சினிமா சிற்பிகள் - 3: சர்ச்சைக் கலைஞன்: டி.டபிள்யூ.க்ரிஃபித் 

சினிமா சிற்பிகள் - 3: சர்ச்சைக் கலைஞன்: டி.டபிள்யூ.க்ரிஃபித் 

திரைப்படத் துறையின் தொடக்க காலத்தில், குறிப்பிட்ட நிகழ்வைச் சுருக்கமாகச் சொல்லும் வகையில் 1 முதல் 5 நிமிடம் வரை ஓடக்கூடிய காணொலித் துணுக்குகளே சினிமா என அறியப்பட்டிருந்தன. ஆனால், கதைகளையும் காப்பியங்களையும் கேட்டுப் பழகிப்போயிருந்த மானுட இனத்தைப் பொறுத்தவரை கதை என்றால், அதன் பிரதானக் கதாபாத்திரத்துக்கு ஒரு தேடல் / தேவை இருக்க வேண்டும்; அதை அடைய இடையூறுகள் இருக்க வேண்டும். இந்த எதிர்பார்ப்பு திரையில் பூர்த்தியாகவில்லை எனும் எண்ணம் அப்போதைய ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

கற்பனையில் தோன்றுவதை எளிதில் எழுதிவிடலாம். ஆனால், அதைக் காட்சி மொழியாக வார்த்தெடுப்பது பெரும் சவாலான காரியம். இன்றைய சினிமா அதைச் சாத்தியப்படுத்தியுள்ளது. இதற்கான ஆரம்பப் புள்ளியாக இருந்தவர் டேவிட் வ்ராக் க்ரிஃபித். சுருக்கமாக டி.டபுள்யூ க்ரிஃபித். காட்சி மொழியில் கதை சொல்லலை நேர்த்தியாக வடிவமைத்த முன்னோடியான க்ரிஃபித், புகழோடு சேர்த்து சர்ச்சைகளின் நாயகனாகவும் இருந்தார். ஒரு கலைஞன், தன் கலையை மனித மாண்புக்கு எதிராகப் பயன்படுத்தினால் அவனை வரலாறு எப்படிப் பேசும் என்பதற்கும் உதாரணம் இவர்.

இயக்குநரான நடிகர்

அமெரிக்காவின் தென் மாநிலங்களில் ஒன்றான கென்டக்கியில், ஜே.டபுள்யூ.ஜேக் க்ரிஃபித்தின் மகனாக 1875 ஜனவரி 23-ல் பிறந்தார் க்ரிஃபித். அமெரிக்க சிவில் யுத்தத்தில் கர்னலாகப் பணிபுரிந்த தன் தந்தையிடம் அமெரிக்கப் புரட்சி, மெக்சிகோ போர், அமெரிக்க சிவில் யுத்தம் ஆகிய கதைகளைக் கேட்டே வளர்ந்தார். இளமைக் காலத்தில் குடும்பத்தின் வறுமை காரணமாகப் புத்தகக் கடையில் வேலை பார்த்துக் கொண்டே, பகுதி நேரமாக டூரிங் டாக்கீஸ் நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். திரைக்கதை எழுதுவதிலும் ஆர்வமாய் இருந்த க்ரிஃபித், அதற்கும் வாய்ப்புத் தேடியலைந்தார். சரியாக வாய்ப்புக் கிடைக்காத நிலையில், பல படங்களில் துணை வேடங்களில் நடித்துவந்தார்.

பயோகிராப் தயாரிப்பு நிறுவனத்தின் படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது, ஒளிப்பதிவாளர் பில்லி பிட்ஸரின் நட்பு கிடைத்த பின்னர், க்ரிஃபித்தின் ஈர்ப்பு நடிப்பிலிருந்து இயக்கத்தின் பக்கம் மீண்டும் திரும்பியது. இந்நிலையில், பயோகிராப் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநர் வாலஸ் மெக்கட்ஸன் சீனியரின் உடல்நலம் பாதிக்கப்பட, அந்தப் பொறுப்பு க்ரிஃபித்துக்குக் கிடைத்தது.

சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ‘தி கிரிக்கெட் ஆன் தி ஹெர்த்’ என்ற நாவலைத் தழுவி, அதே பெயரில் 1909-ல் ஒரு குறும்படம் எடுத்தார் க்ரிஃபித். ‘க்ராஸ்-கட்டிங்’ என்ற முறையை அப்படத்தில் உருவாக்கினார். க்ராஸ்-கட்டிங் என்பது, இருவேறு இடங்களில் நடக்கும் விஷயங்களை மாற்றி மாற்றிக் காட்டி காட்சியின் தீவிரத்தைக் கூட்டுவது. உதாரணத்துக்கு, இரண்டு நாடுகள் போருக்குத் தயாராகும் காட்சி என்றால், ஒரு நாட்டின் படைகள் தயாராகும் காட்சியை ஒரு நீண்ட காட்சியாகக் காட்டிவிட்டு, அடுத்த நாட்டுப் படைகள் தயாராகும் பணிகள் காட்சியாகக் காட்டப்படும். அந்த வழமையை மாற்றி, இரண்டு நாட்டுப் படைகளும் தயாராகும் காட்சியைச் சின்ன சின்ன காட்சித் துணுக்குகளாக மாற்றி மாற்றிக் காட்டி விறுவிறுப்பு தன்மையைக் கூட்டினார் க்ரிஃபித். சார்லஸ் டிக்கன்ஸின் கதையும் அந்த வடிவிலேயே சொல்லப்பட்டிருந்ததால், எழுத்தில் உள்ளதைக் காட்சி மொழியாக மாற்றலாம் என்ற யோசனை க்ரிஃபித்துக்குத் தோன்றியது.

