கட்டக்காளை 12

கட்டக்காளை 12

வலி பொறுக்கமாட்டாம அழுத லச்சுமாயோட ஒடம்ப, முழுசா சோதிச்சுப்பாத்த பொன்னம்மாவுக்கு, வலிக்கான காரணம் புடி படல. பிள்ளத்துடிப்பும் இல்ல, என்னா செய்யிறதிண்டும் புரியல, பொன்னம்மா முழிக்கிறதப் பாத்த அம்புட்டுப் பேத்துக்கும் மூஞ்சியில அருளில்ல.

வகுத்துக்குள்ள இருக்கிற பிள்ளைக்கு நடக்கக் கூடாத எதும் நடந்துருச்சோன்ற பயம் பெருமாயிக்கு.

“அடியே ஏம் பிள்ளைக்கு என்னாச்சு… 

சொல்லுடி, ஏன் இப்பிடி முழிக்கிறவ…” 

பதறிக்கிட்டே கேட்டா பெருமாயி.

பொன்னம்மா கிட்டருந்து எந்தப் பதிலுமில்ல…

இதப் பாத்துக்கிருந்த நல்லம்மா கெழவி, “ஏய்… கூறுகெட்டவளே… சூட்டுவலிகூட இப்பிடித்தான்டி இருக்கும். என்னான்டு நல்லாப் பாரு…”ன்டு கோவமாச் சொன்னா.

கெழவி சொன்னது பொன்னம்மா மண்டையில சுரீர்ன்டு ஒறைக்க, படக்கின்டு சுதாரிச்சா.

“யேத்தா… அந்த வெளக்கெண்ண கிண்ணத்த எடு…” பெருமாயிகிட்டச் சொல்லிக்கிட்டே, “பேச்சி நீ போயி ரெண்டு மொளகு நுனிக்கிட்டு வா…”ன்டு சடசடன்டு மும்மரமாயிட்டா பொன்னம்மா.

வெளக்கெண்ண கிண்ணத்துலருந்த கொஞ்சூண்டு எண்ணெய எடுத்து, லச்சுமாயோட உள்ளங்கையில ஊத்துனா… நுனுக்கின மொளகுத் தூளயும், அதுல போட்டுக் கலக்கி நாக்குல நக்கச் சொன்னா.

சொன்னது மாரியே செஞ்சா லச்சுமாயி.

“ஒண்ணும் பயப்படாத சூட்டுவலியாருந்தா செத்த வடத்தில கொறஞ்சிரும்…” லச்சுமாயத் தேத்துனா பொன்னம்மா.
சொன்ன மாரியே செத்தநேரத்துல வலி கொறைஞ்சு, சொகாத்தியமாயிட்டா லச்சுமாயி.

‘எங்க… கொலம் காக்குற பொன்னுவைரா… சாமி… ஏம்பிள்ளைக்கு எந்தப் பங்கமும் வந்திறப்படாது’ன்டு கொலசாமிய நெனச்சுக் கும்புட்ட பொன்னம்மா...

லச்சுமாயி வகுத்துல கையவச்சு, வலப்பக்கமும் எடப்பக்கமும் பாத்தா… பிள்ள துடிக்கிற துடிப்ப இப்ப நல்லா ஒணந்தா.
இன்னவரைக்கும், சொரக்கொடிகெணக்கா சொனங்கிப் போயிருந்த பொன்னம்மா மூஞ்சி, இப்ப மல்லியப்பூ கெணக்கா மலந்துருக்கிறதப் பாத்து சுத்தி நின்ட பொம்பளைக மகுந்து போனாக.

புளிச்ச தண்ணிய ஒத்தமொடக்கு வாங்கிக் குடிச்ச லச்சுமாயி, செத்தவடம் ஆசுவாசப்படுத்திக்கிட்டா.

“இன்னமே ஒண்ணும் தொந்தரவிருக்காது. காலுகையில வீக்கமில்லாம சப்புன்டு வத்திப் போயிருக்கு… நல்லா வலியெடுக்கட்டுமித்தாய்... எந்நேரமாருந்தாலும் கூப்பிடு. ஒத்தெட்டுல ஓடியாந்திறேன்...” பெருமாயிகிட்ட சொல்லிக்கிட்டே, அங்கெருந்து கெளம்பிட்டா பொன்னம்மா.

