கட்டக்காளை - 17

கட்டக்காளை - 17

அம்பதறுபது குடித்தனத்தோட, ஒதுக்குப்புறமா இருக்கிற ஊருதான் புதுக்கோட்டை. காடுகரையில வேலசெஞ்சமா, கஞ்சியக்குடிச்சமான்டு கெடக்கிற சனந்தான் இங்க அதிகம்.

தூரந்தொலவா இருந்தா, நல்லது கெட்டதுக்கு அவக்கின்டு போயிட்டு வரமுடியாதின்டு, கூப்புடு தூரத்துலதான் சம்பந்தஞ்சாடி வச்சிக்கிறுவாக.

இருக்கக் கூடிய ஆளுகதான் சந்தைசாடிக்குப் போயிட்டு வரும்… மத்தாளுக, ஊரு எல்லையத் தாண்டுனதேயில்ல… ஏழெட்டு பர்லாங்குல இருந்த உசுலம்பட்டியக்கூட பாக்காத சனங்கதான்அதிகம்.

பக்கத்துல இருக்கிற மீனாட்சிபட்டணம், இந்த ஊராளுகளுக்கு வேற ஒரு லோகம்… அது எப்பிடி இருக்குமின்டெல்லாம் அவுகளுக்குத் தெரியாது. அழகரு ஆத்துல எறங்கிறப்ப சுத்து வட்டாரத்தில ஆராச்சும் போயிட்டு வந்தா… அவுகள சாமியாப் பாக்கிறதும்… தொட்டுக் கும்பிடுறதுமா இருப்பாக.

மலைப்பட்டி வீரத்தேவன், தனக்குப் பழக்கப்பட்ட நாணயமான செட்டியாரு சொந்தமா மில்லு வச்சுருக்கிறதா சொல்லி அனுப்பினதால மீனாட்சி பட்டணத்துக்கு மொதமொறயா, கல்ல மூட்டைகள ஏத்திக்கிட்டு வந்துருக்கான் கட்டக்காளை.

ஊருக்குள்ள நொழையிறப்ப, பெரிய கோட்டக் கொத்தலம் பாதி இடிஞ்ச நிலையில, பழைமைக்கு அடையாளமா, மிச்ச உசுரயும் புடிச்சுக்கிட்டு நிக்கிது. அந்தக் கோட்டய ஒட்டினாப்பில, கெழக்க போற பாதையில வண்டிக வந்திட்டுருக்கு.

பெரிய பெரிய வீதிக, பெருசும் சிறுசுமா சுண்ணாம்புச் சாந்து வச்சுக்கட்டுன வீடுக, மாடம் வச்சுக் கட்டுன வீடுக, சீம ஓடு மேஞ்ச வீடுக, மொகப்பில வெதவெதமான மரவேலைப்பாடு வெச்ச வீடுக, வீட்டு முன்னாடி தொங்குற வெளக்குன்டு, மருத இவிங்கியளுக்கு வேற லோகமாத் தெரியுது.

இதெல்லாம் பாத்துக்கிட்டே வந்த கட்டக்காளை, மருதக்குள்ள நொழஞ்சப்ப, பாத்த வெளக்கு வெளிச்சம், என்னான்டு தெரிஞ்சே ஆகணுமின்ற நெனப்புலயே இருந்தான்.

பொழுது பரிஞ்சிருச்சு… சிவீர்ன்டு சூரிய வெளிச்சம், தங்க கோபுரத்தில பட்டு தகதகன்டு சொலிக்கிது…

ஒசந்து நிக்கிற கோபுரத்திலருந்த காக்கா குருவி யெல்லாம், எறதேடப் பறந்து போயிட்டுருக்கு…

வண்டிக, மேலமாசிவீதி வழியா நேராவந்து, சோத்துக்கைப் பக்கமா திரும்பி, வடக்குமாசி வீதியில வந்துட்டுருக்கு... வீதியில ரெண்டு பக்கமும் பசு மாடுகள நிறுத்தி பால் பீச்சிட்டு இருந்தாக. துள்ளிக் குதிச்சுக்குத் திரியிற கன்டுக் குட்டிக, வண்டிக்குள்ள விழுந்திறக் கூடாதின்டு கவனமா வண்டிய ஓட்டிக்கிட்டு வந்தாங்க.

