கட்டக்காளை - 20

கட்டக்காளை - 20

காளாஞ்சிக்கருப்பன் வாசல்ல, முறுக்குன கொம்போட, கதம்பம் கழுத்துல சுத்துன செம்மறிக் கெடாவப் புடிச்சுக்கிட்டு தயாரா நிக்கிறாங்க.

பொங்கப்பானைய அடுப்பிலருந்து எறக்கி வச்சா கழிச்சியாத்தா, “யேலே வீரணா… தாய் மாமெங்காரனக் கூட்டியாடா… கெடா வெட்டட்டும்”னு பெலக்கா கூப்பிட்டா.

“யேய்… வாங்க மச்சான், கெழவி ஒன்னியத்தாங் கூப்பிடுதேய்…” மலைராமன கூப்பிட்டான் ஒச்சுக்காளை.

ரெட்டக்கெடா வெட்டணும்னு நேத்திக்கடன், அதான் ஒண்ணு சொன்னாப்பில ரெண்டு கருங்கெடாவும் நிக்கிது.

கட்டக்காளை, லச்சுமாயி, கழிச்சியாத்தா, பின்னத்தேவன்டு அங்கெனருந்த ஆளுக எல்லாம் வடக்காம திரும்பி சாமிகிட்ட வேண்டுறாக.

கெடா வெட்டுறதுக்குன்டே செஞ்ச அருவாள மலைராமங்கிட்ட எடுத்துக்காந்து குடுத்தான் ஒச்சுக்காளை.

அருவாளை கையில புடிச்ச மலைராமனுக்கு மேலெல்லாம் புல்லரிக்கிது. அந்தரத்தில நிக்கிறாமாரி இருக்கான்.

பத்து வருசமா பகையா இருந்த அப்பனோட சம்மதத்தோட நெறஞ்ச சபையில தனக்கு மரியாதை கெடச்சிருக்கு.

இம்புட்டு ஆளுகளுக்குள்ள மெரண்டு நின்ட கெடா, சுத்திலும் வெறிச்சுப் பாத்துச்சு.

நெற கொடத்துத் தண்ணியில மஞ்சளக் கலக்கி தூக்கிட்டு வந்த அன்னத்தாயி, வீரணங்கிட்ட குடுத்தா. மஞ்சத் தண்ணிய வாங்கி கெடா மேல ஊத்துனான் வீரணன்.

வடக்காமத் திருப்பி நிப்பாட்டிருந்த கெடா, கெழக்காம திரும்பி நிக்கிற காளாஞ்சிக்கருப்பனுக்கு நேராத் தலையத் திருப்புச்சு.
ஒரு கொடத்து தண்ணியயும் முழுசா ஊத்தியும் ஒடம்ப குலுக்காம தலைய மட்டும் லேசாத்திருப்பி அங்கிட்டும் இங்கிட்டும் பாத்துச்சு.
 “சாமி குலுக்கிருப்பா…” கூடியிருந்த அம்புட்டாளுக வாயும் தன்னால முணுமுணுக்குது.

 “காளாஞ்சிக்கருப்பா ஓம் படையல ஏத்துக்கப்பா… ஏஞ் சோதிக்கிற…”ன்டு சொன்ன கழிச்சியாத்தா, “கட்டக்காள... கெடா மேல கொஞ்சம் தின்னீறப் போட்டு விடுப்பா…”ன்டா.

துண்ட எடுத்து இடுப்பில இறுக்கி கட்டுன கட்டக்காளை,  “தெரிஞ்சோ தெரியாமலோ குத்தங் கொற ஏதாச்சும் செஞ்சிருந்தா மன்னிச்சு… இந்த வேண்டுதல ஏத்துக்க சாமி…”ன்டு சொல்லி கையெடுத்துக் கும்பிட்டு கொஞ்சம் தின்னீற எடுத்துக் கெடா மேல தூவிவிட்டான்.

கூடியிருந்த அம்புட்டுச் சனமும் கெடாயவே பாத்துக்கிருக்கு… கட்டக்காளை கண்ணத் தொறக்கல, சாமிகிட்ட வேண்டிக்கிட்டே இருந்தான்.

செத்தவடத்துல கெடா ஒரு சிலுப்புச் சிலுப்ப, அது ஒடம்புல ஊத்தியிருந்த மஞ்சத் தண்ணி கட்டக்காளை மேலயும், சுத்திலும் நின்ட ஆளுக மேலயும் பட்டு தெறிச்சுது.

அம்புட்டுத்தான்... பொம்பளைக கொலவச் சத்தமும், எளந்தாரிப் பையகளோட சீத்திச் சத்தமும் காதத் தொளைக்குது.

‘சதக்’ மலைராமன் கையில புடிச்சிருந்த அருவாவுக்கு ரெண்டு கெடாவும் மிசுங்கல. களாஞ்சிக் கருப்பன் வாசல்ல ஏத்துக்க சாமின்டு கெடக்கு.

