கட்டக்காளை - 24

கட்டக்காளை - 24

தெக்க பாலாருபட்டி சொர்ணமுத்து கமல எறைச்சுக்கிட்டு பாட்டுப்படிக்க ஆரம்பிச்சா, கெழக்க முப்பிடார்பட்டி கிறுக்குவெள்ள எடுத்துக் கூட்டிப் படிக்க, கொளத்துப்பட்டி பின்னியப்பன் வடக்கமின்னருந்து படிக்கிற எசப்பாட்டுக்குத் தோதா எடையபட்டி பெருமாக் கோனாரு மேக்கமின்னருந்து தெம்மாங்குப் பாட்ட எடுத்துவிடன்டு... கமல எறச்சுக்கிட்டு விடிய விடிய ஆளுக்கொரு தெசையில படிக்கிற பாட்டு ரெண்டு மூணு பர்லாங்குக்கு கேக்கும்.

இப்ப, கமலையில தண்ணியெறச்சது கொறஞ்சு போச்சு. ஒறங்காம கமல எறச்சுக்கிட்டும், எசப்பாட்டு படிச்சுக்கிட்டும் திரிஞ்சவங்க சுச்சியப் போட்டமா, செத்தவடத்தில தண்ணியப் பாச்சுனமான்டு சொகுசா திரியிறாங்க.

கமலத் தண்ணிக்குத் தக்கன கெணத்தச் சுத்தி, நாலு குண்டுல வெள்ளாம செஞ்சுக்கிரிந்த ஆளுக, மோட்டாருத் தண்ணி பாயுதுன்டு, உண்டனா வெள்ளாம பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.

காஞ்சு தருசாக் கெடந்த நெலமெல்லாம் இப்ப உசுருபுடுச்சிருச்சு. கண்ணுக்கு எட்டுனவரைக்கும் பச்சைப் பசேல்ன்டு குளிச்சியா இருக்கிறதப் பாத்த பேருவாதிச் சனங்களுக்கு பசியே எடுக்கல.

“எனக்கு வெவெரந்தெரிஞ்சு இம்புட்டு வெள்ளாம வெளச்சலப் பாக்கலப்பா… மந்திரம் மாயம்மாரியில்ல வெளஞ்சு நிக்கிது…” வரப்பு மேட்டுல நின்டுக்கிட்டு மாயாண்டிச்சிய்யான் ஆச்சரியமாச் சொன்னாரு.

சிரிச்சுக்கிட்டே வெள்ளாமக் காட்ட திரும்பி பாத்த கட்டக்காளைக்கு அம்புட்டுச் சந்தோஷம். நெனச்சது கை கூடிருச்சுன்டு மகுந்து போனான்.

கரென்டு மோட்டாரு மாட்டுனதுக்கப்புறம் வந்த வெவசாய ஆபீசருக, யூரியா, பொட்டாசுன்டு என்னென்னமோ ஒரத்தயும் குடுத்தாக. அதுகள போட்டதுனாலதான் கருது சடச் சடையா புடிச்சுருக்குன்டு ஊராளுக நம்புனாங்க.

கெழக்குத் தோட்டத்தில நாலு சீப்பு, அஞ்சு சீப்பு விடுற வாழத்தாரு, இப்ப ஏழு சீப்பு, எட்டுச் சீப்புன்டு, தாருப் போட்டுருக்கு. இதப் பாத்த கட்டக்காளை மட்டுமில்லாம ஊராளுகளே வாயடச்சுப் போனாங்க.

தருசாக் கெடந்த ரெண்டு காணி நெலத்தயும் உழுது நெல்லு நட்ட வீனியான், தான் காட்டுல வெளஞ்ச வெள்ளாமையப் பாத்து பொல்லாப் பகுமானத்தில திரியிறான்.

காக்காணி வெள்ளாம செய்ய மாட்டாமத் திரிஞ்சவங்க எல்லாம், இப்ப பல்லு இளுச்சுக்கிட்டு பகுமானம் பண்றாங்க.
ரோட்டுக் காட்டுல போறாளுக கண்ணுப் பட்டுறக் கூடாதின்டு கொடிக் கள்ளிய புடுங்கியாந்து காட்டுக் குள்ள நட்டு வச்சு, அது மேல சீலத்துணியக் கிழிச்சு தொங்க விட்டுருக்காங்க.

இன்னொரு பக்கம் கை காலு கெணக்கா குச்சியில கட்டி, மண்டைக்கு ஒழம்பட்டியக் கவுத்து வச்சு, வைக்கப் புல்லச் சொருகி பொம்ம செஞ்சு வச்சிருக்காங்க.

கட்டக்காளைக்குச் சொந்தமான வயக்காடு, மேக்குத் தோட்டம், கெழக்குத் தோட்டமின்டு எல்லா எடத்திலயும் நெல்லுமணியச் செமக்கமாட்டாத கருது பூராம் வரப்புல சாஞ்சு கெடக்கு.

