ரஜினி சரிதம் 08: ஆறிலிருந்து எழுபது வரை: காதலின் தீபம் ஒன்று..!

ரஜினி சரிதம் 08: ஆறிலிருந்து எழுபது வரை: காதலின் தீபம் ஒன்று..!

சத்ரபதி சிவாஜியின் பெயரைப் பெற்றோர் சூட்டியதற்கு ‘ஜுவாலை’ நாடக மேடையில் அர்த்தம் சேர்த்துவிட்டார் ரஜினி. ‘அந்நியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் தாய் மண்ணை ஏன் மீட்டெடுக்க வேண்டும்’ என்று, தன்னை நம்பி வந்த வீரர்கள் முன்பு, தலைமறைவு முகாமில் சிவாஜி பேசும் உணர்ச்சிகரமான உரை அது. கையில் ஏந்திய தீப்பந்தத்தை தன்னையும் அறியாமல் உயர்த்திப் பிடித்து, நீண்ட வசனத்தை உணர்ச்சி மேலிடப் பேசி நடித்துக்கொண்டிருந்தார் ரஜினி. எதிர்பாராமல் தீப்பந்தத்தின் தீ திரைச்சீலையில் பற்றி மளமளவென்று தீ பரவத் தொடங்கியது. அப்போது நிலைமையைப் புரிந்துகொண்டு ஓடோடிச் சென்று தீயை அணைத்தனர் ரஜினியின் சகாக்கள்.  

‘ஜூவாலை’ நாடகத்துக்குப் பின்னர், பல அமெச்சூர் நாடகங்களில் நடிக்க ரஜினிக்கு அழைப்புகள். நடத்துநர் வேலையையும் பார்த்துக்கொண்டு உள்ளூர் நாடகக் குழுக்களின் நாடகங்களிலும் கலக்க ஆரம்பித்தார் ரஜினி. அவரை சினிமாவில் நடிக்க முயற்சி செய்யும்படி சக ஊழிய நண்பர்கள் வற்புறுத்தத் தொடங்கினார்கள். அவர்களில் ராஜ்பகதூர் முக்கியமானவர். அவர் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த தமிழர். சிறுவயது முதலே ரஜினியின் நண்பர் என்றாலும் நடந்துநர் ஆனபிறகு இருவரும் இன்னும் நெருக்கமானார்கள்.  எண் ‘10-ஏ’ பேருந்து இயக்கப்பட்ட மெஜஸ்டிக் சர்க்கிள் - ஹனுமந்த் நகர் வழித்தடத்தில் ராஜ்பகதூர் ஓட்டுநராகவும் ரஜினி நடத்துநராகவும் பணிபுரிந்தார்கள். மெஜஸ்டில் சர்க்கிள் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, பெங்களூரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனை வழியாக ஹனுமந்த் நகருக்கு வந்துசேரும் பேருந்து அது. பேருந்தில் காலை நேரத்தில் பள்ளி - கல்லூரி மாணவ - மாணவியர் கூட்டம் நிரம்பி வழியும். கல்லூரியில் படித்திருந்தால் ரஜினியும் அவர்களைப் போல் அதே பேருந்தில் பயணம் செய்திருப்பார்.  

நடத்துநர் வேலையில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளின் முடிவில் ரஜினிக்கு இந்தப் புதிய வழித் தடத்தில் பணி ஒதுக்கப்பட்டது. ஊதியமும் சற்று உயர்ந்திருந்தது. குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால், ரஜினியின் அப்பா ரானோஜி, மகனை எப்படியாவது பட்டப் படிப்பை முடிக்க வைத்து போலீஸ் அதிகாரி ஆக்கிவிட வேண்டும் என்றுத் திரும்பத் திரும்ப வற்புறுத்தி வந்தார்.

ரானோஜி தனது பணிக்காலத்தில் நேர்மையான காவலராக இருந்ததால் பலரது எதிர்ப்புகளைச் சம்பாதித்துக் கொண்டது மட்டுமல்ல; கான்ஸ்டபிள் என்கிற நிலையிலிருந்து ஏட்டு என்கிற நிலைக்குமேல் அவரால்  உயரமுடியாமல் போய்விட்டது. காவல் துறையில் படிப்புக்குத்தான் மரியாதை. அதனால்தான் நல்ல திறமையும் உடல் தகுதியும் கொண்ட தனது மகன் போலீஸ் அதிகாரி ஆகவேண்டும், தன்னால் எட்டமுடியாத இடத்தை அவன் எட்ட வேண்டும் என்று ஏங்கினார். இதனால், காலை ‘ஷிஃப்ட்’டில் வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பும் மகனிடம், “நீ மாலைக் கல்லூரிக்குச் சென்று படி. போலீஸ் அதிகாரி ஆகிவிடலாம்” என்று கெஞ்சினார். ஆனால், அப்பாவின் ஆசையைப் பற்றி கவலைப்படாமல் சினிமாவில் ‘நடிகனாகிவிடுவது என்கிற ரஜினியின் கனவு வளர்ந்து விஸ்வரூபம்’ எடுக்கத் தொடங்கிவிட்டது. இந்த சமயத்தில்தான் ரஜினியின் மனதில் முதல் தீபத்தை ஏற்றிய காதல், அவருக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.  

