கட்டக்காளை - 22

கட்டக்காளை - 22

ஊருக்காரெங்க, நல்லா இருக்கட்டுமின்டு, பட்டபாட்டுக்கு பலனில்லாமப் போயிருமோன்டு நெனச்சு பதறுன கட்டக்காளை, “ஊருல ஒரு நல்ல காரியம் நடக்கிறப்ப வேண்டாதவெங்க நாலுபேரு வம்பிழுக்கத்தான் செய்யுவாங்க… பொறுத்துப் போகாமா… சின்னத்தனமா செஞ்சுப்பிட்டீங்களேடா…” அங்கன இருந்த எளந்தாரிப் பயலுகள வஞ்சான்.

கினிக்கட்டிமாயன் செத்துப் போயிட்டான்டு கூட்டங் கூடிருச்சு. ஒரு பக்கம் ஊராளுக, இன்னொரு பக்கம் எர்ரம்ம நாயக்கரு வீட்டாளுக.

“அப்பாவிப் பயல கொன்டுபுட்டாங்கடா விடாதீங் கடா…”ன்டு எர்ரம்ம நாயக்கரு வய்ய… ஒண்ணுக் கொண்ணு வேகமாயிட்டாங்க.
எளந்தாரிப் பயலுக முறுக்கிக்கிட்டு நிக்கிறாங்க. விட்டா பெருங்கலவரமா வெடிக்கும் போல.
ஆரும் ஓசிக்கிறதுக்குள்ள ஓடிப் போயி, கீழ கெடந்த கினிங்கட்டிமாயனத் தூக்கி மடியில வச்சான் கட்டக்காளை. மூஞ்சியத் தட்டிப்பாத்தான்…

கினிக்கட்டிமாயன் ஒடம்பு, லேசாத் துழும்புச்சு. இன்னமும் மூச்சுருக்கு, ஒண்ணும் ஆகலன்டதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
 “யேலே… உசுரோடதான்டா இருக்கான்… கொஞ்சம் தண்ணிய மோந்துக்கு வாங்க…” கட்டக்காளை கத்துனான்.
அங்கெங்க சண்டை போட்டுக்கிட்டும் கத்திக்கிட்டும் இருந்தவங்க ஓடியாந்து என்னா ஏதின்டு பாத்தாங்க.

 “காத்தோட்டம் வரட்டும், செத்த வெலகி நில்லுங்கப்பா…” சொல்லிட்டு, தான் தோள்ல கெடந்த துண்ட வச்சு விசுறுனான் கட்டக்காளை. ரெண்டு பேரு தண்ணிய மோந்துக்காரதுக்கு ஓடுனாங்க.

 “வெலகி நில்லுங்க ஆளுகளா...”

“கண்ணாம் பட்டையில தட்டிக்குடப்பாய்”

கூட்டத்துலருந்தவக, ஆளுக்கு ஒண்ணாச் சொல்றாங்க.

 “ஆராச்சும் தண்ணியக் கொண்டுக்காங்கடா…யேய்…” துண்ட வச்சு விசிறி விட்டுக்கிட்டுருந்த கட்டக்காளை திரும்பவும் சத்தமாச் சொன்னான்.
சொனங்குசெட்டியாரு வீட்டுக்குள்ள ஓடுனா பின்னாயி, சின்னச் சட்டியிலருந்த தண்ணிய அப்பிடியே தூக்கிக்கிட்டு ஓடியாந்தா.
கினிக்கட்டி மாயன் மூஞ்சியில தண்ணிய அள்ளித் தெளிச்ச கட்டக்காளை, ரெண்டு கன்னத்தையும் லேசாத் தட்டிக்குடுத்தான்.
அரைக் கண்ண தொறந்து பாத்தான் கினிக்கட்டி மாயன்.

“செத்தா... தொலஞ்சிட்டுப் போறான்டு விட வேண்டியது தான… இவரு எதுக்குப் போயி அவனக் காப்பாத்துறாரு..?” ஒச்சுக்காளைகிட்ட சொன்னான் வீரணன்.

 “எந்திரிர்ரா ஒண்ணுமில்ல…” தலையப் புடிச்சு கட்டக்காளை தூக்கிவிட, கினிக்கட்டி மாயன் பொத்துனாப்பில எந்திரிச்சான்.
எர்ரம்ம நாயக்கருக்கும் இப்பதான் போன உசுரு திரும்பி வந்தாமாரி இருக்கு.