“எல்லாரும் வாங்க… சாமி கும்பிடுவோம்…”ன்டு கட்டக்காளை சொல்ல காளாஞ்சிக்கருப்பனுக்கு பொங்கச் சோறத் தளுக எலை போட்டு பூசாரி தயாரா வச்சிருந்தாரு.

அம்புட்டாளுகளும் சாமி முன்னாடி கால்ல விழுந்து கும்புட்டாங்க.

நேத்திக் கடனுக்காக கட்டக்காள வெட்டுன கெடா, மொடாப் பானையில கொழம்பாக் கொதிக்கிது.

கொழம்பு வாட மூக்கத் தொலைக்க மரத்தடி நெழல்ல ஒக்காந்திருந்த கெழடு கட்டைக பொத்துனாப்பில எந்திரிச்சு வந்து எடம் புடிச்சு ஒக்கார ஆரம்பிச்சுட்டாக.

கறி வெந்திருச்சான்டு வேகுற கறித்துண்ட எடுத்து நசுக்கிப் பதம் பாத்துக்கிருந்தா பின்னாயி.

 “என்னாத்தா வெந்திருச்சா…” கட்டக்காளை கேட்டான். வெவரம் புரிஞ்ச பின்னாயி, “ம்… எல்லாரயும் ஒக்காந்து சாப்புடச் சொல்லுப்பா…” ன்டு சொல்லி முடிக்கல, பாதிச்சனம் பந்தியில ஒக்காந்துருச்சு…

எல்லாரும் ஒக்காந்து மனசார சாமியக் கும்பிட்டு சாப்பிட்டாங்க. இந்தக் கடசிக்கும் அந்தக் கடசிக்கும் கறியுஞ் சோறும் பறபறக்குது.
வீரணன், சாவடங்கி, அம்போதி இவிங்க கூட, அஞ்சாறு எளம்பட்டற பசங்களும் சேந்து பந்தி போடுறதுல பம்பரமாச் சுத்துறாங்க.
அகப்பையில கொழம்ப மோந்து எலையில ஊத்தும் போதே ரெண்டு கறித்துண்ட எடுத்து வாயில போட்டு மென்டுக்கிட்டே திரிஞ்சான் சாவடங்கி.

“கொழம்பு ஊத்துறீயோ இல்லியோ… சட்டிக் கறிய நீயே தின்டு தீத்துப்பிடுவ போல… நீயும் எலையப் போட்டு ஒக்காருடாய்…” அம்போதி சிரிச்சுக்கிட்டே நக்கல் பண்ணுனான்.

கால நீட்டியும் ஒத்தக் கால குத்த வச்சுக்கிட்டும், கறிக் கொழம்பும் நெல்லுச் சோறும் ஆசை ஆசையா சாப்புடுற சனத்த பாத்து மகுந்து போன கட்டக்காளை, ஒச்சுக்காளைய கூட்டிக்கிட்டு எங்கயோ கெளம்பிட்டான்.

காட்டெரும கெணக்கா மூஞ்சியோட பெரிய லாரி ஊருக்குள்ள மொத மொறயா வாரதப் பாத்த சனங்க என்னமோ ஏதோன்டு அலரியடிச்சுக்கிட்டு ஓடுது.

நடக்கமாட்டாத கெழடுகட்டைக, நெத்தியில கையவச்சு ஆருன்டு உத்துப்பாக்குதுக.

காளியாத்தா கோயிலு முக்குல வந்து நின்ட லாரியிலருந்து திமுதிமுன்டு பத்தாளுக அரைக்கால் டவுசரோட எறங்கினாங்க.  பாத்தா போலீசு கெணக்கா இருக்கு.

கறியுஞ் சோறும் சாப்பிட்டுக்கிருந்த சனம் என்னா ஏதின்டு புரியாம முழிக்கிது.

லாரியிலருந்து கொழாச் சட்ட போட்ட ஆபிசரு எறங்குனாரு. அவருக்குப் பின்னாடியே கட்டக்காளையும் எறங்கி வாரதப் பாத்த அப்பறந்தான் சனங்க நிம்மதிப் பெருமூச்சு விட்டாங்க.

 “யேய்… எல்லாரும் வாங்கப்பாய்… இவுகதான் நம்ம ஊருக்கு கரென்டு குடுக்கப்போற ஆபீசருக”  கட்டக்காளை சொன்னான்.
மொட்டய நாயக்கரு, மொக்கராசு செட்டியாரு, சின்னனம்பலம், சோனை சேர்வை, தாமஸ் விருமாண்டி... ன்டு ஊருல உள்ள பெரியாளுகள கூப்புட்ட கட்டக்காளை, ஏற்கெனவே வாங்கி வச்சிருந்த மாலைய ஆபீசருக்கு போடவெச்சு மரியாத செஞ்சான்.
கட்டக்காளையும், ஊர்மக்களும் குடுத்த வரவேற்ப பாத்து, வந்திருந்த கரென்டு ஆபீசருக மெச்சுப் போனாக.

