கட்டக்காளை - 16

கட்டக்காளை - 16

அப்பன் வீட்டுலருந்து பிள்ளைகளத் தூக்கிட்டு, லச்சுமாயி எப்ப வருவான்டு எதிர்பாத்துக் கெடக்கான் கட்டக்காளை… ரெண்டு மூணு தலைமொறையா ஒத்தப் பிள்ளய மட்டும் குடுத்த ஆண்டவன், அதுக்கும் வழியில்லாம செஞ்சுப் புடுமோன்டு, ஆறு வருசமாத் தவிச்சுப் போனவன், தன்னோட வம்சம் விருத்தியாகட்டுமின்டு அந்தச் சாமியாப்பாத்து, ரெட்டப் பிள்ளயக் குடுத்திருச்சின்ற பெருமையில, நெஞ்ச நிமித்தி நடக்கிறான்…

“எண்ணே… ஏம் மகள… ஓம்மகனுக்குத்தான் கட்டணுமிண்ணே… இப்பயே சொல்லிப்புட்டேன்…” ஒண்ணுவிட்ட பங்காளி மக ஒச்சம்மா சொன்னா.

 “சரிம்மா… தங்கச்சிக்கு இல்லாத உரிமையா… ஓம் மருமகெங்க வீட்டுக்கு வந்த ஒடனே, தூக்கிட்டுப் போயிக் கூட வச்சுக்க ” சிரிச்சுக்கிட்டே பதில் சொன்னான் கட்டக்காளை.

 “மாமு… ஏம்பிள்ளைக ரெண்டயும் ஓவ்வீட்டுக்குத்தான் மருமகளா அனுப்பி வைப்பேன்…” ஒச்சம்மாளுக்குப் போட்டியா பின்னியப்பனும் வந்தான்.

 “அதுக்கென்ன... தாரளமா அனுப்பிவையி… அதுக பாட்டுல வேலவெட்டியச் செஞ்சுக்கிட்டு திரியட்டும்…”ன்டு சொன்ன கட்டக்காளை, தனக்கு மகெங்க பெறந்து முழுசா, ஒரு மாசம் ஆகல… அதுக்குல்லாம் பொண்ணு தாரதுக்கு, நான் நீயின்டு போட்டிபோடுறத நெனச்சு பெருமப் பட்டுக்கிட்டான்.

 ‘ரெண்டு கையிலயும், ரெண்டு பிள்ளைகளயும் கூட்டிக்கிட்டு, இந்தத் தெருவுல நெஞ்ச நிமித்தி நடக்கணும்’ன்ற நெனப்போட வந்தான்.

எதுத்தாப்பில வந்த எரம்மநாயக்கரும், கினிங்கட்டிமாயனும் கட்டக்காளையப் பாத்து செருமுனாங்க.

யாருன்டு கட்டக்காளை திரும்பிப்பாத்தான்.

“நெல்லுக் கஞ்சி குடிச்சுப்பிடணுமின்டு நெனச்ச ஊராளுகளுக்கு குடுத்து வைக்காமப் போச்சே…”ன்டு கினிங்கட்டிமாயன் எகத்தாளமாச் சொல்லி உச்சுக் கொட்டினான்.

 “அவுகளுக்கு குடுத்து வச்சது அம்புட்டுத்தான்… 

பாவம்…”ன்டு, கட்டக்காளைக்கு கேக்கட்டுமின்டே… எரம்மநாயக்கரும் ஒத்து ஊதுனான்.

கம்மா மடைய ஒடச்சு, ஏழபாழைக வகுத்தலடிக்க காரணமானவெங்களே, இப்படிச் சொன்னத நெனச்சு, கட்டக்காளைக்கி பொறுக்கமுடியாத கோபம்…

கைக்குப் பத்தாதவெங்ககிட்ட பேசப்பிடாதுன்டு பொறுமையா மேட்டுக்காட்டுக்கு வந்துட்டான்.

