இனி எல்லாமே ஏ.ஐ - 13: துப்பறிவாளர்களின் குறுக்குவழி

இனி எல்லாமே ஏ.ஐ - 13: துப்பறிவாளர்களின் குறுக்குவழி

மீண்டும் ஷெர்லாக் ஹோம்ஸிடமிருந்தே தொடங்கலாம். துறை சார்ந்த பணிகளில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முன்னோடியாக விளங்கிய ஷெர்லாக், இப்போது வாழ்ந்திருந்தால், முகமறிதல் நுட்பம் குறித்து என்ன கருத்து கொண்டிருப்பார்?

இதோ ஓர் கற்பனை உரையாடல்.

“வாட்ஸன், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் துப்புகளைத் தேடிச்செல்லாமல், ஏன் இப்படி முகமறிதல் நுட்பத்தையே காவலர்கள் அதிகம் நாடுகின்றனர் என புரியவில்லை. பாருங்கள், மீண்டும் ஒரு அப்பாவி சிக்கியிருக்கிறார்.”
“நீங்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது ஹோம்ஸ். குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு முகமறிதல் நுட்பம் எளிதான வழி அல்லவா?”

“அதுதான் பிரச்சினையே. இந்த நுட்பம் மாயங்களைச் செய்ய வல்லதுதான். ஆனால், அரைகுறையானது. அதை அப்படியே நம்பி ஆதாரம் இல்லாமல் ஒருவரைக் குற்றவாளி எனத் தீர்மானிக்க முடியாது. போதிய தடயங்கள் வேண்டும்.”

சர்ச்சைக்குரிய நுட்பம்

ஆம், ஷெர்லாக் ஹோம்ஸ் எனும் துப்பறிவாளர் இன்றைக்கு நிஜமாக இருந்திருந்தால் இப்படித்தான் பேசியிருப்பார். ஏனெனில், முகமறிதல் நுட்பம், எந்த அளவுக்குப் பயனுள்ளதாகக் கருதப்படுகிறதோ, அந்த அளவுக்குச் சர்ச்சைக்குரியதாகவும் இருக்கிறது.
முழுமையாக வளர்ச்சி அடையாத இந்த நுட்பத்தைக்காவல் துறையினர் புலனாய்வில் முனைப்போடு பயன்படுத்திவருவது பிரச்சினைக்குரியதாகவே இருக்கிறது. குறிப்பாக, கண்காணிப்புப் பணிகளில்முகமறிதல் நுட்பத்தைக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவது அபாயகரமானது என சிவில் உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். செயற்கை நுண்ணறிவு வல்லுநர்களும்கூட இதை ஆமோதிக்கின்றனர். இதனால்தான், முகமறிதல் நுட்பத்தை விசாரணையில் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனும் கருத்து வலுவாக முன்வைக்கப்படுகிறது. அமெரிக்காவில், பல மாநிலங்களில் இது தொடர்பாகக் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. தீவிரமான விவாதங்களும் நடந்துவருகின்றன.

முகமறிதல் நுட்பம் எப்படிச் செயல்படுகிறது?

மனிதர்கள் செய்யக்கூடியவற்றை எல்லாம் இயந்திரங்களைச் செய்யவைப்பதுதான் செயற்கை நுண்ணறிவின் அடிப்படை. அந்த 
வகையில், மனிதர்கள் போலவே மனித முகங்களைக் கண்டறியும் ஆற்றலை, கணினியில் இயங்கும் மென்பொருட்கள் பெறுவது முகமறிதல் நுட்பம் எனக் கொள்ளப்படுகிறது.

1950-களில் சோதனை முறையில் முயற்சி செய்யப்பட்ட இந்த நுட்பம், இத்தனை ஆண்டு களில் வெகுவாக முன்னேறி வந்திருக்கிறது. இதன் பயனாக, புகைப்படம் அல்லது காணொலியில் உள்ள ஒரு முகத்தைப் பார்த்து,அவர் யார் என அடையாளம் காணும் ஆற்றலை இந்த நுட்பம் பெற்றிருக்கிறது. பொருட்களின் விலையைப் பார்க்க பார்கோடை (Barcode) ஸ்கேன் செய்வது போல, இந்த மென்பொருளைக் கொண்டு மனித முகங்களை ஸ்கேன் செய்து, சம்பந்தப்பட்ட மனிதர் யார் எனத் தெரிந்துகொள்ள முடியும்.

பயன்கள் என்னென்ன?

