சினிமா சிற்பிகள் 04: ஆலிஸ் கிய் ப்ளஷ்ஷே- அகிலத்தின் முதல் பெண் இயக்குநர்

சினிமா சிற்பிகள் 04: ஆலிஸ் கிய் ப்ளஷ்ஷே- அகிலத்தின் முதல் பெண் இயக்குநர்

க.விக்னேஷ்வரன்
vigneshwritez@gmail.com

ஆணாதிக்கம் நிறைந்த களமாகவே இன்றுவரை பார்க்கப்படுகிறது சினிமா. சினிமாவின் பிற துறைகளில் பங்களிப்பு செய்தாலும் பெரும்பாலும் நடிகைகளாக, பாடகிகளாகத்தான் பெண்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக் குறைவுதான். மேற்கத்திய சினிமா துறையில் இந்நிலை சற்று முன்னேறியிருக்கிறது. இந்நிலைக்கு ஆரம்பகால விதையாக இருந்தவர் ஆலிஸ் கிய் ப்ளஷ்ஷே (Alice Guy Blache).

பெண்கள் இயக்குநர்களாகச் சாதிக்க முடியும் என்று முதன்முதலில் சாதித்துக் காட்டியவர் ஆலிஸ். சினிமாவில் ஜார்ஸ் மிலியஸ், எட்வின் எஸ்.போர்ட்டர், க்ரிஃபித் போன்ற இயக்குநர்கள் பல புதுமைகளைப் புகுத்திக்கொண்டிருந்த காலத்தில் அவர்களுக்கு நிகராக சினிமாவில் தீவிரமாக இயங்கியவர் அவர்.

இயக்குநராக மாறிய செயலாளர்

தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் பதிப்பகமும், புத்தகக் கடைகளும் வைத்திருந்த எமிலி கிய் என்பவருக்கும், மேரி என்ற பிரெஞ்சு பெண்மணிக்கும் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார் ஆலிஸ். ஆரம்ப நாட்களைத் தன்னுடைய பாட்டி வீட்டில் கழித்தவர், தன்னுடைய நான்காம் வயதின் தொடக்கத்தில் தென் அமெரிக்காவுக்கு அழைத்துவரப்பட்டார். ஆலிஸின் பதினெட்டாவது வயதில் அவரது தந்தை மரணமடைந்தார். அதன் பின்னர் வறுமையிலிருந்து தப்பிக்க தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயின்றார் ஆலிஸ். அதன் மூலம், படக்கருவி தயாரிக்கும் நிறுவனத்தில் செயலாளராகப் பணிக்குச் சேர்ந்தார். பணி நிமித்தமாகப் பல்வேறு அறிஞர்கள், ஓவியர்கள், புகைப்படக்காரர்கள், கண்டுபிடிப்பாளர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதுபோக தன் நிறுவனம் தயாரிக்கும் படக்கருவிகள் பற்றியும், மற்ற நிறுவனங்களின் படக்கருவிகள் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருந்தார் ஆலிஸ்.

இந்நிலையில், 1895-ல் லூமியர் சகோதரர்கள் கண்டுபிடித்த ‘சினிமாடோகிராப்’ எனும் ப்ரொஜக்டர் கருவியின் செயல்முறை விளக்கத்தைத் தன்னுடைய முதலாளியான லியோன் காமோன்ட்டுடன் நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பள்ளியில் பயிலும்போது சில நாடகங்களை நடத்திய ஆலிஸ், சினிமாடோகிராப் கருவியைக் கொண்டு கதை சொல்லலை நிகழ்த்த முடியும் என்று உணர்ந்தார்.

காமோன்ட்டிடம் அனுமதி பெற்று தன்னுடைய அன்றாட அலுவல் பணிக்கு மத்தியில், திரைப்படத்தை இயக்கும் வேலையையும் சேர்த்துப் பார்க்க ஆரம்பித்தார் ஆலீஸ். 1896-ல் முதல் திரைப்படமான ‘தி ஃபேரி ஆஃப் தி கேபேஜஸ்’ படத்தை இயக்கினார் ஆலிஸ். அவரின் செயல்திறனைச் சரியாக மதிப்பிட்ட காமோன்ட் நிறுவனம், அவரை மேலும் மேலும் பல படங்கள் இயக்க ஊக்குவித்தது. அந்நிறுவனத்தின் முழுநேர ஆஸ்தான இயக்குநரானார் ஆலிஸ். அவர் சினிமாவின் முதல் பெண் இயக்குநர் என்பது மட்டுமல்ல... 1896 முதல் 1906-ம் ஆண்டு வரை, உலகில் இயங்கிவந்த ஒரே பெண் இயக்குநர் அவர்தான் என்பதுதான் விசேஷம்!

