ரஜினி சரிதம் 14: ஆறிலிருந்து எழுபது வரை: சிகரெட் வித்தையால் ரசிகர்களைக் கவர்ந்த ரஜினி!

ரஜினி சரிதம் 14: ஆறிலிருந்து எழுபது வரை: சிகரெட் வித்தையால் ரசிகர்களைக் கவர்ந்த ரஜினி!

‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் பிரதான பாத்திரங்களுக்குப் பிரபல கலைஞர்களைத் தேர்வுசெய்திருந்தார் இயக்குநர் சிகரம். ஆனால், ‘பைரவியின் கணவனாக நடிக்க, ஏற்கெனவே பிரபலமான முகமாக இருக்கக் கூடாது... ஆனால், ‘ஆள் வித்தியாசமா இருக்காரே?’ என்று ஆடியன்ஸ் சொல்கிற மாதிரி இருக்க வேண்டும்’ என்று முடிவுசெய்தார். அப்போது, நடிப்புக் கல்லூரியில் சந்தித்த மாணவர் சிவாஜி ராவ் தான் நினைவுக்கு வந்தார். உடனே அவரை அழைத்துவரச் சொன்னார்.

வில்லன் வேடத்தில் விருப்பம்

‘கேபி-யின் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும்’ என்று லட்சியம் வைத்திருந்த சிவாஜி ராவுக்கு, ரஜினிகாந்த் என்று பெயர் சூட்டியது மட்டுமல்ல; “உனக்கு மூன்று படங்களில் அடுத்தடுத்து நடிக்க வாய்ப்புக் கொடுக்கிறேன்” என்று இரண்டாவது சந்திப்பிலேயே வாக்குக் கொடுத்தார் கேபி. கொடுத்த வாக்கை, ‘மூன்று முடிச்சு’, ‘அந்துலேனி கதா’, ‘அவர்கள்’ ஆகிய படங்களில் காப்பாற்றினார். இந்த மூன்று படங்களிலுமே ரஜினிக்கு எதிர்மறைக் கதாபாத்திரங்களைக் கொடுத்து ஒரு தொடர்ச்சியை உருவாக்கிக் கொடுத்தார் கேபி.

ரஜினியை அவர் நேசிக்க இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, தன்னைப் போன்ற வேகத்தை ரஜினியிடம் கண்டார். இரண்டாவது, “என்ன மாதிரி ரோல் பண்ணணும்னு பிரியப்படுறே?” என்று கேட்டபோது, “வில்லன் ரோல் சார்” என்று பதில் சொன்னார் ரஜினி. “திறமையை வெளிப்படுத்த எந்த ரோலா இருந்தா என்ன?” என்று கேபி திரும்பக் கேட்டபோது, “வில்லன் ரோல்னா நல்லா பண்ணிடுவேன் சார்” என்று ரஜினி அழுத்திச் சொன்னார். வில்லன் ரோலில்தான் வேகமும் ஸ்டைலும் காட்ட முடியும் என்று ரஜினி நம்புவதை கேபி புரிந்துகொண்டார். அதனால்தான் அறிமுகப் படத்தில் குணச்சித்திர வேடம் கொடுத்த கேபி, ‘மூன்று முடிச்சு’ தொடங்கி அடுத்து வந்த 3 படங்களில் ரஜினிக்கு அவுட் அண்ட் அவுட் நெகடிவ் ரோல்களைக் கொடுத்தார்.

கேபி-யின் தீர்க்கதரிசனம்

‘அபூர்வ ராகங்கள்’ வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த ‘பேசும் படம்’ சினிமா பத்திரிகையில், தனது கதாபாத்திரங்கள் பற்றியும் அதில் நடித்துள்ள நடிகர்களைப் பற்றியும் எழுதியிருந்தார் கேபி.

அதில், “இப்படத்தில் கன்னடத்திலிருந்து வந்த ஒருவரைக் குணச்சித்திர நடிகராக அறிமுகப்படுத்துகிறேன். அவரை நீங்கள் கவனித்து பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள். தமிழ் சினிமாவில் அவருக்கென்று ஒரு மிகப் பெரிய இடம் காத்திருக்கிறது” என்று திரையுலக தீர்க்கதரிசிபோல் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்டது... ரஜினி நடிப்பில் அடுத்த 10 படங்கள் வெளியானபோது உண்மையாகிப்போனது.