மகெங்க பெறந்த நேரம், கட்டக்காளைக்கு தோட்டத்தொறவில வெள்ளாம வெளச்சலுக்கு பஞ்சமில்ல…

மேட்டுக்காட்டுல போட்ட கல்ல, ஏகத்துக்கும் முத்திக் கெடக்கு. வெளஞ்ச கல்லச் செடிய புடுங்கணுமின்டு மொதநாளே சொல்லிவைக்க, தலக்கோழி கூப்புட, எந்திருச்சு வந்த எளந்தாரிக கல்லச் செடிய புடுங்கி காட்டுக்குள்ள குமிச்சுப் போட்டுட்டு போயிட்டாங்க.

அங்கெங்க குமிச்சு வச்ச செடிக்கிட்ட ஒக்காந்து புடுங்கிப் போட்ட கல்லச் செடியிலருந்து கல்லயத் தனியா பொம்பளையாளுக ஆஞ்சு போட்டுக்கிருந்தாக.

கல்ல அம்பாரம்மா சேந்துருக்கிறதப் பாத்த கட்டக்காளைக்கு பூரிப்பு வரல… கினிங்கட்டி மாயனும், எரம்மநாயக்கரும் எடக்குமடக்கா பேசிட்டுப் போனதுதான் மனச உறுத்திக்கிட்டே இருந்துச்சு.

ஆகாத பயலுகள நெனச்சு என்ன ஆகப்போது... நடக்க வேண்டியதப் பாப்போமின்டு தனக்குத்தானே சொல்லித் தேத்திக்கிட்டான்.
பொழுது போயிக்கிருக்கு, மூட்டை போட்டு வண்டியில ஏத்தணும். குழிக்கு பத்து மூட்டை எச்சா வெளஞ்சிருக்கு… நூறு மூட்ட கல்லைக்கும் மேல வரும்.

கொஞ்சநஞ்சமின்டா உசுலம்பட்டி குப்பாஞ்செட்டியாரு மில்லுக்கு ஏத்திவிடலாம்… எச்சா கல்லன்றதினால மதிரைக்கு போனாத்தான், ரொக்கமா வாங்குவாங்கன்டு மனசுக்குள்ள திட்டம் போட்டு வச்சிருந்தான் கட்டக்காளை.

அம்பாரம் அம்பாரமாக் குமிச்சு வச்ச கல்லய, தூசி தும்பில்லாம தனித்தனியா பிரிக்கணுமின்டு, மாரி, சின்னன்கூடச் சேந்த, பத்து ஆளுக சொளக வச்சு காத்து வீசி ஒழுங்குபடுத்தினாக.

ஒச்சுக்காளை, வீரணங்கூடச் சேந்த இன்னம் பத்தாளுக, கல்லச் செடிய, கிண்டி காய விட்டுக்கிருந்தாங்க

 “கல்லய மூட்ட போட்டு மதிரைக்கு ஏத்திட்டுப் போகணுமிடா… நம்ம வண்டி பத்தாது… இன்னம் மூணு வண்டியப் பூட்டிக்காரச் சொல்லு…”ன்டு ஒச்சுக்காளைகிட்ட சொல்லிக்கிட்டே, “யேலே…வீரணா… நீயும் அம்போதியும், வீட்டுல போயி சாக்குக்கட்ட தூக்கிட்டு வாங்கடா…”ன்டு அனுப்பி வச்சான் கட்டக்காளை.

ஒச்சுக்காளை வண்டியும் சேர்த்து நாலு வண்டியயும் மூட்ட ஏத்துறதுக்கு தோதா மாட்டக் கழத்திட்டு வருசையா நிப்பாட்டிருக்காங்க…
ஒச்சுக்காளை, எடையபட்டி பெருமாளு, புதூர் சின்னப்பன், ராமனும் சேர்ந்து ஆளும் பேருமா, மூட்டைய வண்டியில ஏத்தி அட்டியல் போட்டு அடுக்கி, மூடை நகலாம இருக்க, கயத்தச் சுத்தி வரிஞ்சு, இறுக்கிக் கட்டுனாங்க.

வண்டிமாட்டுக்குத் தேவையான தீவனத்த, வண்டிக்கி அடியில கட்டிக்கிட்டும், சீமத்தண்ணி வெளக்க வண்டிப் போல் மரத்தில கட்டிக்கிட்டும் தயாரா இருக்கு.