முகமறிதல் நுட்பத்தின் இந்த ஆற்றல் காரணமாகவே, காவல் துறையினர் குற்றவாளிகளை அடையாளம் காண இந்த நுட்பத்தை ஒரு முக்கியக் கருவியாகக் கையில் எடுக்கின்றனர். ஒரு குற்றம் நடந்திருக்கிறது; அதில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படமும் கிடைத்திருக்கிறது; ஆனால், அவர் யார் எனத் தெரியவில்லை... என்பது போன்ற சூழல் என வைத்துக்கொள்வோம்.

பழைய காலமாக இருந்தால் காவல் துறையினர் என்ன செய்வார்கள்? சந்தேகிக்கப்படும் நபரின் படத்தை வெளியிட்டு, பொதுமக்களிடம் தகவல் கோருவார்கள். ஆனால், இப்போது முகமறிதல் நுட்பத்திடம் சென்று, ‘இவர் யார் எனச் சொல்’ என கேட்டு நிற்கின்றனர். தன்வசம் உள்ள தரவுப் பட்டியலில் சம்பந்தப்பட்டவரின் படம் இருந்தால், அவர் யார் என்பதை இந்த நுட்பம் சொல்லிவிடுகிறது. காவலர்கள் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு குற்றவாளியைத் தேடும் படலத்தில் முன்னேறிச்செல்கின்றனர்.

பெருங்கூட்டத்தில் ஒருவரை அடையாளம் காண்பது உட்பட பலவிதங்களில் இந்த நுட்பம் பயன்படுகிறது. காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதிலும்கூட உதவுகிறது. விமான நிலையங்களில், சோதனை செய்யப் பயன்படுகிறது. விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பார்வையாளர்களை ஸ்கேன் செய்யவும் பயன்படுகிறது. பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விட், தன்னைப் பின்தொடர்ந்து தொல்லை தரும் நபர்களைக் கண்டறிந்து விலக்குவதற்காக, இசை நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் மத்தியில் விஷமிகளை ஸ்கேன் செய்து கண்டறிய முகமறிதல் மென்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறார். இவ்வளவு ஏன், நவீன ஸ்மார்ட்போன்களில் பயனாளிகள் தங்கள் முகத்தையே கடவுச்சொல் பூட்டாகக் கொண்டு, போனின் உள்ளே நுழைய பயன்படுத்துவது முகமறிதல் நுட்பத்தைத்தான்.

பாதகங்கள்

இவை எல்லாம் முகமறிதல் நுட்பத்தின் சாதகமான அம்சங்கள். ஆனால், இந்த நுட்பத்துக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. அதில் பாதகமான அமசங்கள் எண்ணற்றவை இருக்கின்றன. முகமறிதல் நுட்பத்தின் போதாமையை உணர்த்தும் இந்தப் பாதகமான அம்சங்கள், கண்காணிப்பு சமூகத்துக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.

அதுமட்டுமல்ல, அப்பாவிகள் தண்டிக்கப்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. அதனால்தான் முகமறிதல் நுட்பத்தின் பயன்பாட்டுக்குக் கடிவாளம் போட வேண்டும் என பலரும் வலியுறுத்திவருகின்றனர். இந்த நுட்பத்தின் ஆபத்துகள் என்னென்ன? அடுத்த வாரம் பார்க்கலாம்.

முகமறிதலில் முன்னோடி

முகமறிதல் நுட்பத்தின் முன்னோடிகளில் ஒருவராக வூடி பிளட்சோ கருதப்படுகிறார். கணினிகளை, மனித முகத்தைக் கண்டறிய வைக்கச்செய்வது எப்படி எனும் கேள்வியோடு, 1964-65-ல் இவர் தீவிர ஆய்வில் ஈடுபட்டார். ஹெலன் வுல்ப் மற்றும் சார்லஸ் பைசன் ஆகியோரும் இதில் உதவினர். எனினும், இந்த ஆய்வு தொடர்பாக அதிக பதிவுகள் கிடைக்கவில்லை.

பெயர் குறிப்பிடப்படாத சர்வதேசப் புலனாய்வு அமைப்பின் நிதி உதவியோடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதால் அதன் தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டன. எனினும், கண்கள் உள்ளிட்டவற்றை ஆதார அம்சங்களாகக் கொண்டு முகத்தை அடையாளம் காண்பதை இந்த நுட்பம் அடிப்படையாகக் கொண்டிருந்ததாகக் கருதப்படுகிறது. இன்று வரை இந்த அடிப்படையிலேயே இந்த நுட்பம் இயங்குகிறது. ஆரம்பமே ரகசியமாக அமைந்ததாலோ என்னவோ, இந்த நுட்பம் இன்றுவரை சர்ச்சைக்குரியதாகவே தொடர்கிறது.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in