ரஜினி சரிதம் 24: ஆறிலிருந்து எழுபது வரை- ரஜினியை அழவைத்த பஞ்சு அருணாசலம்!

ரஜினி சரிதம் 24: ஆறிலிருந்து எழுபது வரை- ரஜினியை அழவைத்த பஞ்சு அருணாசலம்!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ‘டி-40’ என்ற பிரம்மாண்ட திரைப்படவிழா ஒன்றைக் கடந்த 2010-ல், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்தினார்கள். அந்த விழாவில் முத்தாய்ப்பாக, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தன்னுடைய மாணவர் ரஜினியை அருகில் அமர்த்திக்கொண்டு பேட்டி கண்டார். அப்போது கேபி ரஜினியைப் பார்த்துக் கேட்ட ஒரு கேள்வி, “உனக்குப் பிடித்த சூப்பர் ஸ்டார் யார்?” அதற்கு ரஜினி சொன்ன பதில், “சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ”.

இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல... ஊடகங்களுக்கு அவர் அபூர்வமாகக் கொடுக்கும் பேட்டிகளில் அரசியல் ரோல் மாடல் பற்றி கேள்வி கேட்கப்பட்டால், ‘லீ குவான் யூ’வை ரஜினி புகழத் தவறியதே இல்லை. ஒருமுறை, “தலைவர் என்று இருந்தால் அவரைப் போல் இருக்க வேண்டும். அவரைப்பற்றி நிறைய நிறையப் புத்தகங்களைப் படித்துவிட்டேன். ஆனால், இன்னும் பிரமிப்பு தீரவே இல்லை!” என்று புகழ்ந்தார் ரஜினி.

1959-ம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 31 ஆண்டுகள் பிரதமராக விளங்கிய ஒரே தலைவர் லீ குவான் யூ. சிங்கப்பூரை உலகின் வர்த்தக மையங்களில் ஒன்றாகவும், சிறந்த சுற்றுலாத்தலமாகவும் கட்டியெழுப்பிய லீ குவான் யூ மீது ரஜினிக்குப் பற்றுதல் உருவாகக் காரணமாக இருந்த திரைப்படம் ‘ப்ரியா’. அந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக முதன்முதலாக 1978-ல் ரஜினி சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்போது அந்த குட்டிதேசத்தின் அடிப்படைக் கட்டுமானங்களையும் வளர்ச்சியையும் பார்த்து வியந்துபோய், வாய்ப்பு அமையும்போதெல்லாம் சிங்கப்பூர் சென்றுவர விரும்பினார்.

‘ப்ரியா’ படத்தில், ஒப்பந்தம் என்கிற பெயரில் தன்னைக் கட்டுப்படுத்தும் தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இருந்து தன்னை விடுவிக்கும்படி, வழக்கறிஞரான ரஜினியின் உதவியை நாடுவார் பிரபல கதாநாயகியான ஸ்ரீதேவி. அவரை ரஜினி எப்படிக் காப்பாற்றினார் என்பதுடன், இண்டோ - சிங்கப்பூர் பெண் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு, சென்னை திரும்புவதுதான் அந்தப் படத்தின் கதை. எழுத்தாளர் சுஜாதாவின் கதையில் ரஜினிக்காக அழகான காதல் சரடைச் சேர்த்து திரைக்கதை அமைக்கப்பட்டது.

ரஜினியிடம் உருவான தாக்கம்!

நாடகக் கதாபாத்திரங்கள் மீது விரும்பம் கொண்டிருந்த ரஜினிக்கு, ஜூலியஸ் சீசர் கதாபாத்திரத்தில் ஒரு காட்சியில் நடிக்கும் வாய்ப்பையும் பாடல் காட்சியில் ராஜா உடையில் தோன்றும் வாய்ப்பையும் ‘ப்ரியா’ படத்தில் ஏற்படுத்தித் தந்திருந்தார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். தான் காதலிக்கும் சிங்கப்பூர் பெண்ணுக்கு ரஜினி தமிழ் சொல்லிக்கொடுப்பது போல் அமைந்த ‘என்னுயிர் நீதானே... உன்னுயிர் நான்தானே...’, ஸ்ரீதேவி, நீச்சல் உடையில் தோன்றிய ‘டார்லிங். .. டார்லிங்... டார்லிங்...’, ரஜினியும் தேவியும் தோன்றிய, ‘ஏ… பாடல் ஒன்று… ராகம் ஒன்று’ என இளையராஜா இன்னிசைத் திருவிழா நடத்திய ‘ப்ரியா’ படத்தின் படப்பிடிப்பு, முதலில் சிங்கப்பூரின் முக்கிய பூங்காக்கள், ஸ்கைகிராப்பர் கட்டிடங்கள் நிறைந்த வீதிகள், சீன உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் என பல இடங்களில் நடந்தது.