“எண்ணெய் இல்லாம வெளக்கு எரிய வைக்கிறவக, மருதக் கோட்டயில பாத்த வெளிச்சத்த, நம்மூருக்கும் கொண்டுக்காறாக…”ன்டு சொன்னான் கட்டக்காளை.

ஊரு சனமே சுத்திலும் நின்டு வேடிக்க பாத்துக்கிருக்கு.

மாரியும் சின்னனும் தென்னந்தட்டிய எடுத்துக்கு வந்து வருசையா போட்டாங்க.

வந்த ஆபீசர்கள,  “மொதல்ல ஒக்காந்த்து சாப்புடுங்கய்யா… மத்தத பெறகு பேசலாம்…”ன்டான் கட்டக்காளை.

வந்தவக மனம் கோணாமா செஞ்சமின்டாத்தான், சொனக்கமில்லாம வேல நடக்குமின்டு நெனச்சு, அவங்கள உபசரிக்கிறதுலயே குறியா இருந்தான்.

ஒச்சுக்காளை தலைவாழ எலைய எடுத்து பொத்துனாப்பில விரிச்சான்.

 “நீங்க ஒக்காருங்கய்யா…” கட்டக்காளை சொன்னான்.

 ஓங்குதாங்கா இருந்த ஆபீசரு கெம்பீரமா நின்டு சுத்திமுத்தியும் பாத்துக்கிட்டே, “ஒங்க ஊருக்கு வெளிச்சம் குடுக்கப் போறோம். இனிமேக்க இருட்டுக்குள்ள செரமப்பட வேண்டியதில்ல… பட்டப் பகலுமாரி வெளிச்சமா இருக்கும்… மொதல்ல தெருவுக்கும் கட்டக்காளை வீட்டுக்கும் லைட்டுப் போட்டு விடப் போறோம்… மத்தபடி ஆராருக்கு வேணுமின்டாலும் கரென்டு குடுப்பம்…” ன்டு வெவரத்தச்  சொன்னாரு.

மருதக் கோட்டைக்கி போயிப் பாத்தவுகளத் தவிர, மத்தாளுகளுக்கு அவரு சொன்னது எதுவுமே புரியல.

 “சாப்புட்டுட்டு பேசலாமிய்யா…” ன்டு கட்டக்காளை மறுபடியும் சொன்னான்.

ஆளோட்டாளா அந்த ஆபீசரும் வருசையா ஒக்கார, கூட வந்திருந்த மத்தவுகளும் ஒக்காந்து சாப்புட்டாங்க.

மேக்கோரத்தில பெத்துராஜும் தாம் பொண்டாட்டிக சுப்பம்மாளயும் பொன்னக்காளையும் கூட்டியாந்து, கால நீட்டி ஒக்காந்து சாப்புட்டுக்கிருக்கான்.

மாரியும், சின்னனும் மூணாவது பந்தியிலயும் ஒக்காந்து எந்திரிக்காம கறியும் கஞ்சியையும் வெட்டி வெளாசிக்கிருக்காங்க.

சாப்பிட்ட எலையப் பூராம் கூடையில எடுத்துக் கிட்டுருந்த குவ்வானயும், சோட்டையனையும் பாத்த கட்டக்காளை, “எலே… நீங்களுஞ் சாப்டுங்கடா…” ன்டு அக்கறையாச்  சொன்னான்.

மனசும் வகுறும் நெறஞ்சு அம்புட்டுச் சனமும் கட்டக்காளைய மனசார வாழ்த்திட்டுப் போனாக…

எர்ரம்ம நாயக்கரும் கினிங்கட்டிமாயனும் இதையெல்லாம் எட்டால நின்டு வேடிக்க பாத்துக்கிருந்தாங்க.

 “மலமாரியா நீங்க இருக்கும் போச, இவிங்கதான் ஊருக்குப் பெரியாளுகளா... ஒன்னிய ஒரு ஆளாக் கூட மதிக்க மாட்டுறாங்களேய்யா… என்னான்டு கேளுய்யா…” கினிங்கட்டிமாயன் கொளுத்திப் போட ஆரம்பிச்சுட்டான்.

 “பொறுடா... போலு மரம் ஊண்டி கரென்டுக் கம்பிய இழுத்துக்கார தினுசப் பாத்தா, நம்ம காட்டு வழியாத்தான் வரும்போல… ம்… வரட்டும் அம்புட்டு லேசுலயா விட்டுருவோம்?”

சொல்லிப்புட்டு எகத்தாளமாச் சிரிச்ச எர்ரம்ம நாயக்கரு, கரென்டு கொண்டுக்கார விடாம தடுக்கத் திட்டம் போட்டான்.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in