ரஜினி சரிதம் 13: ஆறிலிருந்து எழுபது வரை: கைக்கு எட்டாத 100 நாள் கேடயம்!

ரஜினி சரிதம் 13: ஆறிலிருந்து எழுபது வரை: கைக்கு எட்டாத 100 நாள் கேடயம்!

‘அபூர்வ ராகங்கள்’ முதல்நாள் படப்பிடிப்பில், ஒட்டப்பட்ட தாடியுடன் வந்து நின்ற ரஜினியைப் பார்த்து, “உன்னோட முகத்துக்கு இந்த தாடி சுத்தமாக செட்டாகல... அதைச் சட்டுன்னு ரீமூவ் பண்ணிட்டு, பிரெஞ்சு பியர்டு மாதிரி கொஞ்சமா குறுந்தாடி வெச்சுகிட்டு வாங்க மிஸ்டர் ராவ்” என்றார், கே.பி.

“அப்பாடா...” என்று பெருமூச்சு விட்டார் ரஜினி. ஒட்டிய தாடியைப் பிய்த்து எடுத்தார் மேக்கப் மேன் சுந்தரமூர்த்தி. அப்போது ரஜினியின் முகத்தில் கடுமையான எரிச்சல். ‘நடிப்பு என்று வந்தபிறகு இதெல்லாம் ஒண்ணுமில்லே. வேகமா கேமரா முன்னால்போய் நில்லு... ஓடு’ என்றது ரஜினியின் உள்மனது. கே.பி. எதிர்பார்த்தது சரிதான், ரஜினிக்கு குறுந்தாடிதான் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. ரஜினிக்கான அறிமுகக் காட்சிகளையும், கமல் - ரஜினிக்கு இடையிலான காட்சிகளையும் எடுத்து முடித்தார் கே.பி.

6-வது நாள் படப்பிடிப்புக்கு குறுந்தாடியுடன் வந்த ரஜினியைப் பார்த்த கேபி, “யோவ்... இன்னைக்கு என்ன சீன்... என்ன ஏதுன்னு இந்த சர்மா உனக்கு புரோகிராம் சொன்னானா இல்லையா?” என்றார். ரஜினியோ திருதிருவென்று விழித்தார். “சிவாஜி ராவ்... இன்னைக்கு உனக்கும் ஸ்ரீவித்யாவுக்கு ரொமான்ஸ் சீன் எடுக்கிறேன்... சட்டுன்னு க்ளீன் ஷேவ் பண்ணிட்டு தலைக்கு ஷேம்பு வாஷ் போட்டுக் குளிச்சிட்டு ஜம்முன்னு வா. 30 மினிட்ஸ்... ஹரி அப்” என்றார் கேபி.

அவ்வளவுதான்! நெருப்பாக கேமரா முன்பு கதாநாயகனைப்போல வந்து நின்றார் ரஜினி. ரஜினியின் பெல்பாட்டம் பேன்ட் - டீ சர்ட் அலைபாயும் கேசம் எல்லாவற்றையும் பார்த்த கே.பி, “யோவ்... நீ வேற மாதிரி மெட்டீரியல்யா... குட்..! உனக்கு இப்போ ஒரு டயலாக்கும் கிடையாது... அதனால டோன்ட் ஒர்ரி... ஸ்ரீவித்யாகூட, கலகலன்னு உனக்கு என்ன பேசணும்னு தோணுதோ அதை உன் இஷ்டப்படி ஜாலியா பேசி சிரிச்சு எக்ஸ்பிரஸ் பண்ணு போதும்...” என்றார். கேமரா சுழலத் தொடங்கியது.

