ரஜினி சரிதம் 17: ஆறிலிருந்து எழுபது வரை- ஏவிஎம் ஸ்டுடியோவில் ஏற்பட்ட அவமானம்!

ரஜினி சரிதம் 17: ஆறிலிருந்து எழுபது வரை- ஏவிஎம் ஸ்டுடியோவில் ஏற்பட்ட அவமானம்!

“நல்ல மனிதர் கதாபாத்திரமா கூப்பிடு சிவகுமாரை...” என்று சொல்லும் அளவுக்கு உத்தமக் கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தார் சிவகுமார். அவரை பெண் பித்தராக்கினார் எஸ்.பி.முத்துராமன்.  “வில்லன் கேரக்டரைக்கூட ஸ்டைலா ஊதித் தள்ளணுமா... அந்தப் புதுப்பையன் ரஜினியைக் கூப்பிடுங்கப்பா...” என்று முத்திரை குத்தப்பட்டிருந்த ரஜினியை அபலைப் பெண்ணுக்கு அடைக்கலாம் தரும் காவலனாக, நல்லவன் கதாபாத்திரத்தில் பொருத்தினார் எஸ்பிஎம். அப்படி, குறுகிய காலப் படமாக உருவான ‘புவனா ஒரு கேள்விக்குறி’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தின் வெற்றிக்கு இந்த ‘உல்டா’ சோதனை முயற்சி முக்கிய காரணம் என்றால், இளையராஜாவின் இசை இன்னொரு காரணம். இதை எஸ்பி முத்துராமனே குறிப்பிட்டிருக்கிறார்.

முதல் டூயட்

‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் ரஜினியும் மீராவும் காதலில் உருகும் கிராமத்துப் பறவைகளாக சிறகடித்துப் பாடும்  ‘விழியிலே மலர்ந்தது... உயிரிலே கலந்தது... பெண்ணென்னும் பொன்னழகே... அடடா எங்கெங்கும் உன்னழகே...’ என்கிற பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இளையராஜாவின் மெட்டில் பிறந்த  இந்த டூயட் பாடலுக்கு பஞ்சு அருணாசலம் எழுதிய இளமையும் இனிமையும் நிறைந்த வரிகள் இன்னும் உச்சம் தொட வைத்தன. அந்தப் பாடலை எஸ்பிஎம் தடா அருவியை ஒட்டிய நீரோடையில் படம் பிடித்திருந்த அழகு ரசிகர்களைக் கட்டிப்போட்டது.

இதுதான் ரஜினியின் திரை வாழ்க்கையில் முதல் டூயட். 'உயிரிலே கலந்தது' பாடல் காட்சி படப்பிடிப்பில் ‘நாகரா’ பிளே பேக் இயந்திரம் பழுதானதால் படக் குழுவினரை சென்னைக்கு அனுப்பி வைத்த எஸ்பிஎம், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தங்கினார். அவர் மட்டும் அங்கிருந்த டீ கடையின் மொட்டை மாடியில் படுத்துக்கொள்ளப் போகிறார் என்று அறிந்ததும் ரஜினியும் அவருடனே வெறும் தரையில் படுத்துறங்கி, டீ கடைக்காரர் கொடுத்த வறட்டுச் சப்பாத்திகளைச் சாப்பிட்டார்.  அந்த சங்கடங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அதிகாலையிலேயே ஓடையில் குளித்து ரெடியாகி 6 மணிக்கெல்லாம் ஷாட்டுக்குத் தயாராக வந்துவிட்டார் ரஜினி. இந்த அர்பணிப்பைக் கவனித்த எஸ்பிஎம், ரஜினியின் எதிர்காலத்தை கணித்தவராக ‘இவருடன் நாம் நிறைய படங்களில் பணியாற்ற வேண்டும்’ என்று எண்ணிக்கொண்டார். ‘புவனா ஒரு கேள்விக்குறி’ இன்னொரு வகையிலும் புதிய சாதனை படைத்துவிட்டது. ஆம், கதாநாயகர்கள் வெளுப்பாக இருந்தால்தான் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற அதுவரையிலான கருத்தாக்கதை சுக்கு நூறாக உடைத்துப் போட்டுவிட்டது அந்தப் படம்.

முதல் பன்ச்!