கினிக்கட்டிமாயனுக்கு ஒண்ணும் ஆகலன்டு தெரிஞ்ச ஒடனே, ரெண்டு பக்கமும் எகிறிக்கிட்டுருந்த அம்புட்டுச் சனமும் வேகத்தக் கொறச்சிருச்சு.

ஆனா, “ஏங்காட்டு வழியா… கரென்டு இழுக்கப் பிடாது”ன்டு சொன்ன எர்ரம்ம நாயக்கரு, இன்னும் வீம்பு பண்றத நிறுத்தல.
 “ஊருக்கு நல்லது நடந்தா ஒனக்கும் பங்கில்லையா… அனுசரணையா போக மாட்டாம… கெடுக்கிறதுக் கின்டேவா இருப்ப…” மாயண்டிச் சிய்யான் எர்ரம்ம நாயக்கர வஞ்சாரு.

 “அதான் கரென்டாபீசருக வந்தன்னைக்கே பாத்தனே… எனக்கும் பங்கிருக்காமில்ல… என்னிய எதுக்கும் மதிக்காத ஊருக்கு, நான் எதுக்கு விட்டுத்தரணும்…?” எர்ரம்ம நாயக்கரு தாவுனான்.

 “ஊருக்கு வெளிச்சம் வேணுமின்டா எங்கிட்டாச்சும் இழுத்துக்கிட்டுப் போங்க… அதுக்கு ஏங்காடு தானா கெடச்சுச்சு” பிடிவாதாமா இருந்தவன் அவெங்க வீட்டாளுகளையும் சேத்துக்கிட்டு, நடு வரப்புல மறிச்சு ஒக்காந்துக்கிட்டான்.

 “அன்னைக்கு கம்மா மடைய ஒடச்சு விடுற… இன்னைக்கு ஊருக்குள்ள கரென்டு இழுக்க விடமாட்டுற. யோவ்… நீ என்னா நெனச்சுக்கிருக்க…” சாவடங்கியும் வீரணனும் வேகமாயிட்டாங்க.

 “ஏங்காட்டுக்குள்ள கரென்டுக் கம்பி இழுக்கப் பிடாதுன்ட்டா… இழுக்கப் பிடாதுதான்…” சொல்லிட்டு கையில வச்சிருந்த அருவாள தரையில கொத்திக் கெளறிக்கிட்டே இருந்தான் நாயக்கரு.

 “விட்டுக் குடுத்தா… கெட்டா போவ. எல்லாத்தையும் கண்ண மூடிக்கிட்டு எதுக்காம விட்டுக் குடுத்துப் போய்யா…” எர்ரம்ம நாயக்கருகிட்ட கட்டக்காளை எம்புட்டோ பேசிப்பாத்தான்… மசியற மாரியில்ல.

 “ஏப்பா… அவெங்கிட்டா என்னாத்துக்கு கெஞ்சிக்கிட்டுத் திரியிற… விடப்பா நாங்க பாத்துக்கிறோம்…” சாவடங்கி கோவிச்சான்.
இங்க ஒண்ணுக் கொண்ணு தகராறு முத்திக்கிருக்க, மேக்கமின்ன ஜீப்பு வாரதப் பாத்த சனங்க, போலீசு வருதின்டு பயந்து கப்சிப்பின்டு ஆகிருச்சுக.

வந்த ஜீப்பு அங்கன நிக்க, கரென்டாபீசரு அதிலிருந்து எறங்க, நடந்த சமாச்சாரத்தப் பூராத்தையும், அந்த ஆபிசருகிட்ட கரென்டாளுக சொல்லிப்பிட்டாக.

சேதி கேட்ட ஆபீசருக்கு மொகமெல்லாம் செவந்து போச்சு.

 “ஆருய்யா தடுத்தது… இது அரசாங்க வேல, ஆருக்கும் தடுக்கிற உரிமையில்ல… மீறித் தடுத்தா அம்புட்டுத்தான்… எல்லாத்தையும் ஜெயில்ல புடுச்சுப் போட்டுருவேன் சாக்கிரதை…” ஆபீசரு மெரட்ட ஆரம்பிச்சிட்டாரு.

