சமயம் வளர்த்த சான்றோர் 31: அன்னை சாரதா தேவி

சமயம் வளர்த்த சான்றோர் 31: அன்னை சாரதா தேவி

கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

நடைமுறை வாழ்க்கைக்கு உகந்த, யதார்த்த வடிவங்களின் இறைத் தத்துவத்தை விளக்கிக் காட்டிய ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி அன்னை சாரதா தேவி. குருநாதரின் முதல் சீடரான இவர், பிற சீடர்கள் அனைவருக்கும் தாயாக விளங்கினார். ராமகிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியத் தூணாக இருந்தவர்.

கொல்கத்தா அருகே ஜெயராம்பாடி கிராமத்தில் ராமசந்திர முகர்ஜி  - சியாமா சுந்தரி தேவி வசித்து வந்தனர். இத்தம்பதிக்கு முதல் குழந்தையாக, 1853-ம் ஆண்டு டிசம்பர் 22-ல் தாகூர் மணி பிறந்தார். அவர் பின்னாளில், சாரதா மணி என்றும் சாரதா தேவி என்றும் அழைக்கப்பட்டார்.  ராமசந்திர முகர்ஜி, கோயில் பூசாரியாக இருந்ததால், சாரதா தேவி, சிறுவயதில் இருந்தே வீட்டுக்கும் கோயிலுக்கும் சென்றபடி இருந்தார். வீட்டில் தெய்வீகச் சூழல் நிறைந்து காணப்பட்டதால், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். கோயிலில் ஆன்மிக உரைகள் கேட்டும், தாயிடம் இருந்து புராணக் கதைகளைக் கேட்டும் வளர்ந்ததால், சாரதா தேவிக்கு பள்ளிக்கூடம் செல்லும் சூழல் ஏற்படவில்லை. வீட்டிலேயே எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார்.  

சாரதா தேவிக்கு, இயற்கையிலேயே கருணை உள்ளம் இருந்ததால், எப்போதும் அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வார். பசு உள்ளிட்ட விலங்குகளிடம் அன்பு காட்டுவார். பசுக்களுக்கு புல் வெட்டுவதற்காக, கழுத்து வரை நீர் நிரம்பி நிற்கும் நீர் நிலைகளில் இறங்குவார். இல்லத்தருகே உள்ள வயல்களில் பணி செய்பவர்களுக்கு உணவிட்டு மகிழ்வார். தாய்க்கு உதவியாக பருத்தித் தோட்டத்துக்கு சென்று பருத்தி எடுப்பார். ஒருசமயம், அப்பகுதியில் தீராத பஞ்சம் ஏற்பட்டபோது, தந்தை பத்திரப்படுத்தி வைத்திருந்த உணவு தானியங்களை எல்லாம் எடுத்து சமைத்து ஏழை எளிய மக்களுக்கு பரிமாறினார் சாரதா தேவி.  
ஐந்து வயதிலேயே சாரதா தேவிக்கு திருமணம் செய்ய, அவரது பெற்றோர் விரும்பினர். அதன்படி, எப்போதும் தியான நிலையிலேயே இருக்கும் ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு, சாரதா தேவியை மணமுடித்து வைத்தனர்.  

அன்னை பராசக்தியின் வடிவம் ராமகிருஷ்ண பரமஹம்சர் என்பதை சாரதா தேவி உணர்ந்திருக்கவில்லை. சிறுமியாக இருந்ததால், ஊர்மக்கள், ராமகிருஷ்ணரைப் பற்றி அவதூறாகப் பேசும்போது (மனநிலை சரியில்லாதவர்) அவற்றை நம்பினார் சாரதா தேவி. சிறுமியாக இருந்தாலும் எதிர்காலம் குறித்து அச்சமடைந்தார். அதனால், திருமணத்திற்குப் பின்பும் சில ஆண்டுகள் பெற்றோருடனேயே இருந்தார். 1872-ம் ஆண்டு கணவர் இல்லத்துக்குச் சென்ற சாரதா தேவி, தனது கணவர் ஊர்மக்கள் கூறியபடி இல்லை என்பதை உணர்ந்தார். ராமகிருஷ்ணர் ஓர் இறைவடிவம் என்பதை அறிந்ததும், அவருக்கு சீடரானார். சிறந்த பயிற்சி பெற்று, குருநாதருக்கு உதவியாக இருந்தார்.

“வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தை அடைவதற்கு கணவருக்கு உறுதுணையாக இருப்பதுடன், அந்த லட்சியத்தை தானும் அடைய முயல்பவளே மனைவி. அவ்வாறு நீ இருப்பாயா?” என்று குருநாதர் கேட்டதற்கு, “ஆன்மிக வாழ்க்கையில் உங்களுக்கு துணை புரியவே வந்துள்ளேன்” என்று பதில் அளித்த சாரதா தேவி, குருநாதரைப் போலவே துறவு நிலை கொண்டார்.  
திருமணம் ஆனபிறகும், தன் மனம் ஆழ்ந்த சமாதியில் மூழ்கியதற்கு காரணம் சாரதா தேவியின் தூய்மையே என்று கூறிய ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதா தேவி தனது சீடராக இருந்தாலும், அவரை உலகநாயகியான அம்பிகையாகப் போற்றினார். அவரை பராசக்தியாகவே உணர்ந்தார்.  

காளி பூஜையின்போது, கங்கை நீரைத் தெளித்து புனிதப்படுத்திய பிறகு, அம்பிகை அமர்வதற்காக இடப்பட்டிருந்த இடத்தில் சாரதா தேவியை அமரச் செய்தார் பரமஹம்சர். பராசக்தியின் மந்திரங்களைக் கூறி, “சாரதா தேவியின் உடலில் உன்னை வெளிப்படுத்த வேண்டும். இந்த மங்கையின் உடலையும் உள்ளத்தையும் புனிதப்படுத்த வேண்டும்” என்று வேண்டினார். பூஜை நிறைவில் தனது தவ வலிமை அனைத்தையும் சாரதா தேவியிடம் தந்தருளினார். தனது ஆன்மிகப் பணிகள் தொடர, சாரதா தேவியை ஒரு கருவியாக்கினார்.  

சாரதா தேவியும் எப்போதும் பிரார்த்தனை வாழ்வு, குருநிலை, தாய்மையின் பொலிவு ஆகியவற்றை வெளிப்படுத்தினார். எதைச் செய்தாலும் பராசக்தியிடம் பிரார்த்தனை செய்துவிட்டே தொடங்கினார். யாராவது எதாவது கேள்வி கேட்டாலும் பராசக்தியின் உத்தரவு பெற்றே பதிலளித்தார். ஒருசமயம் குருநாதர், அன்னையிடம் ஏதோ ஆலோசனை கேட்க, அன்னை கோயிலுக்குச் சென்று, பராசக்தியிடம் அதுகுறித்து கேட்டு, தெளிந்த பின்னரே, குருநாதருக்கு பதிலளித்தார்.  

மற்றொரு சமயம், சீடர் ஒருவர் அதிகம் சாப்பிட்டு விட்டதை உணர்ந்த குருநாதர், அதுகுறித்து அன்னையிடம் வினவினார். இரவில் அதிகம் சாப்பிட்டால் அது அவர்களின் ஆன்ம நலனைக் கெடுக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று குருநாதர் கூறினார். அதற்கு பதிலுரைத்த அன்னை சாரதா தேவி, “சீடர் அதிகம் சாப்பிட்டதை பெரிதுபடுத்தாதீர்கள். அவர் நலனை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று தன் குருநிலையை உணர்ந்து கூறினார்.  

ராமகிருஷ்ணரை இறைவடிவமாக உணர்ந்தவர்கள் அவரது சீடரானார்கள். அவர்களெல்லாம் சாரதா தேவியை அன்னையாக ஏற்றுக் கொண்டனர். சாதாரண கிராமத்தில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த பெண்ணாக இருந்த சாரதா தேவி, சீடர்களால் அன்னை சாரதா தேவியாக போற்றப்பட்டார். அவரும் ஒரு தாயைப் போல், சீடர்களிடம் அன்பு பாராட்டினார்.

