கற்றார் மணவாளர். சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் சிறந்த புலமை கொண்டிருந்தார். ஸ்ரீமத் ராமானுஜரிடத்தில் மிகுந்த பற்று கொண்ட மணவாளரை, அவரது ஆச்சாரியர், முந்தைய குருபரம்பரை ஆச்சாரியர்களின் உபதேச மொழிகளை அனைவரும் அறியும் வண்ணம், பல இடங்களுக்குச் சென்று உரைக்கச் சொன்னார். அதன்பால், ‘யதீந்திர ப்ரவணர்’ என்று ஆச்சாரியரால் போற்றப்பட்டார் மணவாளர்.  

உடையவர் மீது ‘யதிராஜ விம்சதி’ என்ற நூலை அருளியதால், தாம் வழிபட்ட உடையவர் விக்கிரகத்தை மணவாளருக்கு அளித்தார் ஆச்சாரியர்.  இச்சமயத்தில் மணவாளரின் மனைவி, ஓர் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். மகனுக்கு என்ன பெயர் வைப்பது என்று ஆச்சாரியரைக் கேட்டார் மணவாளர்.  உடையவரிடத்தில் அதிக ஈடுபாடு கொண்ட திருவாய்மொழிப் பிள்ளை, இராமானுஜ நூற்றந்தாதியில் 108 முறை ‘ராமானுஜ;  என்று வருவதால், அப்பெயரே குழந்தைக்கு சிறந்தது என்று எண்ணி ‘ராமானுஜன்’ என்று பெயர் சூட்டினார்.  

ஆச்சாரியரின் எண்ணப்படி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருமாலிருஞ்சோலை, திருவரங்கம், மதுராந்தகம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் என்று பல தலங்களுக்குச் சென்று வைணவ ஆச்சாரியர்களின் உபதேச மொழிகளை பரப்பி வந்தார் மணவாளர்.  

பெரியாழ்வார் திருமொழிக்கு உரை அருளிய, திருவாய்மொழிப் பிள்ளை, தான் பரமபதத்தை அடையும் தருணம் வந்துவிட்டதை உணர்கிறார். மணவாளரை அழைத்த ஆச்சாரியர், “பல திவ்ய தேசங்களுக்குச் சென்று மங்களாசாசனம் செய்ய வேண்டும். ஸ்ரீபாஷ்யத்துக்கான விளக்கத்தை கேட்டருள வேண்டும். முன்னோரைப் போலவே எம்பெருமான்களின் அருளிச் செயல்களை பல்வேறு இடங்களில் உபதேசம் செய்ய வேண்டும். திருவரங்கத்திலேயே இருந்து அரங்கனுக்கு சேவை செய்ய வேண்டும்” என்று கூறுகிறார்.  

மற்ற சீடர்களை தன்னருகே அழைத்து, மணவாளரைக் கைகாட்டி, “இவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். இவரை, என்னைப் போலவே ஆச்சாரியராக நினைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, திருநாட்டுக்கு எழுந்தருளினார்.  

திருவாய்மொழி, ஈடு 36,000 படியில் தேர்ந்த மணவாளரைப் பற்றி கேள்வியுற்ற அழகிய வரதர் என்பவர், அவரிடம் முதல் சீடராக வந்தடைந்தார். ஆச்சாரியனுக்கு அடிமை செய்யும் பொருட்டு துறவறம் ஏற்கிறார். இவருக்கு வானமாமலை ஜீயர் என்ற திருநாமம் சூட்டப்படுகிறது. பொன்னடிக்கால் ஜீயர் என்றும் அழகிய வரதர் அழைக்கப்படுகிறார்.  

திருவேங்கடம், திருக்கோவிலூர், திருக்கடிகை (சோளிங்கபுரம்), காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற தலங்களுக்கு யாத்திரை சென்று, அத்தல எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்த பின்னர் மீண்டும் காஞ்சிபுரம் வந்தடைந்த மணவாளர், கிடாம்பி நாயனாரிடம் பாஷ்யத்துக்கான விளக்கத்தைக் கேட்டறிந்தார். திருவரங்கம் பெரிய கோயிலில் அரங்கனுக்கு சேவை செய்வதிலும் ஆர்வம் காட்டினார் மணவாளர். வைணவத்தின் வளர்ச்சிக்காக பல திவ்ய தேச யாத்திரைகளை மேற்கொண்டார். பல ஆன்றோர் சான்றோர் பெருமக்களை சந்தித்தார்.  

மணவாளருக்கு நிறைய சொந்தபந்தங்கள் இருந்ததால், எப்போதும் பிறப்பு / இறப்பு செய்திகளை கேட்கும்படி ஆனது. இதன் காரணமாக, எந்நேரமும், எம்பெருமான் மீதே சிந்தனை வைத்திருக்கும் மணவாளரால், பிறப்பு / இறப்பால் ஏற்படும் தீட்டு காரணமாக, ஆன்மிகப் பணியில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை. இல்லற வாழ்வில் ஈடுபட்டால் இப்படித்தான்  ஆன்மிகப் பணிக்கு இடையூறு ஏற்படும் என்று கருதி, திருவரங்கத்தில் வைணவப் பெரியவரான சடகோப ஜீயரிடம் துறவறம் ஏற்றார். அன்று முதல் ‘மணவாள மாமுனிகள்’  என்ற திருநாமம் பெற்றார்.

