சமயம் வளர்த்த சான்றோர் 30: நம்மாழ்வார்

சமயம் வளர்த்த சான்றோர் 30: நம்மாழ்வார்

கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

வைணவ நெறியைப் பின்பற்றி, பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர் நம்மாழ்வார். நான்கு வேதங்களை தமிழில் பாடிய பெருமைக்குரியவர். திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி, திருவாய்மொழி ஆகிய நூல்களை இயற்றியவர். பல நற்குணங்களால் திருமாலுக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தவர் நம்மாழ்வார்.

9-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குருகூர் தலத்தில் (ஆழ்வார் திருநகரி) பொற்காரியார் என்ற பெருமாள் பக்தர் வசித்து வந்தார். அவரது குமாரர் காரியாருக்கு மலைநாட்டு திருப்பதியாகிய திருவெண்பரிசாரம் என்ற ஊரைச் சேர்ந்த  உடையநங்கை என்ற பெண்ணை மணமுடிக்கப்பட்டது.

வெகு காலமாக இத்தம்பதிக்கு குழந்தை வரம் கிட்டாததால்,  திருக்குறுங்குடி வைஷ்ணவ நம்பி பெருமாளை வணங்கி வந்தனர். அவர்களின் வேண்டுதலில் மகிழ்ந்த பரமன், தானே அவர்களுக்கு மகனாகப் பிறப்பதாக உரைத்தருளினார். பரமனின் வாக்குப்படி, உடையநங்கையும் கருத்தரித்து, பிரம்ம வருடம், வைகாசி மாதம், விசாக நட்சத்திரத்தில், திருமாலின் படைத்தலைவர் விஷ்வக்சேனர் அம்சமாக, ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்தார்.

பிறந்தது முதலே குழந்தை, பால் அருந்துதல், கண் திறத்தல், கை அசைத்தல், அழுதல் போன்ற இயற்கைச் செயல்கள் ஏதுமின்றி இருந்தது. இது இயற்கைக்கு மாறாக காணப்பட்டதால், குழந்தையை ‘மாறன்’ என்றே அழைத்தனர். எந்நேரமும் பெருமாள் சிந்தனையுடனேயே இருந்தார் மாறன். பொதுவாக, பிறந்த குழந்தைகள், ‘சட’ என்ற நாடியால் அழுகின்றனர். சட நாடியை வென்றதால், சடகோபர் என்று மாறன் அழைக்கப்பட்டார்.  

குழந்தை இப்படி இருக்கிறதே என்று நினைத்த பெற்றோர், திருக்குருகூர் கோயில் அருகே ஆதிசேஷனின் அம்சமாக பல காலம் முன்னர் தோன்றிய புளியமரத்தில் கட்டிய தொட்டிலில் குழந்தையை எழுந்தருளச் செய்தனர். தனது பதினாறு வயது வரை சடகோபர் புளியமரத்தடியிலேயே கண்மூடி மவுனியாக பகவத் தியானத்தில் ஈடுபட்டார். சடகோபரின் 11-வது வயதில், படைத் தலைவர் விஷ்வக்சேனரே வந்திருந்து அவருக்கு, அனைத்து கலைகளையும் பயிற்றுவித்தார். மேலும், வைணவ நியதிகளையும் மந்திர உபதேசங்களையும் சடகோபருக்கு செய்தருளினார். யோக நிலையில் இருந்தபோது 108 திருத்தலங்களின் மூர்த்திகளும் சடகோபருக்கு காட்சி கொடுத்தனர்.

மதுரகவியாழ்வார் என்பவர் பல தலங்களுக்கு யாத்திரை சென்று கொண்டிருந்தார். வட திசை யாத்திரையில் அயோத்தியில் இருக்கும்போது, தான் நல்ல குருநாதரை அடைய வேண்டும் என்று விருப்பம் கொண்டார். அப்போது தென்திசையில் இருந்து ஓர் ஒளி தோன்றியதைக் கண்டார். அந்த ஒளியை நோக்கி தென்திசையில் பயணம் மேற்கொண்டார். பல நாட்கள் நடந்து கொண்டிருந்தார். திருக்குருகூர் கோயில் அருகில் இருந்து அந்த ஒளி வருவதை உணர்ந்து அருகில் சென்றார் மதுரகவியாழ்வார். அந்த ஒளிதான் சடகோபர் என்பதை உணர்ந்த அவர், தான் தேடிய ஆச்சாரியர் இவராகத்தான் இருக்கும் என்று நினைத்தார்.  

