சிறகை விரி உலகை அறி 3: அணுகுண்டும் அமைதியும்

சிறகை விரி உலகை அறி 3: அணுகுண்டும் அமைதியும்

வெளிச்சத்தில் விரியும் விழிகள் இரவில் உறக்கத்தில் ஓய்வுகொள்வது அவசியம். ஊரை அளந்த கால்கள் இருளில் ஓய்ந்திருப்பது முக்கியம். பார்க்க வேண்டிய இடங்களைத் தேர்வு செய்வதைவிட பல மடங்கு சவாலானது ஓய்வெடுக்கும் இடத்தைக் கண்டறிவது. தங்கும் விடுதிக்கான வரையறை அவரவர் தேவையையும் பொருளாதாரத்தையும் பொறுத்தது.

தொடர்வண்டி நிலையத்துக்கு அருகிலும், கட்டணம் குறைவாகவும் இருக்க வேண்டுமென்ற வரையறையுடனே எனக்கான தங்கும் விடுதியை இணையத்தில் தேடினேன். கிடைத்தபின் இந்தியாவில் இருந்தபோதே பணம் செலுத்தியிருந்தேன்.

அதிரவைத்த அறை

ஒசாகாவில் விடுதிக்குள் நான் நுழைந்தபோதே ஏறக்குறைய இரவு 11 மணி ஆகிவிட்டது. தாமதமாக வருவேன் என ஏற்கெனவே மின்னஞ்சல் செய்திருந்ததால், வரவேற்பறையில் வரவேற்பாளர் காத்திருந்தார்.

நல்ல குளிர். கையுறையைக் கழற்றினால் விறுவிறுவென நரம்புகளைக் குளிர் சுண்டி இழுக்கிறது. முன்பதிவுத் தகவல்களைப் பரிசோதித்த வரவேற்பாளர் என் கடவுச்சீட்டை நகலெடுத்தார். நான்காவது மாடியில் உள்ள அறையின் சாவியைக் கொடுத்தார்.

அறைக் கதவைத் திறந்தபோது அதிர்ச்சியால் நிலைகுலைந்தேன். அறையென்று சொல்வதைவிட கல்லறை என்பதே சரியானது. கட்டில் இல்லை. தரையில் ஒரு மெத்தை விரிக்கப்பட்டிருந்தது. அவ்வளவுதான் இடம். நின்றாலும் நடந்தாலும் அந்த மெத்தையின் மேல்தான். நிமிர்ந்து பார்த்தேன், அந்நேரம் வரையும் ஜன்னல் கதவுகள் திறந்தே இருந்தன. பனி உதிரும் இரவில், பனிச்சாரல் அறைக்குள் சஞ்சரிக்கிறது. ஜன்னல் கதவுகள் உடைந்திருந்ததால், அடைக்கவும் இயலவில்லை.

ஷுவைக் கழற்றினேன். மெத்தையின் ஈரம் கால் சதையைச் சுண்டியது. போர்வையை எடுத்தேன். அதுமட்டும் வெது
வெதுப்பாகவா இருக்கும்? ஒன்றும் புரியாமல் மாற்று அறை கேட்க வரவேற்பறை சென்றேன். அங்கே யாருமில்லை. விதியை நொந்தபடி அறைக்குத் திரும்பினேன்.

உயிரைக் காப்பாற்றிய நேர்மறை எண்ணம்

மறுபடியும் ஷு அணிந்து, ஆடையைக் கழற்றாமலேயே, குளிராடையுடன் (Sweater) கூடுதலாகக் கைலியையும் துண்டையும் இழுத்துப் போர்த்தி, காதுக்குள் காற்றுப் போவதைக் குறைக்க தலையணி கேட்பொறியை (Headphone) மாட்டி, கால்களுக்கிடையில் கைகளைக் கோத்து ஈர மெத்தையில் குன்னிப் படுத்தேன். ஒன்றும் பயனில்லை. வெடவெடவென உடம்பு நடுங்கிக்கொண்டே இருந்தது. எப்போது தூக்கம் தழுவுகிறது, எப்போது நழுவுகிறது என்றே தெரியவில்லை. இரவு முழுவதும் வெட்டி வெட்டி தூக்கிப்போட்டது. ஏற்கெனவே பத்து வயதுவரை எனக்கு ‘இசிவு’ இருந்ததால், இரவு என்ன ஆகுமோ என்கிற அச்சம் சூழ்ந்தது. வயதானவரோ அல்லது இதயநோய் உள்ளவரோ இப்படிப்பட்டச் சூழலில் இருந்திருந்தால் என்ன ஆவது என யோசித்தேன்.