ரஜினி கன்னடத்தில் ஏதோ பேசிச் சிரிக்க... ஸ்ரீவித்யா மலையாளத்தில் பேச... இரண்டு பேருக்குமே எதுவும் புரியவில்லை. ஆனால், அவ்வளவு நெருக்கமாக கதாநாயகியுடன் ஒன்றி நடித்தபோது ரஜினியிடம் தயக்கமும் கூச்சமும் ஒட்டிக்கொண்டது.
“சிவாஜி... ரொம்ம ஷை அடிக்கிறே... இந்தமாதிரி ஆக்டிங் வேண்டாம். ரெடி ரெடி பெட்டராப் பண்ணு... நேச்சுரலா பண்ணு... உன்னோட ஸ்பீஸ்ட் எங்க... அதைக் கொண்டு வா... ஷை தானாப் போயிடும்” என்றார் கே.பி. என்றாலும், ஆறாவது டேக்கில்தான் மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட ரொமான்டிக் மாண்டேஜ் காட்சி ஓகே ஆனது. அதன்பிறகு சங்கோஜம் மறந்து வெகு இயல்பாக நடிக்கத் தொடங்கிவிட்டார் ரஜினி. 

கண்ணீர் விட்ட ரஜினி

ரஜினிக்கான காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டது. அடுத்து வந்த ஒரு வாரத்தில், படத்தின் க்ளைமாக்ஸும் எடுத்து முடிக்கப்பட்டு, எடிட்டிங் முடிந்து ஜெமினி ஸ்டுடியோவில் படத்துக்கான டப்பிங் வேலைகள் தொடங்க இருந்தன. இதை சர்மா வழியாகத் தெரிந்துக்கொண்டார் ரஜினி. அவரையும் டப்பிங் பேச அழைத்திருந்தார் கே.பி. ரஜினியும் கே.பி. சொன்னதை மனதில் வைத்து தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தார். ஆனால், படக்குழுவில் இருந்த சிலர், சிவாஜி ராவுக்கு டப் செய்துவிடலாம் என்றார்கள். ஆனால் கே.பியோ, “கூடவே கூடாது... ஒரிஜினல் வாய்ஸ்தான் வேண்டும்” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

ஜெமினி ஸ்டுடியோவுக்கு ரஜினி போனபோது கமலும் ஸ்ரீவித்யாவும் டப்பிங் பேசிக்கொண்டிருந்தார்கள். அன்று பிற்பகலில் ரஜினிக்கு டப்பிங் தொடங்கியது. கேட்டை தள்ளிக்கொண்டு அவர் அறிமுகமாகும் காட்சி திரையில் வந்தது. அதைப் பார்த்து உடல் சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார் ரஜினி. தனது உருவம் திரையில் வருவதைப் பார்ப்பது முதல் அனுபவம். ‘இதற்காகத்தானே இங்கே நூற்றுக்கணக்கான மனிதர்கள் போராடுகிறார்கள். நம்மோடு படித்த மற்ற 35 பேருக்கு கிடைக்காத வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது... உண்மையில் நாம் அதிர்ஷ்டசாலி தான்’ என்று ரஜினி எண்ணிக்கொண்டிருக்கும்போதே, “சிவாஜி ராவ்... இவங்க எப்படிப் பேசுனாங்கன்னு பார்த்துட்டீங்க... இப்போ உங்க டேர்ன். உங்க கேரக்டர் என்ன... எப்படின்னு புரிஞ்சு நடிச்சமாதிரி... இப்போ டப்பிங்லயும் உங்க குரல் நடிக்கணும். நீங்க ஸ்பாட்ல நடிச்சப்போ இருந்த ஃபீலை அப்படியே மனசுல கொண்டுவந்து பேசுங்க” என்றார் கே.பி.

இயக்குநர் இப்படிச் சொன்னதும் நடுங்கித்தான் போனார் ரஜினி. கடவுளே... நடிப்பைவிட டப்பிங் பெரிய சவாலாக இருக்கும் போலிருக்கிறதே! என்று எண்ணிக்கொண்டவர், மைக் அருகில் வந்தார். மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இயக்குநர் சொன்னபடி டப்பிங்கில் ஃபீல் கொண்டு வந்து பேசினார். அதேசமயம், ரஜினிக்கு சில உச்சரிப்புகளைச் சொல்லிக்கொடுத்தார் கே.பி. டப்பிங், பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது ரஜினியை அழைத்தார் கே.பி. “ஏற்கெனவே நடிகர் திலகம் சிவாஜி இருக்கார்... அதனால வேற ஒரு நல்ல பெயரை சினிமாவுக்கு வச்சுக்கோப்பா” என்றார். அடுத்து வந்த இரண்டு நாட்களும் ரஜினி தனது நண்பர்களுடன் கலந்தாலோசித்து, சில பெயர்களை இறுதி செய்துகொண்டு கே.பியைப் பார்க்கப்போனார்.