‘அபூர்வ ராகங்கள்’ படத்தைத் தொடர்ந்து, ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் தெலுங்கு மறு ஆக்கமான ‘அந்துலேனி கதா’வில் ரஜினிக்குக் கதாநாயகியின் குடிகார அண்ணன் வேடத்தைக் கொடுக்க... அதைப் பிரித்து மேய்ந்துவிட்டார் ரஜினி. ‘அந்துலேனி கதா’ ஆந்திரத்தைக் கலக்கிக்கொண்டிருந்த நேரத்தில்தான், தமிழில் அதே நாளில் வெளியாகியிருந்த ‘மன்மத லீலை’யும் சூப்பர் ஹிட் ஆனது. ‘மன்மத லீலை’யில் தனக்குக் கேரக்டர் கிடைக்காமல் போய்விட்டதே என்று ஏங்க ஆரம்பித்துவிட்டார் ரஜினி. அந்தச் சமயத்தில், “இதைவிட ‘மூன்று முடிச்சு’ உனக்கு பெரிய பிரேக்கா இருக்கப்போகுது ரஜினி” என்று ரஜினிக்கு உற்சாகம் கொடுத்தார் அசோசியேட் இயக்குநர் சர்மா.

தூக்கத்தில் எழுப்பிய ரஜினி

‘மூன்று முடிச்சு ’படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் நடந்துகொண்டிருந்தது. சர்மாவின் அறையில் ரஜினியைத் தங்க வைத்திருந்தார்கள். மூன்றாம் நாள் படப்பிடிப்பு முடிந்து களைப்புடன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார் சர்மா. அதிகாலை 1 மணி. “சர்மா சார்... சர்மா சார்” என்று ஒரு குரல் எழுப்பியது. எவ்வளவு தூக்கத்திலும் பரிச்சயமான குரல் என்றால் எழுந்துவிடுவார் சர்மா. அவரை எழுப்பியவர் ரஜினி.

“இந்த நடு ராத்திரியில ஏம்பா எழுப்பினே?”

“சார்... நான் ஒழுங்கா ஆக்ட் பண்றேனா? டைரக்டர் என்னைப் பத்தி என்ன சொல்றார்? என்னோட முகம் மக்களுக்குப் பிடிக்குமா?” - தாழ்ந்த குரலில் கேட்டார் ரஜினி.

“ஏன்யா... உன் நடிப்பு பிடிக்காமலா மூணு படத்துக்கு புக் பண்ணியிருக்கார்? உன் முகம் பிடிக்கலேன்னா இந்நேரம் டாக் வந்திருக்கும். ‘மூன்று முடிச்சு’ ரிலீஸ் ஆனதும் பாரு... உனக்கு ரசிகர் மன்றம் தொடங்கிடுவாங்க. உன்னோட பேட்டி வேணும்னு கேட்டு பத்திரிகைக்காரங்க குவிஞ்சுடுவாங்க. இப்போ தூங்கு. என்னையும் தூங்கவிடு ப்ளீஸ்” சொல்லிவிட்டு சுருண்டு படுத்துக்கொண்டார் சர்மா. ஆனால், ரஜினிக்குத் தூக்கம் வரவில்லை. எழுந்துபோய் பல் துலக்கிவிட்டு வந்து, அடுத்தநாள் படம்பிடிக்க இருந்த காட்சியில் தனது வசனம், ஆக் ஷன், ரியாக்ஷ ன்களை நடித்துப் பார்த்து ஒத்திகை செய்துகொண்டிருந்தார். அதிகாலை 4 மணிக்குத் தூங்கிப்போன ரஜினி, ஐந்து மணிக்கு எழுந்து 5.30 மணிக்கெல்லாம் ஏற்காடு ஏரிக்கு வந்துவிட்டார். அன்று படகில் பயணிக்கும்போது கமலை ஏரியில் தள்ளிக் கொலைசெய்ய முயற்சிக்கும் காட்சி எடுக்க ஏற்பாடாகியிருந்தது.