லச்சுமாயச் சுத்தி நின்டுக்கிருந்த அக்கம்பக்கத்து வீட்டாளுகளும் கெளம்பிப் போக, வாசல்ல நின்டுக்கிருந்த பின்னத்தேவன் அங்கென கெடந்த கட்டுல்ல ஒக்காந்து பெருமூச்சு விட்டான்.

மசங்கிறதுக்குல்லாம் ஊருக்குத் திரும்பணுமின்டு வந்த கட்டக்காளை, லச்சுமாயிக்கு இப்படி ஆனதனால முடிவ மாத்திக்கிட்டான்.
“யே… ஒச்சுக்காளை, கஞ்சியக் குடிச்சிட்டுப் போயி படுத்தொறங்கு விடிகாலம் போகலாமிடா…”ன்டு சொல்லி ஒச்சுக்காளைய அனுப்பிட்டு வீட்டுக்குள்ள வந்தான்.

சாஞ்சமேனிக்க திண்ணையில ஒக்காந்திருந்த லச்சுமாயி, கட்டக்காளையப் பாத்து எந்திரிக்க, அவகிட்ட வந்த கட்டக்காளை தோள்ல கைய வச்சு ஒக்காரச் சொல்லி, ஆறுதலா தலையத் தடவிக் குடுத்துக்கிட்டு அவ பக்கத்திலயே ஒக்காந்துட்டான்.

மேக்குச் சொவத்திலருந்த மாடாகுழியில, வெளக்கு மினுக்கு மினுக்குன்டு எரிஞ்சுக்கிருந்துச்சு.

புருசன் பக்கத்தில இருக்கிறது, லச்சுமாயிக்கு பெரிய பலமாத்தெருஞ்சிச்சு… கட்டக்காளைய ஏறுட்டுப் பாத்திக்கிட்டே, அவென் நெஞ்சில சாஞ்சுக்கிட்டா.

மனுசப் பெறப்புதான் எல்லாப் பெறப்பவிடயும் ஒசந்தது… 

அந்தப் பெறப்பு எடுக்கிறதுக்குல்லாம், படுறபாடு கொஞ்சநஞ்சமில்ல.

தலப்பெறசவமின்றது… பொம்பளைக்கு மறுபெறப்புமாரி. அம்புட்டுச் செரமம்.

நெற மாத்தக்காரிய, சூதானமா பாத்துக்கிறணுமின்டு தான், தாய் வீட்டுக்கு கூட்டியாந்து வச்சிருக்காக. பிள்ளையப் பெத்து எடுக்கிறது வரைக்கும் ஒவ்வொண்ணையும் பாத்துப் பாத்து பக்குவமாச் செஞ்சாகணும்.

ஒடம்புல நீச்சத்து கொறஞ்சு, கையி காலு உப்புனாப்பில இருந்துச்சுன்டா… சொரக்கா, பீக்கங்கான்டு, என்னான்ன நீர்க்காயு இருக்கோ, நெத்தம் ஒண்ண வேகவச்சோ, கொழம்பு வச்சோ சேத்தாகணும்.

சொகப் பெறசவமாகணுமின்டு, வீட்டுல வைக்கிற கொழம்பில வெளக்கெண்ணெயத் சேத்துக்கிறதும் உண்டு. பத்து நாளைக்கி முன்னாடி இருந்தே, கொதகொதன்டு வெளக்கெண்ணெயில முட்டைய ஒடச்சு ஊத்தி, ஒரு பெரட்டுப் பெரட்டி, வெந்தும் வேகாம லாபக்கின்டு, வாயில போட்டுத் திங்கணும். பெரியாளுக சொல்ற இதுமாதிரியான பக்குவத்திலயே இருந்தமின்டா, புள்ள சிக்கல்லாம பெறந்துரும்.

செலசமயத்தில, கொடிசுத்திக்கிட்டு பிள்ளைய வெளியேற விடாம தாயிக்கிச் செரமத்தக் குடுத்துப்பிடும். தலமாறி வந்துச்சுன்டாலும் அம்புட்டுத்தான், வேதனையில உசுரே போறமாரி வலிக்கும்.

வகுத்துக்குள்ளருந்து பிள்ளய வெளியேத்துறதுக்குள்ள அந்தத் தாய்க்காரி செத்துத்தான் பொழைக்கணும்.

