இனி எல்லாமே ஏ.ஐ 22: உங்கள் உள்ளங்கையில் வங்கி

இனி எல்லாமே ஏ.ஐ 22: உங்கள் உள்ளங்கையில் வங்கி

விளையாட்டுத் துறையிலிருந்து வங்கித் துறைக்கு வருவோம். வங்கித் துறையில் மட்டும் அல்லாது, நிதிச் சேவைகள் எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் நிதி தொடர்புடைய அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு பெரும் தாக்கத்தைச் செலுத்திவருகிறது. இந்தத் தாக்கத்தைப் புரிந்துகொள்ள, வங்கி என்றால் என்ன எனும் அடிப்படையான கேள்வியில் இருந்து தொடங்கலாம். ஆம்! செயற்கை நுண்ணறிவின் தாக்கமும், வீச்சும் நாம் அறிந்த வகையிலான வங்கிச் சேவையை அடியோடு மாற்றிக்கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் இந்த மாற்றம் இன்னும் தீவிரமாக இருக்கிறது.

நவீன வங்கிச் சேவை

வங்கி என்றதும் நமக்கு அதன் கிளைகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், எதிர்கால வங்கிகள் கிளைகளே இல்லாமல் செயல்படலாம். இப்போதே இத்தகைய டிஜிட்டல் வங்கிகள் உங்கள் உள்ளங்கைக்கு வந்துவிட்டன. அதோடு, எந்த வங்கிக் கிளையிலும் சேவைகளைப் பெற கால்கடுக்கக் காத்திருக்க வேண்டாம். கேள்விகளோ, சந்தேகங்களோ எதுவாக இருந்தாலும் முகமில்லா டிஜிட்டல் உதவியாளர்கள் வாயிலாக நிறைவேற்றிக்கொள்ளலாம். ஒவ்வொரு வங்கியும் தனக்கான டிஜிட்டல் உதவியாளர்களைப் பெற்றிருக்கும். இப்போதே ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களுடன் உரையாடுவதற்கான டிஜிட்டல் உதவியாளர்களைக் கொண்டுள்ளன. ஆனால் வங்கிச் சேவையின் முகமில்லா தன்மை மாறி, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் எனத் தனிப்பட்ட முறையிலான சேவை அளிக்கப்படும்.

இவை எல்லாம் வங்கியின் முன்பக்கம் சார்ந்த சேவைகளில் கண்ணுக்குத் தெரிய நிகழும் மாற்றங்கள். இதேபோல, பின்பக்க சேவைகளிலும் கணிசமான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. மோசடிகளைத் தடுப்பதற்கான மென்பொருட்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கின்றன என்றால், வாடிக்கையாளர்களின் கடன் தகுதி மதிப்பீடு தரவுகள் பயனாக மேலும் மனிதத்தன்மை மிக்கதாக மாறிவருகின்றன. செலவுகள் குறைக்கப்படுவதுடன், செயல்திறனும் மேம்பட்டு வருகிறது. இவை எல்லாமே செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தினால் நிகழ்பவைதான்.

ஆனால், இந்த மாற்றங்கள் கொஞ்சம் மிரட்சியாகவும் அமையலாம். வங்கி அலுவலகங்களின் மனிதர்களுடனான தொடர்பு குறைந்து எல்லாமே தானியங்கிமயமாகலாம். எங்கும், எதற்கும் இயந்திரங்களை எதிர்கொள்ள நேரலாம். வரவேற்பறையில்கூட மனிதப் புன்னகைக்குப் பதிலாக ரோபோ கைகூப்பி நம்மை வரவேற்கலாம்.

முகம்மாறும் வங்கிகள்

வேறு எந்தத் துறையையும்விட வங்கித் துறையில் செயற்கை நுண்ணறிவு தாக்கத்தின் தீவிரத்தைத் தெளிவாக உணரலாம். அன்றாடம் நாம் தொடர்புகொள்ளும் துறை என்பதால், இதில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் நம்மை நெருக்கமாகவே பாதிக்கும். ஆனால், அதற்காக அஞ்சவோ, கவலைப்படவோ தேவையில்லை. வங்கிச் சேவைகளில் ஏ.ஐ-யின் தேவையையும் இடத்தையும் புரிந்துகொண்டால் போதுமானது. இதை வங்கித் துறை வரலாற்றிலிருந்து தொடங்கலாம். அதற்கு முன் வங்கிக்கான விளக்கத்தைப் பார்த்துவிடலாம்.

வங்கி என்பது, நிதிச் சேவைகள் மேற்கொள்ளப்படும் இடமாகக் கருதப்படுகிறது. பணத்தைப் போட்டுவைக்கவும், பணம் பெறவும், இந்தச் செயல்களுக்கான வட்டி பெறவும், இன்னும் பிற நிதி பரிவர்த்தனைகளுக்கான அரசால் அங்கீகரிக்கப்பட்ட இடமாகவும் வங்கிகள் விளங்குகின்றன.

ஆதிகால வங்கிகள் கோயில் கருவூல வடிவில் இருந்ததாகவும் கருதப்படுகின்றன. நவீன கால வங்கிகளைப் பொறுத்தவரை அவற்றின் வளர்ச்சி தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. அதன் தொடர்சியாகவே இப்போது ஏ.ஐ நுட்பங்கள் வங்கிச்சேவையின் முகத்தையே மாற்றிக்கொண்டிருக்கின்றன.