 “யெப்பா… நாளைக் கழிச்சு கருத அறுத்துப் பிடலாம்ப்பா. தள்ளிப் போச்சுனா கருது சொடிஞ்சு நெல்லுப் பூராம் உதிந்து போயிரும்…” அக்கறையா சொன்னா கழிச்சியாத்தா.

மண்டையாட்டிக்கிட்டே தோட்டத்துக்குக் கெளம்புனான் கட்டக்காளை.

சொந்தபந்தங்களுக்கும் கருது அருக்கணுமின்டு சொல்லி விட்டுருந்தாங்க. ஓனாப்பட்டியிலருந்து சம்பந்தகாரகளும், கொளத்துப்பட்டியிலிருந்து சொந்த பந்தமும் சேந்து, மொதநா பொழுதிருக்கவே வந்துட்டாங்க.

தலைக் கோழிகூப்பிட வயக்காட்டுக்குள்ள ஆளுக எறங்கிட்டாங்க. எல்லாரும் பன்னறுவாளும் கையுமா காத்திருக்காக.
ஈசானி மூலையில, சூடம் சாம்புராணி போட்டு சாமி கும்பிட்ட கட்டக்காளை, ஒரு தலுக்கு நெல்லுக் கருத கைநெறயா அறுத்தான்.
அறுத்த கருத காளாஞ்சிக் கருப்பன் வாசல்ல கொண்டாந்து கட்டிவிட்டு சாமியக் கும்புட்ட கட்டக்காளை, நெல்லு வயலுக்கு திரும்புனான். அவன் வந்துட்டான்டு தெரிஞ்சு ஒடனே காத்திருந்த அம்புட்டாளும் ஒண்ணு சொன்னாப்பில கருதறுக்க ஆரம்பிச்சுட்டாக.

குனிஞ்ச தல நிமிராம கருதறுத்த வேகந்தெரியல. அம்புட்டுச் சூட்டிக்கா அறுத்தாங்க.

நெல்லுக் கருதக் கட்டுக்கட்டி தலைச் சொமையா தூங்கியாந்து களத்து மேட்டுல சேத்துட்டுத்தான் விடியக்கால கஞ்சியே குடிக்க ஒக்காந்தாங்க.

கட்டக்காளை மகெங்க ரெண்டு பேத்தயும் கூட்டியாந்த லச்சுமாயி, களத்து மேட்டுல ஒக்காந்து கருதடிக்கிறத காமிச்சிக்கிருந்தா.
சின்ன பலகா கல்ல போட்டு அதுல நெல்லுக் கருத சொழட்டிச் சொழட்டி அடிக்கிறப்ப, நெல்லுத் தனியாவும், வைக்கத் தாளு தனியாவும் பிரிச்சு போயிரும்.

அடிச்ச நெல்லு அம்பாரமா குமிஞ்சு கெடக்கு. தூசி துப்பட்டையாக் கெடந்த நெல்ல மொறத்தில அள்ளி காத்து வீசுற தெசையப் பாத்துத் தூத்துறதும், தூசி தனியா,நெல்லுத் தனியா பிரிச்செடுக்கிற வேலைய செய்யிறதுமின்டும் ஆளுக்கொரு வேலையச் செய்யிறாக.

அடிச்சுத் தூத்தி, அம்பாரமா குமிச்சு வச்ச நெல்ல பின்னத்தேவன் மரக்கால்ல அளந்து போட, அவென் மகன் மலைராமன், சாக்கப் புடிச்சு வாங்கி வருசையா மூட்டை போட்டு வைச்சான்.

 அந்த மூட்டைகளை எல்லாம் கட்டக்காளை கோனு ஊசிய வச்சு தச்சுத் தச்சு வச்சான்.

ஒச்சுக்காளை, வீரணன், சாவடங்கின்டு எளந்தாரிக, தச்சு வச்ச மூட்டையத் தூக்கி வண்டியில ஏத்த்துனாங்க.

மூணு காணி நெலத்துல முப்பது மூட்டை வெளஞ்ச நெல்லு இப்ப அறுவது மூட்டையா வெளஞ்சு கெடக்கு. கட்டக்காளைக்கு வயக்காட்டுலயே முப்பது காணி நெலமிருக்கு. ரெட்டிப்பா வெளஞ்சுருச்சுன்ற பூரிப்பில, கதிர் அறுத்தவகளுக்கு கணக்குப் பாக்காம நெல்ல அளந்து போட்டு அனுப்பி வச்சான்.

ரெண்டு காணி மூணு காணி நெலம் வச்சிருந்தவங்க, மொத மொறையா நெல்லு அறுத்து வீட்டுக்கு கொண்டாந்தத நெனச்சு அம்புட்டு ஆனந்தப்பட்டாங்க.

அதே மாரி, ஊருல அஞ்சு காணி, பத்துக்காணி நெலம் வச்சிருந்த ஆளுக, மூட்டை மூட்டையா நெல்லடிச்சாங்க.

வித்த நெல்லு போக, மிச்ச நெல்லு வீட்ட நெறச்சிருக்கு. வருசத்துக்கும் கஞ்சிக்கு கவலையில்ல.