தானே சமைத்து சீடர்களுக்கு உணவு பரிமாறிய சாரதா தேவி, குருநாதரை தேடி வரும் பக்தர்களையும் உபசரித்து மகிழ்ந்தார். சீடர்களை தன் குழந்தைகளாகவே நினைத்து, அவர்களுக்கு விசிறி விடுவார். சீடர்களுக்கு தீட்சை அளிக்கும்போது தூய்மையான பக்தியே சிறந்தது என்று உபதேசித்தார். பக்திக்குப் பின்னர்தான் ஆச்சார நியமங்கள் என்றும் கூறினார் அன்னை.  

அன்னை சாரதா தேவி, இப்படியே ஆன்மிகப் பணிகள் செய்து கொண்டிருந்த நிலையில் ராமகிருஷ்ண பரமஹம்சர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அப்போது குருநாதர் அருகிலேயே இருந்து, அவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்த அன்னை, சீடர்களையும் வழிநடத்தினார்.

1886-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்ததும், பொறுப்புகள் கூடியதால், சீடர்களை வழிநடத்துவதிலும், ஆன்மிகப் பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் சாரதா தேவி. நரேன் (சுவாமி விவேகானந்தர்) உள்ளிட்ட சீடர்கள் துறவறம் ஏற்றனர். துறவறம் ஏற்ற சுவாமி விவேகானந்தர், இந்தியா முழுவதும் யாத்திரை மேற்கொண்டார்.  

அன்னை சாரதா தேவி, ஒருசமயம் கயாவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்குள்ள மடங்களுக்குச் சென்று துறவிகளைச் சந்தித்தார். அப்போது துறவிகளுக்கு அங்கு இருந்த வசதிகளைக் கவனித்தார்.  ராமகிருஷ் ணரின் சீடர்கள் வசதிக்குறைவான சூழலையும் சமாளித்து வாழ்ந்து வருவதை நினைத்து வருந்தினார். இனியும் தன் குழந்தைகள் அலைந்து திரியக்கூடாது என்று நினைத்த அவர், அவர்களுக்கு உண்டான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று குருநாதரிடம் வேண்டிக் கொண்டார்.  

குருநாதருக்காக அனைத்தையும் துறந்த சீடர்கள், உணவுக்காக எங்கும் அலையக் கூடாது. அனைவரும் ஓரிடத்தில் இருந்து, குருநாதரின் லட்சியங்களை நிறைவேற்ற வேண்டும். குருநாதரின் உபதேச மொழிகள், அனைவருக்கும் சென்றடையும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் அன்னை சாரதா தேவி.  

குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை, தங்குவதற்கு இடம் அமைத்துத் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, அவற்றை செயல்படுத்த முனைந்தார் அன்னை சாரதா தேவி. அந்த இடத்துக்கு (மடத்துக்கு)  வந்து, உலக வாழ்க்கையில் துன்புற்ற மக்கள் அமைதியைத் தேடி ஆறுதல் பெற வேண்டும். குருநாதரின் உபதேச மொழிகளைக் கேட்டு மன அமைதி பெற வேண்டும். சில நிமிடங்களாவது அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். அவர்களின் முகம் மலர வேண்டும் என்று எண்ணம் கொண்டார். பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் விருப்பம் கொண்டார். பெண்களின் கல்விக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர், சகோதரி நிவேதிதா போன்றவர்களிடம் கூறினார் அன்னை.  

தனது சிகாகோ உரையை முடித்துவிட்டு, மேலும் சில ஆண்டுகள், அங்கே தங்கியிருந்து சொற்பொழிவுகள் ஆற்றி, குருநாதரின் உபதேசங்களை பரப்பிவிட்டு, 1897-ல் இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர், அன்னை சாரதா தேவிக்கு ராமகிருஷ்ணா இயக்கம் தொடங்குவதில் பெரும் உதவியாக இருந்தார். சீடர்களின் சீரிய முயற்சியால், 1898-ல், கங்கைக் கரையில் உள்ள பேலூரில் ராமகிருஷ்ண மடம் தொடங்கப்பட்டது.  