‘நல்லவேளை, நாம் இளைஞராக இருக்கிறோம். நம் இதயம் வலுவாக இருக்கிறது, போதுமான எதிர்ப்பு சக்தி உள்ளது’ என அடிக்கடி நினைத்துக்கொண்டேன். மூளையின் முன் மடல் (Frontal lobe) இச்செய்தியை உடலுறுப்புகள் அனைத்துக்கும் அனுப்பி என்னை வலுப்படுத்தி பாதுகாத்தது. நேர்மறை எண்ணம் உயிரையே காக்கும் என்பதை அந்த இரவு எனக்கு உணர்த்தியது!

காலையில் சுடுநீரில் குளித்தேன். புல்லட் தொடர்வண்டியில் ஹிரோஷிமா புறப்பட்டேன். ஏறக்குறைய 350 கிலோமீட்டர் தூரத்தை ஒன்றரை மணி நேரத்தில் கடந்தேன். நகரத்தைச் சுற்றிவர சுற்றுலாத் தகவல் மையத்தில் வரைபடம் வாங்கினேன். எல்லா தொடர்வண்டி நிலையங்களிலும் வரைபடம் இலவசமாகவே கிடைக்கிறது.

ஒருநாள் முழுவதும் முதுகில் சுமையுடன் அலைந்ததாலும், உறக்கமற்ற இரவாலும் முதுகு வலித்தது. பொருள் வைக்கும் அறை எங்கேயென வரைபடத்தில் தேடினேன். கண்டுபிடிக்க இயலவில்லை. விசாரித்தேன். என்னை அழைத்துப் போனார் ஒருவர். அவர் காட்டிய இடம், பார்சல் அலுவலகம் போல தெரிந்தது. ஜப்பானியர் மீதான நம்பிக்கை ஏற்கெனவே நங்கூரமிட்டுவிட்டதால், கடவுச்சீட்டை மட்டும் கையோடு எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.

எளிமையான பயண வழி

சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக எட்டு தடங்களில் ட்ராம் வண்டிகள் இயக்கப்படுகின்றன. அதில் நான்கு தடங்கள், தொடர்வண்டி நிலையத்தைத் தொட்டுச் செல்கின்றன. இதில் ஜே.ஆர் பாஸ் பயன்படுத்த முடியாது. தனியாக ஒரு நாள் பயண அட்டை கிடைக்கிறது. முக்கியமான சுற்றுலாப் பகுதிகளை இணைக்க கிரீன் ரூட், ஆரஞ்ச் ரூட், லெமன் ரூட் என மூன்று தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எந்தெந்தப் பேருந்து எந்தெந்த இடத்தில் பயணிக்கும் என்பதை வரைபடத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். பேருந்தின் முகப்பில் ஊர் பெயர் இருக்கும் இடத்தில் அது என்ன நிறத் தடம் என்பது எழுதப்பட்டிருக்கும். இந்தப் பேருந்துகளில் ஜே.ஆர்.பாஸ் பயன்படுத்தலாம்.

‘சின்னப் பையன்’ விழுந்த இடம்

நான் ‘கிரீன் ரூட்’ எனப் பச்சை நிறத்தில் எழுதியிருந்த பேருந்தில் ஏறி அமர்ந்தேன். விழிகளைச் சுழற்றினேன். இந்த நகரில்தான் 1945 ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 8.15 மணிக்கு ‘சின்னப் பையன்’ (Little Boy) எனப்படும் அணுகுண்டை அமெரிக்கா போட்டது.
வெடித்த அணுகுண்டு, 1) ஏறக்குறைய 4,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உமிழ்ந்தது. 2) சுற்றுவட்டாரத்தில் இருந்த ஆக்ஸிஜனை மொத்தமாக உறிஞ்சியது. 3) எல்லாத் திசைகளிலும் கதிர்வீச்சு பரப்பியது. அணுகுண்டு வெடிப்பு எப்படி இருக்கும், எவ்வகையான விளைவுகளை அது ஏற்படுத்தும் என்பதை உலகம் அறிந்துகொண்டது.

