இனி எல்லாமே ஏ.ஐ - 27: அகழாய்விலும் துணை நிற்கும் ஏ.ஐ!

இனி எல்லாமே ஏ.ஐ - 27: அகழாய்விலும் துணை நிற்கும் ஏ.ஐ!

அகழாய்வு என்பது மனித குலத்தின் கடந்த காலத்தை அறிவது என்றால், அதற்கான புதிய ஜன்னல்களை ஏ.ஐ திறந்து வைத்துக்கொண்டிருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.

ஆம், தொல்லியல் எனக் குறிப்பிடப்படும் அகழாய்வுத் துறையிலும், ஏ.ஐ நுட்பத்தின் நீள் கரங்கள் ஊடுருவத் தொடங்கிவிட்டன. அகழாய்வுக்குத் துணைபுரிய கிடைத்திருக்கும் புதிய கருவியாகவே தொல்லியல் துறையினர் ஏ.ஐ நுட்பத்தைப் பார்க்கின்றனர்.

அகழாய்வுக்கான புதிய இடங்களைக் கண்டறிவதில் தொடங்கி, ஏற்கெனவே கண்டறியப்பட்ட பொருட்களை வகைப்படுத்துவது, வரலாற்றுச் சிதிலங்களை முப்பரிமாண மாதிரிகளாக மீட்டெடுப்பது எனப் பலவிதங்களில் ஏ.ஐ தொல்லியல் துறையில் பயன்படத் தொடங்கியிருக்கிறது. இதன் முக்கிய அங்கமான இயந்திரக் கற்றலின் இன்னொரு வடிவமான ஆழ் கற்றலும், லிடார் (LiDAR) எனும் ஒலி உணர்வு நுட்பமும், நியூரால் நெட்வொர்க்கும், செயற்கைக்கோள் புகைப்பட அலசலும் இப்போது அகழாய்வில் முக்கியப் பங்காற்றுகின்றன.

கைகொடுக்கும் நுட்பம்

உடனே, அகழாய்வில் இனி மனிதர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்றோ, ஏ.ஐ அந்த வேலையை முழுமையாகப் பார்த்துக்கொள்ளும் என்றோ நினைத்துவிட வேண்டாம். அகழாய்வில் பல மாயங்களை நிகழ்த்திக்காட்டக்கூடியதாக ஏ.ஐ அமைந்தாலும், அது இன்னமும் கருவியாகத்தான் இருக்கிறதே தவிர அதனால் சுயமாக எதையும் செய்துவிட முடியாது.
உண்மையில், அகழாய்வு தொடர்பாக நடைமுறையில் தொல்லியல் வல்லுநர்கள் எதிர்கொண்டுவரும் போதாமைகளுக்குத் தீர்வாகத்தான் ஏ.ஐ நுட்பம் கைகொடுக்கிறது. உதாரணத்துக்கு, அகழாய்வுக்கான பொருத்தமான புதிய இடங்களைக் கண்டறிவதையே எடுத்துக்கொள்வோம். வரலாற்றுச் சான்றுகளின்படி, ஆய்வுக்கான இடத்தைத் தேர்வுசெய்வது எளிதானது. ஆனால், அந்தப் பகுதியில் குறிப்பிட்ட எந்த இடத்தில் அகழாய்வு செய்வது என்பதை எப்படி தீர்மானிப்பது? ஏக்கர் கணக்கிலான நிலப்பரப்பைச் சென்று பார்த்து தேர்வு செய்வது என்பது, அதிகக் காலம் தேவைப்படுவது மட்டும் அல்ல, செலவு மிக்கதும்கூட. மாதக்கணக்கில் ஜீப்பில் அலைந்து திரிந்து தரவுகள் சேகரித்து சரித்திரத்தின் பாதைக்குள் அழைத்துச்செல்லக்கூடிய இடத்தைக் கண்டறிய வேண்டும்.

உதவிக்கு வந்த மாணவர்

சுவிட்சர்லாந்து நாட்டின் அகழாய்வாளரான கினோ கஸ்பரி (Dr. Gino Caspari) இந்தச் சிக்கலை நன்கறிந்தவர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘சைத்தியர்கள்’ (Scythians) தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக இந்த இனத்தின் அரச குடும்பத்தினரின் கல்லறைகளை அவர் தேடிக்கொண்டிருந்தார். கல்லறைகளில் பெரும்பாலானவை அவற்றில் புதைக்கப்பட்டிருந்த தங்கம், வைரம் போன்றவற்றுக்காகச் சூரையாடப்பட்டாலும், இன்னும் பல கல்லறைகள் மிஞ்சியிருக்கின்றன.

ஆனால், ஐரோப்பாவின் மேற்குப் பகுதியில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பில் விரிந்து கிடக்கும் புல்வெளியில் சிதறிக்கிடக்கும் இந்த கல்லறைகளைத் தேடிக் கண்டுபிடிப்பது எளிதல்ல. எனவே, வேறுவழியில்லாமல், கூகுள் வரைபடங்களை வைத்துக்கொண்டு அவற்றின் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தார் கஸ்பரி.

இந்தத் தேடலின் பாதையில்தான் அவர், பாப்லே கிரெஸ்போ எனும் நியூயார்க் மாணவரைச் சந்தித்தார். கிரெஸ்போ, பொருளாதாரம் பயில்பவர் என்றாலும், தனது துறை தொடர்பான ஆய்வுக்காக ஏ.ஐ சார்ந்த அல்கோரிதமை உருவாக்கியவர். அந்த அனுபவத்தில், கஸ்பரியின் ஆய்வுக்கும் ஏ.ஐ அல்கோரிதம் உதவும் என்று கூறினார். இதன் பயனாக இருவரும் சேர்ந்து அகழாய்வுக்கான அல்கோரிதம் ஒன்றை உருவாக்கினர்.

