கட்டக்காளை - 19

கட்டக்காளை - 19

மொரட்டு மீசையும், ஓங்குன அருவாளுமா கண்ணொத் தெரட்டிக்கிட்டு காளாஞ்சிக்கருப்புச்சாமி வீராப்பா நிக்கிது… எண்ணெய ஊத்தி ஊத்தி கரேன்டு பிசுக்குப் படிஞ்சு, சிய்யான் பாட்டன் காலத்துச் செலன்றத சொல்லாமச் சொல்லுது.

எத்தனையோ வருசத்துக்கு முன்னாடி, எப்பிடியோ மொளச்ச எலந்தமரம், கெளபரப்பி ஒசந்து நிக்கிது. சாமி மரத்த ஆரும் ஏறி உலுக்கப்பிடாதாம்… கீழ விழுந்த எலந்தப் பழத்த மட்டுந்தான் பெறக்கித் தின்னணும்… இல்லையின்டா சாமி குத்தாமயிருமின்டு ஒத்தக் கொப்பயும் ஆரும் ஒடிக்கிறதில்ல. அதாங் கெளபரப்பி பெருசா நிக்கிது.

கோயில ஒட்டியிருந்த ஆலமரத்துக்கடியில, கெடா வெட்டுக்கு வந்த சனங்க ஒக்காந்திருக்கு. பல்லுப் போன கெழடு கெட்டைக, ஓரமா ஒக்காந்து பழங்கதைய பேசிக்கிருக்கு.

லச்சுமாயி அப்பென் ஆத்தா, மொதநாளே வந்துட்டாக. தூரந்தொலவில இருந்த சொந்த பந்தமெல்லாம் வண்டியக் கட்டிக்கிட்டு வெள்ளனா வந்து காத்துக் கெடக்கு.

பொங்க வைச்சுக் கெடா வெட்டணும். தாய்மாமென்ற மொறைக்கி லச்சுமாயி அண்ணன் மலைராமந்தான் வெட்டியாகணும்.
அப்பென் பின்னத்தேவன் சண்டைக்கு வந்திருமோன்டு பயந்துக்கிட்டு மலைராமன் வராம இருந்திருவானோன்டு கட்டக்காளைக்கு பலவாறா ஓசன. அப்பப்ப வண்டிப் பாதையப் பாத்துக்கிட்டே இருந்தான்.

“சனம் பூரா காத்துக் கெடக்கு… என்னாங்கடி மசமசன்டுக்குத் திரியிறீங்க யேய்… லச்சுமாயி, பொங்க வச்சாத்தான் கெடா வெட்ட முடியும், வாத்தே… சாமியக் கும்புட்டு அடுப்பப் பத்தவை” கழிச்சியாத்தா சொன்னா.

அண்ணென் வரட்டுமின்டு காத்துக் கெடந்த லச்சுமாயி, கழிச்சியாத்தா சொல்லத் தட்ட மாட்டாமெ ,கட்டக்காளைய ஏறுட்டுப் பாத்தா.

“வாரது வரட்டும் வேலையச் செய்யிங்க”ன்டு சாடையில கட்டக்காளை சொன்னான்.

அன்னத்தாயும், அவ சோட்டாளியும் ஆளுக்கொரு பிள்ளையத் தூக்கிக்கிட்டு அழுகாம பாத்துக்கிட்டாளுக.

எந்திரிச்சு வந்த லச்சுமாயி, அடுப்பப் பத்தவச்சு, பால் கொதிச்சிராம, சின்ன வெறகுக் குச்சியா வச்சு சின்னத் தீயா எரிச்சா.
பொங்க வச்சு எறக்குறதுக்குள்ள, மச்சினன் மலைராமன் வந்துடுவான்டு நெனச்சுக்கிட்டு பொங்க வைக்கிறதப் பாத்துக்கிருந்தான் கட்டக்காளை.