‘புவனா ஒரு கேள்விக்குறி’ வெளியாகி 3 வாரங்களே ஆகியிருந்தது. இந்நிலையில் ரஜினி ‘பரட்டை’யாக நடித்த  ‘16 வயதினிலே’ அடுத்த இரண்டு வாரங்களில் வெளியானது. அந்தப் படத்தில் ‘இது எப்படியிருக்கு?’ என்கிற வசனத்தை திரும்பத் திரும்பப் பேசி, அது ‘பன்ச்’ ஆக மாறிப்போய் ரஜினியின் சினிமா வாழ்க்கையில் அதிர்ஷ்ட தேவதையை அழைத்து வந்தது. முதல் வாரத்தில் காத்தாடிய அந்தப் படம் இரண்டாம் வாரத்திலிருந்து எக்குத்தப்பான ஆதரவை ரசிகர்களிடம் பெற்றது. இந்தச் சமயத்தில்தான் ரஜினியை ‘வெறித்தனமான’ உழைப்பைப் நோக்கித் தள்ளிய அந்த சம்பவம் நடந்தது.

ராயப்பேட்டையில் மொட்டை மாடி கீற்று வீட்டில் ரஜினியைக் காண வந்தார் ஒரு தயாரிப்பாளர். தன்னுடைய படத்தின் கதாநாயகன் யார் என்பதைச் சொல்லிவிட்டு,  “நீங்கதான் வில்லன் ரோல் பண்ணவேண்டும். எவ்வளவு சம்பளம் கேட்கிறீர்கள்..? நாளை மறுநாள் படப்பிடிப்பு. உங்ககிட்ட டேட் இருக்கா?” என்று கேட்டார் அந்தத் தயாரிப்பாளர். அப்போது டேட்ஸ் இருந்ததாலும் பணத்துக்கான தேவை இருந்ததாலும் கதையையும் கதாபாத்திரத்தையும்கூட கேட்காமல் வெறும் 6 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு நடிக்க  ஒப்புக் கொண்டார் ரஜினி. பேசிவிட்டுக் கிளம்பிய தயாரிப்பாளரிடம்  “ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து கன்ஃபார்ம் பண்ணிக்குங்க” என்றார் ரஜினி. அதற்கு தயாரிப்பாளர், “நீங்கள் இருப்பீர்களோ மாட்டீர்களோ என்று தெரியாமல் வந்துவிட்டேன். பணம் எடுத்து வரவில்லை... நாளை உங்களுக்கான உடைக்கு அளவெடுக்க டெய்லரையும் அட்வான்ஸ் கொடுக்க எனது மேனஜரையும் அனுப்புகிறேன்” என்று சொல்லிச் சென்றுவிட்டார்.

ரஜினியும் தயாரிப்பாளரின் வார்த்தையில் நம்பிக்கை வைத்துக் காத்திருந்தார். மறுநாள், சொன்னது போலவே டெய்லரும் புரடெக்‌ஷன் மேனஜரும் வந்தார்கள். உடைக்கு அளவெடுத்த அவர்களிடம் அட்வான்ஸ் பற்றி கேட்டார் ரஜினி. “தங்களிடம் அட்வான்ஸ் எதுவும் கொடுத்தனுப்பவில்லையே” என்றனர் அவர்கள். இது சரியாகப் படாததால் வீட்டுக்கு அருகிலிருந்த மளிகைக் கடையிலிருந்து தயாரிப் பாளருக்கு போன் செய்தார் ரஜினி. போனை எடுத்த தயாரிப்பாளர், “அடடா... நான் கொடுத்தனுப்ப மறந்துட்டேன். ஒண்ணு செய்ங்க... நாளைக்கு நீங்க ஏவிஎம் செட்டுக்கு வந்துடுங்க. மேக் -அப் போடுறதுக்கு முன்னாடி அட்வான்ஸ் பணத்தைக் கொடுத்துடுறேன்” என்றார். அதை நம்பி கையில் ஒரு ரூபாய்கூட இல்லாமல், கம்பெனிக் காரில் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு வந்துவிட்டார் ரஜினி.

போ வெளியே..!

படப்பிடிப்புக்கு கதாநாயகன், கதாநாயகி, துணை நடிகர்கள் எல்லோரும் வந்து மேக் - அப் போட்டு ரெடியாகிவிட்டார்கள். ரஜினியிடம் மேக்-அப் மேன் வந்தபோது புரடெக்‌ஷன் மெனேஜரைக் கூப்பிட்டு,   “நான் மேக் -அப் போடுறதுக்கு முன்னாடி அட்வான்ஸ் கொடுப்பதாகச் சொன்னார் புரொடியூசர். உங்களிடம் கொடுத்தாரா?” என்று கேட்டார்.  “இல்லையே” என்று அவர் சொன்னதும், “சரி, புரொடியூசர் வந்ததும் மேக்- அப் போட்டுக்கொள்கிறேன்” என்றார் ரஜினி. இந்த தகவலை உடனடியாக மேனேஜர் புரொடியூசருக்குச் சொல்ல, அடுத்த அரை மணி நேரத்தில் அவரது அப்பாசிடர் கார் சீறிக்கொண்டு வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய  தயாரிப்பாளர் நேரே ரஜினியிடம் வந்தார்.  