வலிமையான வலைப்பின்னல்

‘கன்வல்யூஷனல் நியூரால் நெட்வொர்க்’ (சி.என்.என்) எனப்படும் ஏ.ஐ நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் இந்த அல்கோரிதம், செயற்கைக்கோள் படங்களை அலசி ஆராய்ந்து அகழாய்வுக்குப் பொருத்தமான இடங்களைக் கண்டறியும் திறன் பெற்றுள்ளது. மனித மூளையின் செயல்பாட்டைப் பிரதியெடுக்கும் வகையிலான கணினி வலைப்பின்னல்களை நியூரால் நெட்வொர்க் என்கின்றனர். இவற்றில் பல அடுக்குகள் கொண்ட தகவல்களை அலசி ஆராயும் நுட்பமாக சி.என்.என் அமைகிறது.

கணினிப் பார்வை தொடர்பான விஷயங்களில் பயன்படுத்தப்படும் சி.என்.என் சார்ந்த அல்கோரிதம், அடிப்படையில் படங்களில் உள்ள தகவல்களைக் கட்டங்களாகப் பிரித்துப்பார்த்து புரிந்துகொள்கிறது. ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒரு வண்ணத்தைக் கொடுத்து தரவுகளை அலசும்போது, அவற்றின் நடுவே தெரியும் வார்ப்புகளைக் கொண்டு, அகழாய்வுக்கான இடங்களைக் கண்டறிகிறது. இதன் மூலம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகழாய்வு இடங்களைக் கண்டறிந்துள்ளனர்.

மனிதர்கள் மேற்கொண்டிருந்தால் ஆண்டுக் கணக்கில் தேவைப்பட்டிருக்கக்கூடிய பணியை ஏ.ஐ மிக விரைவாக முடித்துத் தந்துவிடுவது அகழாய்வு வல்லுநர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இதுபோலவே, ஆப்பிரிக்காவில் மடாகாஸ்கர் வனப்பகுதியிலும், ஆய்வுக்கு உரிய இடத்தைக் கண்டறிய ஏ.ஐ கைகொடுத்துள்ளது.

‘ஆர்கெய்டு’ நிகழ்த்தும் அற்புதம்

ஒலி அலைகள் மூலம் தொலைவைக் கண்டறியும் ‘லிடார்’ நுட்பத்தைக் கொண்டு நெருக்கமான மரக்கிளைகள் கொண்ட வனப்பகுதியில் ஒலிகளைப் புகுத்தி, அவை திரும்பிவரும் அமைப்பைக் கொண்டு நிலப்பகுதியின் தன்மையைக் கணித்து ஆய்வுக்கு உரிய இடங்களை எளிதாகக் கண்டறிகின்றனர். இது போலவே, ஏற்கெனவே கண்டறியப்பட்ட தரவுகளை அலசி ஆய்வு செய்வதற்கும் ஏ.ஐ நுட்பம் உதவுகிறது. உதாரணமாக, மத்திய தரைப் பகுதியில் ஏராளமான களிமண் பொருட்கள் கிடைத்திருக்கின்றன. ரோமானியப் பேரரசு காலத்தைச் சேர்ந்த இந்தக் களிமண் பொருட்கள், சரித்திர காலம் தொடர்பான முக்கிய தகவல்களைக் கொண்டுள்ளன. ஆனால், இவற்றைத் தனித்தனியே ஆய்வு செய்து வகைப்படுத்துவது சிக்கலானது.

அகழாய்வில் கிடைத்த களிமண் பொருட்களை ஸ்கேன் செய்து, ஏற்கனவே உள்ள மண்பாண்டக் கலையுடன் ஒப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு அல்கோரிதமை இஸ்ரேல் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். ‘ஆர்கெய்டு’ (ArchAIDE) எனும் இந்த நுட்பம் மொபைல் போன் மூலம் எடுக்கும் படத்தைக் கொண்டு களிமண் பொருளின் தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது.

நிலப்பரப்பில் மட்டும் அல்ல, ஆழ்கடலிலும் ஒலிஅலைகள் உள்ளிட்ட நுட்பம் கொண்டு ஆய்வு செய்து படங்களைச் சேகரித்து பின் அவற்றை ஏ.ஐ கொண்டு அலசி ஆராய்ந்து தகவல்களைப் பெறுவதும் சாத்தியமாகியுள்ளது. அதுமட்டுமல்ல, இன்னும் புரியாத புதி
ராக இருக்கும் பல பழங்கால மொழி வாசகங்களைப் புரிந்துகொள்வதிலும் இயந்திரக் கற்றல் கைகொடுக்கிறது.

முப்பரிமாண மீட்பு

ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டுப் போரின்போது, அங்குள்ள சரித்திர நினைவுச் சின்னங்களும் தரைமட்டமாக்கப்பட்டன. இந்தச் சரித்திர இழப்பை ஈடு செய்யவே முடியாது என்றாலும், இங்கும் ஏ.ஐ உதவிக்கு வருகிறது. சரித்திர நினைவுச் சின்னம் தொடர்பான பழைய படங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் எண்ணற்ற சித்திரங்களை ஒன்றிணைத்து, சரித்திர நினைவுச் சின்னங்களை முப்பரிமாண டிஜிட்டல் வடிவங்களாக மீட்டெடுப்பது சாத்தியமாகி இருக்கிறது. பிரான்ஸின் ஐகோனிம் (Iconemn) நிறுவனம் இந்தச் சேவையை வழங்கிவருகிறது.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in