எது ஏ.ஐ பயன்பாடு?

இந்த இடத்தில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஏ.ஐ நுட்பங்களின் தன்மையையும், தேவையையும் வங்கிச் செயல்பாடுகளில் அவற்றின் பங்களிப்பு மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். அதைவிட முக்கியமாக எது ஏ.ஐ, எது ஏ.ஐ இல்லை எனும் பாகுபாட்டையும் வங்கிச் செயல்பாடுகள் மூலம் புரிந்துகொள்ளலாம்.

வங்கித் துறைச் செயல்பாட்டில் இயந்திரங்கள் பயன்பாட்டைப் பல காலமாகப் பார்த்துவருகிறோம். தானாகப் பணம் தரும் ஏடிஎம் இயந்திரங்களை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். இதன் நீட்சியாக இப்போது, வங்கி கணக்குப் புத்தகத்தில் தகவல்களைப் பதிவேற்றிக்கொள்ளவும் இயந்திரங்கள் வந்துவிட்டன. இயந்திரம் மூலமே வங்கிக் கணக்கில் பணம் கட்டி, வேறு ஒருவருக்குப் பணமும் போட முடிகிறது.

ஆனால், இவை எல்லாம் தானியங்கியமயமாக்கலே தவிர செயற்கை நுண்ணறிவு அல்ல. மனிதர் போலவே தானாகப் புரிந்துகொண்டு செயல்படக்கூடியதுதான் செயற்கை நுண்ணறிவு. அந்த வகையில், செயற்கை நுண்ணறிவு, வங்கி இணையதளத்தில் அல்லது செயலியில் ‘சாட்பாட்’ (chatpot) எனும் அரட்டை மென்பொருள் வடிவில் டிஜிட்டல் உதவியாளராக உங்களுடன் உரையாடுகிறது. இன்னும் ஒருபடி மேலே போய் உங்கள் பட்ஜெட்டைக் கவனித்து உங்கள் செலவு பழக்கம் பற்றியும் எச்சரிக்கை செய்ய வைக்கிறது.

தரவுகளும், தரவுகளில் ஒளிந்திருக்கும் அமைப்பு களைப் புரிந்துகொள்ளக்கூடிய அல்கோரிதம்களும், அவற்றை இயக்கக்கூடிய இயந்திரக் கற்றல், ஆழ்கற்றல் ஆகிய துணை நுட்பங்களும் இந்த நவீன வசதிகளைச் சாத்தியமாக்குகின்றன. என்றாலும், இயந்திரமயமாக்கல் அல்லது கணினிமயமாக்கலே இதற்கு அடிப்படையாக அமைகிறது.

தொடக்கத்திலிருந்தே பொருத்தம்

ஆனால் ஒன்று, மிகவும் சக்தி வாய்ந்த கணினிகள் உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே, வங்கித் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்பான ஆய்வு தொடங்கிவிட்டது என்கின்றனர். 1950-களிலும், 60-களிலும், செயற்கை நுண்ணறிவு சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலானவை நிதிச் சேவை சார்ந்தே அமைந்திருந்தின.

1956-ல் தான் செயற்கை நுண்ணறிவு எனும் வார்த்தை அதிகாரபூர்வமாக உருவாக்கப்பட்டது. 1980-களுக்குப் பிறகுதான் இத்துறை சார்ந்த ஆய்வுகள் மெல்ல நடைமுறையில் பரிசோதிக்கப்பட்டுவந்த நிலையில், ஆரம்ப காலத்திலேயே நிதித் துறையும், செயற்கை நுண்ணறிவும் நெருக்கமாக இருந்ததையும் கவனிக்க வேண்டும்.

நிதித் துறைச் செயல்பாடுகளில் மேம்பட்ட கணிதத்தைப் பயன்படுத்தும் முயற்சியிலிருந்து இது தொடங்குவதாக ஏ.ஐ வரலாறு மூலம் அறிய முடிகிறது. கணிதத்தைக் கொண்டு பங்குகள் செயல்பாட்டைக் கணிக்க முற்பட்ட பிரெஞ்சு கணித மேதை லூயிஸ் பேச்லியர் (Louis Bachelier) முயற்சி இதற்கான அடித்தளமாக அமைந்தது.

கணினி தந்த கலக்கம்!

வருங்காலத்தில், செயற்கை நுண்ணறிவு மனித குலத்தின் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் எனும் அச்சம் ஒரு தரப்பினருக்கு இருக்கிறது. கணினிகள் அறிமுகமான காலத்தலிருந்தே இதுபோன்ற அச்சம் இருக்கிறது. கணினிகள் முழு அளவில் அறிமுகம் ஆகத் தொடங்கியிராத 1930-களிலேயே, இத்தகைய கலக்கம் வெளிப்பட்டது. 1928-ல் அமெரிக்காவின் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ், தானியங்கிமயமாக்கல் பெரிய அளவில் வேலையிழப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகக் கட்டுரை வெளியிட்டது. அடுத்த ஆண்டு பெரும் பொருளாதாரத் தேக்கநிலை ஏற்பட்டாலும், தானியங்கிமயமாக்கலும், கணினிகளும், வேலையிழப்புடன், எண்ணற்ற புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கவே செய்தன.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in