வந்தவர் ரஜினியைப் பார்த்து, “ஏண்டா... நேத்து நடிக்க வந்தப் பய நீ... நாலு அஞ்சு படம் தான் பண்ணியிருக்க... அதுக்குள்ள உன் மனசுல என்ன பெரிய ஹீரோன்னு நெனப்பா... அட்வான்ஸ் கொடுத்தாதான் மேக் -அப் போடுவியா? உன்னை மாதிரி எத்தனைப் பேரைப் பார்த்திருப்பேன்... உனக்குக் கேரக்டரும் கிடையாது ஒண்ணும் கிடையாது. போடா வெளியே..!” என்று காட்டுக் கத்தலாக சத்தம் போட்டார்.

ரஜினி பொறுமையாக, “என்ன சார்... நீங்கதானே மேக் -அப் போடுறதுக்கு முன்னாடி அட்வான்ஸ் தரேன்னு ஒத்துக்கிட்டீங்க” என்றார் தயங்கியபடியே.  இதைக் கேட்டு இன்னும் கடுப்பான தயாரிப்பாளர், “சொன்னா... உன்ன மாதிரி ஆளுக்கு கொடுத்துடணுமா?” என்றார். ரஜினி இன்னும் பொறுமை காத்து,  “சரி சார்... என்னைய வீட்ல ட்ராப் பண்ண சொல்லிடுங்க போதும்” என்றார். அதற்கு தயாரிப்பாளர், “நீ இங்க கம்பெனி காருல வந்ததுக்கே எனக்கு வாடகை கொடுக்கணும்... காரெல்லாம் அனுப்ப முடியாது கெளம்பு” என்று துரத்தாத குறையாகக் கத்திவிட்டு அங்கிருந்து செட்டுக்குள் போனார்.

இது எப்படியிருக்கு?

பலரது முன்னிலையில் ரஜினிக்கு அது பெருத்த அவமானம் மட்டுமல்ல, கையறு நிலையாகவும் போய்விட்டது. பேருந்தில் வீட்டுக்குச் செல்லலாம் என்றால் கையில் பைசா காசு இல்லை. ஏவிஎம் ஸ்டுடியோவிலிருந்து ராயப்பேட்டை நோக்கி சாலையில் வேகமாக நடக்கத் தொடங்கினார் ரஜினி. அப்போது சாலையோரக் கட்டிடச் சுவர்களில் ‘16 வயதினிலே’ வெற்றிகரமான 2-வது வாரம் போஸ்டர் வழி நெடுகிலும் ஒட்டப்பட்டிருந்தது. அந்தப் போஸ்டர்களின்  ‘பரட்டை’ கேரக்டர் லுக் அச்சிடப்பட்டு  ‘இது எப்படி இருக்கு?’ என்ற வாசகமும் பொறிக்கப்பட்டிருந்ததை கவனித்தார் ரஜினி. காலம் தன்னைப் பார்த்து, “இது எப்படி இருக்கு?” என்று கேட்டதைப் போல் இருந்ததாக ரஜினி அந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.

அப்படி நடந்து வந்துகொண்டிருந்த ரஜினியை ரசிகர்கள் சிலர் அடையாளம் கண்டுகொண்டு. “ஏய்... பரட்டை நடந்து போராண்டா...” என்று கூவினார்கள். ரஜினி மவுனமாக சாலையில் நடந்தார். இரவு பகல் பாராமல் வெறித்தனமாக உழைத்து வெளிநாட்டுக் கார் வங்கி, இதே கோடம்பாக்கம் சாலையில் கம்பீரமாக சாவாரி செல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டே நடந்தார். அந்த வெறித்தனமான உழைப்பை தொழிலில் காட்டினார். அப்படி உழைத்ததால் தான் 1977-ல் ரஜினி நடித்த 15 படங்கள் வெளியாகின. 1978-ல் 13 படங்கள் வெளிவந்தன. இவை இந்திய சினிமாவில் அப்போது எந்த நடிகரும் செய்யாத சாதனையாக அமைந்தன. ஒரு வில்லனாகவும் குணச்சித்திர நாயகனாகவும் கதாநாயகனாகவும் கவுரவ வேடத்திலும் ரஜினியை ரசிகர்களை கொண்டாட வைத்தது அவருடைய சுறுசுறுப்பான நடிப்பும் வசனத்தை அவர் வேகமாகப் பேசும் ஸ்டைலும்தான். அப்படித்தான் ‘பைரவி’ அவரை வசூல் நாயகனாக்கிய சரித்திரமும் நிகழ்ந்தது.

(சரிதம் பேசும்)

படம் உதவி: ஞானம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in