ரஜினி சரிதம் 16: ஆறிலிருந்து எழுபது வரை- எளிமையால் வியக்கவைத்த ரஜினி!

ரஜினி சரிதம் 16: ஆறிலிருந்து எழுபது வரை- எளிமையால் வியக்கவைத்த ரஜினி!

‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’ படங்களுக்குப் பின் ரஜினியைத் தேடிப் பிடிப்பது தயாரிப்பாளர்களுக்குப் பெரும் சிரமமாக இருந்தது. அப்போது ராயப்பேட்டையில், தன்னுடன் நடிப்புக் கல்லூரியில் படித்த அந்த முரளி வீட்டின் மொட்டை மாடியில் ஓலை வேய்ந்த அறையில் குடியிருந்தார் ரஜினி.

“யாருய்யா இவன்... இந்த ஓலைக் குடிசையில வந்து குடியிருக்கான். ஒரு டைப்பான ஆளோ?” என்று தொடக்கத்திலேயே ரஜினியைப் பற்றிப் பலரும் முணு முணுக்கத் தொடங்கினார்கள். பெரும்பாலானவர்கள் வழக்கமான வில்லன் வேடங்களுக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் தருவதாகப் பேரம் பேசினார்கள். ஆனால், யாரும் கதையுடன், கதாசிரியருடன் வரவில்லை. அப்படி வந்தவர்களிடம் ரஜினி, “சார் எனக்குப் பணத்தேவை இருக்கு. இல்லேன்னு சொல்லல... ஆனா, வில்லன் வேடமா இருந்தாலும் என்ன கதை, அதுல நான் என்ன மாதிரி வில்லன்னு தெரியணும். அது தெரியாம அட்வான்ஸ் வேணாம்” என்று மறுதலித்தார். இதை அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார் ரஜினியின் நண்பர் முரளி.

தங்கள் மனம் கவர்ந்த ரஜினியைச் சந்திக்க மதுரையிலிருந்தும் சேலத்திலிருந்தும் ராமநாதபுரத்திலிருந்தும் ரஜினியின் ஓலை வீட்டைத் தேடிப்பிடித்து ரசிகர்கள் வரத் தொடங்கிவிட்டதை கே. நட்ராஜ் குறிப்பிட்டிருக்கிறார். அப்படிப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு ரஜினியே கைப்பட டீ போட்டுக் கொடுத்து உபசரித்ததும் உண்டு. வந்த ரசிகர்கள், “சார், நாங்க ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்போறோம். நீங்க வரணும்” என்றபோது, “அதெல்லாம் ஒண்ணும் வேணாம். தாய், தகப்பனை முதல்ல பாருங்கப்பா... நல்லது இருந்தா மனசுல வச்சுக்கோங்க. சினிமாவ சீரியஸா எடுத்துக்காதீங்க” என்று புத்தி சொல்லி அனுப்பினார் ரஜினி. ஆர்வத்துடன் வந்த ரசிகர்கள் விக்கித்துப்போய் ஊர் திரும்பினாலும் ரஜினியை நிபந்தனையில்லாமல் நேசிக்கத் தொடங்கினார்கள்.

தேடி வந்த எஸ்.பி.எம்

ஒருநாள் அந்த ஓலைக் குடிசைக்கு ரஜினியைத் தேடி வந்தார் அப்போது வரிசையாக வெற்றிகளைக் கொடுத்து வந்த இளம் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். கூடவே பஞ்சு அருணாசலம். கமலை வைத்து இரண்டு படங்களை இயக்கியிருக்கும் எஸ்.பி.முத்துராமன் வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் உற்சாகமான ரஜினி, கையைக் கட்டிக்கொண்டு, “சொல்லி அனுப்பியிருந்தா நானே வந்திருப்பேனே” என்றார் பணிவுடன். “அதனால் என்ன ரஜினி? நீங்க இருக்கிற இடத்தைப் பார்த்த மாதிரியும் ஆச்சு. கதை சொன்ன மாதிரியும் ஆச்சு... ஆனா, இவ்வளவு எளிமையை நாங்க எதிர்பார்க்கல. கடவுள் உங்களை நிறைய ஆசீர்வதிப்பார்” என்று வாழ்த்தினார் எஸ்.பி.எம். “உங்க ஆசீர்வாதம்! உங்ககிட்ட கதையெல்லாம் கேட்கமாட்டேன். ஏன்னா... நல்ல கதையிருந்தாதான் நீங்கள் புராஜெக்ட்டே ஸ்டார்ட் பண்ணுவீங்கன்னு தெரியும். இருந்தாலும் என்ன மாதிரியான வில்லன்னு தெரிஞ்சுக்கலாமா சார்?” என்றார் ரஜினி.

