சமயம் வளர்த்த சான்றோர் 32 - அருணகிரிநாதர்

சமயம் வளர்த்த சான்றோர் 32 - அருணகிரிநாதர்

கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

முருகப் பெருமான் மீது 16 ஆயிரம் பாடல்களை, ஆயிரத்து எண்பத்தெட்டுக்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் கொண்டு அமைத்து, இசையுலகுக்கு பெரும் தொண்டாற்றியவர் அருணகிரிநாதர். இவரது திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி ஆகியன முறையே தேவாரம், திருவாசகம், திருமந்திரத்துக்கு இணையாகப் போற்றப்படுகின்றன.  

திருவண்ணாமலையில் கைக்கோள செங்குந்தர் மரபில், 15-ம் நூற்றாண்டில், திருவெங்கட்டார் - முத்தம்மை தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், கைகளில் ஆறு விரல்களுடன் ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. அருணாசலேசுவரர் அருளால் பிறந்த குழந்தை என்பதால், அக்குழந்தைக்கு ‘அருணகிரி’ என்று பெயர் சூட்டப்பட்டது. அருணகிரி பிறந்த சில தினங்களிலேயே அவரது தந்தை இறைவனடி சேர்ந்தார்.  

சில காலம் கழித்து, அருணகிரியின் தாயாரின் உடல்நலம் குன்றியது. அச்சமயத்தில், அருணகிரியின் தாய், தனது மகளை அழைத்து, “அருணகிரி ஓர் அபூர்வ குழந்தை என்று முருகப் பெருமான், எனது கனவில் தோன்றி உரைத்தருளினார். அருணகிரியால் நம் குலம் சிறக்கும். தமிழ் தழைக்கும்” என்று கூறியபடி இறைவனடி சேர்ந்தார். இதன் காரணமாக, அருணகிரியை வளர்க்கும் முழு பொறுப்பும் அவரது தமக்கைக்கு இருந்தது.  

தாயின் வேண்டுகோளை ஏற்ற தமக்கை, அருணகிரியை தமிழ்க் கல்வி கற்க பழக்கினார். தமிழ் இலக்கணம், இலக்கியங்களை அருணகிரிக்கு அறிமுகப்படுத்தினார். தாயின் கோயில் பணி, தனக்குக் கிடைத்ததால், அதில் வரும் வருமானத்தைக் கொண்டு, தம்பியை செல்லமாக வளர்த்தார்.  

பெரும்பான்மையான நேரம் விளையாடுவதிலேயே பொழுதைக் கழித்தார் அருணகிரி. சில காலம் கழித்து, அருணகிரிக்கு கல்வி கசந்தது. உரிய வயதில் திருமணம் ஆனாலும், கல்வியை விடுத்து, பெண்பித்தராகவே திரிந்தார். தம்பியின் செயல் கண்டு வருந்திய தமக்கை, செய்வதறியாது தவித்தார். பாசமான தம்பி என்பதையும் மீறி, அவரைக் கடிந்து கொண்டார்.

தமக்கையின் சுடு சொற்களைத் தாங்க முடியாத அருணகிரி, தன்னுயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தார். வீட்டை விட்டு வெளியேறி, அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்றார். அங்கே வல்லாள மகாராஜா கோபுரத்தின் உச்சிக்குச் சென்று, தன் இரு கரங்களையும் குவித்து, முருகப் பெருமானை நினைத்தபடி, “தமக்கை கடிந்து கொள்ளும் அளவுக்கு செயல்பட்ட இந்த உயிர் இவ்வுலகில் இருப்பது நல்லதல்ல. என்னை உன் திருவடிக்கே சமர்ப்பிக்கிறேன்” என்று கூறி, கீழே குதித்தார்.  

அப்போது முருகப் பெருமான், ஒரு முதியவரைப் போல் வந்து, தம் இரு கரங்களால், அருணகிரியை தாங்கிக் கொண்டார். ஏதும் புரியாமல் தவித்த அருணகிரியை நோக்கி அந்த முதியவர், “அருணகிரி! இந்த மானுடப் பிறவி கிடைத்த பிறகும், அதனால் அடைய வேண்டிய ஆன்மிகப் பேறுகளை அடையாமல் இந்த உயிரை மாய்த்துக் கொள்வது முறையல்ல. முன்பு நீ செய்த நல்வினையே இப்போது உன்னைக் காப்பாற்றியது. இக்கோயிலில் இருக்கும் முருகப் பெருமான் உன்னைக் காத்தருள்வார்” என்று கூறினார்.
தன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தால், இந்த முதியவர் தன்னை மறுபடியும் வாழச் சொல்கிறாரே என்று நினைத்துக் கொண்டார் அருணகிரி. அவரது எண்ண ஓட்டத்தை உணர்ந்த முதியவர், அருணகிரியின் கையில் ஒரு மணி மாலையைக் கொடுத்தார். அவருக்கு திருநீறிட்டு, காதில் ஆறெழுத்து மந்திரத்தை (சரவண பவ) ஓதினார்.