சிகரெட் வித்தை

அடுத்த நாள் நள்ளிரவிலும் இதே கதை. மூன்றாம் நாள் நள்ளிரவில் ரஜினி எழுப்பாமலேயே சர்மாவின் உடல் கடிகாரம் எழுப்பிவிட, பக்கத்தில் ரஜினி படுத்திருக்கிறாரா என்று பார்த்தார் சர்மா. ‘அடக்கடவுளே... ஆளைக் காணோமே’ என்று பதறிப்போனவர் சட்டென்று எழுந்து போய் அறையின் பால்கனிக் கதவு கொஞ்சமாகத் திறந்திருப்பதைப் பார்த்தார். வெளிச்சம் வந்த கதவின் இடுக்கு வழியாகக் கவனித்தபோது, அங்கே ரஜினி சிகரெட்டைத் தூக்கிப்போட்டு வாயால் லாவகமாகக் கவ்விப்பிடித்தார்.

“ஏய்... ரஜினி! இது என்னப்பா சேட்டை..?” ஆச்சரியமாகக் கேட்டார் சர்மா. “இது என்ன சார்... இப்பப் பாருங்க” என்று பற்றவைத்த சிகரெட்டை நெருப்புடன் நாக்கால் இழுத்து வாய்க்குள் மறைத்துவிட்டு, சில நொடிகளுக்குப் பிறகு வாயைத் திறந்து நெருப்புடன் புகைந்துகொண்டிருக்கும் சிகரெட்டை ஜிவ்வென்று இழுத்துக் காண்பித்தார் ரஜினி. ஆடிபோன சர்மா, “யோவ்! நீ பெரிய வித்தைக்காரன்யா...” என்று போய்விட்டார்.

அன்று படப்பிடிப்பின் மதிய சாப்பாட்டு இடைவேளையில் கேபியிடம் ரஜினியின் சிகரெட் வித்தைகள் பற்றிச் சொல்லி, “சார் ரஜினி பண்றதை நீங்க யூஸ் பண்ணிக்கலாம்னு தோணுது” என்றார். “ஓ... கைவசம் ஏகப்பட்ட வித்தை வெச்சிருக்கானா பய... கூப்பிடுங்க அவன” என்றார் கேபி. அவரது மற்றொரு உதவி இயக்குநரும் கவியரசு கண்ணதாசனின் மகனுமான கண்மணி சுப்பு தேடிப் பார்த்துவிட்டு வந்து “ரஜினியைக் காணோம் சார்” என்றார்.

“யோவ்... இந்த வீட்ல நிலைக் கண்ணாடி எங்க இருக்குன்னு பாரு. அங்க நின்னுக்கிட்டு இருப்பான்” என்றார் கேபி. அவர் சொன்னது சரிதான். படப்பிடிப்பு நடந்த அந்த வீட்டின் பிரம்மாண்ட அறையில் இருந்த நிலைக்கண்ணாடி முன்பு நின்று ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார் ரஜினி.

யார் இந்த ரஜினி?

கேபி கூப்பிடுகிறார் என்று கண்மணி சுப்பு கூறியதும், ஒரு பள்ளி மாணவன் தலைமை ஆசிரியர் அழைப்புக்காக ஓடோடிச் செல்வதுபோல் வேகமாக கேபி முன்னால் வந்து நின்று, “ரெடி சார்” என்றார். “ரஜினி... இன்னும் லன்ச் பிரேக் முடியல. ஷாட்டும் ரெடியில்ல. ஆனா... இப்போ நீ மட்டும்தான் பெர்ஃபாமன்ஸ் கொடுக்கப்போறே... சிகரெட்டை வெச்சு விதவிதமா சித்து விளையாட்டு காட்றியாமே... சர்மா சொன்னான். எங்கே அதை இங்கே பெர்ஃபாம் பண்ணு... நான் பார்க்கணும். உன்னோட கேரக்டருக்கு அது சூட் ஆகுமான்னு எனக்குத் தெரியணும்” என்றார் கேபி. “அய்யய்யோ... சார் எங்கிட்ட சிகரெட் எல்லாம் கிடையாது... சர்மா சார் டூப் விடறார்” என்று ரஜினி சொல்லிக்கொண்டிருக்கும்போது, சட்டென்று சர்மா ரஜினி அருகில் வந்து, அவர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் டக்கென அவரது சட்டைப் பைக்குள் கையைவிட்டு சிகரெட்டை எடுத்துக் காட்டிவிட்டார்.