அந்த சமயத்தில், சிங்கப்பூரின் சுதந்திரதின விழா நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. பிரம்மாண்ட அணிவகுப்புகள், ட்ராகன் நடனம் எனப் புகழ்பெற்ற அந்த நிகழ்சியை, கதையின் நாயகியான ஸ்ரீதேவி பார்ப்பது போல் படம்பிடித்தார் இயக்குநர். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்நாட்டின் பிரதமர் லீ குவான் யூ நிகழ்த்திய சுதந்திர தின உரையைக் கூர்ந்து கவனித்தார் ரஜினி.

“தரமான கல்வியின் மூலம் ஒவ்வொரு துறைக்குமான வல்லுநர்களை உருவாக்க முடியும். ஆனால், பொது வாழ்க்கைக்கு வந்து, மக்களுக்கு உளப்பூர்வமாக சேவை செய்ய விரும்புகிறவர்களையும், அதற்காக அரசியலில் ஈடுபட விருப்பம் உள்ளவர்களையும் நான் எப்படி அடையாளம் காண முடியும்? தங்கள் வாழ்க்கையை பொதுவாழ்க்கைக்கு அர்பணிக்கக் கூடிய இளைஞர்களை மக்கள் சேவை செய்ய அரசியலுக்கு வருமாறு அழைக்கிறேன்” என்று லீ குவான் யூ அழைப்பு விடுத்தார். அந்தப் பேச்சு ரஜினியிடமும் தாக்கத்தை உருவாக்கியது.

எங்கும் என்றும் தொழிலாளி!

சிங்கப்பூரில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு, ‘ப்ரியா’ படக்குழு அங்கிருந்து அப்படியே ஹாங்காங் சென்றது. அங்குள்ள 
பல மலைகளை உள்ளடக்கிய ஓஷன் பார்க் என்கிற மிக விஸ்தாரமான பூங்கா, உலகின் எழிலார்ந்த பூங்காக்களின் பட்டியலில் இடம்பிடித்துவிட்ட ஒன்று. அந்தப் பூங்காவின் அழகைப் பார்த்து வியந்த ரஜினி, “இங்கு சில காட்சிகளை எடுக்க முடியுமா சார்?” என்று இயக்குநரிடம் தனது விருப்பத்தை வெளியிட்டார். கதாநாயகன் கேட்டுவிட்டாரே என்று ஹாங்காங்கில் உயர் பொறுப்பில் இருந்த தமிழர்கள் சிலரைத் தேடிப் பிடித்து, அங்கே படப்பிடிப்பை நடத்த அனுமதி வாங்கிவிட்டார் எஸ்பிஎம்.

ஓஷன் பார்க்கில் ஒவ்வொரு மலையும் ஒருவிதத்தில் அழகாக இருந்தது. அதனால் ஒவ்வொரு மலையிலும் ஒரு காட்சியைப் படமாக்குவது என்று முடிவு செய்தார் இயக்குநர். படக்குழுவிலோ குறைவான தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். மலையின் உச்சிக்கு படப்பிடிப்புக்கான பொருட்களைத் தூக்கிச்செல்ல கூலி ஆட்களும் கிடைக்கவில்லை. படக்குழுவைச் சேர்ந்தவர்களே ஆளுக்கு ஒரு பொருள் என்று பகிர்ந்து தூக்கிக்கொண்டு மலையேறினார்கள். அப்போது, ரஜினியும் இரண்டு பேட்டரிகளைத் தூக்கித் தன்னுடைய தோள்பட்டைகளில் வைத்துக்கொண்டு மலையேறினார்.

இதைப் பார்த்து இயக்குநர் எஸ்பிஎம் ஆச்சரியப்படவில்லை. அது ரஜினியின் இயல்பு என்று தெரிந்தாலும் படத்தின் கதாநாயகன் இப்படி சுமை தூக்குவது அவரைச் சங்கடப்படுத்த, “எதுக்கு ரஜினி… நீங்கப் போய்... அதுவும் ரெண்டு தோள்லேயும் தூக்கிட்டு..?” என்று கவலையுடன் கேட்டார். அதற்கு ரஜினி சொன்ன பதில்தான் ஹைலைட்!

