இனி எல்லாமே ஏ.ஐ - 31: மின்னஞ்சலைக் காக்கும் நுட்பம்

இனி எல்லாமே ஏ.ஐ - 31: மின்னஞ்சலைக் காக்கும் நுட்பம்

உங்கள் அலுவல் மேஜை சுத்தமாக இருப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. ஆனால், உங்கள் இமெயில் முகவரிப் பெட்டி சுத்தமாக இருக்கிறது என்றால், அதற்குச் செயற்கை நுண்ணறிவுக்குத்தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். ஆம்! குப்பை மெயில்களால் உங்கள் மின்னஞ்சல் முகவரிப் பெட்டி நிரம்பி வழியாமல் இருப்பதற்குப் பின்னே, ஓயாமல் இயங்கிக்கொண்டிருப்பது ஏ.ஐ நுட்பம்தான்!

குப்பையைக் களையும் நுட்பம்

நீங்கள் பயன்படுத்தும் இமெயிலுக்கும், ஏ.ஐ-க்கும் தொடர்பு இருப்பது வேண்டுமானால் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், மெயிலுக்கும் குப்பை மெயிலுக்கும் உள்ள தொடர்பை நீங்கள் நன்கு அறிந்திருக்கலாம். ‘ஸ்பேம்’ என வெறுப்புடன் அழைக்கப்படும் அழையா விருந்தாளி மெயில்கள்தான் அவை. விளம்பர மெயில்கள் தொடங்கி வில்லங்க நோக்குடன் வலை விரிக்கும் மால்வேர் மெயில்கள் வரை, எண்ணற்ற ‘ஸ்பேம்’ மெயில்கள் முகவரிப் பெட்டியைக் குப்பையாக்கி, இமெயில் அனுபவத்தையே கசப்பாக்கிவிடுகின்றன.

ஆனால், முன்பு போல இப்போது முகவரிப் பெட்டியில் ஸ்பேம் மெயில்கள் குவிவதில்லை என்பதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். அதற்காக, ஸ்பேம் மெயில்கள் வழக்கொழிந்து போய்விட்டன என பொருள் இல்லை. இன்னமும் ஸ்பேம்கள் ஆயிரக்கணக்கில் அனுப்பிவைக்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் உங்கள் பார்வைக்கு வருவதற்கு முன்பாகவே, வடிகட்டி விலக்கப்படுகின்றன என்பதே விஷயம்.

தூண்டிலிடும் வார்த்தைகள்

இந்த வடிகட்டலின் பின்னே இருப்பது ஏ.ஐ நுட்பம்தான். ஒவ்வொருவருக்கும் வரும் மெயில்களில் பயனுள்ளவை எவை, பயனில்லாதவை எவை எனக் கண்டறிந்து இமெயில் பதர்களை முகவரிப் பெட்டியை எட்டிப்பார்க்க வழியில்லாமல் இந்த நுட்பம் செய்துவிடும். உண்மையில், ஏ.ஐ நுட்பத்தின் மகத்தான வெற்றிகளில் ஒன்றாக இது சொல்லப்படுகிறது. இமெயிலை மீட்டெடுத்த தொழில்நுட்பமாகவும் போற்றப்படுகிறது.

கொஞ்சம் காவியமயமாகச் சொல்வது என்றால், நம் ஒவ்வொருவரின் இமெயில் பெட்டியிலும் ஏ.ஐ காவலர்கள் ஒளிந்திருந்து, நமக்கு வரும் குப்பை மெயில்களைக் கண்காணித்து கைது செய்துகொண்டிருக்கின்றனர் எனலாம்.

இந்த ஏ.ஐ காவலர்கள், ஒவ்வொரு மெயிலையும் கண்காணித்து, அவற்றில் நல்லவற்றை மட்டுமே முகவரிப் பெட்டிக்கு அனுமதிக்கின்றனர். இதற்காக என்றே அந்தக் காவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இமெயிலில் இடம்பெறும் வாசகங்களையும், வார்த்தைகளையும் கொண்டு அவை நல்ல மெயிலா அல்லது குப்பை மெயிலா என்று ஏ.ஐ காவலர்கள் கண்டுபிடித்துவிடுகின்றனர்.

கோடீஸ்வரராகும் வாய்ப்பு அல்லது லாட்டரியில் முதல் பரிசு என்பது போன்ற தூண்டில் வார்த்தைகள் இருந்தால், அவை மோசடி மெயிலாக இருக்கலாம் என நமக்கு ஒரு புரிதல் இருக்கிறது அல்லவா? அதே புரிதலை, இயந்திரக் கற்றல் நுட்பம் மூலம் இமெயில் சேவை நிறுவனங்கள் மென்பொருள் மூலம் கையாள்கின்றன. இதன்படி, குப்பை மெயில்களில் தவறாமல் இடம்பெறும் வார்த்தைகள் கொண்டிருக்கும் மெயில் வந்தால், மென்பொருள் அதை உணர்ந்து விலக்கிவிடுகிறது.

சவாலான பணி

இந்த வடிகட்டல் கருத்தாக்கம் எளிமையானது என்றாலும், இந்தப் பணியை இயந்திரங்களிடம் ஒப்படைப்பதில் எண்ணற்ற சவால்கள் இருக்கின்றன. அடிப்படையில் பார்த்தால், ஸ்பேம் மெயில்களில் இடம்பெறும் வார்த்தைகள் என ஒரு பட்டியல் போட்டு அவற்றை இனம்காண மென்பொருளுக்குப் பயிற்சி அளிக்கலாம். அதே போல, ஸ்பேம் அல்லாத வார்த்தைகள் என்றும் ஒரு பட்டியல் போட்டு நல்ல மெயில்களை அனுமதிக்க வழி செய்யலாம்.