ரஜினி இப்படிக் கேட்டதும் எஸ்.பி. முத்துராமனும் பஞ்சு அருணாசலமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். “ரொம்ப ஸாரி ரஜினி! நாங்க வில்லன் கேரக்டரோட வரல. அந்த ஸ்டீரியோடைப்பை பிரேக் பண்ணலாம்னு வந்திருக்கோம். மகரிஷின்னு ஒரு எழுத்தாளர். அவரோட ‘புவனா ஒரு கேள்விக் குறி’ நாவலைத்தான் படமாக்குறேன். பஞ்சுதான் ஸ்கிரிப்ட், டயலாக், லிரிக்ஸ் எல்லாமே. இளையராஜா மியூசிக். படத்துல உங்களுக்கு ஒரு டூயட் இருக்கு. நெகட்டிவ் கேரக்டரை முதல் முறையா சிவகுமார் துணிஞ்சு ஏற்றுக் கொண்டிருக்கார்... நீங்க பண்ணப்போறது ரொம்ப பாசிடிவ் கேரக்டர். கிட்டத்தட்ட ஹீரோதான்... சந்தோஷமா..?” என்றார் முத்துராமன்.

ரஜினி முகத்தில் அத்தனை பிரகாசம். எஸ்.பி.எம்-மின் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டார். “இருங்க இருங்க. கதையைக் கேட்டுருங்க மிஸ்டர் ரஜினி” என்று பஞ்சுவை கதை சொல்லச் சொன்னார் எஸ்.பி.எம். 5 நிமிடம் கதைச் சுருக்கம் கேட்டுவிட்டு, “சூப்பர் சார்” என்றார் ரஜினி.

விடைபெறும் முன்பு, “இப்போ என்ன படம் கைவசம் இருக்கு?” என்று எஸ்.பி.எம் கேட்டதும், “எல்லாமே 10 நாள்... 
5 நாள். மிஞ்சிப்போனா 15 நாள் கால்ஷீட் சார். புதுசா 6 படங்கள் கமிட் ஆகியிருக்கேன். 3 படங்கள் நடிச்சுக் கொடுத்துருக்கேன். கொடுக்குற சம்பளத்தை வாங்கிக்கிறேன். நமக்கான காலம் வரும்ங்கிற நம்பிக்கை இருக்கு” என்று ரஜினி கூறியதும், “இந்தப் பக்குவம் இருந்தாப் போதும். திறமை நிறைய உங்ககிட்ட கொட்டிக்கிடக்கு. அதை எங்கள மாதிரி ஆட்கள் வெளியில கொண்டுவருவோம். நாளைக்கு அட்வான்ஸ் கொடுக்க மேனேஜர் வருவார். ஆல் தி பெஸ்ட்!” என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினார்கள்.

மொட்டக் கிணறு - கட்டஞ் சாயா - வறட்டுச் சப்பாத்தி

அன்றைக்குக் கிராமமாக இருந்த சென்னை போரூரில், ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தின் அவுட்டோர் ஷூட்டிங். காட்சிப்படி ரஜினியின் காதலியான மீராவை மாடு துரத்த... அவர் பயந்து ஓடிச்சென்று பாழும் மொட்டைக் கிணறு ஒன்றில் எதிர்பாராமல் விழுந்துவிடுவார். இதைப் பார்க்கும் ரஜினி ஓடிவந்து கிணற்றில் குதித்து மீராவைக் காப்பாற்றி மேலே தூக்கிக்கொண்டு வருவார். கலை இயக்குநரின் உதவியாளர்கள் மொட்டை கிணறு ஒன்றைத் தேடிப்பிடித்து, அதன் படிகள் வழியே இறங்கி ஆழம் பார்த்தனர். ஆபத்து இல்லை என்று அவர்கள் கூறிய பிறகு ரஜினியும் மீராவும் கிணற்றுக்குள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.

 “ரெடி... டேக்... ஆக் ஷன்” என்றதும் மீராவைத் தண்ணீருக்குள் தேடிப்பிடித்து, தோளில் தூக்கிக் கொண்டு, கிணற்றின் வட்டச் சுவரில் தனித் தனியே நீட்டிக்கொண்டிருக்கும் கருங்கல் படிகள் வழியே மேலே வர வேண்டும். மீரா கொஞ்சம் எடை கூடியிருந்தார். இயக்குநர் ஆக் ஷன் சொன்னதும் கேமரா சுழலத் தொடங்கியது. மீராவைத் தண்ணீரிலிருந்து தூக்கிக்கொண்டு மூச்சிரைக்க மேலே கொண்டுவந்து போட்டார் ரஜினி. இருவர் மீதும் சகதியும் கும்பியுமாக ஒரே சாக்கடை நாற்றம். நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த அந்தக் கிணறு சாக்கடையாகவே மாறிப்போயிருந்ததை ஆர்ட் டிபார்ட்மென்ட் ஆட்கள் கவனிக்கவில்லை. ரஜினியும் மீராவும் கிணற்றை விட்டு மேலே வந்ததும் படக்குழுவில் ஒருவர் பாக்கியில்லாமல் மூக்கில் கை வைத்துக்கொண்டார்கள்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்குச் சங்கடமாகிவிட்டது. “சாரி ரஜினி! சரியா செக் பண்ணாம உங்களை இறக்கிட்டேன்… தவறுக்கு நான்தான் முழுப்பொறுப்பு... மன்னிச்சுடுங்க” என்றவர், மீராவிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