நடுச்சாமம்… நல்லா ஒறங்கிக்கிருந்த லச்சுமாயி, வகுறு வலிக்கிதுன்டு திடீர்ன்டு கத்தி அழுதா.

படக்கின்டு எந்திரிச்ச கட்டக்காளை, “என்னாச்சு… லச்சுமாயி, என்னாச்சு…” ன்டு பதறிட்டான்.

ரெண்டு கையயும், இடுப்பில வச்சு அமுக்கிப் புடுச்சிக்கிட்டு, “வலிக்கிது”ன்டு லச்சுமாயி அழுதா.

சந்தம் கேட்டு பின்னத்தேவனும் எந்திரிச்சு வர, அரிக்கேன் வெளக்க எடுத்துக்காந்த பெருமாயி, மாடாக் குழியில தீவத்தயும் தூண்டி விட்டா.

அந்த எடம் பூராம் பளீச்சின்டு வெளிச்சமாயிருச்சு.

லச்சுமாயி துடிக்கிறதப் பாத்து கட்டக்காளைக்கு மனசுத்தாங்கல.

மருத்துவச்சிய கூட்டியாறேன்டு, பெருமாயி கையில வச்சிருந்த வெளக்க வாங்கிக்கிட்டு, பின்னத்தேவன் அங்கெருந்து வெரசாப் போனான்.

போனவெரசிலயே மருத்துவச்சி பொன்னம்மாள, பின்னத்தேவன் கூட்டியாந்திட்டான்.

“லச்சுமாயிகிட்டப் போன பொன்னம்மா , “எங்கத்தே வலிக்கிது…”ன்டு கையப் புடிச்சிக் கேட்டா.

“பெறத்துல… இடுப்பு ரெண்டுலயும் உசுரு போறாமாரி வலிக்கிது…”ன்டா.

இப்ப வலிக்கிற வலி, பேறுகாலத்துக்கான வலின்றத புரிஞ்ச பொன்னம்மா, “யாராச்சும் ரெண்டு பொம்பளைகள கூட்டியாப்பா…”ன்டு பின்னத்தேவங்கிட்ட சொன்னா.

“நீயும் செத்த வெளியேரு சாமி…”ன்டு கட்டக்காளையயும் போகச் சொன்னா.

அந்த ராத்திரியிலயும், சின்னப்புள்ள கெணக்கா ஓட்டமும் நடையுமா அலைஞ்ச பின்னத்தேவன், பக்கத்து வீட்டு பேச்சியை
யும், நல்லம்மா கெழவியையும் தட்டுத்தடுமாறி வெளக்குவெளிச்சத்தில கூட்டியாந்தான்.

லச்சுமாயிக்கு, முன்னவிட இப்ப வலி கூடுதலாயிருச்சு…

வகுத்துக்குள்ளருக்கிறத எப்பிடியாச்சும் வெளிய தள்ளணுமின்டு தவதாயப் பட்டா... முக்கி முக்கித் தவிச்சுப் போனா.

சாமி வீட்டுக்குள்ள போன பெருமாயி, காமாச்சி வெளக்குல கெடந்த, பழைய திரி மொனைய நசுக்கிவிட்டு, தீபமேத்துனா.

“வரமிருந்து தவமிருந்து, ஏம்பிள்ள சுமக்கிற உசுருக்கு எந்தப் பங்கமும் வந்திராம தாயும் பிள்ளையும் நல்லபடியா பேறுகாலமாகணுஞ் சாமி...”

சாமியக் கும்புட்டு, திந்நீற எடுத்துக்காந்து லச்சுமாயி நெத்தியிலயும், வகுத்துலயும் பூசிவிட்டா.

“ஒண்ணுமில்லத்தே… அம்புட்டுத்தான்… செத்த பொறுத்துக்க” பெருமாயும், பொன்னம்மாளும் லச்சுமாயிக்கு தைரியம் சொல்லி தேத்திக்கிருந்தாக.

தலக்கோழி கூப்புட ஆரம்பிச்சிருச்சு… இன்னஞ் செத்த நேரத்தில விடிஞ்சிரும்.

தண்ணிக்கொடம் ஒடஞ்சு, ‘விழுக்’குன்னு வெளிய வந்த பிள்ளைய பொத்துனாப்பில கையில தாங்கி தொடச்சு தட்டிக் குடுத்து அழுகவிட்டா பொன்னம்மா.