கருக்காக் குருணை கெடைக்காம அலமலந்து கெடந்த சனங்கூட, குலுக்க குலுக்கயா நெல்ல அடிச்சு வீட்டுல சேத்து வச்சிருக்காங்க.
கைநெறயா காசு பணம் பாத்த சனத்துக்கு அளவில்லாத பூரிப்பு. என்னத்தையோ பெருசா சாதிச்சுப் பிட்டது மாரி மெதப்பில திரியிறாங்க.
நகை நட்டு, நெல பொழம் வாங்கணுமின்ற ஆச வந்திருச்சு. ஏகத்துக்கும் வெள்ளாம செஞ்சா, உண்டான காசு பணம் பாக்கலாமின்டு, கரடு மொரடாக் கெடந்த நெலத்தயும் ஒப்புறவாக்கினவங்க. ஓட ஒடப்பயும், வெள்ளாமைக் காடா மாத்திட்டாங்க.

இப்பிடியே பத்து வருசம் ஓடிப்போச்சு. மூணார்சுப் பவரு, அஞ்சார்சுப் பவருன்டு மாட்டுன கரென்டு மோட்டாரு, ‘சரட்’டுன்டு தண்ணிய எறைச்சு ஊத்துற வேகத்துக்கு, கெணத்துத் தண்ணி தாக்குப் பிடிக்க மாட்டுது.

ஊரே கரென்டு மோட்டாருக்கு மாறுனதுனால கெணறு, குட்டையெல்லாம் எல்லாம் வத்திப் போச்சு.

ஏகத்துக்கும் பயிருபச்சைய வெதச்சுப்பிடலாமின்டா, வெளஞ்சு வார பருவத்தில, தண்ணிக்குப் பத்தாக் கொறையாப் போச்சு. புலிவாலப் புடிச்சது கெணக்கா சனம் தவிக்கிது.

வேற வழி... கெணறு வெட்டணுமின்டா நெறயா செலவு செஞ்சுதான ஆகணும்.

மேடாக் கெடந்த நெலத்தயும் ஒண்ணு சேக்கிறதுக்கே, நெல்லு வித்த காசும் கரைஞ்சு போச்சு. இருக்கிற கை மொதலுக்கும் மோசம் வந்திருச்சு.
அரசாங்கமும் கெணறு வெட்டக் குடுத்த கடன் பத்தாம, செல ஆளுக கடன ஒடன வாங்கி கெணறு வெட்ட ஆரம்பிச்சாங்க.

யாரையும் எதிர்பாக்காம, தாங்குடும்பத்துக்கு வேணுமின்ற தானியந் தவசத்த வெளைய வச்ச சனங்க, கெணறு வெட்ட வாங்குன கடன திருப்பிக் கட்டமுடியாமத் தவிச்சாங்க.

கூடுதலா மகசூல் குடுக்குமின்டு, கண்ட கண்ட ஒரத்தப் போட ஆரம்பிச்சாங்க.

நெறயா மகசூலும் கெடச்சுச்சு. கை நெறயா காசும் கெடச்சுச்சு. நகை நட்டு காசு பணம் மேல ஆச வந்திருச்சு.
சொந்த பந்தமா வாழ்ந்த சனங்களுக்குள்ள பகையாயிருச்சு. ஒண்ணுக்கொண்ணு நெலத்த தள்ளிப்பிட்டான்டு மல்லுக்கு நிக்கிறாங்க.

பெரியாளு சின்னாளுன்ற தராதரமில்லாம, சரி சோட்டுக்கு நிக்கிறாங்க.

ஒண்ணு மண்ணா இருந்த சனத்துக்குள்ள சின்னச் சின்ன சடவா ஆரம்பிச்சு, இப்ப பெரும் பகையா மாரிருச்சு.

பத்து வருசப் பகையாருந்த மச்சுனன் மாமன, ஒண்ணு சேத்த கட்டக்காளை, காசு பணத்தக் கைல பாத்த ஒடனே இந்த சனம் இப்டி மாறிப்போச்சேன்டு வருத்தப்பட்டான்.

வெளி ஒலகமே பாக்காத இந்த மக்க, வெளிச்சத்தப் பாக்கட்டும், வாழ்க்கையில முன்னுக்கு வரட்டுமின்டு பாடுபட்டது இப்ப தெசமாரிப் போச்சு.

நல்லது நடக்குமின்டு நெனச்ச கட்டக்காளை மனசுக்குள்ள வேதன வாட்ட ஆரம்பிச்சுருச்சு.

கொழம்பிப் போயி நின்றிருந்த கட்டக்காளை, மகெங்க ரெண்டு பேரும், பள்ளிக் கொடத்துக்குப் போயிட்டு வாரோமின்டு சொன்னதக் கூட கவனிக்காம எதையோ வெறிச்சுப் பாத்துக் கிட்டுருந்தான், நாகரிக வெவசாயம் இப்ப பெரும் நஞ்சா மாறிப் போச்சுன்றதும் தெரியாம!

 (நிறைந்தது)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in