கட்டக்காளை - 9

கட்டக்காளை - 9

வானத்தில தார்க்கம்பு வெள்ளி, ஒரு பாகத்துக்கும் மேக்க வந்துருச்சு. சல…சலன்டு ஓடுற ஓடத்தண்ணி, சீவண்டுச் சத்தம். என்னமோ நடக்கப்போதுன்றமாரி பயமுறுத்துது. கருவேலம் பொதரு நெழலு… நெலாவெளிச்சத்துல, சடைய விரிச்சுப்போட்ட முனிமாரி தெரியுது.

குப்ப மேட்டில, ஒச்சுக்காளையும்,வீரணனும் மறைஞ்சு ஒக்காந்து வேவு பாக்கிறது, அம்புட்டு சொலவா ஆருக்கும் தட்டுப்படாது.
கட்டில்ல ஒக்காந்திருந்த எரம்மநாயக்கரும், கினிங்கட்டிமாயனும் குசுகுசுன்டு பேசுறாங்க... என்னா பேசுறாங்கன்டு ரெண்டு பேரும் காதத்தீட்டிக் கவனிச்சாங்க. ‘கட்டக்காளை’ன்றது மட்டுந்தான் காதில விழுகுது... மத்த வாத்தை எதும் புடிபடல.
செத்தநகன்டு ஒக்காந்து, உத்துக்கவனிச்சான் ஒச்சுக்காளை… ராத்திப்பட்டுல பொத்துனாப்புல பேசுனாக்கூட கனீர்ன்டு கேக்கும். இவிங்க பேசுறது கேக்கமாட்டுது…

எரம்மநாயக்கருக்கு எதுத்தாப்புல ஒக்காந்துக்கிட்டு சூதாப்பேசுற, கினிங்கட்டிமாயன் மூஞ்சி அந்த நெலா வெளிச்சத்துலயும் தெளிவா தெரியுது.

கட்டக்காளைக்கு எதிரா என்னமோ சதி பண்ணப் போறாங்கென்டு... ஒச்சுக்காளைக்கு புரிஞ்சு போச்சு. அதுக்கும்மேல, அவெனால பொறுக்க முடியல…

“இவெங்கள… ஒரே எத்துல ஊட்டியில மிதிச்சுக் கொன்டுபுடட்டா…” கோபத்துல சொல்லிக்கிட்டே விசுக்குன்டு எந்திரிச்சான் ஒச்சுக்காளை.

அவென கையப்புடிச்சு இழுத்த வீரணன், “அவசரத்துக்குப் பெறந்தவெங் கெணக்கா… எதுக்கெடுத்தாலும் முறுக்கிட்டுத் திரியிற. 
ஒக்கார்ரா.." ன்டு அமட்டுனான்.

"யேலே… இவெல்லாம் ஒராளா..? இவிங்க என்னா செஞ்சுப்புடுவாங்க ? வாடா யேய்… நாங்கூட வேற என்னமோன்டு நெனச்சுட்டேன்…”ன்டு சொல்லிக்கிட்டே, 

“இப்ப பாக்கிறியான்”டு, கீழ கெடந்த மண்ணாங்கட்டியெ எடுத்து, எரம்மநாயக்கர குறி பாத்து எறிஞ்சான் வீரணன். எறிஞ்ச மண்ணாங்கட்டி ரெண்டா மூணாச் செதறி விழுந்துச்சு.

“ஆர்ரா யேய்…”ன்டு பயந்து, கட்டுல்லருந்து எந்திரிக்க மாட்டாம, எரம்மநாயக்கரு கீழ விழுந்தான். எதுத்தாப்பில ஒக்காந்திருந்த கினிங்கட்டிமாயன், கல்லுல போட்டு ஒக்காந்திருந்த, துண்டக்கூட எடுக்காம கண்ணுமண்ணு தெரியாம மேக்காம, முள்ளு வேலியில தவ்வி ஓடிட்டான்.

எகத்தாளமா சிரிச்ச வீரணன், "இவிங்களப் போயி பெருசா நெனச்சிட்ட… வாடா யேய் தண்ணிபாச்சப் போகணும்..."ன்னான்.
எரம்மநாயக்கரும், கினிங்கட்டி மாயனும் விழுந்தடிச்சு ஓடுனத நெனச்சுச் சிரிச்சுக்கிட்டே, பெறத்துல ஒரு எட்டெடுத்து வச்சான் வீரணன்.