மேக்க வெள்ளமலை இடுக்குல பொழுது மறையுது… மேய்க்கப் போன ஆடு மாடுகள வீட்டுக்கு ஓட்டியாந்து அடச்சுக்கிருக்காங்க.
கழிச்சியாத்தாளும், பின்னாயியும், வண்டிக்காரங்களுக்கு கஞ்சி ஊத்த, கஞ்சிப் பானையத் தூக்கிட்டு காட்டுக்கே கொண்டுக்காந்துட்டாக.

“அவக்கின்டு சாப்புட்டு வண்டியப் பூட்டுங்க… விடியமின்ன மில்லுல எறக்கணும்…”

கட்டக்காளை சொல்லவும், கல்லச் செடிய ஒவட்டத்தின்டு, அசை போட்டுக்கிருந்த மாடுகளுக்கு தண்ணிகாட்டி, புடிச்சுக்கு வந்து வண்டியில பூட்டுனாங்க.

போற வாற வழியில காத்துக்கருப்போ எந்தச் செரமமும் வரப்பிடாதின்டு கழிச்சியாத்தா… சாமியக் கும்பிட்டு வழி அனுப்பி வச்சா.
படபடன்டு நாலு வண்டியும் ஒண்ணுக்குப் பெறத்தில ஒண்ணாக் கெளம்பிருச்சு…

ஒச்சுக்காளை வண்டிய ஓட்டிகிட்டு முன்னுத்தில போக, அடுத்தடுத்த வண்டிக சரசரன்டு பின்னாலயே போயிக்கிருக்கு.
ஒச்சுக்காளைக்கு பின்னாடி ஒக்காந்திருந்த கட்டக்காளை, எதோ சிந்தனையில வானத்தப்பாத்தான். நீலக்கலர்ல மேகமெல்லாம் இல்லாம பளிச்சின்டு தெரியுது… அங்கெங்க வெள்ளி மின்னிக்கிட்டுருக்கு.

போல்மரத்தில கட்டுன வெளக்கு வெளிச்சத்தில… வருசையா போற வண்டிக எளம் வெளிச்சத்தில பாக்குறதுக்கு அம்புட்டு அழகாத்தெரியுது.

ரோடு ரெண்டு பக்கமும் நெருக்கமா நிக்கிற புளியமரம், படப்பொசறத்துக்கு அடச்சு, இருட்டுல கரேர்ன்டு தெரியுது… ‘டபடப’ன்டு சத்தத்தோட டிவிஎஸ் பஸ் மாட்டு வண்டிய முந்திக்கிட்டுப்போகுது.

லாடங் கட்டுன மாடுக காலுச் சத்தம் ‘சடக் சடக்’ன்டு ஒரே சீராக் கேக்குது.

நேரம் ஆக ஆக, இருட்டுக்குத் தோதா… கண்ணு பழகிருச்சு, எளம் வெளிச்சத்தில எட்டால வாரது கூட நல்லாத் தெரியுது.
தாம் பொண்டாட்டி பிள்ளைகள நெனச்சுப் பாத்தான் கட்டக்காளை.

ரெண்டுபிள்ளைகளயும் எப்பிடி வளத்து ஆளாக்கணுமின்ற சிந்தனை, கினிங்கட்டி மாயன் கேலி பண்ணிட்டுப் போனது, இப்பிடி அவன் மனசில என்னென்னமோ வந்து போகுது…

அவென் மனசு ஊரச் சுத்தியே வர, மாட்டு வண்டிக மதிரய நோக்கி நெதானமாப் போயிட்டுருக்கு…

மீனாச்சி அம்மன் கோயிலச்சுத்தி மாடவீதி, மாசிவீதி,வெளிவீதின்டு நாலஞ்சு தெருவும் தெக்க நாயக்கரு மஹாலு, கெழக்க தெப்பக்குளம், வடாக வைகாத்து, மேக்க கரிமேடு அரசரடி வரைக்கும் தான். அங்கங்க, சுண்ணாம்புச் சாந்து வச்சுக் கட்டுன, பெரிய பெரிய வீடுகள்லயும்… குடுசை வீடுகள்லயும் குடித்தனம் இருக்கு.