ஆழ்ந்த தியானத்தில் இருந்த சடகோபரை எவ்வாறு எழுப்புவது என்று நினைத்த மதுரகவியாழ்வார், ஒரு சிறிய கல்லை எடுத்து சடகோபர் அமர்ந்திருந்த இடத்தருகே எறிந்தார். கண்விழித்துப் பார்த்த சடகோபர், தன் எதிரே மதுரகவியாழ்வார் நிற்பதை உணர்ந்தார்.  

தான் தேடிய ஆச்சாரியர் கண்விழித்துப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த மதுரகவியாழ்வார், சடகோபரைப் பார்த்து, “செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று வினவுகிறார். அதற்கு சடகோபர், “அத்தை தின்று அங்கே கிடக்கும்” என்று பதில் அளித்தார்.  

(அணுவுருவாகிய ஆன்மா (சிறியது) அறிவற்ற அசித்தாகிய உடலில் கிடந்தால் என்னவாகும் என்ற கேள்விக்கு அணுவுருவாகிய ஆன்மா, சரீரத்தைச் சார்ந்த இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் என்பதே அதன் அர்த்தம்.)

சடகோபரின் பதிலைக் கேட்டதும் அவர் காலில் விழுந்த மதுரகவியாழ்வார், தன்னை சீடராக ஏற்கும்படி வேண்டினார். சடகோபரும் மதுரகவியாழ்வாரை சீடராக ஏற்றுக் கொண்டு பல உபதேசங்களை வழங்கினார்.  

சாமவேத சாரமாகிய ‘திருவாய்மொழி’ என்னும் பிரபந்தத்தை இயற்றி மதுரகவியாழ்வாருக்கு அருளினார் சடகோபர். மேலும்,  ரிக், யஜுர், அதர்வண வேதங்களின் சாரமாக விளங்கும் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி ஆகியவற்றையும் உபதேசித்து அருளினார். சடகோபர் பாசுரங்கள் சொல்லச் சொல்ல, மதுரகவியாழ்வார் அவற்றை எழுத்து வடிவில் கொண்டு வரலானார்.

திருவாய்மொழி 1,102 பாசுரங்களும், திருவிருத்தம் 100 பாசுரங்களும், திருவாசிரியம் 7 பாசுரங்களும், பெரிய திருவந்தாதி 87 பாசுரங்களும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,296 பாசுரங்கள்.   நாலாயிர திவ்யபிரபந்தத்தில், சடகோபர் பாடிய திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி ஆகிய மூன்றும் மூன்றாம் ஆயிரத்துள்ளும், திருவாய்மொழி நான்காம் ஆயிரத்துள்ளும் சேர்க்கப்பட்டுள்ளன. சடகோபரின் திறமைகளைக் கண்ட அவரது பெற்றோர் மகிழ்ந்தனர்.  

ஒழுக்கத்தாலும், ஞானத்தாலும், பக்தியாலும் சிறந்து விளங்கிய சடகோபரை, அனைவரும் ‘இவர் நம்மவர்’ என்று போற்றியதால், நம்மாழ்வார் என்றே அழைக்கப் பட்டார். எந்நேரமும் பெருமாள் சிந்தனையிலேயே இருந்ததால், பெருமாள் மனம் உவந்து, நம்மாழ்வாருக்கு மகிழமாலை ஒன்றை பரிசாக அளிக்கிறார். அம்மாலையை அணிந்திருந்ததால் ‘வகுளாபரணர்’ என்றும் அழைக்கப்படுகிறார். திருமாலுக்கு மிகவும் விருப்பமானவராக இருந்ததால், பெருமாளின் பாதுகைக்கு, ஸ்ரீசடகோபன் (ஸ்ரீசடாரி) என்ற பெயர் வழங்கப்படுகிறது. ‘பரன்’ ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டிப் போட்டதால், ‘பராங்குசன்’ என்றும் தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது, ‘பராங்குசநாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்.