கல்தூணால கட்டுன ராமாயணஞ்சாவடியில... விடிய விடிய பாரதம் படிச்சுட்டு அங்கனயே படுத்து ஒறங்கின செல ஆளுக இப்பத்தான் எந்திரிச்சு ஒக்காந்துருக்காக.

வகுறு சுருங்கி, கரேன்டு ஒட்டிப்போன ஒடம்புக்கார ஒழைப்பாளிக, வேட்டிய வரிஞ்சுக் கட்டி தலச்சொமைய சொமந்துக்கிட்டுப் போறாக. ஏறத்தரிச்ச சீலை முந்தானிய சும்மாடு கூட்டி, காய்கறிக் கூடைய தலையில சொமந்து வந்த பொம்பளையாளுக விக்கிடி விக்கிடின்டு நடந்து, பட்டமார் தெருவில ஏவாரம் பாக்குறாங்க.

கீழக்கடசியிலருந்த செட்டியாருமில்லுக்கு எப்பிடிப் போகணுமின்டு விசாரிச்சுக்கிட்டே வண்டிய ஓட்டிக்காந்தாங்க.
செட்டியாரு மில்லு மதிலுச் சுவரு கோட்ட கெணக்கா சுத்திலும் ரெண்டாளு மட்டத்துக்கு ஒசந்துநிக்கிது…

வாசல்ல ரெண்டு பெரிய கல்லுத்தூணு, ரெண்டு தூணுக்கும் நடுவில தொங்குற வெளக்கு… விடிஞ்சு வெகு நேரமாகியும் அமத்தாம இருக்கு.

சொவத்தில அங்கெங்க பேந்து நிக்கிற சுண்ணாம்புக் காரை, பல வருசத்துக்கு மின்னாடி கட்டுனதின்டு சொல்லாமச் சொல்லுது.
தாவாரத்தடியில அட்டியல் போட்டு அடஞ்சு வச்சுருக்கிற மூட்டைக ஒண்ணுக்கு மேல ஒண்ணா மலமாரி ஒசந்துநிக்கிது…
வண்டிய கழத்தி விட்டுட்டு ஒச்சுக்காளையும் மத்த வண்டிக்காரங்களும் பெரிய மில்லயும், பெரிய பெரிய வீடுகளையும் பாத்து தெகச்சுப் போயி நிக்கிறாங்க…

செட்டியாரப் பாக்க கட்டக்காளை மில்லுக்குள்ள போனான்.

எதுக்க வந்த வந்த கணக்காப்பிள்ள கிட்ட, “செட்டியாரு இருக்காரா...”ன்டு கேக்க “இப்ப வந்திருவாரு ஒக்காருங்க...”ன்டாரு.
அங்கெனருந்த திண்டுல ஒக்காந்த கட்டக்காளை, தலைக்கு மேல தொங்கின வெளக்கப் பாத்துக்கிட்டே, “ஏங் கணக்காப்பிள்ள... 
தலகீழாத் தொங்குதே இது என்னா வெளக்கு... எண்ணெய் இல்லாம எப்பிடி எரியுது..?” ன்டு கேட்டான்.

“ந்தா… அந்த கம்பியிலருந்து வார கரன்டு மூலமாத்தான் இந்த முட்டைப் பல்பு எரியும்…”

அங்கென ஊண்டியிருந்த மரத்தயும், தொங்குற பல்பையும் காமிச்சுச் சொன்னாரு கணக்காப்பிள்ளை.
கட்டக்காளைக்கு ஒண்ணும் புடிபடல. “அதெப்படி இதுல எண்ணெயில்லாம இருக்கே... எப்பிடி எரியும்…?” சின்னப்புள்ள கெணக்கா கேட்டான்.

சொவத்துலருந்த சுச்சக் காமிச்சு, “ந்தா… இப்பிடி இழுத்து விட்டா பளிர்ன்டு எரியும்…”ன்டு போட்டுக் காமிச்சாரு கணக்காப்பிள்ள.
பளிச்சின்டு பல்பு எரியிறதப் பாத்து ஆச்சரியப்பட்ட கட்டக்காளை, அதப்பத்தி வெவெரங் கேட்டான்.

“செட்டியாருக்குத் தான் எல்லா வெவெரமுந் தெரியுமிய்யா. அவருகிட்டயே கேளுங்க… இன்னும் செத்த நேரத்தில் வந்திருவாரு… அவரு வந்துதான் எடபோடணும்...”