அதே போல், ‘வைட் ஆங்கிள்’ முறையிலேயே படங்கள் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில், க்ரிஃபித் கதாபாத்திரங்களின் முகங்களுக்கு க்ளோஸ்-அப் வைத்து உணர்வுகளை நுணுக்கமாகக் காட்சிப்படுத்தினார். குறும்
படங்களிலிருந்து முழுநீள சினிமாவுக்குத் திரைத்துறையை நகர்த்தியதிலும் க்ரிஃபித்தின் பங்கு அளப்பரியது. விவிலிய கதையை அடிப்படையாகக் கொண்டு, ‘ஜூடித் ஆஃப் பெத்துலியா’ படத்தை 1914-ல் இயக்கினார் க்ரிஃபித். ஒரு மணி நேரம் ஓடக்கூடிய படம் அது. அதைத் தயாரித்த பயோகிராஃப் நிறுவனம், இவ்வளவு நேரம் ஓடக்கூடிய படம் பார்வையாளர்களின் கண்களை வலிக்
கச்செய்யும் என்று சொல்லி, இனி எடுக்கும் படங்களின் நேர அளவைக் குறைக்கும்படி சொன்னது. மனம் கசந்து 
அந்நிறுவனத்திலிருந்து வெளியேறிய க்ரிஃபித், மெஜஸ் டிக் ஸ்டூடியோவின் முக்கியஸ்தர்களுடன் இணைந்து ரிலையன்ஸ்-மெஜஸ்டிக் ஸ்டூடியோவை உருவாக்கினார்.

சர்ச்சையும் டாலர் மழையும்

ரிலையன்ஸ்-மெஜெஸ்டிக் ஸ்டூடியோவின் தயாரிப்பில் 1915-ல், ‘தி பெர்த் ஆஃப் எ நேஷன்’ திரைப்படத்தை இயக்கினார் க்ரிஃபித். மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஓடக்கூடிய இத்திரைப்படம், அமெரிக்க சிவில் யுத்தத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. கறுப்பின அடிமை முறையை ஒழிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை, அமெரிக்காவின் தென் மாநிலங்கள் அடியோடு எதிர்த்ததால் தான் போர் மூண்டது. தென் மாநிலத்தைச் சேர்ந்தவரான க்ரிஃபித்தும் அடிமைத்தனம் சரி என்று கருதியவர். கறுப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கியது பெரும் சதிச் செயல்; கறுப்பினத்தவர்கள் கைகளில் அதிகாரம் போனால் நிலைமை மோசமாகும் என்பன போன்ற, மோசமான கருத்துகளுடன் விஷமத்தனமாகவே அந்தப் படத்தை உருவாக்கினார். நிறவெறி கொண்டு கறுப்பினத்தவர்களைக் கொன்று குவித்த, ‘கு க்ளக்ஸ் கிளான்’ அமைப்பினரைப் புனிதர்களாகவும், நாட்டின் ஒழுங்கை மீட்டமைக்க வந்த புரட்சி வீரர்களாகவும் அப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார் க்ரிஃபித்.

அமெரிக்காவின் சில வட மாநிலப் பிரதேசங்களில் இப்படத்தின் திரையிடல் ரத்து செய்யப்பட்டது. பல இடங்களில் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. கறுப்பினத்தவர்கள் மட்டுமல்லாமல் பலதரப்பட்ட மக்களிடம் இருந்தும் கடுமையான விமர்சனங்கள் வந்தன. ஆனால், எவ்வளவுக்கு எவ்வளவு விமர்சனங்கள் எழுந்ததோ அதே அளவு வசூலை வாரிக்குவித்தது அப்படம். உலகத் திரைப்பட வரலாற்றில் வசூல் சாதனை படைத்த படங்களின் முன்னோடியாக அத்திரைப்படம் இன்றும் விளங்குகிறது. ஒரு கட்டத்துக்கு மேல், எவ்வளவு வசூல் ஆனது என்பதையே கணக்குப் பண்ண முடியாத அளவுக்குப் பணமழையாகக் கொட்டியது என்று திரைப்பட வரலாற்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். சர்ச்சை என்பது இலவச விளம்பரம் என்பது பொதுவான திரைத் துறை தந்திரம். அதை ஆரம்பித்து வைத்ததே, ‘தி பெர்த் ஆஃப் எ நேஷன்’ திரைப்படம்தான்.