அன்னை சாரதா தேவி குறித்து சுவாமி விவேகானந்தர் பேசும்போது, “சக்தியின்றி உலகுக்கு விடிவு இல்லை. அன்னையின் அரவணைப்பில் குழந்தைகளுக்கு சக்தி பிறக்கும். பிறநாடுகளை விட இந்தியா பின்தங்கியிருப்பதற்கு காரணம், நாம் சக்தியை மதிக்கவில்லை. இந்த சக்தியை மீண்டும் மலரச் செய்யவே நம் அன்னை அவதரித்துள்ளார். இவர் ‘சங்க ஜனனி’. அன்னையின் ஆலோசனையின்பேரில் பல நற்செயல்கள் நடைபெறும்” என்று சொன்னார். இதன் மூலம் அன்னை சாரதா தேவியின் தாய்மை உணர்வு அறியப்படுகிறது.  

உபதேச மொழிகள்

சுவாமி விவேகானந்தர் மேலும் இரண்டு ஆண்டுகள் மேலைநாடுகளுக்கு பயணமானார். அன்னை சாரதா தேவி வழக்கம்போல் ராமகிருஷ்ண மடத்தை நிர்வகித்துக் கொண்டு சீடர்களுக்கு உபதேசம் செய்து வந்தார்.

 “ஒருவருக்கு மன அமைதி வேண்டும் என்றால், வேறு யாரிடமும் குறை காணக்கூடாது. அவரவர் குறைகளை அறிந்து கொள்ள வேண்டும். உலகம் அனைத்தும் நமக்குச் சொந்தம் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். யாரையும் அந்நியராக நினைத்துக் கொள்ளக் கூடாது. மனோ தைரியத்தை இழக்காது பிரார்த்தனை செய்தால், அனைத்தும் உரிய காலத்தில் நடைபெறும். இளமைப் பருவத்தில் பிரார்த்தனையுடன் சாதிக்க வேண்டும். தியானத்தில் வெற்றி பெற்றால், அவர்களுக்கு அனைத்தும் கிடைத்துவிடும். உலகத் துயர்களுக்குத் தீர்வு இறை சிந்தனையில் உள்ள சுகம்தான்.  

குருநாதருடைய கிருபையே சுகம் தரும். ஆச்சார்யர் இறைவனுக்கு சமமானவர். மகான்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும். அவர்களை ஒருபோதும் அவமதிப்பு செய்யக் கூடாது. குருவருளும் திருவருளும் இருந்தால் அனைவரும் எதையும் சாதிக்கலாம். அவசியம் ஏற்படும் சமயத்தில் இறைவன் தாமே பூவுலகில் அவதரித்து கடமையாற்றுவார். எந்நேரமும் தேவை மனோ தைரியமே” என்று தனது சீடர்களுக்கு உபதேசித்தார் அன்னை சாரதா தேவி.

சுவாமி விவேகானந்தரின் மறைவுக்குப் பிறகு (1902), சகோதரி நிவேதிதாவுடன் சேர்ந்து பெண் கல்வியில் அதிககவனம் செலுத்தினார் அன்னை சாரதா தேவி. 1911-ல், சகோதரிநிவேதிதாவின் மறைவுக்குப் பிறகும் பெண்களுக்காக அவர் தொடங்கிய பள்ளிகள்  தொடர்ந்து நடைபெற்றன.  

1919-ம் ஆண்டின் இறுதியில் அன்னை சாரதா தேவியின் உடல்நலம் குன்றியது. கடுமையான காய்ச்சலால் அவதிப்
பட்டார். ஒருநாள் அனைத்து சீடர்களையும் தன்னருகே அழைத்தவர், “அன்புச் செல்வங்களே! என் குழந்தைகள் அனைவருக்கும் எனது நல்லாசிகள் எப்போதும் உண்டு. யாரும் தனித்து இருப்பதாக உணர வேண்டாம். உலகம் முழுவதும் நம் சொந்தம்தான். அனைவரையும் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்” என்று கூறியபடி தனது வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்தார் (20-07-1920) அன்னை சாரதா தேவி.  

அன்னையின் உடல் கங்கைக் கரையில் தகனம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் தற்போது, ‘இறைவனை அடையத் தேவை உண்மையான அன்பே’ என்று உபதேசித்த அன்னை சாரதா தேவியின் நினைவாகக் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in