நெலுக்கின்டு கால்ல தட்டுப்பட… மளிச்சின்டு தவ்வுனான் வீரணன். ஒரு மொரட்டுப் பாம்பு, இவிங்க காலுக்குள்ள நெலிஞ்சு போயிக்கிருந்துச்சு…

அகட்டுல்ல ஒக்காந்து என்னா பேசுனாங்கன்றது தெரியாததுக்கும், மண்ணாங்கட்டி வீசுனது ஆருன்டே தெரியாம ஓடுனவங்களுக்கும், பாம்பு கெடந்த எடத்திலயே மறைஞ்சிருந்த இவிங்களுக்கும், இருட்டு எதோ ஒரு வழியில பாதுகாப்பாவே இருந்திருக்கு.

ஆமணக்கஞ் செடி. தோட்டங்காட்டுல...வாய்க்கா வரப்பில...ஏகத்துக்கும் வளந்து நிக்கிம்.

வெள்ளாமையில பூச்சியடிச்சு... அது இன்னொருத்த காட்டுக்கும் பரவி நாசம் பண்ணாதபடிக்கு ஆமணக்கஞ் செடி, புழுப் பூச்சிய தடுத்து தாங்கிட்டயே வச்சிக்கிரும்.

அந்த ஆமணக்கு செடியில சாம்பப் பொடச்சுக்கிட்டு... கொத்துக் கொத்தா காய்ச்சு முத்திப் போய் நிக்கிது... பக்குவமா ஒடிச்சுக்காந்து காயப்போட்டு, ஆமணக்கு முத்த தட்டியெடுத்து வெளக்கெண்ணெயாக் காய்ச்சி வச்சுக்குவாக.
பிள்ளேகளுக்கு வயித்துப் பொறுமலுக்கு கொடுக்கிறதுலருந்து... கொழம்பு வக்கிறது வரைக்கும் எல்லாத்திலயும் வெளக்கெண்ணெயச் சேத்துக்கிருவாக. வகுத்துக்குள்ளருக்கிற கசடெல்லாம் வெளியேறி... ஒடம்பே சிக்குன்டு ஆகிரும்.
லச்சுமாயி பேருகாலத்துக்கு வெளக்கெண்ண வேணுமின்றதனால... ஆளும் பேருமா முத்துக்காய ஒடிச்சிக்காந்து... நேத்தே வாசல்ல காயப் போட்டிருந்தாக.

இப்பயோ... பெறகோன்டு லச்சுமாயி பேருகாலத்துக்கு, நாளுக் குறிச்சுருக்காகன்டு, ரெண்டு நாளைக்கு முன்னாடியே ஓனாப்பட்டியிலருந்து தாக்கலு வந்திருச்சு.

தாக்கலு வந்தன்னைக்கிருந்தே, கட்டக்காளைக்கு கையும் ஓடல... காலும் ஓடல. பொண்டாட்டிய பாக்கபோகணுமின்டு பரபரன்டுக்கு இருக்கான்.

“யேத்தா… இன்னமுமா வெளக்கெண்ணெ காச்சாமிருக்க..? படக்கின்டு காச்சி வைத்தா… ஓனாப்பட்டிக்குப் போகணும்” சொன்ன கட்டக்காளை, பேருகாலத்துக்குத் தேவையான கடச்சரக்குச் சாமான் வாங்க, ஒச்சுக்காளையக் கூட்டிக்கிட்டு உசுலம்பட்டிக்கு கெளம்பிட்டான்.

வெயில்ல காயவச்சு… பொடு பொடுன்டு வெடிச்சது போக மிச்சமிருந்த முத்துக் காய்கள பலகா கட்டையால, நெறுச்சு முத்தெத் தனியா எடுத்து வச்சாக.

ஆமணக்கு முத்துலருந்து வெளக்கெண்ணெ காய்ச்சி எடுக்கிறது அம்புட்டு சொலபமில்ல. ரொம்ப மெனக்கெடணும்… அனுபவமான பொம்பளைக ஆசாரமா காச்சி எடுத்திருவாக.

கழிச்சியாத்தா இதுல கெட்டிக்காரி.” “யேய்ப்…பின்னாயி, அன்னத்தாயி இங்க வாங்கடி… இந்த முத்தெ இடிச்சுக் குடுங்க, எண்ணெயெடுக்கணும்” கழிச்சியாத்தா கூவுனா.

