சிறகை விரி உலகை அறி 08: இருளிலும் ஒளி உண்டு

சிறகை விரி உலகை அறி 08: இருளிலும் ஒளி உண்டு

உள்ளங்கைகளைச் சுண்டி இழுக்கும் குளிரில் வெடவெடத்து, மலைகளுக்கு மாலையிட்டது போன்ற மலைப்பாதையில் நடப்பது பேரனுபவம். பனி வடியும் மாலையில் விளக்கொளியில் மினுமினுக்கும் பனித்தோரணத்தைக் காண்பது பெருந்தவம். குளிராடைகளால் இயற்கையை மறைக்க நினைப்பது, போகாத ஊருக்கு ஆயிரம் பாதைகள் போலத்தான். இரவு தங்குவதற்கு நான் முன்பதிவு செய்திருந்த விடுதி, நகருக்கு வெளியே இருந்ததால், நாடி நடுங்க “உஷ்…உஷ்” என சீறியபடி, குறிப்பிட்ட தூரம் மலைப்பாதையில் நடந்து பேருந்தில் ஏறினேன்.

சுய ஒழுக்கமே நாகரிக முதிர்ச்சி

பேருந்தின் பின் வாசல் வழியாக ஏறி முன் வாசல் வழியாக இறங்க வேண்டும். நடத்துநர் இருக்கமாட்டார். ஏறியவுடன் ஓட்டுநருக்கு அருகில் மேலே பார்த்தேன். மின்தகவல் பலகையில் தகவல்கள் ஓடிக்கொண்டிருந்தன. நான் ஏறும்போது எத்தனையாவது எண்ணில் விளக்கு அணைந்து அணைந்து எரிந்ததோ, அதுதான் அந்தப் பேருந்து நிறுத்தத்தின் எண். அந்த எண்ணுக்குக் கீழே அடிப்படைக் கட்டணம் இருந்தது. அடுத்தடுத்த நிறுத்தத்தில் அதன் மதிப்பு கூடியது.

இறங்க வேண்டிய நிறுத்தம் வரவிருந்த நிலையில் கைப் பிடியில் உள்ள பொத்தானை அழுத்தினேன். ஓட்டுநருக்கு அருகில் விளக்கு எரிந்ததும் பேருந்தை நிறுத்தினார். மின் தகவல் பலகையில், நான் ஏறிய நிறுத்தத்தின் எண்ணுக்குக் கீழே எவ்வளவு தொகை இருந்ததோ அதை ஓட்டுநரிடம் கொடுத்துவிட்டு இறங்கினேன். பயண அட்டை வைத்திருந்தவர்கள், ஏறும்போதும் இறங்கும்போதும் அதற்கென உள்ள கருவியில் நுழைத்து இயக்கினார்கள். ‘யாராவது ஒருவர், அவர் ஏறிய நிறுத்தத்தின் எண்ணை மாற்றிச் சொல்லி குறைந்த கட்டணம் கட்டினால் என்ன செய்வது?’ என யோசனை வரத்தான் செய்தது. ‘கண்டிப்பாக அவர் ஜப்பானியராக இருக்க மாட்டார்’ என நானே பதில் சொல்லிக்கொண்டேன்.

இயற்கையுடன் பரிச்சயம்

காலையில் வெந்நீரில் குளித்த பிறகு, சன்னல் சாளரத்தை விலக்கியபோது இயற்கையின் அழகு முகம் கண்ணில் பட்டது. விடுதிக்கு முன்னால் சாலை, சாலைக்கு அந்தப் பக்கம் கடல். கடல் நீர் சாலைக்கு வருவதைத் தடுக்க தடுப்புச் சுவர். சொர்க்கத்தின் வாசலில் சொக்கி நின்றேன். விரைவாகக் கீழே இறங்கிச் சென்றேன். சூரியன் மேகத்தைக் கடந்து இன்னும் மேலேறவில்லை. செவ்வானத்தில் வெண்மேகங்கள் தூரிகை வரைந்தன. சாலையைக் கடந்து இடப்பக்கம் நடந்து, கரையில் கொட்டப்பட்டிருந்த கற்களில் ஒன்றில் ஏறி நின்றேன், கைகளை அகல நீட்டி ஆனந்தம் கொண்டேன். சுத்தமான காற்றும் பாதங்களை நீவும் அலைநீரும் புத்துணர்வளித்தன.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அலைகளிலேயே அலைந்தவன், விடுதிக்கு வந்து காலை உணவு முடித்து மீண்டும் நாகசாகி நகருக்குள் பயணித்தேன். நாகசாகிக்குள், ரத்தமும் சதையுமாக இன்னொரு முக்கிய வரலாறு இருப்பதை அறிந்தேன்.

