இனி எல்லாமே ஏ.ஐ - 20: விளையாட்டு உலகத்தை வியக்கவைத்த ஏ.ஐ

இனி எல்லாமே ஏ.ஐ - 20: விளையாட்டு உலகத்தை வியக்கவைத்த ஏ.ஐ

‘மணிபால்’ கதையில், சரியான வளங்கள் இல்லாததால் பின்னுக்குத் தள்ளப்பட்ட பேஸ்பால் அணி, அதையெல்லாம் கடந்து மீண்டெழுந்தது என்று சென்ற வாரம் பார்த்தோம். அந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது என்பதை இந்த வாரம் விரிவாகப் பார்ப்போம்.

ஆக்லாந்து அத்லெட்டிக்ஸ் பேஸ்பால் அணியின் உரிமையாளர், பெரிய வீரர்களை வாங்குவதற்குச் செலவு செய்ய முடியாது என கைவிரித்த நிலையில், யோசனையில் ஆழ்ந்தார் அணியின் மேலாளர் பில்லி பியானே. ஏற்கெனவே அணியில் இருந்த ஜேசன் கியாம்பி எனும் நட்சத்திர வீரர் வேறு அணிக்குச் சென்றுவிட்டார். இப்போதைய பட்ஜெட்டில், இன்னொரு கியாம்பியை வாங்குவது எல்லாம் சாத்தியம் இல்லை. எனில், அணியை வெற்றி பெறச்செய்வது எப்படி எனும் கேள்வி அவரைக் குடைந்து எடுத்தது.

கவனிக்கப்படாதவர்களுக்கு வாய்ப்பு

சரி, முடிந்தவரை திறமையான வீரர்களைத் தேற்றலாம் என அவர் அணிகளுக்கு மத்தியில் ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது, பீட்டர் பிராண்ட் என்பவரைச் சந்திக்கிறார். பொருளாதார பட்டதாரியான பிராண்ட், பேஸ்பால் விளையாட்டில் வீரர்கள் தேர்வில் புதுமையான முறையை உருவாக்கியிருந்தார். வழக்கமாகப் பின்பற்றப்பட்டுவந்த முறையிலிருந்து அது வேறுபட்டிருந்தது.

எதிர்காலத்தில் பிரகாசிக்கக்கூடிய திறமையான வீரர்களைக் கண்டறிந்து தேர்வு செய்வதிலேயே எல்லோரும் கவனம் செலுத்து
கின்றனர். ஆட்ட நுணுக்கம், உடல் தகுதி, கள சாதனை புள்ளி விவரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வீரர்கள் தேர்வுசெய்யப்படுகின்றனர். அதிகத் திறமை மிக்க சாதனையாளர்கள் எனில் அவர்களைத் தேர்வு செய்வதற்கான விலை அதிகமாக அமைகிறது.

இப்படித்தான் பேஸ்பால் விளையாட்டில் வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது. இதில் யாருமே கவனிக்காத அம்சத்தை பிராண்ட் கண்டறிந்து கூறினார். அதாவது, ஒவ்வொரு அணியிலுமே குறைத்து மதிப்படப்படும் வீரர்கள் இருப்பார்கள். வழக்கமான முறையில் அவர்கள் திறமையான வீரர்களாக அடையாளம் காணப்படாமல் போக, பயிற்சியாளர்கள் மனதில் இருக்கக்கூடிய பலவிதமான சார்புகள் காரணமாக இருக்கலாம் என்று பிராண்ட் கூறினார். இப்படிக் குறைத்து மதிப்பிடப்படும் வீரர்களைத் தேர்வுசெய்து, அவர்களைக் கொண்டு சரியான உத்தியோடு விளையாடினால் பெரிய அணிகளுக்குச் சவால்விடலாம் என அவர் மேலும் எடுத்துக்கூறினார்.

அணுகுமுறையில் மாற்றம்

இதற்கான தேர்வு முறையையும் விளக்கிக் கூறினார். பொதுவாக அணிகள் திறமையான வீரர்களை விலைக்கு வாங்குகின்றன. அதாவது, இந்த வீரரை வாங்கினால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என அனுமானிக்கின்றனர். ஆனால், வீரர்களை வாங்காமல் வெற்றிகளை வாங்க முயற்சிக்க வேண்டும் என்பது பிராண்ட் முன்வைத்த வழியாக இருந்தது. வெற்றிகளை வாங்குவது என்றால், வெற்றிக்கு வழிவகுத்த ஓட்டங்களை (ரன்ஸ்) வாங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கிரிக்கெட் போலவே பேஸ்பால் விளையாட்டிலும் ஓட்டங்கள்தான் அடிப்படை. ஆனால், பேஸ்பாலில் ஓட்டங்கள் வேறு விதமாகக் கணக்கிடப்படுகின்றன. ஓட்டங்கள் அடிப்படையில் வீரர்களைத் தேர்வுசெய்யும்போது, அதிகம் கவனிக்கப்படாத ஆனால் திறமைமிக்க வீரர்களை எளிதாக அடையாளம் காணலாம். வழக்கமான சார்புத் தன்மையால் விலக்கப்பட்டவர்களும் இதில் இருக்கலாம்.

ஆக, அணுகுமுறையைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டால், சரியான வீரர்கள் கொண்ட திறமையான அணியை உருவாக்கிவிடலாம் என்பதுதான் பிராண்ட் முன் வைத்த வழி. குறைத்து மதிப்பிடப்படும் திறமையான வீரர்களை அடையாளம் காண்பதுதான் இதற்கான சூட்சுமமாக அமைந்தது. 