அன்றைக்கு ஹோலிப் பண்டிகை. “வாங்க மிஸ்டர் சிவாஜி ராவ்” என்று ரஜினியை கூப்பிட்டார் கே.பி. கே.பியிடம், தான் கொண்டுவந்திருக்கும் ‘சரத்’, ‘ஆர்.எஸ்.கெய்க்வாட்’ போன்ற பெயர்களைச் சொன்னால் நிச்சயம் மிகச் சுமார் என்று சொல்லிவிடுவார் என ரஜினிக்குத் தோன்றியது. அதனால், கே.பியிடம், “எனக்கு நீங்களே ஒரு பெயர் வையுங்க சார்” என்றார். அப்போது கேபி. “என்னோட ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தின் கதாநாயகன் சந்திரகாந்துக்கு இரண்டு மகன்கள். ஒருவன் காந்த், இன்னொருவன் ரஜினிகாந்த். ஸ்ரீகாந்த் என்கிற பெயரை ஏற்கெனவே ஒருவருக்கு வைத்துவிட்டேன். ரஜினிகாந்த் என்கிற பெயரை உனக்குச் சூட்டுகிறேன்” என்றார்.

அந்தப் பெயரைக் கேட்டதும், அதுவரை சிவாஜி ராவாக இருந்த ரஜினிக்கு உடலில் புதுரத்தம் பாய்ந்ததுபோல் இருந்தது. கே.பியின் காலைத் தொட்டு வணங்கி, “நல்ல வில்லன் நடிகராக வளர என்னை ஆசீர்வதிக்கணும்” என்றார். “வில்லன் நடிப்புங்கிறது ஒரு பார்ட்... அதுவே இறுதி இல்லப்பா... நீ நல்ல நடிகனாக வருவே...” என்றார் கே.பி. இதைக் கேட்டு மனதுக்குள் துள்ளிக் குதித்தார் ரஜினி.

மறக்கமுடியாத நாள்

நடிப்புக் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், பாலச்சந்தரை முதல்முறையாகப் பார்த்து கைகுலுக்கிய நாள், முதல்நாள் படப்பிடிப்பு ஆகியவற்றை ரஜினியால் எப்படி மறக்கமுடியாதோ அதேபோல், 1975, ஆகஸ்ட் 15-ம் தேதியையும் மறக்கமுடியாது. அன்றுதான் ‘அபூர்வ ராகங்கள்’ ரிலீஸ்.

பெங்களூருவுக்குப் போன் செய்து அண்ணன்கள், அப்பா, டெப்போ நண்பர்கள் என எல்லோரிடமும் இந்த விஷயத்தைச் சொன்னார் ரஜினி. படம் வெளியான நாளில், பகல் காட்சி பார்ப்பதற்காக, சென்னை டி.நகர் கிருஷ்ணவேணி திரையரங்குச் சென்றார் ரஜினி.
அங்கே டிக்கெட் கொடுக்கத் தொடங்கிய அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ‘ஹவுஸ்ஃபுல்’ பலகையைத் தொங்கவிட்டுவிட்டார்கள். படத்தில் நடித்த ரஜினிக்கே டிக்கெட் இல்லை. திரையரங்க மேலாளரைப் பார்த்து, “சார்... நான் இந்தப் படத்துல நடிச்சிருக்கேன்... எனக்கொரு டிக்கெட் கொடுங்க” என்றார்.