மேலும், “இந்த மந்திரத்தை மனத்துக்குள் சொல்லிக் கொண்டு உட்கார்ந்து இரு. அந்த முருகப் பெருமானே உன் முன்னர் தோன்றி நீ வேண்டியதை அருள்வார்” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு மறைந்தார் முதியவர். அப்போதுதான் வந்திருந்த முதியவர், முருகப் பெருமான் என்பதை உணர்ந்தார் அருணகிரி. அன்று முதல் அருணகிரி, அண்ணாமலையார் கோயிலில் ஓர் ஓரமாக அமர்ந்து, முதியவர் கூறிய ஆறெழுத்து மந்திரத்தை மனதுக்குள் தியானித்தபடி இருந்தார்.  

தம்பியைக் காணவில்லையே என்று அருணகிரியாரின் தமக்கை அவரை பல இடங்களில் தேடினார். நிறைவாக அருணாசலேசுவரர் கோயிலில் தவக்கோலத்தில் இருந்த அருணகிரியாரைக் கண்டு, “பொருள் கொடுக்க மாட்டேன் என்று உன்னைக் கடிந்து கொண்டதால், துறவறம் ஏற்றாயா? என்னை மன்னித்து விடு” என்று கூறினார்.

தமக்கையின் அழுகுரல் கேட்டு, தவநிலை கலைந்த அருணகிரியார்,  “என்னை தீயவழியில் இருந்து காக்கவே,  அப்படி கடுஞ்சொற்களை உதிர்த்தீர்கள். அதுவே என்னை இறைவனிடம் சேர்த்தது. இந்த இறையருள் கிடைக்க நீங்கள்தான் காரணம். நான் எங்கும் சென்றுவிட மாட்டேன். இனி இந்த அருணகிரியின் எல்லை தாண்ட மாட்டேன். இனி என்னை முருகப் பெருமான் பார்த்துக் கொள்வார். நீங்கள் கவலைப்படாமல் இல்லம் செல்லுங்கள்” என்று கூறினார்.

வேறுவழியில்லாமல் அரைமனதுடன் இல்லம் திரும்பினார் அருணகிரியின் தமக்கை. தினமும் அண்ணாமலையாரை தரிசிப்பது, திருமுறைகளை ஓதுவது என்று தெய்வத் திருப்பணிகளில் காலம் கழித்த தமக்கையார், முருகப் பெருமானிடம், தன்னை ஆட்கொள்ள வேண்டினார். இறைவனும் தமக்கையாரை ஆட்கொண்டார்.  

தமக்கையாரின் ஈமக்ரியைகளை செய்த அருணகிரியார், அவருக்கு முக்தியளிக்கும்படி இறைவனிடம் வேண்டிக் கொண்டு, அன்றுமுதல் முழுத்துறவியாக மாறினார். அண்ணாமலையார் சந்நிதியில் அமர்ந்து செய்த இடைவிடாத யோகத்தால், அருணகிரியாரின் உடலும் உள்ளமும் தூய்மை பெற்று, ஒருவித தெய்வீக ஒளி பெற்றார். யோகத்தில் இருந்த அருணகிரியாரின் மனக்கண்ணில், வேலும் மயிலுடன் முருகப் பெருமான் காட்சி கொடுத்து, தன்னைப் போற்றி பாடுமாறு பணித்தார்.

கல்வியில் சிறந்து விளங்காத தான் எப்படி முருகப் பெருமானைப் போற்றிப் பாடுவது என்று யோசித்த அருணகிரியாரின் நாவில், பிரணவ மந்திரத்தை எழுதினார் முருகப் பெருமான். செந்தமிழ் கவிகளைப் பாடுவதற்குரிய புலமையை அருணகிரியாருக்கு அளித்ததுடன், திருப்புகழ் மாலை பாடுவதற்கு ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ என்று முதலடியை எடுத்துக் கொடுத்தார்.
அதன்பிறகு அருணகிரியார், முருகப் பெருமானின் புகழைப் பாடத் தொடங்கினார். முருகப் பெருமான் தரிசனம் வேண்டினார். பக்தரின் எண்ணத்துக்கேற்ப, மயில் மீது இரு தேவியருடன் அருணகிரியாருக்கு காட்சி கொடுத்தார் முருகப் பெருமான்.  