அக்கினி வெய்யிலு பங்குனி மாத்தயிலயே கொளுத்துது. ஏறுவெய்யிலுக்கு கிறுகிறுப்பு வந்திருமின்டு, அங்கங்க இருந்த மரத்தடி நெழல்லத்தேடி சனம் ஓடி ஒதுங்கி ஒக்காந்துருக்கு.

காடுகர அறுவடை முடிஞ்சு, மழை தண்ணி இல்லாத தனால, கோட வெள்ளாம வைக்க முடியல; அம்புட்டும் தருசாக் கெடக்கு.
கரென்டு குடுக்கிறதுக்காக போலு மரம் ஊண்டிக்கிட்டு வாராக…

அவுகளுக்கு வேணுமின்ற ஒதவிய செய்யிறதுக்காக கட்டக்காளை அனுப்பி வச்ச வீரணன் வந்துட்டான்.

“பெரிய பெரிய மரத்த ஊண்டி, கரென்டுக் கம்பிய இழுத்துக் கட்டிக்கிட்டே வாராக… பொழுதுக்குள்ள நம்மூருக்கு வந்துருவாக”ன்டு கட்டக்காளை கிட்ட சொன்னான்.

“சரிடா போயி மத்த வேலையப் பாரு”ன்டு கட்டக்காளை அவன அனுப்பி வெச்சான்.

பக்கத்தில ஒக்காந்திருந்த மாயாண்டி பெருசு, “ஏப்பா கட்டக்காளை… ஒரேடியா பிள்ளைகளுக்கும் மொட்ட போட்டிருக்கலாமில்ல”ன்டு ஓசன சொன்னாரு.

“அதெல்லாம் சரித்தான் சிய்யான்... பச்ச பிள்ளைக, பிஞ்சு மண்ட இப்ப முடியெடுக்க முடியாதில்ல… வருசம் திரும்பட்டும், அப்ப மொட்டயெடுத்து காது குத்திப்பிடலாம்” சொல்லிக்கிட்டே தூரத்தில மலைராமன் நடந்து வாரதப் பாத்துப்பிட்டான் கட்டக்காளை.
“ஏலே ஒச்சுக்காளை, அந்தா… மச்சினன் வந்துட்டான்… போயிக் கூட்டிக்காடா”ன்டு சத்தமா குரல் குடுத்தான்.

தயங்கிக்கிட்டே வந்த மலைராமங்கிட்ட விறுவிறுன்டு போன ஒச்சுக்காளை, “எதுக்கு இம்பூட்டுத் தயக்கம்… நெகாத் தெரியாம வேற எடத்துக்கு வந்துட்டமின்டு ஓசிக்கிறீகளா. அதெல்லாமில்ல... சரியாத்தான் வந்திருக்கீங்க”ன்டு நக்கலாச் சிரிச்சுக்கிட்டே கூட்டிக்காந்துட்டான்.

“வாய்ய்யா… மொதமொத தங்கச்சி வீட்டு விசேஷத்துக்கு வாராளு… தங்கச்சி, பிள்ளைகளயும் கூட்டியார வேணாமா…?”

கட்டக்காளை கேட்டது மலைராமன் மண்டக்குள்ள ஏறல. அப்பன் என்னா செய்யப் போதோன்ற பயந்தான் மண்டயச் சுத்துன வண்டு கெணக்கா ருங்குது.

பதிலுச் சொல்ல மாட்டாம, மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு நிக்கிறான். அப்பன் எங்கன ஒக்காந்திருக்கின்டு அவெங் கண்ணு சுத்தி முத்தியும் தேடுது.

பொங்க வைக்கிறதிலயே குறியா இருந்தா லச்சுமாயி.

ஒண்ணு சொன்னாப்பில பொங்கப் பொங்கி மேலவருது... நாலா பக்கமும் பொங்கி வரணுஞ்சாமின்டு வேண்டிக்கிட்டே கட்டக்காளையப் பாத்தா. அண்ணெனும் வந்துருச்சுனதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டா.

