இனி எல்லாமே ஏ.ஐ - 33: ஏ.ஐ-க்கும் தேவை உளவியல் உதவி

இனி எல்லாமே ஏ.ஐ - 33: ஏ.ஐ-க்கும் தேவை உளவியல் உதவி

உளவியல் துறையிலும், ஏ.ஐ நுட்பம் பயன்படுத்தப்படுவது பற்றி விவரிக்கும்போது, மனித மனம் குறித்து இயந்திரங்களுக்கு என்ன தெரியும் எனும் சந்தேகம் எழுவது இயற்கைதான். ஏ.ஐ என்னதான் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டாலும், அதற்குச் சிந்திக்கவும் தெரியாது, மனசாட்சியும் கிடையாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்படுகிறது.

உண்மைதான், ஏ.ஐ-க்குத் தெரிந்ததெல்லாம் தரவுகளும் அவற்றின் பின்னால் உள்ள ஈரிலக்க எண்களும்தான். ஆனால், மனித மூளை இருக்கிறது பாருங்கள், அது அல்கோரிதம்களை உருவாக்கி இயந்திரங்களைக் கணக்குப் போட வைப்பதோடு, அவற்றின் அதி தீவிர கணக்கிடும் திறனைக் கொண்டு பல அற்புதங்களைச் செய்ய வைக்கிறது.

தீர்வுகளைப் பரிந்துரைக்கும்

சரியான அல்கோரிதம்களை உருவாக்க முடிந்தால், ஏ.ஐ நுட்பங்களை மனிதர்களின் உளவியல் சிக்கல்களுக்குத் தீர்வு காண உதவிக்கு வைத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே பார்த்ததுபோல, ஏ.ஐ அரட்டை மென்பொருட்கள், மனநலச் சிக்கல் கொண்டவர்களோடு கணினி மூலம் உரையாடி அவர்களுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு தீர்வுகளைப் பரிந்துரைக்க வல்லவை. அதைவிட முக்கியமாக உளவியல் வல்லுநர்களின் உதவியாளர்கள் போல செயல்பட்டு, மனநலம் நாடி வருபவர்களுடன் முதற்கட்ட ஆலோசனை நடத்தி அவர்களைப் பற்றிய தெளிவான சித்திரத்தை வல்லுநர்களுக்கு அளிக்கும் திறன் கொண்டவை.

ஆனால், மனிதர்களைப் புரிந்துகொள்வதில் மனிதர்களுக்கு இருக்கும் ஆற்றலுக்கு இணை ஏது? ஒருவரின் கண் பார்வையை வைத்து அல்லது ஒரு அசட்டுப் புன்னகையை வைத்து, அவரது அடி மனதில் மறைந்திருக்கும் அச்சத்தை அல்லது தயக்கத்தை மனித வல்லுநர்கள் கண்டறிந்து விடுவார்கள். என்னதான் புரோகிராம் செய்தாலும், இயந்திரங்களுக்கு இந்தத் தன்மை வர வாய்ப்பில்லை என்றாலும், அவற்றுக்கு என விசேஷத் திறன்கள் இல்லாமல் இல்லை என்கின்றனர்.

உதாரணமாக, ‘இன்ஃப்ராரெட் இமேஜிங்’ திறன் கொண்ட ஏ.ஐ மென்பொருள் மனிதர்களின் உடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தை வைத்தே. அவர்களின் மனநிலை மாற்றத்தைக் கண்டறிந்துவிடும். அதேபோல, முகம் உணர்தல் மென்பொருட்கள், நுட்பமான அசைவுகளைக் கொண்டு, உள்ளுக்குள் இருக்கும் உணர்வைக் கணிக்கும் திறன் பெற்றுள்ளன.

இவ்வளவு ஏன், குரல் அலசலைக் கொண்டு, ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான ஒலி அலை மாறுதலைக்கூட துல்லியமாகக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் நடுக்கம் அல்லது அச்சத்தை உணர்த்தக்கூடியவையாகவும் இருக்கின்றன.

இவற்றை எல்லாம், மனிதர்களைவிட ஏ.ஐ சிறப்பாகச் செய்வதாக இந்தத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர். எனவே, மருத்துவத் துறை போலவே மனநல துறையிலும் ஏ.ஐ மென்பொருட்கள் திறம்படச் செயல்பட்டு, உளவியல் வல்லுநர்களின் சுமையைக் குறைக்கும் என நம்பப்படுகிறது.

மெய்நிகர் சிகிச்சை

அது மட்டுமா? மனநல சிகிச்சை என வரும்போது ஏ.ஐ வசம் இன்னும் பலவித கருவிகள் இருக்கின்றன. உளப் பகுப்பாய்வு என வரும்போது சிக்மண்ட் பிராய்டின் ‘சாய்வு சோபா’ சிகிச்சை முறை, வல்லுநர்களின் ஆகச்சிறந்த சாதனமாக இருக்கிறது. அதேவேளையில் நவீன உளவியல் சிகிச்சை என்பது மெய்நிகர் உலகம், மாய உலகம், மேம்பட்ட யதார்த்தம் உள்ளிட்ட நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது.