அருணகிரியாருக்கு முருகப் பெருமான் காட்சி கொடுத்த நிகழ்ச்சியால், அருணகிரியாரின் புகழ் எங்கும் பரவியது. இதைக் கண்டு சம்பந்தாண்டான் என்ற அரசவைக் கவிஞர் பொறாமை கொண்டார். சம்பந்தாண்டான் தேவி உபாசகர். தேவி தரிசனம் பெற்றவர். மந்திர தந்திரங்களில் வல்லவர். ஆண்டி போல் இருக்கும் அருணகிரியாரை அரசவையில் அவமானப்படுத்த எண்ணினார்.
ஒருநாள் தான் அரசவையில் அனைவர் முன்னிலையிலும் தேவியை வரவழைப்பதாகக் கூறுகிறார். அதுபோல, அருணகிரியார் அனைவர் முன்னிலையிலும் முருகப் பெருமானை வரவழைக்க வேண்டும் என்று சவால் விடுகிறார். “நீர் தேவி உபாசகர் போல், அவர் முருகப் பெருமான் அடியார். இதில் உயர்வு ஏது? தாழ்வு ஏது?” என்று மன்னர் பிரபுட தேவராயர் சமாதானப்படுத்த முயற்சித்தபோது, “நான் தேவி தரிசனத்தை காட்டவில்லை என்றால், திருவண்ணாமலையை விட்டுச் செல்கிறேன். அதுபோல் அருணகிரி, முருகப் பெருமான் தரிசனத்தை காட்டவில்லை என்றால், அருணையை விட்டுச் செல்ல வேண்டும்” என்று சொன்னார் சம்பந்தாண்டான்.

மன்னருக்கு இந்தப் போட்டியில் விருப்பமில்லை. இருந்தாலும் தேவி தரிசனமும், முருகப் பெருமான் தரிசனமும் கிட்டும் என்று நினைத்து, போட்டியை நடத்த ஏற்பாடு செய்கிறார். குறிப்பிட்ட நாளில் அனைவரும் அரசவையில் கூடினர். சம்பந்தாண்டானால் தேவி தரிசனத்தை காட்ட இயலவில்லை. அருணகிரியார் அனைவரையும் முருகப் பெருமான் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறார். அருணகிரியார் முருகப் பெருமானை அழைத்தபோது, முதலில் முருகப் பெருமான் வரவில்லை. அவர் வராததற்கான காரணத்தை ஆராய்ந்தார் அருணகிரியார்.  

முருகப்பெருமான் எங்கும் செல்லாதபடி உமையம்மையார் தன் மடியில் அவரைப் பிடித்து வைத்திருப்பதை அறிகிறார். உடனே மயிலை அழைக்கிறார். மயில் உமையம்மையார் முன் நடனமாடியதால், அம்மையின் கவனம் திசை திரும்பியது. அந்தச் சமயம், முருகப் பெருமான், அம்மையின் மடியில் இருந்து இறங்கி, மயிலின் மீது ஏறி, அருணகிரியார் உள்ளிட்ட அனைவருக்கும் காட்சி கொடுத்தார்.

இந்த தரிசனத்தால் அனைவரும் மகிழ்ந்தனர். அதன் பிறகு அருணகிரியார், பல தலங்களுக்கு யாத்திரை சென்று, முருகப் பெருமான் மீது பாமாலைகள் பாடி மகிழ்ந்தார். திடீரென்று முருகப் பெருமானின் தரிசனம் கிடைத்ததால், நாளடைவில் மன்னரின் கண்பார்வை குறைந்தது. சம்பந்தாண்டானால் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியவில்லை. நாளாக நாளாக அருணகிரியார் மீது வெறுப்பு ஏற்பட்டு, அவரை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்த சம்பந்தாண்டான், மன்னரிடம் சென்று, “யாரால் உங்களுக்கு கண்பார்வை போயிற்றோ, அவரே முருகப் பெருமானைப் போற்றிப் பாடி, உங்களுக்கு கண்பார்வையை வரச் செய்யட்டும்” என்கிறார். இதைக் கேட்ட மன்னர் மகிழ்ந்து, அதற்கான உபாயம் குறித்து கேட்கிறார்.