சொல்லிட்டு அட்டியல் போட்டு வச்சிருந்த மூட்டய கணக்கு எடுத்துக் குறிக்கப் போயிட்டாரு கணக்காப்பிள்ள.

“அவிங்கியளயும் கூப்பிடுரா… காலாரப் போயிட்டு வரலாம்…”

கட்டக்காளை, ஒச்சுக்காளைக்கிட்ட சொன்னான்.

மில்லுக்கு வெளிய வந்து, தெக்கயும் வடக்கயும் பாத்தான் கட்டக்காளை. கண்ணுக்கெட்டுன வரைக்கும் நேர் புடுச்சாமாரி வீதி. தெக்க கோயிலுத் தேரு நிக்கிது… பெரம்புக் கூடையில வாழைப்பழத்த, பார்வையா அடுக்கிவச்சு, அங்கொண்ணும் இங்கொண்ணுமா ஓரஞ்சாரத்துல ஒக்காந்து ஏவாரம் பாக்குற பொம்பளைக…

மச்சு வீடுகள பாக்கவே லச்சணமாருக்கு. தேக்கங் கட்டையில சிற்பஞ் செஞ்ச வீடுக, ஒண்ணப்பாரு என்னப்பாருன்டு ஒசந்துநிக்கிது.
வீதியையும், வீடுகளயும் பாத்துக்கிட்டே கட்டக்காளை முன்ன போக… ஒச்சுக்காளையும் கூடவந்தாளுகளும் வீடுவாசல அன்னாந்து பாத்துக்கிட்டே வாராங்க.

முத்துக் கெணக்கா ஓடுற வைகாத்துத் தண்ணியில எறங்கி, கால நனைச்ச கட்டக்காளைக்கு, மேலெல்லாம் புல்லரிச்சுப் போச்சு…
“வருசா வருசாம் அழகரு… இந்த தண்ணியிலதான் எறங்குறாரு…” சொல்லிக்கிட்டே ஆச தீர ஆத்துத் தண்ணிய அள்ளி சாமியக் கும்புட்டுக் குடிச்சுட்டு, கைகாலு மூஞ்சியக் கழுவிக்கிட்டான் கட்டக்காளை.

மத்தவங்களும் ஆத்துக்குள்ள எறங்கித் தவ்விக் குதிச்சிட்டு மேட்டுக்கு வந்துட்டாங்க.

ஆத்தொட்டிருந்த குடிசையில பலகாரம் வித்துக்கிருந்த கெழவி கிட்ட ஆளுக்குப் பத்துப் பணியாரத்த வாங்கி, ஒவட்டத்தின்டு பசியாத்திட்டு மில்லுக்குள்ள நொழயவும் செட்டியாரு வரவும் சரியா இருந்துச்சு.

மொழங்கை வரைக்கும் எறக்கித் தச்ச வட்டக் கழுத்துச் சிப்பாச் சட்ட, தலயில கட்டுன உருமா, தார்ப்பாச்சிக் கட்டுன வேட்டின்னு பாக்க வடக்கித்தி ஆளு கெணக்கா தெரிஞ்சாரு செட்டியாரு.

“வாங்கய்யா…”ன்டு சிரிச்ச மொகத்தோட கூப்பிடும் போதே, செட்டியாரு கட்டக்காளைக்கு வெகுகாலம் பழகினாளுமாரி தெரிஞ்சிச்சு.

ஒரே விசையில அஞ்சு மூட்டையக்கூட எட போடலா மின்ற மெதப்புல முக்கோணமாத் தாங்கி நிக்கிற கம்பியில பெரியதராசு வெரப்பா நிக்கிது.

சொம எறக்கி ஏத்திறதுக்கின்டே மில்லுல இருந்தாளுக, நாலு வண்டியிலயும் ஏத்திக்காந்த கல்ல மூட்டைய எறக்கி தராசுல வெச்சாங்க.

செட்டியாரு எடைபோட, கணக்காப்பிள்ளை குறிச்சு வைக்கன்டு பூரா மூட்டயும் எட போட்டாச்சு…

எண்ணெய்ச் சத்துக்குத் தகுந்தாப்பில தான் கடல வெலப்போகும்.