அவரு இப்படி மெரட்டுவாருன்டு கொஞ்சமும் நெனச்சுப் பாக்காத எர்ரம்ம நாயக்கரு, அத வெளிக் காட்டாம, “இல்லைங்க அய்யா… வெள்ளாமக் காட்ட, கண்டமானிக்க தோண்டுறதும்… வயரு இழுக்கிறதுமின்டு ஒழப்பினா, வெள்ளாம வீணாப் போகுமின்டுதான் சொன்னேன்யா…”ன்டு சமாளிச்சான்.

 “இங்க பாருங்க… ஒங்க ஊருக்கு கரென்டு வரணுமின்டா… இன்னும் எத்தன வருசமாகுமோ தெரியாது…. ஒங்க நல்ல நேரம், எங்க ஆபிசுக்கு நெதம் வந்த கட்டக்காளை, கரென்டு வேணுமின்டு கொடுத்த தொந்தரவுனாலதான், இப்பக் கரென்டக் கொண்டுக்கு வந்திருக்கோம்… தெரு வெளக்கு மட்டுமில்ல, யாராருக்கு வேணுமின்டு கேட்டாலும், அவுக வீடுகளுக்கும் சர்வீஸ் குடுப்போம்… ஆராருக்கு வேணுமோ அவுகவுகளுக்குத் தனித்தனியா வாங்கிக்கிங்க… அத விட்டுப்பிட்டு தடுத்தா நடக்கிறதே வேற… ”
கடகடன்டு சொன்ன கரென்டு ஆபிசரு, “வேலய சூட்டிக்கா முடிங்கப்பா”ன்டு அவங்காளுங்கள வெரட்டுனாரு.

 “இந்நேரம் ஊண்டிருந்தமின்டா லைட்டே எரிய விட்டுருக்கலாம்… வேலயக் கெடுத்துப்பிட்டாங்களே” கரென்டாளுக அவுகளுக்குள்ளயே பேசிக்கிட்டாக.

மேக்க பொழுது சாயப்போகுது… கரென்டு வயரு இழுக்கிறாளுகள ஆபிசரு வேகப்படுத்த, ‘சட சட’ன்டு கரென்டு வயர, போலு மரத்தில இழுத்துக் கட்டுனாக.

ஊரு மந்தையில இருக்கிற காளியாத்தா கோயிலுக்கிட்ட, தெக்குத் தெருவுல, ஆல மரத்துக்கிட்டன்டு ஊருள மூணு எடத்துல வெளக்கு மாட்டப் போறாக.

கரென்டுக் கம்பிய இழுத்துக் கட்டி, போலுமரம் சாஞ்சிராம இருக்க இழுவக் கம்பியையும் ஊண்டிக் கட்டியாச்சு.

வெளக்கு எரிய வைக்கிற வேல தான் பாக்கி. ஊராளுக பூராம் கரென்டு வெளக்கு எரியப் போறதப் பாக்க வந்து ஒக்காந்திருக்கு.

பொழுது சாஞ்சுக்கிருக்கு. பொன்னம்மாளும், அங்கம்மா கெழவியும் கஞ்சிய ஊத்திக்காந்து அங்கனக்குள்ளயே ஒக்காந்து சாப்பிட ஆரம்பிச்சுட்டாக. அங்கங்க சனம் நின்டுக்கிட்டும் ஒக்காந்துக்கிட்டும் இருக்குக.

பட்டப் பகலு கெணக்கா வெளிச்சம் குடுக்கப் போறதப் பாக்கணுமின்டு அக்கம் பக்கத்து ஊராளுகளும் படுக்க விரிப்பானோட வந்து விரிச்சு ஒக்காந்திட்டாங்க.

அந்த ஆபிசரு ஜீப்பிலருந்து ஒரு பெட்டிய எடுத்து கரென்டாளுகிட்ட குடுக்க... மொத்தச் சனமும் அதையே உத்துப் பாத்துக்கிருக்கு.
கரென்டுக் கம்பியோட,வெளக்கு எரிய வைக்கிற வயரையும் பின்னிக் கட்டுனாங்க.

 “எல்லாஞ்சரியா இருக்கா..?”ன்டு கேட்ட ஆபீசரு, “ந்தா இத மாட்டிவிடுங்க”ன்டு ஒரு அட்டைப் பொட்டிய நீட்டக் கயித்துல கட்டி விட்டாரு. அத பொத்துனாப்பில மேல இழுத்த கரென்டாளு, போலீசுக்காரன் டொப்பி கெணக்கா ஒண்ண எடுத்து, அதுக்கும் கீழ முட்டை கெணக்கா வெளக்கச் சொருகி, தலைகீழாத் தொங்க விட்டுட்டு எறங்கிட்டான்.