கோயில் அண்ணன், பத்தங்கி பரவஸ்து  பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், அப்பிள்ளை, அப்பிள்ளார், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் போன்றோர் மணவாள மாமுனிகளின் சீடர்கள் ஆனார்கள். எறும்பியப்பா என்பவர், சீடராக விரும்பினார். ஆனால், அது நடைபெறவில்லை. நிறைவாக ராமபிரான் எறும்பியப்பாவின் கனவில் தோன்றி, மணவாள மாமுனிகளின் சீடராகப் பணித்ததும், சொந்த ஊரில் இருந்து ஸ்ரீரங்கம் வந்து மாமுனிகளின் சீடர் ஆனார். இவர்கள் எட்டு சீடர்களும் அஷ்ட திக் கஜங்கள் (வைணவத்தை பரப்பும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட எட்டு பேர் அடங்கிய குழு) எனப்படுவர்.

மேலும், சேனை முதலியாண்டான் நாயனார், சடகோப தாசர் (நாலூர் சிற்றாத்தான்), கந்தாடை போரேற்று நாயன், ஏட்டூர் சிங்கராச்சாரியார், கந்தாடை அண்ணப்பன், கந்தாடை திருகோபுரத்து நாயனார், கந்தாடை நாரணப்பை, கந்தாடை தோழப்பரப்பை, கந்தாடை அழைத்து வாழ்வித்த பெருமாள் ஆகிய ஒன்பது சீடர்களும் நவ ரத்தினங்கள் என்று அழைக்கப் படுகின்றனர். பல திவ்ய தேசங்கள், திருவம்சங்கள், திருமாளிகைகளில் இருந்து மேலும் பலரும் மணவாள மாமுனிகளின் சீடர்களாயினர்.  வைணவத்தை அனைத்து இடங்களிலும் பரப்பும் பொருட்டு, வானமாமலை ஜீயர் உள்ளிட்ட பொறுப்புகளை உருவாக்கினார் மணவாள மாமுனி.  

ஒருசமயம் கிருஷ்ணானந்தி என்ற சந்நியாசி, மணவாள மாமுனிகளை, விவாதத்துக்கு அழைத்தார்.  மாமுனி களுக்கு வாதத்துக்கு செல்ல விருப்பம் இல்லை. அவ்வாறு வாதத்துக்கு சென்றால், அரங்கனுக்கு சேவை செய்ய முடியாது போய்விடும் என்று நினைத்தார். அதற்காக கிருஷ்ணானந்தியுடன் விவாதம் செய்ய, உடையவரின் அடியவரான வேடலப்பையை அனுப்புகிறார். வேடலப்பையும் தனது சீடர் தாசரதியாச்சானையும் அழைத்துக் கொண்டு விவாதத்துக்கு புறப்படுகிறார். ஆனால், வேடலப்பையைக் கண்டதும் கிருஷ்ணானந்தி எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறார். ஒருகாலத்தில் அனைத்து சாஸ்திரங்களையும் வேடலப்பையிடமே கற்றார் கிருஷ்ணானந்தி. அதனால் குருவுக்கு மரியாதை செய்யும் விதமாக, விவாதத்தைக் கைவிட்டார்.  விவாதம் செய்ய நினைத்ததை எண்ணி வருத்தம் தெரிவித்தார்.

தனது அவதாரத் தலமான ஆழ்வார் திருநகரிக்கு செல்ல நினைத்தார் மணவாள மாமுனிகள். அதன்படி அங்கு சென்று, ஆழ்வார்கள், ஆச்சாரியர்களின் அருளிச் செயல்களை அங்குள்ளவர்களுக்கு எடுத்துரைத்தார். அங்கிருந்து, திருநாராயணபுரத்தில் உள்ள ‘ஆயி’ என்று அழைக்கப்படும் தேவராஜரை சந்திக்கப் புறப்படுகிறார். அவரிடம் இருந்து, ஆச்சார்ய ஹ்ருதயத்துக்கு விளக்கம் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருநாராயண புரம் நோக்கிப் பயணிக்கிறார். அடியார்களிடம் தாய் போல பரிவு காட்டுவதால் அவர் ‘ஆய்’ என்று அழைக்கப்படுகிறார். திருநாராயணபுரத்து ஆயியும் மணவாள மாமுனிகளை சந்திக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு, திருநாராயணபுரத்தில் இருந்து ஆழ்வார் திருநகரி நோக்கிப் பயணிக்கிறார்.மணவாள மாமுனிவரும் திருநாராயணபுரத்து ஆயியும், ஆழ்வார் திருநகரி சமீபம் சந்தித்துக் கொண்டனர்.

