கட்டக்காளை - 21

கட்டக்காளை - 21

காட்டெருமெ மூஞ்சி வச்ச அந்த லாரி, பெரிய பெரிய உருளையையும் போலுமரத்தையும் ஏத்திக்காந்து பாதையன் தருசில நிக்கிது. ஒத்தொத்த உருளையிலும் முறுக்குன இய்ய வயரு சுத்திருக்கு.

மொத நாளுச் செஞ்ச வேலைய, இன்னைக்குச் செஞ்சு முடிக்கிறதுக்காக கரென்டு இழுக்குற ஆளுக வெள்ளனா வந்துட்டாக. அவுகளுக்கு ஒத்தாசையா ஒச்சுக்காளையும் வீரணனும் கூடமாட வேல செஞ்சுக்கிருந்தாங்க.

வேற பக்கமும் கரென்டு குடுத்துட்டு, நேரத்துக்கு வந்திரமின்டு கரென்டு ஆபீசரு மொத நாளே சொல்லிட்டுப் போயிருந்தாரு.
கட்டக்காளை எல்லாச் சோலியயும் ஒதுக்கி வச்சிட்டு முழு மூச்சா கரென்டு இழுக்கிற சமாச்சாரத்திலயே குறியா இருந்தான்.
அரைக்கால் டவுசரோட பத்துப் பதினஞ்சு ஆளுக, போலுமரம் ஊண்டுறதும், வயர இழுக்குறதுமா… படு சூட்டிக்கா வேல செஞ்சுக்கிருக்காங்க.

காட்டுக்குள்ள, அங்கெங்க வயரு உருளை எறக்கிக்கெடக்கு. வெள்ளாம வெளச்சல் இல்லாமத் தருசாக் கெடந்த காடுகன்றதுனால, வயரு இழுக்கத் தோதா இருந்துச்சு.

 “கரென்டுன்றாங்க, எண்ணெய் இல்லாம எரியுமின்றாங்க… என்னான்டு தான் பாத்துப்புடுவோம்... வாடா” ன்டு சொல்லிக்கிட்டே, சொர்ணமுத்தையும் தொணக்கிக் கூட்டியாந்த மாயாண்டிச் சிய்யான், போலு மரம் ஊண்டுற எடத்துல, மொத ஆளா வந்து ஒக்காந்திருக்காரு.

வேடிக்க பாக்கிறதுக்கின்டே வந்த ஆளுகளுக்கு, கிட்டப் போயிப் பாக்க பயம். எட்டாலயே நிக்கிதுக.
 “ஏன்டா சொர்ணமுத்து… வெளக்கு பூராம் தலகீழாத் தொங்கிக்கிட்டு எரியுமாமில்ல… அதெப்பிடிர்ரா எரியும்..?” மாயாண்டிச் சிய்யான் பொலப்படாமக் கேட்டாரு.

“ இல்ல சிய்யான்… இந்த வயருலதான் எண்ணெ வருமாம்…”

கெழடு கட்டைக, நண்டு சிண்டுகன்டு, ஆளாளுக்கு தனக்குச் தெரிஞ்ச கதைய அள்ளி விட்டுக்கிருக்காங்க.
 “கம்மாத்தண்டி எண்ணெக்கெணறு, மருதைக்கிட்ட இருக்குப்பாய்… நாங்கதான் போயிருந்தப்ப பாத்தமே… எண்ணெயா மெதக்குதப்பா…” குவ்வான் தாம் பங்குக்கும் சொல்ல... இவிங்க சொல்றத மாயாண்டிச் சிய்யான், வாயப் பொளந்து கேட்டுக்கிருந்தாரு.