“இதுல எப்பிடிர்ரா வெளிச்சம் வரும்..?” வேடிக்க பாக்க வந்திருந்த அசலூருக்காராளுக சந்தேகமா கேட்டாக.

“கம்பி வழியா எண்ணெ வருமப்பாய்…”ன்டு மாரி சொன்னான்.

“இல்லப்பா... இந்த வெளக்கு கரென்டுல எரியுமின்றாங்க… புடிச்சா விடாதாம்…” மாயாண்டிச்சிய்யான் நேத்து கேட்டதச் சொன்னாரு.

எல்லாரும் தொங்கிற வெளக்கயே பாத்துட்டு இருந்தாங்க.

கட்டக்காளை, அவென் பொண்ட்டாட்டி லச்சுமாயி, அன்னத்தாயின்டு அம்புட்டுச் சனமும் வீடு வாசல அனாதயா விட்டுட்டு வந்து அன்னாந்து பாத்துக்கிருக்கு.

பின்னாயி, கழிச்சியாத்தான்டு அம்புட்டுப் பொம்பளைகளும் வெளக்கு எரியப் போற வித்தையப் பாக்கணுமின்டு காத்துக்கிருக்காங்க. எர்ரம்ம நாயக்கரும், கினிங்கட்டிமாயனும் ஒரு ஓரத்தில நிக்கிறாங்க.

நல்லா மசங்கி இருட்ட ஆரம்பிச்சுருச்சு… கரென்டாபிசரு கட்டக்காளையப் பாத்துச் சிரிச்சுக்கிட்டே, “த்ரூப் பண்ணிரலாமய்யா…”ண்டு கேட்டாரு.

“ஆகட்டுமிய்யா…”ன்டு அவன் தலையாட்ட, டான்சாம்பாரத்தில இருக்கிற ஆளுக்கு தாக்கல் அனுப்பி லைன் அடிச்சு விடச் சொன்னாரு.

வெளக்கு எரியப் போதுன்டு ஊரே பாத்துக்கிருக்கு. கொஞ்சச் சனம், கண்ண மூடி சாமியக் கும்பிட்டுக்கிருக்கு…

வெகு நேரமாச்சு… கரென்டு வயர மாத்திக் குடுத்திட்டாக போல... எரிய மாட்டுது. சரி செய்ய மாட்டாம தெனறிக்கிருக்காக.
வெளக்கு எரியிறமாரித் தெரியிலன்டு, காத்துக் கெடந்த பாதிச் சனம் வெறுத்துப் போயி ஒத்தொத்த ஆளா எந்திரிச்சு வீட்டுக்குப் போயிருச்சு.

எப்பிடித்தான் எரியுமின்டு பாக்காம போகப்பிடாதுடான்டு நெனச்ச செல ஆளுக, அங்கனயே துண்ட விரிச்சும், கையத் தலைக்கு அனவா வச்சுக்கிட்டும் மல்லாக்காப் படுத்துக் கெடக்காக.

அசந்து ஒறங்கிற நேரம்… கண்ணுக்குள்ள பளிச்சின்டு மின்னலு மாரி வெளிச்சம்… கண்ணத் தொறந்து பாத்தா, போலு மரத்துல கட்டுன வெளக்கு அம்புட்டு பிரகாசமா எரியிது.

படுத்து ஒறங்கினவங்களத் தட்டி எழுப்பி விட்டாங்க… எந்திரிச்சுப் பாத்தவங்களுக்கு நம்ம முடியல. எந்திரிச்சு மேலும் கீழுமாத் தவ்வுறாங்க.

இவிங்க போட்ட கூச்சல்ல எந்திரிச்சு வந்த ஊராளுக தெக்குத்தெருவு, ஆலமரத்துக்கிட்டன்டு அம்புட்டு வெளிச்சத்தையும் ஓடி ஓடிப் பாத்துக்கிட்டுருக்கு… விடிய விடிய ஆரும் ஒறங்கின மாரித் தெரியல. அம்புட்டுச் சந்தோசம்.

வெளிச்சத்தையும் கட்டக்காளையையும் மாறிமாறிப் பாக்குது சனம்.

அவங்களோட மொகத்துல தெரிஞ்ச பூரிப்பப் பாத்த கட்டக்காளை மனசு இப்ப நெறஞ்சிருக்கு.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in