“சார்... லெஃப்ட்ல போட்டா ரைட்ல இழுக்குது... ரைட்ல போட்டா லெஃப்ட்ல இழுக்குது... அதான் ரெண்டு பக்கமும் தூக்கி வெச்சுக்கிட்டேன். இப்போ பக்கா பேலன்ஸ்” என்று தூக்குவதில் இருந்த பிரச்சினையை எப்படிச் சமாளித்தேன் என்று சொன்னாரே தவிர, தான் ஒரு கதாநாயகன் என்று எந்தத் தோரணையும் காட்டவில்லை ரஜினி. படக்குழுவினர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது பற்றிகூட அவர் சிறிதும் சங்கோஜம் கொள்ளவில்லை. இதுபோன்ற பல சம்பவங்கள் வழியாக ‘எப்போதும் தானொரு தொழிலாளி’ என்பதைச் சொல்லாமல் சொன்னார் ரஜினி.

கதையைக் கேட்டு அழுத ரஜினி!

‘ப்ரியா’ படத்தின் வெற்றி, ரஜினி - எஸ்.பி.முத்துராமன் இடையிலான அண்ணன் - தம்பி போன்ற பிணைப்பை மேலும் பலப்படுத்தியது. எஸ்பிஎம் எதைச் செய்தாலும் அதை தன்னுடைய நன்மைக்காக மட்டுமே செய்வார் என்று ரஜினி அவரை முழுமையாக இன்றுவரை நம்புகிறார். ரஜினியின் 45 ஆண்டுகால சினிமா பயணத்தில் 42 ஆண்டுகள் அவருடன் பயணித்து, அந்த நம்பிக்கையை இன்றளவும் காப்பாற்றி வருகிறார் வெற்றிப்படங்களின் இயக்குநரான எஸ்பிஎம்.

1977-ம் ஆண்டு இருவரும்‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் இணைந்தபோது, ரஜினியின் திரை வாழ்க்கைக்கு வயது 2. அப்போது தொடங்கிய நெருக்கம், ரஜினியின் வளர்ச்சி, அவரது காதல், திருமணம், குழந்தைகள் பிறந்தது, அவர்களுக்கு திருமணம், பேரப் பிள்ளைகள், ரசிகர் மன்ற நிகழ்ச்சிகள் என இன்றளவிலும் தொடர்கிறது.

இதையெல்லாம்விட முக்கியமாக, ரஜினியை வெறும் கமர்ஷியல் கதாநாயகன் என்கிற வட்டத்துக்குள் மட்டும் சுருக்கிவிடாமல், அவரை வைத்து இயக்கிய 25 படங்களிலும் 25 கதாபாத்திரங்களாக அவற்றைப் படைத்துக்காட்டி ரஜினியின் திரைப் பயணத்தைப் பலப்படுத்தினார் எஸ்பிஎம். அதில் ‘ப்ரியா’ படத்தில், வழங்கறிஞர் கணேஷாக ரஜினிக்கு துப்பறியும் தன்மையுடன் கூடிய புத்திசாலித்தனம், நாடக நடிகர், ஆக்‌ஷன் நாயகன், காதல் நாயகன், நடனமாடவும் தெரிந்தவர் என பன்முகத் திறமைகள் கொண்ட கதாநாயகன் வேடத்தைக் கொடுத்திருந்தது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஏற்கெனவே ரஜினிக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டிருந்தாலும், படத்தின் பெயரால் ரஜினிக்கு ரசிகர்கள் மன்றங்கள் தொடங்கப்படும் வழக்கம் ‘ப்ரியா’ படத்திலிருந்துதான் தொடங்கியது.

‘ப்ரியா’ படத்துக்குப் பிறகு ரஜினிக்கு சண்டை, நகைச்சுவைக் காட்சிகள் இல்லாமல், அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டும் ஒரு படத்தை இயக்கவேண்டும் என்று முடிவு செய்தார் எஸ்பிஎம். அப்போது பஞ்சு அருணாசலம் ஒரு கதையுடன் வந்தார். அந்தக் கதையைக் கேட்ட எஸ்பி.எம், “இந்தக் கதை ரஜினிக்கு சரிவருமா என்று தெரியவில்லை. அவருடைய ரசிகர்கள் இப்படியெல்லாம் அவரை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான். எதற்கும் ரஜினியிடம் கதையைச் சொல்லி அவருடைய கருத்தையும் தெரிந்துகொள்வோம்” என்று அவரை அழைத்துச் சென்றார். ரஜினியைச் சந்தித்து இருவரும் அந்தக் கதையைச் சொன்னார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ரஜினியின் கண்களிலிருந்து தாரை தாரையாக தண்ணீர் கொட்டியது.

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in