நம்மாழ்வாரின் புகழ் எங்கும் பரவியது. தன்னை நாடி வந்த பக்தர்களுக்கும் அனைத்து உபதேசங்களையும் வழங்கினார். ஞானத்தை போதித்து, நாரணனின் வைபவத்தை திவ்ய ஸ்லோகங்களால் சொன்னார். இவரது ஆன்மிக உபதேசங்களை கேட்பதற்கு பக்தர்கள் குவிந்தனர். 108 திவ்ய தேச எம்பெருமான்களும் திருப்புளி ஆழ்வார் (புளியமரம்) அடியில் அமர்ந்திருந்த நம்மாழ்வாருக்கு சேவை சாதித்து அவரிடமிருந்து திருவாய்மொழியைப் பெற்றுச் சென்றனர் என்று கூறப்படுகிறது.  

திருவாய்மொழி சிறப்பு

பக்தி இல்லாத ஞானத்தால் பயனேதும் இல்லை. அவ்வாறே ஞானம் இல்லாத பக்தியும் சிறப்பற்றது. பக்திக்கு ஞானம் கைகொடுத்து உதவும் ஒளி. உண்மை ஒளி பெற்ற ஞானம் இறைவனிடம் அன்பாக மலரும்போது பக்தியாக ஒளிர்கிறது. இத்தகைய பக்திதான் திருவாய்மொழியில் விளக்கப்படுகிறது.

பக்திக்கும் மேலான பிரபக்தி நெறியைக் (தீர்க்க சரணாகதி) கடைபிடித்த நம்மாழ்வார், அடியார் பக்தியையும் கடைபிடிக்க வேண்டும் என்று திருவாய்மொழியில் கூறுகிறார். திருவாய்மொழி ஐம்பொருளை விளக்குகிறது. இறைவன் நிலை, ஆன்மாவின் நிலை, இறைவனை ஆன்மா அடையும் நெறி, ஆன்மா இறைவனை அடையும்போது உண்டாகும் தடைகள், ஆன்மாவுக்கு முடிவான இலக்கு ஆகிய ஐம்பொருள்கள் அனைத்துமே ஆன்மாவால் அறியப்பட்டு அடையத் தகுந்த உறுதிப் பொருட்கள் ஆகும்.  

நம்மாழ்வார் பரமனை ஐந்து நிலைகளில் போற்றி வணங்குகிறார். பரதத்துவம் (பரமபதத்தில் இருக்கும் இறைவன்), வியூகம் (பாற்கடலில் எழுந்தருளி உலகைக் காக்கும் திருக்காட்சி), விபவம் (மனிதராக அவதாரம் எடுப்பது), அர்ச்சை (கோயில்களில் உள்ள விக்கிரகம்), அந்தர்யாமி (அனைத்து பொருட்கள், அனைத்து உயிர்களிலும் உள்ளுக்குள் இருந்து அவற்றை செயலாற்றச் செய்வது) ஆகிய ஐந்து நிலைகளை தனது பாசுரங்களில் குறிப்பிட்டுள்ளார். திருவாய்மொழியில் அவதார சிறப்புகளும் அர்ச்சனை வடிவங்களை வழிபடுவதும் கூறப்பட்டுள்ளன.  

தல யாத்திரை

நம்மாழ்வாரும் பல திவ்ய தேச யாத்திரைகள் மேற்கொண்டார். திருவரங்கம், திருப்பேர்நகர், திருக்குடந்தை, திருவிண்ணகர், திருக்கண்ணபுரம், திருமாலிருஞ்சோலை, திருமோகூர், வரமங்கை, பெருங்குளம், திருக்கோவிலூர், திருவனந்தபுரம், திருநாவாய், திருவண்வண்டூர், திருவேங்கடம், திரு அயோத்தி, துவாரகை, வடமதுரை, திருப்பாற்கடல், பரமபதம் உள்ளிட்ட தலங்களை மங்களாசாசனம். செய்துள்ளார். இவற்றில் 16 கோயில்களை தனியாகச் சென்றும், 19 கோயில்களை மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து மங்களாசாசனம் செய்துள்ளார்.  