ஆந்தாலஜியின் ஆரம்பப் புள்ளி

‘தி பெர்த் ஆஃப் எ நேஷன்’ கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானதால் மனம் கொதித்துப் போன க்ரிஃபித், மக்களிடையே இருக்கும் சகிப்புத்தன்மையின்மையை மையமாகக் கொண்டு ‘இன்டாலரன்ஸ்’ (1916) என்ற பிரம்மாண்டமான திரைப்படத்தைத் தயாரித்து இயக்கினார். ஆந்தாலஜி வகை சினிமாக்களின் முன்னோடி திரைப்படம் என்றே அதைச் சொல்லலாம். ஒரே மையக்கருத்தை வைத்து ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத வெவ்வேறு கதைகளைச் சொல்வதே ஆந்தாலஜி கதைகள். ஒருவேளை இந்தக் கதைகளுக்கு இடையில் சின்ன தொடர்பு இருந்தால், அது ‘காம்போசைட்’ வகைத் திரைப்படம். அதுவும் ஆந்தாலஜியின் ஒரு வகை என்றே கொள்ளலாம். அவ்வகையில் ‘இன்டாலரன்ஸ்’ காம்போசைட் வகைத் திரைப்படம்.

பாபிலோனின் வீழ்ச்சி, ஏசுவின் சிலுவையேற்றம், 1572-ல் பிரான்ஸில் நடந்த மதக் கலவரம், 1900-களின் ஆரம்பத்தில் நடக்கும் கதை என்று நான்கு கதைகளின் கூட்டாக இத்திரைப்படம் உருவானது. இன்று பார்த்தாலும் அசத்தும் அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கும் இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், பொருளாதார ரீதியாக க்ரிஃபித்தைக் கடுமையாகப் பாதித்தது. பெரும்பாலான படங்கள் வெற்றி பெறாவிட்டாலும் புதுப்புதுக் கதைகளை இயக்குவதில் தீவிரமாக இருந்தார் க்ரிஃபித். அமானுஷ்ய கதைகள், காதல் காவியங்கள், ஆபிரகாம் லிங்கனின் வரலாறு என்று அனைத்து விதக் கதையாடல்களையும் அவர் காட்சி மொழியாக்கினார்.
கலையில் கவனம் வேண்டும்

1948 ஜூலை 23-ல், மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் க்ரிஃபித் மரணமடைந்தார். அதன்பின் 1953-ல் அமெரிக்க இயக்குநர்கள் சங்கமான ‘டைரக்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா’ (டிஜிஏ) தங்களுடைய உயரிய விருதாக ‘டி.டபுள்யூ க்ரிஃபித்’ விருதை அறிவித்தது. 1999-ல் அது ‘டிஜிஏ வாழ்நாள் சாதனையாளர் விருது’ என்று பெயர் மாற்றப்பட்டது. க்ரிஃபித் நிறவெறி கொண்டவர் என்பதாலும், ‘தி பெர்த் ஆஃப் எ நேஷன்’ திரைப்படத்தில் தான் செய்த தவறான சித்தரிப்புக்கு மன்னிப்பு கோராததும்தான் இந்தப் பெயர் மாற்றத்துக்குக் காரணம் என்று அச்சங்கம் அறிவித்தது.

சார்லி சாப்ளின் ஒரு முறை, “க்ரிஃபித் எங்கள் அனைவருக்கும் ஆசான்” என்று புகழ்ந்தார். ஆல்பர்ட் ஹிட்ச்காக், விக்டர் ஃப்ளெம்மிங், ஸ்டான்லி குப்ரிக் போன்ற பல பெரும் இயக்குநர்கள் க்ரிஃபித்தைப் புகழ்ந்துள்ளனர்.

சினிமாவில் கதைவடிவைப் புகுத்தி புத்தொளி பாய்ச்சினாலும், திரைக்கதை வடிவமைப்பில் தொடங்கி காட்சிமொழியின் வெளிப்பாடு வரை பல புது விஷயங்களைத் திரைத் துறைக்கு அளித்தாலும், மானுடப் மாண்புக்கு எதிரான நிறவெறி போன்ற கருத்துகளைப் பிரகடனப்படுத்த அவற்றைப் பயன்படுத்தியவராகவே அறியப்படுகிறார் க்ரிஃபித். திரைச் சாதனைகளுக்காக நினைவுகூரப்படும்போது, அவரின் கருத்துப் பிழைகளும் அவரின் சாதனைகளைத் துரத்திய வண்ணமே இருக்கின்றன! 

பார்க்க வேண்டிய க்ரிஃபித்தின் படங்கள்:

The Birth of a Nation (1915)
Intolerance (1916)
Broken Blossoms (1919)
Way down east (1920)
Dream Street (1921)
One Exciting Night (1922)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in