அம்புட்டு மூட்டையிலருந்த ஒத்த மூட்டயில, கொஞ்சம் கல்லய எடுத்துக்காந்து ஒடச்சுப் பாத்த செட்டியாரு, “பருப்பு நல்லாத் தெரண்டுருக்கு… காச்சப் பதம் கொஞ்சம் பத்தாது...”ன்டு சொல்லிக்கிட்டே, கணக்காப்பிள்ளகிட்ட எதோ சொன்னாரு.
அரயணா, ஒரணாவா பாத்துட்டுருந்த கட்டக்காளை கிட்ட, அரை ரூபா, ஒரு ரூபாத் துட்ட குட்டிச் சாக்குல போட்டு கணக்காப்பிள்ள குடுத்தாரு.

மொத மொறையா, ஒரே வெள்ளாமையில, இப்புட்டுத் துட்டப் பாத்த கட்டக்காளைக்கு, என்னா செய்யிறதின்டே தெர்ல.
காசு வச்சிருந்த குட்டிச் சாக்க இருக்கிக்கட்டி, “இந்தாடா... இத பத்தரமா வய்யி” ன்டு ஒச்சுக்காளைக்கிட்ட குடுத்தான்.
வெவசாயம், பொழப்புத் தலப்பப் பத்தியெல்லாம் அக்கறையா வெசாரிச்ச செட்டியாருகிட்ட, கல்லய வித்த காச மூட்டகட்டி வாங்கிட்டமின்றத விட, கரன்டு வெளக்கப் பத்துன வெவரத்த அறியணுமின்றதில குறியா இருந்தான் கட்டக்காளை.

“செட்டியாரய்யா… இந்த வெளக்கு எப்பிடி இம்பிட்டுப் பிரகாசமா எரியுது... இது எங்க கிடைக்கும்… ?”ன்டு ஆவலாக் கேட்டான்.
“ஏய்யா…ஒங்க ஊருக்கு இன்னம் வரலயா…”ன்டு கேட்ட செட்டியாரு, “இதுக்கு எந்த எண்ணெயும் தேவப்படாது… இது கரென்டுல எரியுது…”ன்டு சிரிச்சுக்கிட்டே சொன்னாரு.

“பத்து வருசாமாச்சு இந்த லைட்டப் போட்டு…”ன்டு சொன்ன செட்டியாரு, “முந்தியே நாட்டுக் கோட்டைப் பக்கம் வந்திருச்சு… தேசந் தொலவு ஏவாரத்துக்குப் போயிட்டு வந்தவங்க அப்புச்சி… இத எங்கயோ பாத்துட்டு வாங்கியாந்து அதுக்கொரு பெட்டி வச்சு வீட்டு வீட்டுக்கு கரென்டு சப்ளை பண்ணிருக்காரு…ன்னு சொன்னாரு.

அந்தக் காலத்துல கடல் கடந்து ஏவாரத்துக்குப் போயிட்டு வந்தவுக, கரென்டத் தயாரிச்சு சப்ளை பண்ணுன கதையையும், சொதந்திரத்துக்கு அப்புறம், அரசாங்கமே அத வாங்கி கரன்ட் சப்ளை குடுக்கிற வெவரத்தயும் செட்டியாரு வெளக்கமா சொன்னாரு.
“எங்க ஊருக்கும் இதக்கொண்டுக்குப் போகணும்யா... இருட்டுக்குள்ள பூச்சிபட்ட வாரதுகூடத் தெரியாமச் சனம் அல்லாடுதுக…”ன்டு அக்கறையா கேட்டான் கட்டக்காளை.

“கரென்ட் ஆபிசருக நமக்குத் தெரிஞ்சவுகதான் அவங்கட்ட பேசி ஏற்பாடு செஞ்சுதாரேன்ய்யா. பாத்துச் சூதானமா போயிட்டு வாங்கய்யா…”ன்னாரு செட்டியாரு.

ஊரு சனத்துக்கு, கெடாவெட்டி நெல்லுச் சோறு போடணுமின்டு நெனச்சிக்கிருந்த கட்டக்காளை மனசுக்குள்ள இப்ப அதவிட, அம்ம ஊருக்கும் கரென்ட்டு வெளக்க கொண்டுக்குப் போகணுமின்ற நெனப்புதான் நெறஞ்சிருக்கு!

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in