வியாபார நகரமாக வளர்ந்திருந்த ஹிரோஷிமாவின் 90 சதவீதப் பகுதிகள் எரிந்தும் சரிந்தும் போயின. இரும்பு கோபுரங்கள் உருகிச் சிறு கம்பிகளாகக் கிடந்தன. கண்ணாடி போத்தல்களும் குவளைகளும் உருகி உருக்குலைந்தன.

மக்களும் பள்ளிக் குழந்தைகளும் உடல் எரிந்து, உறுப்புகள் சிதைந்து, சுவாசிக்க காற்று இன்றி, கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள். ஆடைகள் எரிந்து, உடம்பெல்லாம் வெந்து, தாங்கமுடியாத தாகத்தில் ஆற்றங்கரைக்குத் தவழ்ந்து சென்று அங்கேயே பலர் மடிந்தார்கள்.

அமைதி நினைவுப் பூங்கா

அணுகுண்டு விழுந்த இடத்தின் அருகில் ‘அமைதி நினைவுப் பூங்கா’ ஒன்றை ஜப்பான் அமைத்துள்ளது. அதன் நுழைவாயிலில், அணுகுண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட மிகப் பெரிய வணிகக் கட்டிடம் கிளைகள் பறிக்கப்பட்ட மரம் போல் நிற்கிறது. ‘தோல்வியின் அடையாளமாக, வேதனையின் நினைவுச்சின்னமாக நிற்கும் இதைத் தகர்த்துவிடுங்கள்’ என சிலர் சொன்னார்களாம். ஆனால், அணுகுண்டின் பாதிப்பு ஒவ்வொரு தலைமுறைக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே இடிக்காமல் வைத்திருக்கிறார்கள்.

பூங்காவின் உள்ளே, குன்றுபோல ஒரு மேடு உருவாக்கப்பட்டுள்ளது. ஹிரோஷிமா நகர் முழுவதும் பாதி எரிந்தும் கருகியும்போன பல்லாயிரக்கணக்கான உடல்களைச் சேகரித்து எரியூட்டி அதன் சாம்பலை அந்தக் குன்றின் மீது வைத்திருக்கிறார்கள். தினந்தோறும் பயணிகள், மலர் வைத்து, விளக்கேற்றி அஞ்சலி செலுத்துகிறார்கள்.

பூங்காவின் மையத்தில் கொண்டை ஊசி வடிவில் ‘அமைதி நினைவுச் சின்னம்’ இருக்கிறது. அதன் கீழே உள்ள கல்பெட்டியில் இறந்தவர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணம் வைக்கப்பட்டுள்ளது. கல்பெட்டியின் மீது, ‘இங்குள்ள அனைத்து ஆன்மாக்களும் நித்திய இளைப்பாறுதல் பெறட்டும். ஏனென்றால் இந்தத் தீங்கினை இனிமேலும் நாங்கள் செய்யமாட்டோம்’ என பொறிக்கப்பட்டுள்ளது.

பூங்காவின் இன்னொரு பக்கத்தில் ‘அமைதி மணி’ தொங்குகிறது. உலக அமைதியை விரும்புகிறவர்கள் மணியை அடிக்கலாம். நான் அடித்தேன். மெல்லிய ஓசை கிளம்பி பூங்கா முழுவதும் பரவியது.

நினைவு மண்டபம்

அணுகுண்டு வீச்சில் இறந்தவர்களுக்காக ‘ஹிரோஷிமா தேசிய அமைதி நினைவு மண்டபம்’ அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிச் சுற்றி நடந்து கீழே சென்றால், வட்ட வடிவில் இருக்கும் ‘நினைவு அரங்கம்’ (Hall of Remembrance) வந்து சேர்வோம். அணுகுண்டு வீச்சில் சிக்கி இறந்த ஏறக்குறைய 1,40,000 பேரை நினைவூட்டும் விதமாக அங்குள்ள சுவரில் 1,40,000 டைல்ஸ் பதித்துள்ளார்கள். பின்னால் தள்ளி நின்று சுவரைப் பார்த்தேன், சிதைந்த நகரத்தின் மொத்தப் பரப்பையும் அகலப் பரப்புக் காட்சியாக (Panorama) தத்ரூபமாக வடித்துள்ளார்கள்.

“சண்டை போடாம அமைதியா மகிழ்ச்சியா இருக்கணும், சரியா” சிறுவயதில் பலரும் சொல்லக் கேட்டிருப்போம். இதே அறிவுரையை உலக மக்கள் அனைவருக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறது ஹிரோஷிமா!

(பாதை நீளும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in