 “தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மலரைக் கொண்டு வந்து, மன்னரின் கண்கள் மீது வைத்தால், கண்பார்வை திரும்பும்” என்று கூறுகிறார் சம்பந்தாண்டான். மன்னர் உடனே அருணகிரியாரை சந்திக்க விரும்பினார். தகவல் அறிந்த அருணகிரியார், தலயாத்திரை முடிந்து திருவண்ணாமலை திரும்பியதும், மன்னரை சந்திக்கிறார். மன்னரும் சம்பந்தாண்டான் கூறிய உபாயம் குறித்து சொல்கிறார்.

தன்னால் மட்டுமே மன்னருக்கு கண்பார்வையை திரும்ப வரவழைக்க முடியும் என்பதை உணர்ந்த அருணகிரியார், அதற்கு உடன்படுகிறார். அரசவையை விட்டு, அண்ணாமலையார் கோயில் கோபுரத்தின் மீது ஏறுகிறார். தன் உடலை அங்கு இருத்திவிட்டு, ஒரு கிளியின் உடலில் புகுந்து தேவலோகம் பறந்து சென்றார்.  

அருணகிரியாரைப் பின்தொடர்ந்த சம்பந்தாண்டான், இதையறிந்ததும், கோயில் தலைமை அர்ச்சகரிடம் சென்று, “அருணகிரியார் கோபுரத்தின் மீது ஏறி தன்னுயிர் மாய்த்துக் கொண்டார். இச்சூழலில் புனிதம் கெட்டுவிட்டதால் கோயிலை மூடவேண்டும்” என்று கூறுகிறார். கோயில் பூஜைகள் தடைபடுவதால், அருணகிரியாரின் உடலை எரியூட்ட உத்தரவிட்டார் மன்னர். அதன்படி செய்து, தனது வஞ்சத்தை தீர்த்துக் கொண்டார் சம்பந்தாண்டான்.  

கிளி வடிவில் விண்ணுலகம் சென்ற அருணகிரியார், இந்திரனை சந்தித்து, நடந்தது அனைத்தையும் கூறுகிறார். இந்திரனும் மனமகிழ்ச்சியுடன் பாரிஜாத மலர்களை அருணகிரியாரிடம் அளிக்கிறார். பாரிஜாத மலர்களுடன் திருவண்ணாமலை வந்த அருணகிரியார், தன் உடல் எரியூட்டப்பட்டதை அறிகிறார். கிளி வடிவத்திலேயே அண்ணாமலையார் கோயில் கோபுரத்தில் இருக்கலானார். அவர் கொண்டு வந்த பாரிஜாத மலர்களின் நறுமணம் அந்தப் பகுதி முழுதும் வீசியது. பாரிஜாத மலர்களின் நறுமணம் குறித்து மன்னருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அருணகிரியார் கிளி வடிவில் வந்துவிட்டதை உணர்ந்த மன்னர், தனது செயலுக்கு வருந்தினார். தன்னை மன்னிக்குமாறு கிளியிடம் வேண்டினார். “என்றாவது ஒருநாள் இந்த உடலும் உயிரும் பிரிய வேண்டியது தான். அதனால் நீர் வருந்தத் தேவையில்லை. கிளி வடிவில் இருந்து நான் பாடினாலும், என் தமிழை முருகப் பெருமான் ஏற்றுக் கொள்வார்” என்று கூறி மன்னரை சமாதானப்படுத்தினார் அருணகிரியார்.

பாரிஜாத மலர்களின் ஒளிபட்டு, மன்னருக்கு கண்பார்வை திரும்பியது. அருணகிரியாரும் கிளி வடிவில் இருந்தே கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், திருவகுப்பு ஆகியவற்றைப் பாடினார். கிளி வடிவில் இருந்த அருணகிரியாரை, உண்ணாமுலை அம்மையார், தன் கரத்தில் அமர்த்திக் கொண்டார். 

அருணகிரிநாதர் பாடிய பாடல்கள்

அருணகிரிநாதர் 16 ஆயிரம் பாடல்களைப் பாடியதாக கூறப்படுகிறது. அவற்றில் 2 ஆயிரம் பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவையாவன: கந்தர் அந்தாதி (102 பாடல்கள்), கந்தர் அலங்காரம் (108), கந்தர் அனுபூதி (52), திருப்புகழ் (1,307), திருவகுப்பு (25), சேவல் விருத்தம் (11), மயில் விருத்தம் (11), வேல் விருத்தம் (11), திருவெழுகூற்றிருக்கை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in