“சார்... நான் உங்க முன்னாடி...?” என்று சங்கோஜமாகத் தயங்கி நின்ற ரஜினியிடம், “இது படத்துக்காகத் தான்யா... செய்” என்றார் கேபி.

சிகரெட்டைத் தூக்கிப்போட்டு வாயால் கவ்வுவது, உள்ளங்கைக்குள் தீக்குச்சியை பற்றவைப்பது என்று ஒரு மேஜிக் ஷோ நடப்பதுபோல ரஜினி அசத்தியதைக் கண்டு வியந்துபோனார் கேபி. உடனே சர்மாவிடம், “கேமரா யூனிட்டுக்குச் சொல்லி நாளைக்குக் காலையில கிடைக்கிற மாதிரி ஸ்லோமோஷன் கேமரா கொண்டு வரச் சொல்லிடு. இந்த ட்ரிக்ஸ் எல்லாத்தையும் ஷூட் பண்ணிடணும். தேவையான இடங்கள்ல பயன்படுத்திக்கலாம்” என்றார். மறுநாள் விதவிதமாக ரஜினியின் சிகரெட் ஸ்டைல்களைப் படம்பிடித்துக்கொண்டார் கேபி.

ரஜினி ஸ்டைல்

‘மூன்று முடிச்சு’ படம் வெளியாகி சுமாரான வெற்றியுடன் ஓடிக்கொண்டிருந்தது. ரஜினியும் அவருடைய நண்பர்களும் சென்னை தியாகராயர்நகர் கிருஷ்ணவேணி திரையரங்குக்குப் படம் பார்க்க வந்திருந்தனர். ரஜினியை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் “அண்ணாத்தே... சிகரெட் ஸ்டைல் தூள் பறக்குது” என்று கையைப்பிடித்து குலுக்க... சில ரசிகர்கள் ரஜினியை அப்படியே அலேக்காகத் தோளில் தூக்கிக்கொண்டார்கள். ஒரே அமர்க்களம்... ஆரவாரமாகிவிட்டது. ‘மூன்று முடிச்’சில் தொடங்கிய இந்த ரஜினி ஸ்டைல்தான், அவரை ‘சூப்பர் ஸ்டார்’ ஆக்கிய தனித்த அம்சங்களில் ஒன்றாக ஆகி, ரஜினி எனும் ‘பிராண்ட் நடிப்பு’ உருவாகவும் காரணமாக அமைந்துவிட்டது.

அடுத்து ‘அவர்கள்’. ஆணாதிக்கத் திமிர் மற்றும் பழிவாங்கலின் அடையாளமாக ரஜினிக்கு ‘ராமநாதன்’ என்ற கேரக்டரைக் கொடுத்தார் கேபி. அவர் எதிர்பார்த்ததைவிட ரஜினியின் நடிப்பு அமைந்துபோனதில் படம் வெளியானதுமே, “யாருப்பா இந்த ரஜினி? நடிப்பு ரொம்ப புதுசா இருக்கே?!” என்று கேட்கத் தொடங்கினார்கள். ரஜினியின் பேட்டிக்காகப் பத்திரிகையாளர்கள் அவரைத் துரத்தத் தொடங்கினார்கள்?

ஆனால், ‘அவர்கள்’ படப்பிடிப்பில், “இந்த சிவாஜி சரிப்பட்டு வரமாட்டான்யா... ஜெய்கணேஷைக் கூட்டிட்டுட்டு வாங்க... பேக்-அப்” என்று படப்பிடிப்பை ரத்து செய்து சீறினார் கேபி. அப்படி என்ன நடந்தது?

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in