மதுரகவியாழ்வாரை சீடராக ஏற்ற பின் இப்படியே 16 ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் நம்மாழ்வார், பரமபதத்தை மனதில் கொண்டார். விரைவில் பரமபதம் எழுந்தருள வேண்டும் என்று விருப்பம் கொண்டார். அதன்படி பரமனின் திவ்ய ஒளியோடு, நம்மாழ்வார் ஜோதி சொரூபமாக கலந்தார்.

ஆச்சாரியர் தனது சீடர் மதுரகவியாழ்வாருக்கு அருள் செய்ய வேண்டி, தனது விக்கிரகத்தை அவர் கைகளில் கிடைக்கச் செய்தார். மதுரகவியாழ்வார், திருக்குறுங்குடி வைஷ்ணவ நம்பி கோயிலில் அவருக்கு தனி சந்நிதி அமைத்து, நித்திய ஆராதனைகளை செய்து மகிழ்ந்தார். தனது ஆச்சாரியர் நம்மாழ்வாரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு ‘கண்ணிநுண் சிறுதாம்பு’ என்ற நூலை மதுரகவியாழ்வார் இயற்றினார்.  

கம்பர் தனது ராமாயண காவியத்தை கோயில் அரங்கத்தில் அரங்கேற்றும் முன்பாக,  அரங்கன் கம்பரின் கனவில் தோன்றி, “சடகோபனை பாடினால்தான் உன் ராமாயணத்தை ஏற்போம்” என்று கூறுகிறார். அதையேற்று 100 கட்டளை கலித்துறைப் பாடல்களைக் கொண்டு, கம்பர் ‘சடகோபர் அந்தாதி’ என்ற நூலை இயற்றினார். தனது கடவுள் வாழ்த்தில் இறைவனைத் தலைவன் என்று போற்றிப் பாடியபின், சரஸ்வதிதேவி, அனுமன் ஆகிய தெய்வங்களோடு நம்மாழ்வாரையும் வணங்குகிறார். அது முதல் வைணவர்கள் நூல் இயற்றத் தொடங்கும்போது நம்மாழ்வார் துதி கூறும் வழக்கம் உண்டாயிற்று.  

நம்மாழ்வார், காரிமாறன், குருகைப் பிரான், குருகூர் நம்பி, பவரோக பண்டிதன், முனி வேந்து, நாவலன் பெருமாள், ஞான தேசிகன், உதய பாஸ்கரர், ஞானத் தமிழுக்கு அரசு, மெய் ஞானக்கவி, பெருநல் துறைவன், திருவாய்மொழி பெருமாள், குமரி துறைவன், தொண்டர் பிரான், ஸ்ரீவைஷ்ணவ குலபதி, குழந்தை முனி, மணிவல்லி, பெரியன், பாவலர் தம்பிரான் என்பன உள்ளிட்ட 35 பெயர்களால் அழைக்கப்படுகிறார் நம்மாழ்வார்.  

ஆழ்வார்களில் தலைமை பெற்றுத் திகழ்ந்த நம்மாழ்வார், மற்ற ஆழ்வார்களை தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார் என்று கூறப்படுவதுண்டு. பூதத்தாழ்வாரை தலையாகவும், பொய்கையாழ்வாரையும், பேயாழ்வாரையும் கண்களாகவும், பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும், குலசேகர ஆழ்வாரையும் திருப்பாணாழ்வாரையும் கைகளாகவும், தொண்டரடிப்பொடியாழ்வாரை திருமார்பாகவும், திருமங்கையாழ்வாரை நாபியாகவும், மதுரகவியாழ்வாரை பாதமாகவும் கொண்டிருந்தார்.  

பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் மட்டுமே ஆழ்வாராகவும், ஆச்சாரியராகவும் வணங்கப்படுகிறார்.  மனித  சமுதாயத்துடன் இறையுணர்வைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக, மக்களுக்காக பிரபந்தங்களைப் பாடிய நம்மாழ்வார், பரமனின் பாதுகையாக கருதப்படுகிறார். இதன் காரணமாகவே பரமனின் பாதுகை, ஸ்ரீசடகோபன் (ஸ்ரீசடாரி) என்று அழைக்கப்படுகிறது.  
 நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in