சிலுவையில் கொல்லப்பட்ட குடிமக்கள் நாகசாகி துறைமுகத்தில், 16-ம் நூற்றாண்டின் மத்தியில் வணிகம் செய்ய வந்திறங்கினார்கள் போர்த்துகீசியர்கள். அப்படி வந்தவர்கள் கிறிஸ்தவ சமயத்தையும் அறிமுகம் செய்தார்கள். நாகசாகி கிறிஸ்தவர்களின் நகரமானது. காலப்போக்கில், உள்ளூர் அரசியலிலும் போர்த்துகீசியர்கள் தலையிட ஆரம்பித்தார்கள். ஜப்பானை ஒருங்கிணைத்து ஆளத் தொடங்கிய கிடயோஷி, ‘வணிகம் செய்ய வந்தவர்கள் நம்மைக் காலனியாக்கப் பார்க்கிறார்களா?’ என்று வெகுண்டு, 1587-ல் கிறிஸ்தவ மதத்தை தடை செய்து ஆணையிட்டார். ஆனாலும் பெரிய அளவில் செயலுக்கு வரவில்லை அச்சட்டம்.

இந்நிலையில், 1596-ல் மெக்சிகோவுக்குச் சென்றுகொண்டிருந்த ஸ்பெயின் கப்பல் ஜப்பான் கடல் பகுதியில் பழுதாகி நின்றது. அக்கால வழக்கப்படி கப்பலைப் பறிமுதல் செய்ய முயன்றார் கிடயோஷி; மாலுமி சம்மதிக்கவில்லை. போருக்கான ஒத்திகையோ என்கிற பேரச்சம் பேரரசரை ஆட்கொண்டது. மதம் போதிக்க ஏற்கெனவே வந்திருந்த கிறிஸ்தவ பாதிரியார்களைப் பற்றிய அச்சமும் அவருக்கு இருந்தது. எனவே, தனது ஆணையைத் தீவிரமாகச் செயல்படுத்த உத்தரவிட்டார்.

எண்ணற்றோரைக் காவலர்கள் கைது செய்தனர். அதில், இருபது ஜப்பானியர், ஆறு வெளிநாட்டினர் உட்பட 26 பேரை ஜனவரி 9-ம் தேதி கியோட்டோ நகரிலிருந்து நாகசாகிக்கு ஏறக்குறைய ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் குளிரில் நடக்க வைத்து, பிப்ரவரி 5-ல் சிலுவையில் அறைந்து கொன்றார் கிடயோஷி. 26 பேரில் சிறுவர்களும், பொதுமக்களும், பாதிரியார்களும் இருந்தனர். இவர்களுக்காக எழுப்பப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தைப் பார்த்து, அதன் படிகளில் அமர்ந்தேன். வேதனை மனதைக் கவ்வியது. அணுகுண்டு வீச்சில் முற்றிலும் அழிந்த உராகமி பேராலயம் இதன் அருகில்தான் உள்ளது.

மறைந்து வாழ்ந்த கிறிஸ்தவர்கள்

கிடயோஷி இறந்த பிறகு 1600-ல் ஆட்சிக்கு வந்தவர் டொகுகவா. இவர், வெளிநாட்டு கருத்தியலையும் ராணுவத் தலையீட்டையும் வெறுத்தார். 1633-ல் கிறிஸ்தவ மதத்தை ஜப்பானில் முற்றிலும் தடைசெய்து, அனைத்துப் பாதிரியார்களையும் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டார். சில சீன, டச்சு வணிகர்களைத் தவிர மற்ற நாட்டினருடன் வணிகத் தொடர்பையும் நிறுத்தினார். கிறிஸ்தவர்களை அடையாளம் காட்டுகிறவர்களுக்கு வெள்ளிக் காசுகள் தருவதாகப் பரிசு அறிவித்தார். கிறிஸ்தவர்கள் என்கிற காரணத்துக்காக எண்ணற்றவர்களைக் கொலையும் செய்தார்.

உயிருக்குப் பயந்த மக்கள் நகரத்தைவிட்டு மலையின் உள் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தார்கள். மறைந்திருந்து வாழ்ந்தார்கள். 1873-ல்தான் கிறிஸ்தவர்கள் மீதான தடை அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டது. ஆச்சரியம் என்னவென்றால்... தடை நீக்கப்பட்டவுடன் பல்வேறு மக்கள் பொதுவெளிக்கு வந்து, “நாங்கள் இப்போதும் கிறிஸ்தவர்கள்தான்” என அறிவித்தார்கள். ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளாகத் தங்கள் அடையாளத்தை வெளியுலகுக்குத் தெரியாமல் பாதுகாத்ததோடு, தங்கள் மத நம்பிக்கையை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அவர்கள் கடத்தியுள்ளார்கள்.