கனிந்து கசந்த காதல்

தங்களுடைய நிறுவனத்தின் எல்லைகளை ஜெர்மனி வரை விரிவுபடுத்த விரும்பிய காமோன்ட் நிறுவனம், ஜெர்மனிக்கு ஆலிஸை அனுப்ப முடிவெடுத்தது. அவருக்குத் துணையாக அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளரான ஹெர்பர்ட் ப்ளஷ்ஷே அனுப்பப்பட்டார். அப்பயணத்தில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இருவரும் 1907-ல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், சிலி நாட்டிலிருந்து அமெரிக்காவின் நியூ ஜெர்சிக்கு மாற்றலாகி வந்தனர். 1910-ல் காமோன்ட் நிறுவனத்திலிருந்து விலகிய ஆலிஸ், சொந்தமாக ‘தி சோலாக்ஸ் கம்பெனி’ என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தன் கணவருடன் ஆரம்பித்தார். அந்நேரத்தில், காமோன்ட் நிறுவனத்துடன் போட்டுக்கொண்ட பணி ஒப்பந்தம் நிலுவையில் இருந்ததால், அந்நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டே அவ்வப்போது சொலாக்ஸ் நிறுவனத்தின் திரைப்பட பணிகளையும் மேற்கொண்டுவந்தார் ஹெர்பர்ட். சொலாக்ஸ் நிறுவனம்தான், ஹாலிவுட் உருவாவதற்கு முன் அமெரிக்காவில் இருந்த பெரிய ஸ்டுடியோவாகும். 1910-ல் சொலாக்ஸ் ஸ்டூடியோவை ஆலிஸ் ஆரம்பித்த காலகட்டத்தில், அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமைகூட வழங்கப்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

1910 முதல் 1913-ம் ஆண்டு வரை பல சிறப்பான படங்களை இயக்கினார் ஆலிஸ். இந்த மூன்று ஆண்டுகளில் திரைத் துறையில் பல நுணுக்கங்களையும் முயற்சித்துப் பார்த்தார். மவுனத் திரைப்படங்கள் வந்துகொண்டிருந்த காலத்தில், திரையரங்கில் இசைக்கலைஞர்கள் திரைக்குக்கீழ் அமர்ந்து காட்சிக்கேற்ப வாத்தியங்களை இசைப்பார்கள் என்று முந்தைய கட்டுரைகளில் பார்த்திருந்தோம். ஆனால், ஆலிஸ் இதில் புது முறையைக் கையாண்டார்.

காமோன்ட் நிறுவனம் தயாரித்த க்ரோனோபோன் என்ற கருவியைக் கொண்டு ஒலியைப் பதிவுசெய்து, அதைத் திரையில் காட்சியுடன் இணைத்துத் திரையிட்டார் ஆலீஸ். க்ரோனோபோன் என்பது மெழுகு உருளையைக் கொண்டு ஒலியைத் தனியாகப் பதிவுசெய்யும் கருவி. இதைக் கொண்டு பல முயற்சிகளை மேற்கொண்டார் ஆலிஸ். இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் மியூசிக்கல் மூவி எனப்படும் ஆடல், பாடல்களை மையமாகக் கொண்டு வரும் படங்களுக்கு ஆரம்பப் புள்ளியே ஆலிஸ் இயக்கிய ‘டேங்கோ’(1905) போன்ற படங்கள்தான்.