 “ஒன்னிய ஏய்க்கிறாங்க சிய்யான்… வெளக்கெண்ணெயும் வராது… சீம எண்ணெயும் வராது. இதில கரென்டுதான் வரும்… அதுக்குத்தான் இந்த வயரு” ஆளோட்டா ஆளா, வயரு இழுத்துக்கிருந்த ஒச்சுக்காளை சொன்னான்.
கட்டக்காளை வீட்டில போட்டுக்குடுத்த சுக்குக் காப்பிய, கொண்டுக்காந்து வேல செய்யிற ஆளுகளுக்கு ஊத்திக்குடுத்தா அன்னத்தாயி.

ஒரு மரத்துலருந்து இன்னொரு போலு மரத்துக்கு, தொங்கவிடாம கரென்டுக் கம்பிய, வெறப்பா இழுத்துக்கட்டுறதுக்கு ரொம்ப செரமப்பட்டாங்க.

பத்தும், பத்தாததுக்கு வேடிக்க பாத்துக்கிருந்த மாரி, சின்னன்,சோட்டையன், அம்போதி, சாவடங்கின்டு ஒடம்பில கறி வச்சுக்கிட்டு மினுமினுப்பாத் திரிஞ்சவங்களாப் பாத்துக் கூப்பிட்ட கரென்டாளு, அவிங்களுயும் கூட வந்து வேல செய்யச் சொன்னாங்க.
கரென்டு இழுக்க நம்மளயும் கூப்பிட்டாங்களேன்ற பகுமானம், அவங்களும் ஆசையா வேல செய்ய ஆரம்பிச்சாங்க.

 “இங்கா பார்ரா… இவிங்களும் அவுகளோட சேந்திட்டாங்க…” வேடிக்கை பாத்துக்கிருந்த நொண்டிப் பழனி சொன்னதும் மகுந்து போனாங்க.

எர்ரம்ம நாயக்கரும், கினிங்கட்டிமாயனும் அவிங்க தோட்டத்தில ஒக்காந்து, கரென்டு வயரு எங்கிட்டு இழுத்துக்கு வாராங்கன்டு நோட்டம் பாத்துக்கிருந்தாங்க.

வேல நடக்கிற சூட்டிப்ப பாத்தா, ரெண்டு நாளையிலயே கரென்டு வெளக்க எரிய வச்சுருவாக போல.

கரென்டுக் கம்பி இழுக்கிற வேல, பாதையன் காட்டத் தாண்டி, இப்ப நாகன் காட்டயும் தாண்டப் போது.

இனிமே எர்ரம்மநாயக்கரு காட்டுக்குள்ளதான் போலு மரம் ஊண்டியாகணும்.

கட்டக்காளை கூட, எப்ப வம்பிழுக்கலாமின்டு காத்துக்கெடந்த எர்ரம்மநாயக்கரு ஊண்ட விடுவானா? பொத்துனாப்பில எந்திரிச்சு வந்தான்.

வம்பு வழக்க, வழிய இழுக்கிறதுக்காகவே தாம் வீட்டாளுகளப் பூராத்தயும் ஒண்ணு சேத்து, கரென்டு வயர இழுக்க விடக் கூடாதுன்டு சொல்லி, அவிங்க காட்டுக்குள்ள நிக்க வச்சிருக்கான்.

மேக்க, ஊரொட்டுனாப்பில இருக்கிற காடுதான் எர்ரம்மநாயக்கருது, ரெண்டு போலு மரம் ஊண்டுனாவே மூணாவது மரத்த ஊருக்குள்ள ஊண்டிப்புடலாம். இல்லாட்டி, நாலு கட்டா சுத்தித் தான் வரணும்.

“மூணு நாலு போலு மரம் ஊண்டியாகணும், அரசாங்கம் அனுமதிச்சளவுக்குத் தான் கம்பியும் போலுமரமும் இருக்கு. அதுக்கும் மேல அரசாங்கத்துக்கு எழுதி, உத்தரவு வாங்கிறதுன்டா ரொம்ப கடுசான காரியம்” கரென்டு இழுக்கிற ஆளுக பேசிக்கிட்டாக.