ஆனால், பிரச்சினை என்னவெனில், ஸ்பேம் வார்த்தை இருப்பதாக நினைத்து சில நேரங்களில் நல்ல மெயிலைக்கூட மென்பொருள் திரும்பி அனுப்பிவிடக் கூடும். அதோடு, இத்தகைய தடுப்பு உத்தி பயன்படுத்தப் படுவதை அறிந்து ஸ்பேம் மெயில் அனுப்புபவர்கள், மென்பொருளின் கண்ணில் மண்ணைத் தூவும் வகையில் தங்கள் உத்திகளை மாற்றிக்கொண்டே இருக்கலாம்.

ஆக, நேற்று பயன்படுத்திய ஸ்பேம் உத்தியை ஸ்பேமாளர்கள் இன்று பயன்படுத்தாமல் புதிய மேம்பட்ட உத்தியை நாடவே வாய்ப்பு அதிகம். ஆனால், இத்தனைக்கும் ஏ.ஐ காவல் மென்பொருள் ஈடுகொடுத்துக் கொண்டிருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

கற்றல் தொடர்கிறது...

இதற்குக் காரணமாக இருப்பது இயந்திரக் கற்றல் நுட்பம். அதாவது, மாறிவரும் ஸ்பேம் உத்திகளுக்கு ஏற்ப தங்கள் மோப்ப சக்தியையும் மாற்றிக்கொள்ள மென்பொருட்கள் பழகிக்கொள்கின்றன. அவை தொடர்ந்து பாடம் கற்றுக்கொண்டே இருக்கின்றன.
ஆனால் ஒன்று, மனிதர்களுக்கும் ஏ.ஐ-க்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. மனிதர்களால், இதற்கு முன் இல்லாத ஏமாற்று வேலையைக்கூட புதிதாக எதிர்கொள்ளும்போது கண்டுபிடித்துவிட முடியும். 

ஏ.ஐ-க்கு அப்படி இல்லை: முதலில் அதற்குப் பயிற்சி அளிக்க வேண்டும். ஸ்பேம் மெயில்கள் இப்படி எல்லாம் இருக்கும் என தரவுகளைக் கொண்டு உதாரணம் காட்டினால், அவற்றைக் கொண்டு அடுத்த முறை மெயில் வரும்போது அவை ஸ்பேமை அடையாளம் காட்டிவிடும்.

இதற்கு மாறாக, இதுவரை பட்டியலில் இல்லாத புதிய முறையில் ஸ்பேம் வந்தால், அதை ஏ.ஐ  நுட்பத்தால் அறிய முடியாது. இந்தக் குறைக்குத் தீர்வாகத்தான் இயந்திரக் கற்றல் அமைகிறது. இதன்படி, ஸ்பேம் காவலர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கின்றனர்.

நமது பங்களிப்பு

இந்தப் பயிற்சி அளித்தலில் உங்களுக்கும்கூட பங்கிருக்கிறது தெரியுமா?

ஆம், உங்களுக்கு வந்திருக்கும் மெயில் ஸ்பேம் மெயில் எனில், அதைக் குறிப்பிடுமாறு கேட்கப்படுவதை நீங்கள் கவனித்து அதற்கேற்ப புகாரும் செய்திருக்கலாம். இவ்வாறு பயனாளிகள் புகார் செய்யும் போதெல்லாம், ஏ.ஐ மென்பொருள் அதைக் குறித்துவைத்துக்கொள்கிறது. அடுத்த முறை அதே மெயில் வந்தால் ஸ்பேம் எனப் புரிந்துகொள்கிறது.

ஆக, மாறும் ஸ்பேம் உத்திகளுக்கு ஏற்ப ஏ.ஐ நுட்பமும் மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. மேலும், இமெயில் பயன்பாடு நபருக்கு நபர் மாறுபடலாம் என்பதால் அதன் அடிப்படையிலும் ஏ.ஐ நுட்பம் விஷயங்களைப் புரிந்துகொள்கிறது. இந்த இடத்தில்தான் மனிதர்களை மிஞ்சுகிறது. ஓய்வே இல்லாமல் கோடிக்கணக்கான மெயில்களைப் படுவேகமாகக் கண்காணித்து, அவற்றைத் தரம் பிரித்து முகவரிப் பெட்டியை இயன்றவரை சுத்தமாக வைத்திருக்க சேவை அளித்துக்கொண்டிருக்கிறது ஏ.ஐ. நுட்பம்.

(தொடரும்)

ஜிமெயில் காவலர்கள்

முன்னணி சேவைகளில் ஒன்றாக விளங்கும் ஜிமெயில், தனது பயனாளிகளுக்கு ஸ்பேம் தொல்லை இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய ஏ.ஐ நுட்பத்தைப் பெருமளவு பயன்படுத்திவருகிறது. வழக்கமான மெயில் போல வரும் குப்பை மெயில்களை அடையாளம் காண்பதோடு, ஒருவர் குப்பை என நினைப்பதை இன்னொருவர் தகவலாக நினைக்கலாம் என்பதையும் புரிந்துகொண்டு செயல்படுகிறது ஜிமெயிலின் ஸ்பேம் கண்காணிப்பு சேவை. அதோடு, இமெயில் மாறாட்டத்தையும் கண்டறிந்துவிடுகிறது. அதாவது, அதிகாரபூர்வ நிறுவனம் அனுப்பிவைப்பது போல தோன்றும் நடிப்பு மெயில்களையும் துல்லியமாக இனம்பிரித்துவிடுகிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in