ஒருவருக்கு விமானத்தில் பறப்பது என்றால் அதீத பயம் என வைத்துக்கொள்வோம். இப்போது உளவியல் சிகிச்சையில், விமானத்தில் பறப்பது போன்ற மெய்நிகர் தன்மையைக் கொண்டு அவரது பயத்தைப் போக்கும் சிகிச்சை அளிக்கலாம். இதுபோலவே உளவியல் சிகிச்சையில் கணினி விளையாட்டுகளும், மெய்நிகர் பயிற்சிகளும் பயன்படுத்தப்படுகின்றன. சிகிச்சை நாடி வருபவர்களுக்கு மெய்நிகர் தோழமையைக்கூட ஏற்படுத்திக்கொடுக்கலாம்.

அதேபோல, வீடியோ காட்சிகளைப் பார்த்து கண் சிமிட்டுவதை வைத்தே நாடித்துடிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை அலசி ஆராயக்கூடிய ஏ.ஐ நுட்பத்தை எம்ஐடி ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். உளவியலில் ஏ.ஐ பயன்பாட்டை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

தொடரும் ஆய்வுகள்

ஆக, மனித மனம் சார்ந்த உளவியலிலும் ஏ.ஐ பயன்படுத்தப்படுவதில் எந்த வியப்பும் இல்லை. இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், ஏ.ஐ நுட்பத்தில் உள்ள போதாமைகளை நீக்கி, செயற்கை நுண்ணறிவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல கணினி விஞ்ஞானிகள் உளவியலையும் பிரதானமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதுதான்.

இயந்திரங்களுக்கு ஒரு நாளும் புரியாது என திடமாக நம்பப்படும் பரிவு, அக்கறை போன்ற உணர்வுகளை எல்லாம் இயந்திர மூளைக்குள் திணிப்பதற்காக உளவியல் உதவியை நாடி வருகின்றனர். செஸ் விளையாட்டிலும், பங்குச்சந்தை கணிப்பிலும் ஏ.ஐ சூரப்புலியாக இருக்க முக்கியக் காரணம் இயந்திரக் கற்றல் ஆற்றல்தான்.

இயந்திரக் கற்றலும் அதன் உட்பிரிவான ஆழ்கற்றலும், மனித மூளை செயல்படும் விதம் போலவே கணினி வலைப்பின்னல்களைச் செயல்பட வைப்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. மனித மூளை செயல்பாட்டைக் கணினி அமைப்பில் பிரதியெடுக்க முயல்வது போலவே, மனித மன உணர்வுகளைக் கணினிக்குக் கற்றுக்கொடுக்கும் முயற்சியில் உளவியலே சிறந்த வழி என கணினி விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கணினிக்கு வலிக்குமா, கணினிக்கும் மனிதர்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது என்றெல்லாம் கேள்வி கேட்டுக்கொண்டு இது தொடர்பான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மற்ற கணினிகளைவிட இயந்திர மனிதர்களாக கொள்ளப்படும் ரோபோக்களுக்கு இந்த ஆய்வுகள் பொருத்தமாக அமைகின்றன.

ஒரு ரோபோ கோபித்துக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறதா, எஜமானர் திட்டினால் ரோபோ வருத்தம் கொள்ளுமா என்பது போன்ற கேள்விகள் எல்லாம் கணினி ஆய்வகங்களில் ஆர்வத்துடன் கேட்கப்பட்டு இயந்திர மூளையில் அவற்றுக்கான விடைகள் தேடப்படுகின்றன.

ஆக, எதிர்காலத்தில் ஏ.ஐ நுணுக்கங்களில் மட்டும் அல்ல அதன் புரிதலிலும், ஏன் உணர்விலும்கூட பெரும் பாய்ச்சல்கள் நிகழலாம்!

பயிற்சி அவசியம்

‘மீன்குட்டிக்கு நீந்தக் கற்றுத்தர வேண்டுமா?’ எனும் சொல்வழக்கை நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், பிரச்சினை என்னவெனில், ஏ.ஐ நுட்பத்தைக் கொண்டு மீனை உருவாக்கினால் அதற்கு நீந்தக் கற்றுத்தந்தாக வேண்டும். அதாவது, நமக்கு நாற்காலியைப் பார்த்தால் அதன் மீது உட்காரலாம் எனத் தெரியும். ஆனால், ஏ.ஐ க்கு உட்கார கற்றுத்தர வேண்டும். அதாவது, நாற்காலி என்றால் உட்காருவதற்கானது எனும் புரிதல் ஏ.ஐக்கு இயற்கையாகக் கிடையாது. இது போன்ற புரிதலை ஏ.ஐ-க்கு உண்டாக்க, சுற்றுப்புறத்தில் உள்ள வாய்ப்புகள் எனும் கருத்தாக்கத்தை ஏ.ஐ-க்குப் புரியவைக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in