கட்டக்காளை - 23

கட்டக்காளை - 23

"ஏய்யா… நீயும் இந்த ஊருள பெரிய வீட்டாளுன்ற, எவனும் ஒன்னிய மதிக்க மாட்டுறாங்க…” கினிங்கட்டி மாயன், எர்ரம்மநாயக்கரச் சூடேத்த ஆரம்பிச்சுட்டான்.

‘ஜெயில்ல புடிச்சுப் போட்டுப்பிடுவேன்’டு ஊராளுக முன்னாடி கரென்டாபீசரு மெரட்டி அவமானப் படுத்துன சம்பவம், எர்ரம்மநாயக்கரு தொண்டக் குழிக்குள்ள கட்டகெணக்கா கெடக்கு.

அதனால ஊருக்குள்ள வர வெக்கப்பட்டுக்கிட்டு, இப்ப வரைக்கும் தோட்டமே கதின்டு கெடந்தான்.

“ஓம் மேல இருக்கிற கோவத்தில என்னையும் எளக்காரமா பாக்குறாங்க, ஆ…வூ…ன்டா வெரட்டுறாங்க, பயமிட்டுத் திரியிறாங்கய்யா..” கினிங்கட்டி மாயன் சொல்லச் சொல்ல, எர்ரம்ம நாயக்கரு பலத்த ஓசனையிலயே இருந்தான்.
“இவிங்களுக்குச் சரியான பாடம் பொகட்டலயின்டா, நம்ம வாழ்றதில அருத்தமில்லாமப் போகும்மிய்யா…” கினிங்கட்டிமாயன் தீர்க்கமான முடிவோட பேசுனான்.

இன்ன வரைக்கும் கினிங்கட்டிமாயன் சொல்றத யெல்லாம் கேட்டுக்கிருந்த எர்ரம்ம நாயக்கரு. “என்னடா செய்யலாம், இப்ப சொல்லு…”ன்டு கேட்டான்.

“பொறுய்யாய்… இன்னிக்குத்தான் இந்த ஊருக்காரங்களுக்கு அம்மாசை, அவிங்களா நம்மலான்டு முடிவு கட்டிப்பிடலாம்…” சொன்ன கினிங்கட்டிமாயனும், எர்ரம்மநாயக்கரும் இருட்டுற வரைக்கும் தோட்டத்திலயே காத்திருத்தாங்க.
மேச்சலுக்குப் போன ஆடுமாடுக வீடு வந்து சேர்ந்துருச்சு, எறப் பெறக்கப் போன, காக்கா குருவியெல்லாம் கூட்டுல வந்து அடைஞ்சிருச்சு.

இருட்டியும் இருட்டாம கஞ்சியக் காச்சி, குடிச்சுப் பிட்டு வீட்டுக்குள்ள மொடங்கின சனம் பாதி, காடுகரைக்கு போறாளுக மீதின்டு, வாசப்படியிலயும், திண்ணையிலயும் சனம் அதுபாட்டுல படுத்து ஒறங்கிட்டுருக்கு.

ஊரடங்கினதுக்கு அப்புறம், எர்ரம்மநாயக்கரும் கினிங்கட்டிமாயனும், மூங்கிக் குச்சியில கட்டுன நீட்ட வாங்கருவாளயும், கடப்பாரக் கம்பியயும் எடுத்துக்கிட்டு, ரெண்டு பர்லாங் தள்ளி இருக்கிற கருத்தக்கண்ணன் காட்டுக்கிட்ட வந்துட்டாங்க.
அம்மாச இருட்டுலயும் பட்டப்பகலு கெணக்கா, கரென்டு வெளக்கு ஊருக்குள்ள எரிஞ்சிட்டுருக்கு… அதப் பாத்து, இவிங்களுக்கு வகுறு கும்புது.

“யேலே… ஒரே விசயில அத்து எறிஞ்சிறணுமிடா…” கினிங்கட்டிமாயன் கிட்டச் சொன்னான் எர்ரம்மநாயக்கரு.
“கரென்டாபீசரு இருக்கிற தாட்டியத்திலதான ஊண்டிப் பிட்டாங்க... போலுமரத்த இன்னிக்கு ஒடைக்காம விடல…!” கடப்பாரக் கம்பிய வச்சு போலுமரத்த ஆக்ரோஷமா தோண்ட ஆரம்பிச்சான் நாயக்கரு.

நீட்ட வங்காருவாளா இருந்தாலும், குட்டையா இருக்கிற கினிங்கட்டி மாயனால அம்புட்டு சொலபமா கரென்டு வயர அக்க முடியல.
தவ்வித் தவ்விப் பாத்தான் ம்ஹூம்... முடியல.

கினிங்கட்டி மாயனத் திரும்பி பாத்த எர்ரம்ம நாயக்கரு, “யேலே... தெறங்கட்டவனே, என்னாத்துக்கு இப்பிடித் தொங்கிட்டுத் திரியிற... ஒரே தவ்வுல அத்துப் பிட வேணாமா ?”ன்டு வஞ்சான்.