கட்டக்காளைகிட்ட மலைராமன் பேசிக்கிருக்கிறத, வேப்ப மரத்தடியில ஒக்காந்திருந்த பின்னத்தேவனும் பாத்துப்புட்டான்…
அங்கருந்த மேனிக்க மலைராமன மொறச்சுப் பாத்தான். விசுக்கின்டு எந்திரிச்சுத் துண்ட ஒதறி, தோள்ல போட்டுக்கிட்டு விறிவிறுன்டு மேக்காம நடந்து போனான்.

மாமனாரு கோவிச்சுட்டுப் போறதப் பார்த்த கட்டக்காளை, விறுவிறுன்டு ஓடிப்போயி ஒடசாலி மரத்துக்கிட்ட வழிமறிச்சான்.
“வா மாமா... எங்கபோற…”ன்டு கூப்புட்டான்.

“ஒரு அவசரச்சோலி அதாங் கெளம்பிட்டேன்…”

“ஓம் மக வீட்டு விசேஷத்த விடவா ஒனக்குப் பெருஞ்சோலி கெடக்கு. வா மாமாய்…” கட்டாயப்படுத்துனான் கட்டக்காளை.

“இல்ல மருமகனே… அங்கென என்னால ஒக்கார முடியல…”

“ஏன்… ஓம்மகன் வந்திருக்கான்டா ?”

“ஆரு… அவனா ஏம்மகென்… எனக்குப் பிள்ளையே இல்ல. அவனாரு…”

“அப்பறம் எதுக்குப் போறீங்க…”

“என்னியச் சோதிக்கிறியா…”

“ஓம்பிள்ளைகள இப்ப எம்புட்டு ஆசையாப் பாத்துக்குற… அதேமாரித்தான் நானும் அவென ஆசையாசையா வளத்தேன்…
கடைசிக்கு பொம்பளைக்கு ஆசப்பட்டு… பெத்தவுகள நெஞ்சுல ஏறி மிதிச்சுப்பிட்டுப் போயிட்டான்… அவென் மூஞ்சியில முழிச்சிக்கிட்டு, என்னால அங்கென ஒக்கார முடியாது மருமகனே, கோவிச்சுக்கிறாத… நான்வாரேன்”

கலங்கிய கண்ணோட பின்னத்தேவன் அங்கெருந்து கெளம்புனான்.

வழிய மறிச்ச கட்டக்காளை, “சரிதான் மாமாய்… ஓம் மகனுக்கு, அன்னைக்குத் தாய்மாமேன்டு ஒருத்தன் இருந்தான்ல… அதேமாரி, ஏம்பிள்ளைகளுக்கும் வேணுமில்ல. தாய்மாமென் உசுரோட இருக்கிறப்ப, அவெந்தான முன்னால நிக்கணும். அதான மொற.
ஏம் பிள்ளைகளுக்கும் தாய்மாமென் வேணுமின்டு தான் கூப்பிட்டுக்கு வந்தேன். அது தப்புண்டாச் சொல்லுங்க… என்னா சொன்னாலும் கேட்டுக்கிறேன்” கட்டக்காளை சொன்னான்.

ஆனாலும் பின்னத்தேவனுக்கு மனசு ஆறல. கட்டக்காளை சொன்ன நாயமும் புரியத்தான் செய்யிது, கெணத்துக்குள்ள கெடக்கிற கல்லு கெணக்கா, பழய சம்பவம் மனசுக்குள்ள உறுத்திக்கிட்டே இருக்கு. துண்டெடுத்து வாயப் பொத்திக்கிட்டு, இறுக்கமா நிக்கிறான்… எதுக்கும் அசஞ்சு குடுக்கிறமாரித் தெரியல.

மாமனும் மருமகனும் வாதஞ் செஞ்சுக்கிருக்கிறதப் பாத்துட்டு கழிச்சியாத்தாகிட்ட அடுப்ப விட்டுட்டு, எந்திரிச்சு வந்தா லச்சுமாயி.
புருசன் வாத்தையத் தட்டாம வளந்த பெருமாயி ரெண்டு பக்கமும் பேசமாட்டாம எதுக்கு வம்புன்டு பொங்க வைக்கிற எடத்திலயே ஒக்காந்துக்கிட்டா.