பேசிக்கிட்டே நாகன் காட்டுக்குள்ள கெடந்த மிச்சப் போலுமரத்த தூக்கியாந்து, எர்ரம்ம நாயக்கரு காட்டுக்குள்ள போட்டாங்க.
 “அப்பிடியே தூக்கிக்கிட்டு ஓடிப் போயிருங்க… ஆராச்சும் இதுக்கும் மேல வந்தா அவன் கால வெட்டாம விடமாட்டேன்…” எர்ரம்ம நாயக்கரு சவுண்டு விட்டான்.

அவென் வீட்டாளுகளும் சேந்து ஆமாப் போட, கரென்டாளுக பின்னெறிச்சு நின்னுட்டாங்க.

 “வெட்டுற ஆளப் பாரு… யேய், தூக்குங்கப்பா என்னா செய்யிறான்டு பாப்போம்…”ன்டு ஒச்சுக்காளை சொன்னான்.

கீழ வச்சிருந்த போலுமரத்த தூக்கிக் காட்டுக்குள்ள கொண்டுக்கு வந்தாங்க.

 “வேணாம்… ஓடிப்போயிருங்க… அம்புட்டுத்தான்…” எர்ரம்ம நாயக்கரு பின்னெறிச்சுக்கிட்டே அருவாள ஓங்க… பொம்மக்கா கெழவி குறுக்கால விழுந்து மறிக்க… அவிங்க ஆளுகளும் சுத்தி மறிச்சு நின்டுக்கிட்டு, அதுக்கும் மேல ஒரெட்டு கட்டுக்குள்ள வரவிட மாட்டுறாங்கே.

 “அருவாளத் தூக்குறளவுக்கு எர்ரம்மநாயக்கருத் தாட்டியம் பத்தாதே…”ன்டு கட்டக்காளை ஓசிக்க, கூட்டத்துக்குள்ளருந்து இடுப்பு ஒசரத்தில எட்டிப் பாத்தான் கினிங்கட்டி மாயன்.

 “ஓஹோ… ஓம் வேலதானா..? ஏன்டா கினிங்கட்டி மாயா, ஊருக்குள்ள எதும் நல்ல காரியம் நடக்கப்பிடாதா? கெடுதல் பண்றதுக்கே பெறந்திருக்கியாடா … ச்சீய்”  கட்டக்காளை சத்தம் போட்டான்.

ஊராளுக ஒரு பக்கமும், எர்ரம்ம நாயக்கரு வீட்டாளுக இன்னொரு பக்கமும் நின்டுக்கிட்டு, ஒண்ணுக் கொண்ணு காட்டுக்கத்து கத்துறாங்க.

கீழ கெடந்த மண்ணாங்கட்டிய எடுத்து, குறிபாத்து எறிஞ்சான் ஒச்சுக்காளை. அது எர்ரம்ம நாயக்கரு மண்டையில ‘சடீர்’ன்டு விழுக…  “யவ்வா…” ன்டு மண்டையப் புடிச்சுக்கிட்டு கத்துனான்.

 “ஆர்ரா… ஏம்மேல எறிஞ்சவென்… பொளந்துபிடுவேன்…” மண்டைய தேச்சுவிட்டுக்கிட்டே சத்தம் போட்டான்.

எர்ரம்ம நாயக்கர எறிஞ்சுபுட்டாங்கன்டதும், எளவெட்டப் பயலுக கோவமாயி கல்ல எடுத்து மாறி மாறி வீச ஆரம்பிச்சுட்டாங்க. கட்டக்காளை கூடிய மட்டிலும் தடுத்துப் பாத்தான். ம் ஹூம்… தடுக்க முடியல… 

 “ஊருக்கு நல்ல காரியம் வரப் போற நேரத்தில, இப்படியா எடைஞ்சலுப் பண்ணுவாங்க…” சத்தம் போட்ட ஊராளுக முன்னாடி எர்ரம்மநாயக்கரு அருவாளக் காட்டி மெரட்டுனது கோவத்த மூட்டிருச்சு.