கினிங்கட்டி மாயனுக்கு ரோசம் பொத்துக்கிட்டு வந்துருச்சு. “இப்ப பாருய்யா…” ன்டு ஓட்டமா ஓடியாந்து வரப்பு மேட்டுல மிதிச்சு உசுரக்குடுத்துத் தவ்வுனான்.

வாங்காருவா கரென்டுக் கம்பியில வசமாச் சிக்கிக்கிருச்சு. கினிங்கட்டி மாயன் அந்தரத்தில தொங்கின மேனிக்க ஊசலாடுறான்.
மூங்கிக் குச்சின்றதால கை வேர்த்து வழுக்கிக்கிட்டு வருது. தொங்குன வேகத்தில ராத்தி வீசிவிட, எட்டாள கெடந்த கல்லுல நச்சுன்டு விழுந்தான்.

“யாத்தே…”ன்டு சத்தந்தான் கேட்டுச்சு. எர்ரம்ம நாயக்கரு திரும்பிப் பாத்தான். இருட்டுக்குள்ள சரியாப் பொலப்படல, எந்திரிச்சு கிட்ட வந்து உத்துப் பாத்தான்.

“என்னால எந்திரிக்க முடியலய்யா, எப்பிடியாச்சும் கரென்டுக் கம்பிய அத்துப்பிடு… கரென்டு வெளிச்சத்தில இவிங்க பகுமானமா ஒறங்கப்பிடாது… இருட்டுக்குள்ளயே கெடந்து சாகட்டும்…” அத்தன வேதனையிலும் கினிங்கட்டி மாயன் அனத்திக்கிட்டே சொன்னான்.

தூக்கு மாட்டிக்கிட்டுத் தொங்கிறவெங் கெணக்கா, கரென்டுக் கம்பியில சிக்குன வாங்கருவா அந்தரத்தில தொங்குது.
எர்ரம்ம நாயக்கருக்கு ஆத்திரம் கண்ண மறைக்க, கோபத்தில கரென்டுக் கம்பியில சிக்கின வாங்கருவாள கையில எடுத்தான்.
நீட்ட மூங்கிக் குச்சியில கட்டியிருந்த வாங்கருவா, ஒயரமான எர்ரம்மநாயக்கரு கையில வாகாச் சிக்கிருச்சு.

கொக்கி மாரி வளைஞ்சு இருக்கிற வாங்கருவாள வச்சு, பலங்கொண்ட மட்டும் சுண்டியிழுத்து அக்க ஆரம்பிச்சான்.
இழுத்த இழுவையில கரென்டுக் கம்பி ஒண்ணோடன்னு ‘சரசர’ன்டு ஒரசித் தீப்பிடிக்கிது.

எதப் பத்தியும் ஓசிக்காம வாங்கருவாளப் போட்டு பலங்கொண்ட மட்டும் ஓங்கி இழுத்தான் நாயக்கரு.
இழுத்த இழுவையில, கரென்டுக் கம்பியோட சேந்து, கினிங்கட்டிமாயன் விழுந்த எடத்துலயே, எர்ரம்மநாயக்கரும் ‘சடீர்’ன்டு விழுந்தான்.

டான்சாம்பாரம் தீப்பிடிச்சிருச்சு. ஊருக்குள்ள எரிஞ்சுக்கிருந்த வெளக்கும் அமெந்து போச்சு.
விடிஞ்சு எந்திரிச்சுப் பாத்தா, எர்ரம்மநாயக்கரும், கினிங்கட்டிமாயனும் கரென்டடிச்சு உருவாரம் தெரியாம கரிக்கெட்டயாச் செத்துக் கெடந்தாங்க.

உசுலம்பட்டியிலயே கரென்டு ஆபிசும் கட்டிட்டாக. இப்ப சுத்துப் பட்டிக்கும் கரென்டு குடுக்க ஆரம்பிச்சிட்டாக.
ஊருள தெரு வெளக்கு மாட்டுன கரென்டாளுக, அதுக்கப்புறம் வேணுமின்றவக வீட்டுக்கெல்லாம் கரென்டு குடுத்துட்டாக.
வில்லங்க வெவகாரத்தையும், வம்பு தும்பையும் வலிய இழுத்து விட்டவங்க, உசுற மாச்சுக்கிட்ட கதையை, ஒரு வருசமாகியும்கூட பேசுறதக் கொறைக்காத சனங்க, பாம்பு கடிச்சாலும் நட்டுவாக்கலி கடிச்சாலும், தெரியாம இருட்டுக்குள்ள அவதிப்பட்டுக் கெடந்த ஊருக்கு, வெளிச்சத்தக் கொண்டுக்காந்த கட்டக்காளையப் பத்திப் பேசுறதயும் மறக்கல.

பத்துப் பதினஞ்சு குழி நெலம் வச்சிருந்தாலும், கமலத் தண்ணிக்குத் தக்கன, ஒரு குழி, ரெண்டு குழிக்குத் தோதாத் தண்ணியப் பாச்சி வெள்ளாம செஞ்சுக்கிருந்த சனம்.