ரஜினி சிரித்துக்கொண்டே, “சார் விடுங்க… காட்சி நீங்க எதிர்பார்த்த மாதிரி வந்திருக்கா? இல்ல இன்னொரு டேக் போகலாம்னாலும் சொல்லுங்க” என்றார். வியந்துபோன எஸ்.பி.எம், படக்குழுவினர் பக்கம் திரும்பி, “என்னப்பா எல்லாரும் வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கீங்க? இவங்க குளிக்க ஏற்பாடு பண்ணுங்க” என்றார். பாதிப் பேர் ஓடிப்போய் அருகில் ஓடிக்கொண்டிருந்த பம்ப் செட்டிலிருந்து ஆளுக்கு ஒரு குடம் தண்ணீர் பிடித்துக் கொண்டுவந்து இருவர் மீதும் ஊற்றினார்கள்.

எப்போதும் எளிமை

‘புவனா ஒரு கேள்விக்குறி’ படப்பிடிப்பில் இன்னொரு சம்பவம். அந்தப் படத்தில் ரஜினிக்குக் கிடைத்த முதல் டூயட் பாடலான, ‘விழியிலே மலர்ந்தது... உயிரிலே கலந்தது' பாடலைப் படமாக்குவதற்காகச் சென்னையிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘தடா’ அருவியில் முகாமிட்டது படக்குழு. படப்பிடிப்பு தொடங்கி ஒரு மணி நேரம்கூட ஒழுங்காகத் தொடர முடியவில்லை. பாடலை பிளேபேக் செய்யும் ‘நாகரா’ மெஷின் திடீரென வேலை செய்யவில்லை.

அதனால் பழுதான மெஷினை சென்னையில் கொடுத்துவிட்டு வேறு ஒன்றை எடுத்துக்கொண்டு வரும்படி படக்குழுவில் இருந்த அனைவரையும் சென்னைக்கு அனுப்பிவைத்தார் இயக்குநர். ஏனென்றால் அங்கே தங்குவதற்கோ, சாப்பிடுவதற்கோ எந்த வசதியும் இல்லை. அங்கிருந்து சித்தூரின்  சிட்டிக்குப் போனால்தான் உண்டு. அது தயாரிப்பாளருக்கு வீண் செலவை உண்டாக்கும். எஸ்.பி.எம், ரஜினியிடம், “நீங்க சென்னைக்குப் போய்ட்டு நாளைக்கு வந்துடுங்க” என்றார்.

ரஜினி அவரிடம், “நீங்க இங்கே என்ன செய்யப்போறீங்க?” என்று கேட்டார். “இங்கே ஒரேயொரு டீக்கடைதான் இருக்கு. டீக்கடைக்காரர் நைட்டுக்குச் சாப்பாத்தி மட்டும் தருவதாகச் சொல்லியிருக்கார். நானும் பஞ்சுவும் அட்ஜஸ்ட் செஞ்சுகிட்டு அந்த டீக்கடையின் மொட்டை மாடியிலேயே தங்கிக்கப்போறோம்” என்றார். அதைக் கேட்ட ரஜினி, “டைரக்டர் நீங்க! நீங்களே தங்கும்போது எனக்கு என்ன குறை? எனக்கும் சப்பாத்தியும் மொட்டை மாடியும் போதும். நான் சென்னை போகலை” என்று தங்கிவிட்டார்.

எஸ்.பி.எம் - பஞ்சு அருணாசலம் போலவே சப்பாத்தி சாப்பிட்டு. மொட்டை மாடியில் பாய்கூட இல்லாமல் துண்டை, விரித்துத் தூங்கி... விடியும் முன் காட்டுக்குள் போய் காலைக்கடன் முடித்து... தடா அருவியின் சிற்றோடையில் குளித்து படப்பிடிப்புக்குக் காலை 6 மணிக்கெல்லாம் தயாராகிவிட்டார் ரஜினி!

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in