ஆறு வருசமா பிள்ளையில்லாம தவிச்ச கட்டக்காளைக்கு, தாம்பிள்ளச் சத்தம் கேட்ட ஒடனெ, ரோமக்காலெல்லாம் நட்டுக்கு நிக்கிது. சந்தோசத்துல பேச்சுமூச்சு இல்லாம இருக்கான்.

வகுத்துக்குள்ளருந்த பிள்ளை வெளிய வந்தப் பின்னாடியும் லச்சுமாயிக்கு வலிகொறையல...

இன்னும் என்னத்துக்கு வலிக்கிதுன்டு ஓசிச்ச பொன்னம்மா, மேலருந்து கீழவரைக்கும், வகுத்துல கொஞ்சம் கொஞ்சமா நீவி விட்டுக்கிட்டு, பொத்துனாப்பில அமுக்கிக் குடுத்தா.

கீழாமின்ன நீவிக்கிட்டே வர, லச்சுமாயிக்கு வலி பொறுக்கமுடியல… இன்னொரு பிள்ளையும் வகுத்துக்குள்ள கெடக்கு.
ரெட்டாக்கெடா வெட்டுரேன்டு கட்டக்காளை வேண்டுனதினால, அந்தச் சாமியே ரெட்டப்புள்ள குடுத்திருச்சு போல…

பக்குவமா, எறக்கி வழிச்ச பொன்னம்மா, எந்தச் செரமமுமில்லாம ரெண்டாவது பிள்ளையையும் வெளிய எடுத்துட்டா.
லச்சுமாயிக்கி பெரிய சொமய எறக்கி வச்சது கெணக்கா இருக்கு.

வலியில துடிச்சு, சொணங்கிக் கெடந்த லச்சுமாயி கிட்ட, பிள்ளைக ரெண்டயும் பொன்னம்மாளும், பெருமாயும் ஆளுக்
கொண்ணாத் தூக்கி காமிச்சாங்க.

இருட்டு வெலகியும் வெலகாம இருந்த செங்கமங்கல்ல… வெளக்கு வெளிச்சம் பட்டு, தகதகன்டு மின்னுற தாம்பெத்த பிள்ளைகளோட மூஞ்சியப் பாத்தா லச்சுமாயி.

ஒரே விசையில ரெண்டப் பெத்துப்பிட்டமேன்டு உள்ளுக்குள்ளயே மகுந்துபோன லச்சுமாயிக்கு, ஒரு நா முச்சூடும் பட்ட வேதனையும், வலியும் இப்பப் பஞ்சாப் பறந்து போயிருச்சு.

வெளியில ஒக்காந்திருந்த கட்டக்காளையும், பின்னத்தேவனும் எந்திரிஞ்சு உள்ள ஓடியாந்தாங்க…

“அரசாளப் பெறந்துட்டாங்கப்பா… பாருங்க…” பொன்னம்மா, பின்னத்தேவங்கிட்ட பிள்ளைகளக் காமிச்சா.

பேரன்களப் பாத்து தனக்குள்ளயே பெருமப்பட்ட பின்னத்தேவன் அத வெளிக்காட்ட மாட்டாம, “அவுக அப்பெங்கிட்ட குடு…”ன்டு பெருந்தன்மையாச் சொன்னான்.

“ஒங்க கொலசாமி… ஆச்சி ஒச்சாயி, ரெண்டு காளைகள குடுத்திருக்குப்பே…”ன்டு சொன்ன பொன்னம்மா, “ஆத்தாளுக்கு சவுடி செஞ்சு போட்டுரணுமப்பா… மறந்திராத...”ன்டு தனக்குச் செய்யணுமின்றதச் சொல்லிக்கிட்டே கையில வெச்சிருந்த பிள்ளைய கட்டக்காளைக்கிட்டா குடுத்தா. இன்னொத்த பிள்ளைய பெருமாயி கொண்டுக்காந்து குடுத்தா.

ரெண்டு பிள்ளைகளோட பிஞ்சுக் கால்ல முத்தங் குடுத்தான் கட்டக்காளை… அதுக பாதம் பட்ட சொகம் அவன அந்தரத்துல மெதக்க வச்சிருச்சு!

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in