மனந்திறந்த பகிர்வு

அந்தத் திருப்புமுனை பற்றி ‘பாட்ஷா’ படப்பிடிப்பில் மலையாள நடிகர் தேவனிடம் மனம் திறந்து பகிர்ந்துகொண்டிருக்கிறார் ரஜினி. தனது முதல் காதல் குறித்து இனி ரஜினியின் வார்த்தைகளிலேயே அதைக் கேட்போம்.

 “நான் காலை ஷிஃப்டில் வழக்கம்போல் பணியிலிருந்தேன். வெள்ளைக் கோட் வைத்திருந்த கல்லூரி மாணவி பேருந்தில் பின்புறமாக ஏறுவதற்காக அவசர அவசரமாக வந்து முதல் படிக்கட்டில் கால் வைத்து ஏறிவிட்டார். ரூல்ஸை மீறுகிறாரே என்று நான் என் கைகளை வைத்து அவரைத் தடுத்தேன். பெங்களூரு பேருந்துகளில் பெண்கள் முன் வழியாகவும், ஆண்கள் பின்புறப் படிக்கட்டுகள் வழியாகவும்தான் ஏறவேண்டும். அதுதான் ரூல்ஸ். நான்  ‘என்னம்மாஇது... முன் வழியில போய் ஏறும்மா’ என்று தடுத்தேன்.  அப்போது என்னைப் பார்த்து ஒரு முறை முறைத்தார் அந்தப் பெண். நான் ஒடுங்கிப் போனேன். எனது  கைகளைத் தொட்டு சடாரென்று நகர்த்தி விட்டு அசால்ட்டாகப் போய் இருக்கையில் உட்கார்ந்து கொண்டார்.  ‘என்னடா. இது... இப்படியொரு தில்லான பொண்ணா' என்று சப்தநாடியும் ஒடுங்கிப் போச்சு எனக்கு.

எழுந்துபோய்,  ‘எங்க போகணும்?’ என்றேன். ‘பி.எம்.சி’ என்று சொல்லிவிட்டு இம்முறையும் முறைத்தார். அதற்குமேல் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்கத் துணிவற்று டிக்கெட்டைக் கொடுத்து சில்லறையை வாங்கிக்கொண்டு மற்றவர்களுக்கு டிக்கெட் கொடுக்க நகர்ந்து போனேன். அனைவருக்கும் டிக்கெட் கொடுத்து முடித்துவிட்டு முன்வழிப் படிக்கட்டில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது யாரோ என்னைப் பார்ப்பதுபோல் ஒரு உணர்வு. அந்தப் பெண் கடுகடுக்கும் முகத்துடன் என்னைப் பார்ப்பதை நான் பார்த்துவிட்டேன்.

எனக்கு இப்போது தைரியம் வந்துவிட்டது. அந்தப் பெண்ணின் முகத்தை ஏனோ பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுபோல மனதுக்குள் ஒரு எண்ணம். அப்போது காற்று என் மீது வீசியதில் முடிகள்  பறந்தன. அதை ஸ்டைலாக கோதிக்கொண்டே அந்தப் பெண்ணை பார்த்தேன். இப்போது அவர் என் பார்வையைத் தவிர்த்தார். அந்த நிமிடத்தில் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்கிற உணர்வு வந்து, எனது வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டேன்.  

அடுத்தநாள் எனக்கொரு ஆச்சரியம் காத்திருந்தது! அந்தப் பெண் மெஜஸ்டிக் சர்க்கிள் நிறுத்தத்தில் முன்புற வழியில் ஏறி வந்து அமர்ந்தார். நான் டிக்கெட் கொடுக்கப்போனபோது  ‘இன்னைக்கு சரியாத்தானே ஏறிவந்தேன்?’ என்றார். என் மனதுக்குள் ‘சிலீர்’ என்ற சாரல் உரசிப் போனதுபோல் ஓர் உணர்வு. நேற்றைய கடுகடுப்பு மறைந்து இன்று குறுநகை இழையோடிய அவரது முகத்தை மீண்டும் பார்க்க மாட்டோமா என்கிற தூண்டுதல் ஏற்பட்டது. ஆனால் தவிர்த்தேன்.