தொம்பரைக்கிட்ட ஒக்காந்து சொட்டாங்கல்லு வெள்ளான்டுருந்த பின்னாயி… “நாங் எங்கிட்டு இடிக்கிறது, ந்தா… அன்னத்தாயி வாரா… நல்லா இடிச்சுக்குடுப்பா”ன்டு, கழிச்சியாத்தாகிட்ட சொன்னா.

கூட வெள்ளான்டுக்கிருந்த அன்னத்தாயிக்கு என்னான்டு புடிபட.

“போடி ஒன்னியத்தாங் கூப்பிடுது…”ன்டு சொல்லிப்புட்டு அங்கருந்து நகன்டு வீட்டுக்குள்ள எந்திரிச்சுப் போனா பின்னாயி.
“நீ எங்க போறவ… வாடி ஒத்தாசைக்கு…”ன்டு கூப்பிட்டா கழிச்சியாத்தா.

சேல முந்தானிய இடுப்புல சுத்தி இருக்கிக் கட்டிக்கிட்டு… அடுப்ப பத்த வச்சு ஆகவேண்டிய வேலய சூட்டிப்பா பாக்க ஆரம்பிச்ச கழிச்சியாத்தா, ஆமணக்கு முத்தெடுத்து, வரையோட்டுல போட்டு நல்லா வறுத்தா.

பொடு பொடுன்டு வெடிச்ச ஆமணக்கு முத்த, சூட்டோட எறக்கி… விரிச்சு வச்ச சாக்குல கொட்டவும் அதப் பரசலாக் கிண்டி ஆறவிட்டா பின்னாயி.

“இதக் கொண்டுக்குப் போயி ஒரல்ல போட்டு இடிச்சுக்காத்தே…” கழிச்சியாத்தா அன்னத்தாயிகிட்டச் சொன்னா.
எப்புடிச் செய்யிறாகன்டு வேடிக்க பாத்துக்கிருந்த அன்னத்தாயி… ஆறுன முத்த அள்ளிக்குப் போயி, ஒரல்ல போட்டு நங்குநங்கின்டு குத்தினா.

ஒரல்ல போட்டுக் குத்துறப்ப, எண்ணெப் பசைக்கும் அதுக்கும், ஒலக்கையில பிசுக்குப் பிசுக்குன்னு புடிச்சிக்கிருது. அன்னத்தாயி வயசுப்புள்ளன்றதனால செரமமில்லாம இடிச்சுக்கிட்டிருந்தா இடிக்கிறப்ப ‘கமகம’ன்டு அப்புடி ஒரு வாசன…

தாம் பொண்ட்டாட்டி அன்னத்தாயி, கை ஒசத்தி ஒசத்தி… ஒலக்கையப் புடிச்சு ஒரல்ல குத்துறப்ப, ரெண்டு காதுலயும் கெடந்த தண்டட்டி ஆடுறதையும்… அதுக்கு எசவா கண்ணாடி வளைவிச் சத்தம் தாளம் போடுறதையும், கை மாத்தி மாத்திக் குத்தும் போது… ஏறி எறங்கிற இடுப்பு அழகையும் பாத்து தோட்டத்திலருந்து வீட்டுக்கு வந்த வீரணன், சொக்கிப் போயி அங்கெனயே நின்டுக்கிட்டான்.

வாட்ட சாட்டமா துறுதுறுன்டிருக்கிற தாம்புருஷன ஓரக்கண்ணுல பாத்த அன்னத்தாயி, ஒதட்டச் சுழிச்சு நமட்டுச் சிரிப்புச் சிரிச்சா.
“செத்தவடம் காத்தாடத் திண்ணயில ஒக்காரு. ...ந்தா இம்புட்டுத்தேன் வாறேன்...” ன்டு புருஷன் நோக்கமறிஞ்சு சொன்னா அன்னத்தாயி.

கல்யாணம் முடிஞ்சு ஒரு வருசம் கூட ஆகல. இன்னமும் வகுத்துல புழு பூச்சிக்கூட உருவாகலன்ற ஏக்கம் ரெண்டு பேத்துக்கும். அக்கம் பக்கத்து ஆளுகளுக்கு பதிலுச் சொல்ல முடியாம இவிங்க தவிக்கிற தவிப்பச் சொல்ல முடியல.