ஒரு சமயம் மணவாளரை வெறுத்த சிலர், அவரது குடிலுக்கு தீ வைத்தனர். ஆனால், ஆதிசேஷனின் அம்சமான மணவாளர், நாகவடிவம் பெற்று குடிலில் இருந்து வெளியே வந்தார். இதை அறிந்த மன்னர், குற்றவாளிகளைப் பிடித்து தண்டிக்க எண்ணினார். ஆனால், மணவாள மாமுனிகள், அவர்களை மன்னித்தருளினார்.  

ஒருசமயம், திருவரங்கம் பெரிய மண்டபத்தில், மணவாள மாமுனிகள் திருவாய்மொழி உபன்யாசம் நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, ரங்கநாதப் பெருமாளே வந்திருந்து ஒருவருட காலம் திருவாய்மொழிக்கான ‘ஈடு’ முப்பத்தாறாயிரப்படியை கேட்டார். உபன்யாசம் கேட்க வந்த ஒரு சிறுவன், மணவாள மாமுனிகளிடம் வந்து ஓர் ஓலையைக் கொடுத்துவிட்டு, மறைந்து போனான். அந்த ஓலையில், “சைலேசரின் கருணைக்கு உரியவரும், ராமானுஜரின் பக்தருமான அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்” என்று எழுதியிருந்தது.  

மேலும், சபையில் தோன்றி, மணவாள மாமுனிகளே தனது ஆச்சாரியர் என்று அறிவித்தார் ரங்கநாதர். ஆச்சாரியரான மணவாள மாமுனிகளுக்கு தனி பாசுரத்தையும் சமர்ப்பித்து, தன் பாம்பணையை அளித்து அவரை கவுரவித்தார் ரங்கநாதர்.  அதனால், அனைத்து திருத்தலங்களிலும் மணவாள மாமுனிகளின் விக்கிரகங்கள், ஆதிசேஷன் மீது அமர்ந்திருப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும்.  

மணவாள மாமுனிகளுக்கு சந்நிதி கட்டுவதற்காக, அவரது சீடர்கள் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டனர். இதில் மணவாள மாமுனிகளுக்கு விருப்பம் இல்லை என்றாலும், சீடர்களின் அன்பைத் தட்ட முடியவில்லை. தான் உபயோகித்து வந்த இரு செப்புச் சொம்புகளை அவர்களிடம் அளித்து, அவற்றில் சிறிய சொம்பு அளவுக்கு தனது அர்ச்சாவதார திருமேனியை அமைக்கச் சொன்னார். அதன்படி சீடர்கள், இரண்டு திருமேனிகளை அமைத்தார்கள். ஒன்றை அவதாரத் தலமான ஆழ்வார் திருநகரியிலும், உபதேச முத்திரையுடன் கூடிய மற்றொரு திருமேனியை திருவரங்கத்திலும் அமைத்தார்கள்.  இன்று பல  கோயில்களிலும், மணவாள மாமுனிகளின் திருமேனியைக் காணலாம்.

மணவாள மாமுனிகளின் அவதாரத் திருவிழா, பல இடங்களில் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில், வானமாமலை மடத்து ஆராதனையில், மணவாள மாமுனிவர் அணிந்திருந்த மோதிரத்தை, வானமாமலை ஜீயர் அணிந்து கொண்டு ஸ்ரீபாத தீர்த்தம் வழங்குவார். திருவஹீந்திரபுரம் தேவநாதப் பெருமாள் கோயிலில் பத்து நாள் உற்சவம் இன்றைக்கும் சிறப்பாக நடைபெறுகிறது.  

மணவாள மாமுனிவரின் ஆணைப்படி, திருமலையில் எழுந்தருளியுள்ள வேங்கடேசப் பெருமாளுக்கு வடமொழியில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் என்ற திருப்பள்ளி எழுச்சி இன்றும் பாடப்படுகிறது. இதை இயற்றியவர் மணவாள மாமுனிவரின் சீடர் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார். ராமானுஜரின் ஆயுட்காலம் 200 ஆண்டுகள் என்றும், ஆனால் அவர் 120-வது வயதில் ஆச்சாரியன் திருவடி அடைந்ததால், மீதமுள்ள 80 ஆண்டுகளை மணவாள மாமுனிகள்  எடுத்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மணவாள மாமுனிகள் திருவரங்கத்தில் ஆச்சாரியன் திருவடி அடைந்தார்.  

தேவராஜ மங்களம், யதிராஜ விம்சதி, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி பிரபந்தம், இயல் சாத்து, திருவாராதன கிரமம், ஸ்ரீ காஞ்சி தேவப் பெருமாள் தோத்திரம் ஆகிய நூல்களையும், பெரியாழ்வார் திருவாய்மொழி (சில பாசுரங்கள்), பிள்ளை லோகாசாரியாரின் ரகசிய கிரந்தங்கள், அருளாள பெருமாள் எம்பெருமானாரின் ஞான, ப்ரமேய சாரம், இராமானுஜ நூற்றந்தாதி ப்ரமாண திரட்டு, ஸ்ரீவசன பூசணம், தத்வ த்ரயம் ஆகியவற்றுக்கான விளக்கவுரைகளையும் அருளியுள்ளார் மணவாள மாமுனி

ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம்.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in