அமெரிக்க சினிமாவில் கறுப்பினத்தவர்களுக்குச் சரியான அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என இன்றைக்கும் சிலர் கூறும் நிலையில், 1912-ம் ஆண்டே ‘எ ஃபூல் அண்ட் ஹிஸ் மணி’ என்ற படத்தில் கறுப்பின இளைஞனின் காதலைப் பற்றிப் பேசினார் ஆலிஸ். முழுக்க முழுக்க கறுப்பினத்தவர்களை வைத்து இயக்கிய படம் அது. 1912-ல் அவர் இயக்கிய ‘டூ லிட்டில் ரேஞ்சர்ஸ்’ திரைப்படம் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி பெண்ணியத்தைப் பறைசாற்றியது. காட்சி பதிவுப்படுத்தப்பட்ட படச்சுருளை, பின்னோக்கி ஓட்டுவதன் மூலம் பல திரை அதிசயங்களைச் செய்ய முடியும் என்பதை முதன்முதலில் திரையில் நிகழ்த்திக் காட்டியவர்களில் முக்கியமானவர் ஆலிஸ். விலங்குகளைத் தனது படங்களில் நடிக்க வைத்தார். ஒருமுறை, பயிற்றுவிக்கப்பட்ட புலி ஒன்றை நடிக்க வைக்க, படப்பிடிப்பு தளத்திற்குக் கூட்டிவந்தார். அதைப் பார்த்து படக்குழுவே பயந்து பின்வாங்கிய தருணத்தில் கூண்டில் இருக்கும் புலியைத் தடவிக்கொடுத்துப் படக்குழுவின் பயத்தைப் போக்கினார்.
இப்படி அசாத்திய இயக்குநராகத் திகழ்ந்த ஆலிஸின் குடும்ப வாழ்க்கையே, அவரது சினிமா வாழ்வுக்கான அஸ்தமனத்தை கொண்டுவந்தது. காமொன்ட் நிறுவனத்திலிருந்து விலகி சோலாக்ஸ் நிறுவனத்தில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தார் ஹெர்பர்ட். இதையடுத்து தன்னுடைய நிர்வாக இயக்குநர் பதவியைக் கணவருக்குக் கொடுத்துவிட்டு, திரைப்படங்களை இயக்குவதில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார் ஆலிஸ்.

சோலாக்ஸ் நிறுவனத்தைக் கலைத்துவிட்டு அதே கட்டிடத்தில், ‘ப்ளஷ்ஷே ஃபூச்சர்ஸ்’ என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை 1913-ல் ஆரம்பித்தார் கணவர் ஹெர்பர்ட். ஆலிஸ் இயக்கும் படங்களின் புகழைத் தனதாக்கிக் கொண்டு, ஆலிஸை ஒரு உதவியாள் போல் ஹெர்பர்ட் நடத்தத் தொடங்கினார். இறுதியாக வியாபாரம் நொடித்துப் போய், தன்னுடைய ஸ்டுடியோவை யும் பிற சொத்துகளையும் ஏலத்தில் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ஆலிஸ். மனம் வெறுத்துப் போனவர், 1922-ல் தன் கணவரிடம் விவாகரத்து வாங்கிக்கொண்டு பிரான்சுக்குத் திரும்பினார். பிறகு, 1964-ல் தனது மகள் சைமோனுடன் அமெரிக்காவுக்கு வந்தார். இறுதியாக, தனது 94-வது வயதில் அமெரிக்காவின் நியூஜெர்சியில், 1968 மார்ச் 24-ல் மரணித்தார் ஆலிஸ்.

சினிமா தேவதை

முதல் பெண் இயக்குநர் லோய்ஸ் வெபர் (Lois Weber) தான் என்று, பல அமெரிக்க வரலாற்று அறிஞர்கள் தவறாக நிலைநிறுத்த முயன்றனர். ஆனால், காமோன்ட் ஸ்டுடியோவில் க்ரோனோபோன் கருவியில் தனது பாடல்களைப் பதிவுசெய்ய வந்த லோய்ஸ் வெபர், தான் திரைப்படம் இயக்குவதை வேடிக்கை பார்த்தவர் என்று தனது சுயசரிதையில் தெளிவாகப் பதிவு செய்துள்ளார் ஆலிஸ். லோய்ஸ் வெபர் அமெரிக்காவைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பதால்தான், பல அமெரிக்க அறிஞர்கள் அவரை முன்னிலைப்படுத்தப் பார்த்தனர். திரைத் துறைக்கு லோய்ஸ் வெபர் பெரும் பங்காற்றியதை மறுக்க முடியாது என்றாலும், உலகின் முதல் பெண் இயக்குநர் ஆலிஸ்தான். அந்த உண்மையை வரலாற்றிலிருந்து அகற்றிவிட முடியாது.

2018-ம் ஆண்டு ‘பி நேச்சுரல்: தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் ஆலிஸ் கிய்-ப்ளஷ்ஷே’ என்ற ஆவணப்படம் வெளியான பின்பு, நவீன வெகுஜன சினிமா ரசிகர்களுக்கும் ஆலிஸ் அறிமுகமானார். சினிமா உருவான காலம் தொட்டே ஆண்களுக்கு நிகராகச் செயலாற்றி, பெண் படைப்பாளிகளுக்கு வழிவகை செய்துவிட்டுப் போன ஆலிஸ், சினிமாவின் தேவதை என்று சொன்னாலும் மிகையாகாது. 

பார்க்க வேண்டிய படங்கள்

The Life of Christ (1906)
Two Little Rangers (1912)
The Vampire (1915)
Playing with Fire (1916)
When You and I Were Young (1917)
Tarnished Reputations (1920)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in