“இங்க வாங்கடி எப்புடி எண்ணெடுக்கிறேன்டு நீங்களும் தெரிஞ்சுக்கிங்க, அசமந்தமா திரியாம…” சொன்னா கழிச்சியாத்தா.
வாயகல மம்பானைய அடுப்புல வச்சு, மூணு சேரு முத்துக்கு ஒம்போது சேரு தண்ணிய ஊத்தி ஒலவைச்சா.

ஒலத் தண்ணி நல்லா காஞ்ச ஒடனே, இடிச்சு வச்சிருந்த முத்த, அகப்பையில எடுத்தெடுத்து மம்பானையில போட்டுக் கிண்டுனா.
“இன்னம் எம்பிட்டு நேரமாகுமித்தா..” அப்புராணியா மூஞ்சிய வச்சுக்கிட்டு கேட்டா அன்னத்தாயி.

“செத்த பொறுடி, அதுக்குல்லாம் என்னா அவசரம்…” கழிச்சியாத்தா சொன்னா.

“ஓம்மகனுக்கு கஞ்சி ஊத்திட்டு வாறேன்… அப்பாதயே வந்திருச்சு” ன்டு சொல்லிக்கிட்டே எந்திரிச்சு கும்மாளமா போனா அன்னத்தாயி.

அகப்பையில கிண்டுன கழிச்சியாத்தா, அப்பப்ப ஒரு துடுப்ப வச்சும் கிண்டிக்கிட்டே, பான வாவலையத்தில அந்த துடுப்பச் சாத்தி வச்சிருந்தா.

புருசனுக்கு கஞ்சி ஊத்தப்போன அன்னத்தாயும் வந்துட்டா.

“இம்புட்டு நேரமா காச்சிக்கிருக்க... எம்புட்டு வேலைய முடிச்சுப்பிட்டேன்.” சொல்லிக்கிட்டெ வந்தா அன்னத்தாயி.
“மகுளம் பூராந்தங்கி, எண்ணெ தனியாப் பிரியணுமில்ல… நேரமாகத்தாஞ் செய்யும்…” கழிச்சியாத்தா சொன்னா.
“பானைக்குள்ள எதுக்குத் துடுப்ப வச்சிரிக்க..?” அன்னத்தாயி புரியாம கேட்டா.

வயசுல சின்னவளா இருந்தாலும், சூட்டிக்கியானவ அன்னத்தாயி. எதயும் முழுசா தெரிஞ்சிக்கிரணுமின்ற அக்கறயுள்ளவ.
“அகப்பையில இப்படியே கிண்டிக்கிட்டுருந்தமின்டா… மெதக்கிற எண்ணெ பூராம், வேர்வத்தண்ணி கெணக்கா, இந்தத் துடுப்பு வழியா, முத்துமுத்தா வடிஞ்சு, அதுக்கு நேராக் கீழ வச்சிருக்கிற சட்டிக்கு வந்துரும்.

சொல்லிக்கிட்டே,வடிஞ்ச எண்ணெய செத்த நேரம் ஆறவச்ச கழிச்சியாத்தா... பக்கத்து அடுப்பில அமராத வெறகு வச்சு… எளம் தீயா மூட்டி எண்ணெயச் சுட வச்சா. பச்சவெண்ண கெணக்கா கதகதன்டு கொதிச்சு கெளம்புன மொறய, மேலாக்க வழிச்சு வழிச்சு இன்னொத்த சட்டியில ஊத்துனா.

கதகதன்டு கொதிச்ச கொதி அடங்கி, எண்ணெபூராம் நெய்மாரி வந்துருச்சு. வெளக்கெண்ணெ பக்குவமா காய்ச்சிருக்கான்றதப் பாக்க, இத்துனூன்டு பச்சத் தண்ணிய, எண்ணெயில தெளிச்சா… சட சடன்டு தெறிச்சுது.

வெளக்கெண்ண பக்குவமா காய்ச்சியாச்சு.

கண்ணச் சொட்டாம இம்புட்டயும் பாத்துக்கிருந்த அன்னத்தாயிக்கு, கழிச்சியாத்தா அதிசயமாத் தெரிஞ்சா.

“இப்புட்டுத்தான்டி… எடுத்து பத்தரம் பண்ணி வைங்க...” ன்டு சொல்லிக்கிட்டு, இடுப்புல இருக்கிச் சொருகியிருந்த முந்தானிச் சீலய அவுத்து ஒதறி, மூஞ்சியத் தொடச்சு நிம்மதியானா கழுச்சியாத்தா.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in