இந்தக் காலங்களில், அரசரிடமிருந்து தப்பிக்க புத்த கடவுளான ‘இரக்கத்தின் தேவதை’யை ஒத்த வடிவத்தில் கன்னி மரியாவைச் செய்துள்ளார்கள் கிறிஸ்தவர்கள். புத்த சிலைகள் போல் தோற்றம் உள்ள சிலைகளின் முதுகுப்பக்கம் சிலுவையை ஒட்டிவைத்துள்ளார்கள். மேலும், முதுகுப்பக்கம் ஒரு துளையிட்டு அதனுள் செபமாலை போன்ற பொருட்களை வைத்துள்ளார்கள். மலைகளிலும், குகைகளிலும் அவர்கள் மறைந்திருந்த பகுதிகள் (Hidden Christian Sites) யுனெஸ்கோ புராதனச் சின்னமாக 2018-ல் அறிவிக்கப்பட்டது. துயரமும் நம்பிக்கையும் நிறைந்த அவர்களின் வரலாற்றை முதன்முறையாக அறிந்தபிறகு, அங்கிருந்து குளோவர் தோட்டத்துக்குச் (Glover Garden) சென்றேன்.

குளோவர் தோட்டம்

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த குளோவர், 1859-ல் 21 வயதில் ஜப்பான் வந்து இன்னொருவரின் நிறுவனத்தில் வேலை செய்தார். மூன்றே ஆண்டுகளில் சொந்தமாகத் தொழில் தொடங்கினார். தேயிலை, மரம் போன்ற பல பொருட்களை ஏற்றுமதி செய்தார். துப்பாக்கி, இயந்திரக் கருவிகள், நீராவிக் கப்பல்களை இறக்குமதி செய்தார். ஜப்பானின் தொழில்மயமாதல், கப்பல் கட்டுதல் மற்றும் சுரங்கத் தொழிலில் பெரும் பங்குவகித்தார். ஜப்பானின் முதல் நவீன நிலக்கரிச் சுரங்கம் அமைய உதவினார். மினாமி யாமேட் (MinamiYamate) எனப்படும் மேட்டுப் பகுதியில் இருந்த அவரின் வீட்டில் இருந்து, நாகசாகி துறைமுகத்தையும் நகரத்தையும் அழகியலோடு ரசிக்கலாம்.

ஏறக்குறைய 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள குளோவர் தோட்டத்தில் குளோவர் வாழ்ந்த வீடு இருக்கிறது. மேலும், நாகசாகியின் வரலாற்றைப் பாதுகாக்கும் பொருட்டு, மேற்கத்திய கலைநயத்துடன் நாகசாகியில் இருந்த பல்வேறு வீடுகளும் 1970 முதல் இத்தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன. பூவனத்துக்குள் பசுங்குடிலாக விளங்குகிறது இத்தோட்டம்.

நாகசாகியில் எண்ணற்ற புதிய தகவல்களை அறிந்துகொண்ட மகிழ்வில், தொடர்வண்டி நிலையத்துக்குத் திரும்பினேன்.

பயணம் தரும் உறவுகள்

குளோவர் தோட்டத்தில் சுற்றிவந்தபோது என்னைக் கடந்து சென்ற ஒரு ஜப்பான் குடும்பத்தை அழைத்து, “என்னை ஒரு படம் எடுக்க இயலுமா?” எனக் கேட்டேன். மகிழ்வுடன் எடுத்துக் கொடுத்தார்கள். தட்டுத்தடுமாறி ஆங்கிலம் பேசினார்கள். “எங்கள் ஆங்கிலம் நன்றாக உள்ளதா?” என கேட்டு,  “ஆம்” என்றதும் மகிழ்ந்தார்கள். பிறகு, எங்கள் அனைவரையும் வைத்து மற்றொருவர் குழுப் படம் ஒன்று எடுத்தார். பயணம் அன்றோடு முடியவில்லை. இப்போதும் மின்னஞ்சலில் தொடர்பில் இருக்கிறோம். கடைசியாக, கடந்த மே மாதம் 4-ம் தேதி, “உங்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது. இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பரவிவருகிறது. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன்” என மின்னஞ்சல் செய்திருந்தார் அந்தக் குடும்பத்தின் இளைஞன் தாய்சேய் (Taisei). பயணங்கள் தரும் உறவுகள் தான் எத்தனை உன்னதமானவை!

(பாதை விரியும்) 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in