மழ தண்ணி பேஞ்சா ஆடிப்பட்டத்தில காட்டு வெள்ளாமையா, பயறு பச்ச, தானியந் தவசத்த வெதச்சு, தை, மாசியில அறுத்துக்காந்து ஆடைக்கும் கோடைக்கும் கஞ்சிக்குத் தேவையானத வச்சுக்கிருவாங்க.

அறுவடை முடிஞ்ச காட்டுல மிச்சமிருக்கிற தட்டத்தாள ஆடுமாட்டுக்கு தீவனமாக்குறதும், அது போடுற சானி அந்த நெலத்துக்கு ஒரமாகிறதுமின்டும், இருக்கிறதுக்குத் தக்கன வெள்ளாமையச் செஞ்சிக்கிட்டு சனங்க வாழ்க்கைய உருட்டிக்கிருந்தாக.
சர்க்காரும் ஒணவு உற்பத்தியப் பெருக்க புதுப் புது திட்டத்த கொண்டு வந்திருச்சு. அதையெல்லாம் சம்சாரிக மூலமாத்தான் நிறவேத்தணுமின்டு பேசிப் பேசியே ஆக வச்சுருச்சு.

அதுல ஒண்ணுதான், கமலையில தண்ணி எறைக்கிற கெணத்துக்கெல்லாம் மோட்டார் பம்பு செட்ட மாட்டி விடுற திட்டம்.
மொதல்ல கரென்டு இழுத்த கட்டக்காளை தோட்டத்தில தான், மோட்டார் பம்பு செட்டுக்கும் கரென்டு குடுக்கிறாக.
மழையில நனையாம இருக்க மோட்டாரு ரூமும், மோட்டாருத் தண்ணி விழுகிறதுக்குத் தோதா சிமிண்டுத் தொட்டியும் கட்டுனான் கட்டக்காளை.

ரெட்டக் கமலை போட்டிருந்த கெணத்துல இப்ப கரென்டு மோட்டாரு மாட்டியாச்சு.

“இந்த மோட்டாரு அஞ்சார்சு பவருய்யா... மூணு கமலையில எறைக்கிற தண்ணிய ஒரே விசயில எறச்சுப் புடும்…”ன்டு மோட்டாருப் பத்தின வெவரத்தச் சொல்லிக்கிட்டே மோட்டார் சுச்சிய ஆபிசரு அமுக்குனாரு.

மேக்கொழாவில இருந்து ‘சர்ர்ரு…’ன்டு தொட்டியத் தாண்டி ரெண்டு பாகத்துக்கு அங்கிட்டுத் தண்ணிப் பீச்சி அடிக்கிது.
“மோட்டார ஆஃப் பண்ணிட்டு வளவு பெண்ட எடுத்து மாட்டிவிடு…” அதிகாரி வய்ய, மோட்டாரு மாட்ட வந்தாளு, வளைஞ்சிருந்த குட்டக் கொழாய எடுத்து மேக் கொழாயில மாட்டிவிட்டான்.

“அஞ்சார்சுப் பவருக்கே இம்புட்டு ஃபோர்சா இருக்கு, பத்தார்சுப் பவரு மோட்டார மாட்டிருந்தா… அம்புட்டுத்தான், தண்ணித் தொட்டிய ஒடச்சுப்பிடும்…” ஆபிசரு பெருமையாச் சொல்ல, ஒவ்வொண்ணத்தயும் உன்னிப்பா கேட்டுக்கிட்டான் கட்டக்காளை.

பீச்சி அடிக்கிற மோட்டாருத் தண்ணியில கையவைக்க முடியில, கையப் பிச்செறியுது, அம்புட்டுப் ஃபோர்சா இருக்கு.
மோட்டாருல தண்ணி எறைக்கிறதப் பாக்கிறதுக்கு ஊருச் சனமே வந்து குமிஞ்சு போச்சு. எதப் பாத்தாலும் ஆச்சரியமாப் பாக்கிறாங்க. செல ஆளுக மோட்டாருத் தண்ணியில ஒவெட்டக் குளிக்கிறாங்க.

தொட்டியில விழுந்து பெருகி வெளியேறுன தண்ணி ரெட்ட வாய்க்கா நெறயாத் தளும்பத் தளும்பப் போகுது.
வாய்க்காப் பெருகி ஒடச்சுக்கிட்டுப் போற தண்ணிய, அடைக்க மாட்டாம ஒச்சுக்காளையும், வீரணனும் தவிக்கிறாங்கெ.
மோட்டாருத் தண்ணிக்கு வாய்க்கா வரப்பு நெறஞ்சு, காடு கரையெல்லாம் கெத்துக் கெத்துன்டு கெடக்கு.
அள்ளி ஊத்துற மோட்டாரையும் வாய்க்கா நெறஞ்சு ஓடுற தண்ணியயும் பாத்து மகுந்து போன சனங்களோட சேந்து கட்டக்காளை மனசும் பூரிச்சுப் போயிருந்துச்சு.

(அடுத்த இதழில் முடியும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in