 இந்தச் சம்பவத்துக்கு பின் அடுத்தடுத்த தினங்களில் நாங்கள் இருவரும் கண்களால் மட்டுமே பேசிக்கொண்டோம். பெண்களின் கண்கள் மட்டும் தான் ஒரு சர்வதேச மொழியைப் பேசுகின்றதோ எனத் தோன்றிய நாட்கள் அவை. ஒரு கட்டத்தில், மெஜஸ்டிக் சர்க்கிள் நிறுத்தத்தை பேருந்து நெருங்கும்போதே அவரது உருவம் தெரிகிறதா என எனது கண்கள் தேடத் தொடங்கியது.  

மேடம் தினமும் என் பேருந்தில் வர தொடங்கினார். அவரது பார்வையில் எந்தக் களங்கமும் இல்லை. அதனால் அவர் மீது எனக்கு மரியாதை பிறந்தது. எனக்கும் படபடப்பு குறைந்தது. பார்வைகளைக் கடந்த தூய தோழமை எங்களை ஆட்கொண்டது. சில வார்த்தைகள் பேசிக்கொள்ள தொடங்கினோம். ‘நாளைக்கு லீவ்’ என்று அவர் தகவல் தரும் அளவுக்கு முன்னேற்றம்.  

நாடகம் பார்க்க வந்த தோழி!

அவங்க பெயர் நிர்மலா. நான் செல்லமா ‘நிம்மி' என்று கூப்பிடுவேன். பெங்களூரு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருந்தார். எங்களுக்குள் நட்பு உருவான பின், தினமும் அரை நிமிடமாவது என்னிடம் பேசினால்தான் அவருக்கு திருப்தி. நிம்மி ஒரு நாள் பேசமால் இறங்கிப்போய்விட்டால் நான் அப்செட் ஆகிவிடுவேன்.

இப்படியே ஆறுமாத காலம் ஓடியிருக்கும். ஒருநாள் ‘விரும்பித்தான் இந்த வேலைக்கு வந்தீங்களா... இந்த வேலை பிடிச்சிருக்கா?’ என்று கேட்டுவிட்டார். ஒரு கணம் எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ‘உங்கள் கண்ணு சொல்லுது... உங்கள் கனவு வேறண்ணு. அது என்னன்னு எங்கிட்ட சொல்லக் கூடாதா?’ என்று சடாரென்று கேட்டுவிட்டார் நிம்மி! அந்த நிமிடத்தில் இரும்புக் கோடாரியைத் தொலைத்தவனிடம் தங்கக் கோடாரியைக் கொண்டு வந்து கொடுக்கும் தேவதையாகத்தான் எனக்குத் தெரிந்தார் நிம்மி.  

அதன் பின்னர் நான் சற்று அதிக உரிமை எடுத்துக்கொண்டு எனது சினிமா நடிகன் கனவை அவரிடம் சொன்னேன். அந்த சமயத்தில்  எங்கள் காலனியில் ‘ஜுவாலை’ நாடகம் போட்டோம். அந்த நாடகத்தைப் பார்க்க வருமாறு அவரிடம் கூறினேன். அதில் நான் நடிப்பேன் என்பதை கூறாமல் சஸ்பென்ஸாக வைத்திருந்தேன். நிம்மி வருவாரா என்கிற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால், வந்தார். என்னுடைய நடிப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டவர்,  ‘ரொம்ப பெருமையா இருக்கு சிவாஜி... சூப்பரா நடிச்சீங்க. பெரிய நடிகரா வருவீங்க. இந்த ஊரு முழுக்க நீங்க நடிச்ச படத்தோட போஸ்டர்கள் ஒட்டுவாங்க. அதை நான் பார்த்து சந்தோஷப்படுவேன். இது நிச்சயமா நடக்கும்’ என்று சொன்னபோது எனது மனதில் காதலின் முதல் தீபம் ஒளிர்ந்தது. அந்த நொடியில்,  நிம்மி என் வாழ்க்கையை வரமாக்க வந்த தேவதை என்று மனம் சொன்னது.  

அன்று இரவு பத்து மணி ஆகிவிட்டது. ‘வீட்டில் சொல்லிவிட்டு வந்தீர்களா... துணைக்கு நான் வீடு வரை வரலாமா?’ என்று நான் கேட்டேன். ‘தேவையில்லை... சிவாஜி என்கிற நண்பரின் நாடகத்தைக் காணத்தான் வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டுத்தான் வந்தேன்’ என்றார். அந்த நேர்மைதான் நிம்மி. அடுத்து அவர் செய்த அரிய செயல்தான் என்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றது” என்று நிறுத்தினார் ரஜினி.

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in