எல்லாம் சரி, குறைத்து மதிப்பிடப்படும் வீரர்களைக் கண்டறிவது எப்படி? திறமை குறைந்த வீரர்களில் இருந்து அதிகத் திறமை கொண்ட, ஆனால் கவனிக்கப்படாமல் இருக்கும் வீரர்களை அடையாளம் காண்பது எப்படி? இந்த இடத்தில் தான், சாபர்மெட்ரிக்ஸ் (Sabermetrics) எனும் அலசல் நுட்பம் கைகொடுக்கிறது. இந்த நுட்பத்தைக் கொண்டுதான் பிராண்ட் தனது வழிமுறையை உருவாக்கியிருந்தார்.

வெற்றிமாலை

பிராண்ட் முன்வைத்த இந்த வழியை ஆக்லாந்து அத்லெட்டிக்ஸ் அணி மேலாளர் பியானே முயன்று பார்க்க தீர்மானிக்கிறார். முற்றிலும் மாறுபட்ட இந்த முறையைச் செயல்படுத்துவதில் அவர் பலவிதத் தடைகளை எதிர்கொண்டாலும், அவற்றை எல்லாம் மீறி தொடர்கிறார். அவரது அணியும் தொடக்கத்தில் புதிய முறைக்கு மாற முடியாமல் திண்டாடினாலும், மெல்ல மெல்ல வீரர்கள் புதிய முறைக்குப் பழகி, தங்களுக்குள் ஒன்றுபட்டுச் சிறப்பாக ஆடத்தொடங்குகின்றனர்.

பரபரப்பான திருப்பங்களுக்கு பிறகு, இந்த அணி வெற்றிப்பாதையில் முன்னேறி தொடர்ச்சியாக 20 வெற்றிகளைப் பெற்று புதிய சாதனை படைத்து மகுடம் சூட்டிக்கொள்கிறது. இதுதான் ‘மணிபால்’ திரைப்படத்தின் வெற்றிக்கதை. அமெரிக்க பேஸ்பால் வரலாற்றில் அதுவரை கண்டிராத திருப்பமாக இந்தப் படத்தின் பின்னே இருந்த நிஜக் கதை அமைந்திருந்தது. மைக்கேல் லூயிஸ் என்பவர் இந்தக் கதையைப் புத்தகமாக எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ‘மணிபால்’ திரைப்படம் எடுக்கப்பட்டது.

தரவு விளையாட்டு

விளையாட்டு வீரர்கள் பற்றிய தரவுகளைச் சேகரித்து, அவற்றை முறையாக அலசி, அதன் அடிப்படையில் ஒரு மாதிரியை உருவாக்கினால், அதையே ஆட்டத்துக்கான வியூகமாகக் கொள்ளலாம் எனும் கருத்தாக்கமே இந்தக் கதை உணர்த்தும் நீதியாக அமைந்தது. இந்த வழியைப் பின்பற்றியே, போட்டி மிகுந்த சூழலில் பாதகமான அம்சங்களைக் கொண்டிருந்த ஆக்லாந்து அத்லெட்டிக்ஸ் அணி மகத்தான வெற்றி பெற்றது. கூடவே, விளையாட்டுத் துறையில் அலசல் நுட்பம் சார்ந்த அணுகுமுறையின் தீவிரப் பயன்பாட்டுக்கும் வழிவகுத்தது. இனி விளையாட்டுத் துறையிலும், தரவுகளைச் சேகரிக்கவும், அலசி ஆராயவும் உதவும் செயற்கை நுண்ணறிவுதான் எதிர்காலம் எனப் பேச வைத்தது.

எல்லாம் சரி, புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு பயிற்சியாளர்கள் வீரர்களைத் தேர்வு செய்வதையும், வியூகங்கள் வகுப்பதையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால், செயற்கை நுண்ணறிவு எப்படி தரவுகளை வைத்துக்கொண்டு விளையாட்டுக்கான சரியான உத்தியை வகுத்துக்கொடுப்பதில் உதவும் எனும் கேள்வி எழலாம். இதற்கான பதிலை சாபர்மெட்ரிக்ஸ் நுட்பத்தைப் புரிந்துகொள்வதிலிருந்து தொடங்கலாம்.

இவரும் ஆசான்தான்!

செஸ் விளையாட்டு போலவே செக்கர்ஸ் எனும் விளையாட்டும் உண்டு. இதுவும் பலகை விளையாட்டுதான். செஸ் போல பிரபலமான விளையாட்டு இல்லை என்றாலும், செயற்கை நுண்ணறிவு வரலாற்றில் முக்கிய இடம்பெறுகிறது செக்கர்ஸ். ஆர்த்தர் சாமுவேல் எனும் செயற்கை நுண்ணறிவு முன்னோடி, செக்கர்ஸ் விளையாடக்கூடிய கணினி மென்பொருள் ஒன்றை உருவாக்கினார். செஸ் விளையாடும் மென்பொருள் போலவே செக்கர்ஸ் விளையாட்டுக்கான மென்பொருளாக இது அமைந்திருந்தது. அத்துடன் நகர்வுகளைச் சுயமாகக் கற்றுக்கொள்ளும் திறனையும் இது பெற்றிருந்தது. இந்த அணுகுமுறை இப்போது, மென்பொருட்கள் தானாகக் கற்றுக்கொள்ளும் திறன் பெற்றிருப்பதைக் குறிக்கும் இயந்திரக் கற்றல் எனக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் ஆர்த்தர் சாமுவேல், இயந்திரக் கற்றலின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார்.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in