கீழமாசி வீதியிலதான் கல்லய வாங்குற செட்டியாரு, கடை வச்சிருக்காரு… தட்டு ஓடு மேஞ்ச வீட்டுத் தாவாரத்தில தான், பல வகை கடகண்ணிக நெறஞ்சிருக்கும்.

தெக்க விருதுபட்டி, கெழக்க செவசங்கை, ராமநாதபுரமின்டு நாலாத் தெசயிலருந்தும், காய்கறி தானியந் தவசத்த ஏத்திக்கிட்டு நெறயா வண்டிக மதிரைக்குள்ள வந்துக்கிட்டும் போயிக்கிட்டும் இருக்கும்.

கூம்பு டொப்பி வச்சு அரைக்கால் டவுசரு போட்ட போலீசுக்காரெங்க, சைக்கிள்ல ரோந்து போயிட்டு வந்து அங்கெங்க நிப்பாங்க…
மாட்டு வண்டிக வெராட்டிபத்தத் தாண்டி, வயக்காட்டக் கடந்து டிவிஎஸ் மோட்டாருக் கம்பெனிக்கிட்ட வந்திருச்சு.

ரோட்டுக்குத் தெக்க ஏகப்பட்ட பஸ்ச நிப்பாட்டி வச்சிருக்காங்க. உசுலம்பட்டி வழியா எப்பயாச்சும் போற ஒத்த பஸ்ஸ பாத்தவிங்கிய, இத்தன பஸ்ஸு மொத்தமா நிக்கிறத வாயப்பொளந்து பாத்துக்கிருந்தாய்ங்க.

 “யண்ணே… இந்த பஸ்ஸுல ஒரு நாளைக்காச்சும் ஏறணுமிண்ணே…” ஒச்சுக்காளை கட்டக்காளைக்கிட்ட சொன்னான்.
 “பொறுடா… அதுக்கும் நேரங்காலம் வரட்டும்”ன்டு சொன்ன கட்டக்காளை…  “வண்டிய ஓட்டுங்கடா நேரமாகுது”ன்டு அவசரப்படுத்தினான்.

சுண்ணாம்புக் காளவாசலுக்கிட்ட வண்டி போற ரோடு தெரியாதளவுக்கு பொக மண்டிக்கிருக்கு…

 “வண்டிய நிப்பாட்டாம பாத்து ஓட்டு” கட்டக்காளை சொன்னான்.

ஒச்சுக்காளையும் மத்தவங்களும் காளவாசப் பொகக்குள்ள நெதானமா ஓட்டிக்கிட்டே வந்தாங்க…

அரசரடி முச்சந்தியில இருந்த வெளக்குத் தண்டுல்ல, பட்டப் பகலு கெணக்கா வெளிச்சம் வாரத வண்டி ஓட்டிக்காந்த ஆளுக கண்ணுச் சிமிட்டாம பாக்கிறாங்க…

 “ஏண்ணே… என்னாதிண்ணே இம்புட்டு வெளிச்சமாருக்கு…” கட்டக்காளை கிட்ட கேட்டாங்க.

இதுக்கு முன்னாடி இப்படி ஒரு வெளிச்சத்த பாத்துராத கட்டக்காளைக்கும் வெளிச்சம் எப்பிடி வருதின்டு புடிபடல…

வண்டி கெழக்காம போயிக்கிருக்கு… கோயிலுக்கு ஒரு பர்லாங் தூரத்தில வெளக்கு வெளிச்சத்தில, மதுரைக் கோட்ட பூராம் பகலாத் தெரியுது…

என்னான்டு புரியாம பாத்துக்கிட்டே நிக்கிறப்ப… ஊரே அலர்ர மாரி சங்குச் சத்தம்… திரும்பி பாத்தா கரும் பொகையக் கக்கிக்கிட்டு ரயிலு நிக்கிது!

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in