வீராப்பா நிக்கிற அப்பெங்கிட்ட வந்த லச்சுமாயி, “ஏம்பிள்ளைகளுக்குத் தாய்மாமென் இல்லாம பண்ணிறாதப்பா… அந்தக் கருப்பன் வாசல்லருந்து கேக்குறேன்…”ன்டு பின்னத்தேவன் காலப் புடிச்சுக்கிட்டு கதறி அழுறா.

தாம் மக அழுதுக்குச் சொன்ன வார்த்த பின்னத்தேவன உலுக்கிப்புடுச்சு.

கீழ குனிஞ்சு லச்சுமாயத் தூக்கின பின்னத்தேவன், “அந்தப் பாவத்த நாஞ் செய்ய மாட்டேந்தாயி… நீயும் ஓம் பிள்ளைகளும் பால்பாலா இருக்கணும்… ஓம் மனம் போல நடத்திக்க…”ன்டு சொல்லிட்டு அழுதான்.

இதப்பாத்துட்டு அங்கன சுத்தி இருந்தவகளும் கண்கலங்க... எட்டால நின்றிருந்த மலைராமனும் அழுக அந்த எடமே செத்த வடம் கப்சிப்பின்டுருந்துச்சு.

துண்டெடுத்து மூஞ்சியத் தொடச்ச பின்னத்தேவன், “ஒங்களுக்கு வேணாத் தாய்மாமென்ற மொற செய்யட்டும்… நாஞ்செத்தா, எம்பொணத்தக் கூட அவென் தொடப்பிடாது…”ன்டு சொன்னான்.

“அப்படிப் பேசாதப்பா…”ன்டு லச்சுமாயி சொல்ல, காதுல வாங்கியும் வாங்காதமாரி விறுவிறுன்டு போயி, வேப்ப மரத்தடியில வெறைச்சுக்கிட்டு ஒக்காந்தான் பின்னத்தேவன்.

தாய் மாமென் மொற செய்ய தன்னோட அப்பென் சம்மதிச்சிட்டாருன்னதும் குமுறிக்கிட்டு வந்த அழுகைய அடக்க மாட்டாம அழுதிட்டான் மலைராமன்.

“கெட்டிக்கார ஆளுதான் எம்மச்சான். பத்து வருசப் பகைய ஒடச்சுப்பிட்டானே… ஒறவே வேணாமின்டு ஒதுக்கி வச்சிருந்த எனக்கு, தாய்மாமென்ற அந்தஸ்த குடுத்து… ஏந்தங்கச்சி முன்னாடி தல நிமிந்து நிக்க வச்சுப்பிட்டானே”ன்டு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்ட மலைராமனுக்கு கட்டக்காளைய கட்டிப் புடிச்சு அழுகணும் போலருக்கு.

பொங்கப்பானை வாவலயத்தில நாலாத் தெசயிலயும் ஒண்ணு சொன்னாப்பில பொங்க பொங்கி வர… கொலவ போட்டுக்கிட்டே, கழுவி வச்சிருந்த அரிசிய கொஞ்சம் கொஞ்சமா பானையில போட்டா கழுச்சியாத்தா.

பொங்குன பொங்க அப்படியே அடங்கிருச்சு…

பிள்ளைகள வச்சிருந்த அன்னத்தாயி, ரெண்டு பிள்ளைகளையும் பின்னத்தேவன் மடியில போட்டுட்டு வந்தா.

பிஞ்சுக்கால ஒதறிக்கிட்டு சிரிச்ச பிள்ளைகளப் பாத்த பின்னத்தேவனுக்கு மனசில இருந்த பாரமெல்லாம் கொறஞ்சுருச்சு.
அதுகள கொஞ்சிக்கிட்டே மருமகென் கட்டக்காளைய பெருமையாப் பாத்தான்.

எதையும் பெருசாக் காட்டிக்கிடத் தெரியாத கட்டக்காளை, கெடா வெட்டுறதுக்கான வேலையில மும்முரமா இருந்தான்.

(தொடரும்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in