 “யேலே… ஊருக்குக் கரென்டு வந்தா ஒனக்கும் பங்குதானடா… விட்டுக் குடுத்துப் போங்கடா…” மாயாண்டிச் சிய்யான் வஞ்சாரு. ஆனா அது ஒருத்தனுக்கும் காதுல விழுகல.

எளம்பட்டறப் பசங்க கைக்குச் சிக்குனத எடுத்து வீச, மண்ணாங்கட்டிக்கும், கல்லுக்கும் தாக்குப் புடிக்கமாட்டாம கூட்டமா நின்டுருந்த சனம் செதறி ஓடுது.

 “ஊய்… ன்டா ஓடி ஒளியிறவனுக்கு அருவாத் தூக்கிறதுக்கு தாட்டியம் வந்திருச்சா… “ வெட்டிப்போட்ட துண்டுக் கம்பிய எடுத்துக்கிட்டு, எர்ரம்ம நாயக்கர அடிக்கப் போன ஒச்சுக்காளைய, கட்டக்காளை தடுத்தான்.

 “அடிச்சுப் பல்லக் கழட்டிப்புடுவேன் ராஸ்கல்… அவெந்தான் அறிவில்லாம வம்பிழுக்கிறான்டா… ஒனக்கு எங்க போச்சு…?

இதக்காக நம்ம பட்ட பாடு ஒனக்குத் தெரியாதா..? பேசாம இருங்கடா… எல்லாச் சரியாப் போகும்…” ஒச்சுக்காளையையும் மத்த ஆளுகளையும் கட்டக்காளை வஞ்சான்.

 “ஊருக்கு வாரத தடுக்க இவென் ஆரு…” ன்டு ஊராளுகளும் சண்ட புடிச்சாங்க. ரெண்டு பக்கமும் கல்லு  ‘சர்ர்…சர்ர்’ன்டு பறக்குது. கட்டக்காளை மத்த ஆளுகள சமரசப்படுத்த மாட்டாம தவிக்கிறான். கூட்டத்துக்குள்ள மிதிபட்டு, ஓடுன கினிங்கட்டிமாயனப் பாத்துப்பிட்டான் ஒச்சுக்காளை.

 “எல்லாப் பெரச்சனைக்கும் காரணம் நீதான…”ன்டு சொல்லிக்கிட்டே, கீழ கெடந்த மண்ணாங்கடிய எடுத்து எறிஞ்சான்.
அது கினிங்கட்டிமாயன் நெஞ்சுலயே விழுக, “யாத்தே…”ன்டு சுருண்டு விழுந்துட்டான்.

 “யவ்வா… இவ்வுடு சப்திவேசுவா…”ன்டு பொம்பளைக வடுகல்ல சொல்லி நெஞ்சில அடிச்சுக் கூச்சல் போட,  “கினிக்கட்டிமாயன் செத்துப் போயிட்டானாம்”னு சொல்லி அங்கெருந்த அம்புட்டுச் சனமும் மெரண்டு போச்சு.

 “யாத்தே… இன்னம் என்னென்னெ நடக்கப் போதோ…” வயசான பொம்பளைக பதறியடிச்சு பொழம்புறாக.

நடக்கிற சம்பவத்த எல்லாம் பாத்து பேதலிச்சுப் போயி நின்ட கட்டக்காளை, “இம்புட்டுப் பாடு பட்டதும், வீணாப் போயிருமோ…”ன்டு புலம்பினான்.  எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டே ஒண்ணு மண்ணா போகணுமின்டு நெனச்சது தப்பா?

கட்டக்காளை மனசு புயல்ல சிக்குன மரங்கெணக்கா சுத்திச் சொழட்டுது…

 (தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in