ரஜினியை ஏற இறங்கப் பார்த்த மேலாளர், ‘கெஸ்ட் பாஸ்’ கொடுத்து ரஜினியை உள்ளே அனுப்பச் சொன்னார். உள்ளே போய் இதயம் படபடக்க ரசிகர்களோடு ரசிகனாக அமர்ந்து படம் பார்க்கத் தொடங்கினார் ரஜினி. வசனக் காட்சிகளில் கீழே குண்டூசி விழுந்தாலும் தெளிவாய்க் கேட்கும் அளவுக்கு அமைதி. படம் முடிந்து வெளியேறிக்கொண்டிருந்த ரசிகர்கள், “கே.பி மறுபடியும் கலக்கிட்டார்ப்பா” என்று திருப்தியுடன் சொல்லிச் செல்வதை ரஜினி கவனித்தார். மனம் நிறைந்துபோன ரஜினி, அருண் ஹோட்டலில் இருந்த தனது நண்பர்களை வுட்லேண்ட்ஸ் ட்ரைவின் உணவகத்துக்கு அழைத்துக்கொண்டுபோனார். அப்போது அவரது கையில் இருந்தது 25 ரூபாய் மட்டும் தான். நண்பர்களுக்கு சின்னதாய் ஒரு விருந்து கொடுத்துவிட்டு, அவர்களையும் கிருஷ்ணவேணி திரையரங்கிற்கு படம் பார்க்க அழைத்துச் சென்றார்.

இரண்டாவது படத்தில் ஸ்டைல்!

‘அபூர்வ ராகங்கள்’ வெற்றிகரமாக ஓடினாலும் ரஜினிக்கு எந்தப் புதுப்பட வாய்ப்புகளும் வரவில்லை. ஆனால், கே.பி தான் சொன்னபடியே அடுத்தப் படத்தில் நடிக்க ரஜினியை அழைத்தார். ‘மூன்று முடிச்சு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பில், “யோவ் ரஜினி...” என்று கே.பி அழைத்தபோது மகிழ்ந்து போனார் ரஜினி. இம்முறை கமல்ஹாசனுக்கு சிறுவேடம். ரஜினிக்கு ஸ்டைல் வில்லன் வேடம். ஆனால், இறுதியில் மனம் திருந்துவது போன்று ரஜினியின் கதாபாத்திரத்துக்கு ‘பாசிட்டிவ்’
அணுகுமுறையும் முழுமையும் கொடுத்திருந்தார் கே.பி. அதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த ஸ்ரீதேவிக்கு முதல் முறையாக கதாநாயகி வேடம்.

‘அபூர்வ ராகங்கள்’ வெளியானவுடன் ரஜினிக்கு கிடைத்ததுபோல், தங்களுக்கும் கே.பி வாய்ப்புக் கொடுக்கமாட்டாரா என்று நடிப்புக் கல்லூரியின் ‘ரஜினி பேட்ச்’ மாணவர்கள் கலாகேந்திரா அலுவலகத்தை மொய்க்கத் தொடங்கினார்கள். ‘மூன்று முடிச்சு’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த ரஜினி, தன்னுடன் படித்த நண்பர்கள் பலரையும் கே.பியிடம் அறிமுகப்படுத்தினார். அவர்களில் கே.நட்ராஜுக்கு ‘மூன்று முடிச்சு’ படத்தில் ரஜினியின் மனசாட்சியாக நடிக்கும் வேடத்தைக் கொடுத்தார் கே.பி. ரஜினியின் வேகம், அவரது ஸ்டைல் ஆகியவற்றை அவதானித்திருந்த கே.பி, ரஜினி ஸ்டைலாக சிகரெட் பிடிப்பதை ‘மூன்று முடிச்சு’ படத்தில் பயன்படுத்திக் கொண்டார். மூன்று முடிச்சு படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் இருந்தபோது ‘அபூர்வ ராகங்கள்’ படம் பல திரையரங்குகளில் நூறு நாட்களை நெருங்கிக்கொண்டிருந்தது.

கலைஞர் தலைமையில் ‘அபூர்வ ராகங்கள்’ படத்துக்கான 100-வது நாள் விழா நடத்த, கலாகேந்திரா விமரிசையாக ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தது. தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் கையால் பாராட்டுக் கேடயம் பெறப்போகிறோம் என்று மனதில் துள்ளிக்கொண்டிருந்தார் ரஜினி. அந்த நாளும் வந்தது. ஆனால், வேறொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால், கமல், ஸ்ரீவித்யா, இயக்குநர் கே.பி உள்ளிட்ட சிலருக்கு மட்டும் கேடயம் வழங்கிவிட்டுப் புறப்பட்டார் கலைஞர். அதில் ரஜினிக்கு பெருத்த ஏமாற்றம்!

படங்கள் உதவி: ஞானம்

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in