கட்டக்காளை - 7

கட்டக்காளை - 7

எங்கிட்டுப் பாத்தாலும் தட்டுப்படுறவன ஊருக்குள்ள காணம்மே… வீட்லகூட ரெண்டு மூணு நாளாக் காணோம்… செத்துக்கித்துப் போயிருப்பானோ..? அப்படிச் செத்திருந்தான்டா… ஒருத்தங் கண்ணுலயுமா தட்டுப்படாமிருக்கும்? கினிங்கட்டி மாயனுக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகி அதனால… ஒச்சுக்காளைக்கு, எதும் பாதகம் வந்திருமோன்ற நெனப்பு கட்டக்காளை மனசுக்குள்ள ஊசலாடுறதுனாலதான், கினிங்கட்டிமாயனப் பத்துன வெவரத்த அவன் மனசு தேடுது.

வெதத் தவசத்த எடுத்துக்கிட்டு மேற்குத்தெரு வழியா செவக்காட்டுக்குப் போயிக்கிட்டுருந்தான் கட்டக்காளை. சண்டபுடிக்கிற சத்தங்கேட்டு பெத்துராஜூ வீட்ட திரும்பிப் பாத்தான் கட்டக்காளை. வாசப்படிக்கு நேரா தாவாரத் திண்ணைக்கிட்ட கெடந்த ஒரல்ல, ரெட்டன காலப் போட்டு ஒக்காந்திருந்தான் கினிங்கட்டி மாயன்… பெத்துராஜூ பொண்டாட்டிக ரெண்டு பேரும், கத்தி, சண்ட போட்டுக் கிருந்தாளுக.

செத்துப் போயிருப்பானோன்டு நெனச்சிக்கிருந்த கினிங்கட்டி மாயன் உசுரோட ஒக்காந்துருக்கிறதப் பாத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான் கட்டக்காளை.

வெள்ளந்தியா வாழ்ந்திட்டுருக்கிற சனங்க மத்தியல வெவகாரமானவனும் இருப்பான்றதுக்கு ஒதாரணந்தான்… இந்த கினிங்கட்டிமாயன். நாலரை அடி ஒசரமிருந்தாலும்… ‘கினிங்கினிங்’கின்டு ஆட்டிக்கிட்டுப் போயி அம்பத்தாறு வீட்ல தீவச்சு விட்டுருவான்.

“இன்னிக்குப் பொழுது, இவனுக்கு பெத்துராஜூ வீட்ல விடிஞ்சிருக்கு… இந்தா வாரெண்டி மாப்ளே…”ன்டு நக்கலா சொல்லிக்கிட்டே, பெத்துராஜூ வீட்டுக்குள்ள போனான் கட்டக்காளை.

"……… …… …. ...? கெழட்டுப்பயலுக்கு வாக்கப்பட்டு வந்தேங் பாரு... எம் புத்திய…" பெத்துராஜூ பொண்டாட்டி சுப்பம்மா அவபாட்டுக்கு வாய்க்கு வரக்கூடாத வாத்தையெல்லாம் சொல்லி கத்திக் கூப்பாடு போட்டுக்கிருந்தா. "யாத்தே...காரவீட்டு மாமெங் மகென் வருது... கண்டமேனிக்கி வய்யப் போது" ன்டு சொல்லிக்கிட்டே, சீல முந்தானிய எடுத்து, வாயப்பொத்திக்கிட்டு ஓரமா ஒதுங்கி நின்டா பெத்துராஜோட இன்னொரு பொண்டாட்டி பொன்னக்கா.

ஒண்ணுமே நடக்காதமாரி ஒட்டுத்திண்ணையில ஒக்காந்திட்டுருந்த பெத்துராஜூ, "வாப்பாய்... " வீட்டுக்குள்ள வந்த கட்டக்காளைய கூப்பிட்டுக்கிட்டே, திண்ணையில கெடந்த தூசிய, துண்ட வச்சுத் தட்டிவிட்டு… ஒக்காரச்சொன்னான். சுப்பம்மா இன்னமும் விடாமக் கத்திக்கிட்டுருந்தா...

செக்கச் செவேர்ன்னு அம்புட்டு ஆசாரமான ஆளு பெத்துராஜூ. பங்குனிப் பொங்கலன்னைக்கு, தீச்சட்டியெடுத்து ஆடிவாரப்ப, ஊரே தெரண்டு வந்து, கொடங் கொடமா மஞ்சத் தண்ணிய ஊத்திக் குளுர வைக்கிறதும்… காளியாத்தாளே ஆடிவாரதா நெனச்ச, அம்புட்டுச்சனமும் கால்ல விழுந்து திந்நீறு வாங்குறதுமின்டு பெருமையா வாழ்ந்த மனுஷனுக்குத் தான் இப்படி ஒரு வசங்கெட்ட வாழ்க்கை...

மிச்சஞ் சொச்சமில்லாம சண்ட புடிக்கிறவ தான் பெத்துராஜோட மூணாவது பொண்டாட்டி சுப்பம்மா. மூத்தவடியா, பெத்தக்கா செத்தப்பெறகு, அவளுக்குப் பெறந்த மூணு புள்ளைகளையும், வளத்து… ஆளாக்கிறதுக்கு, கைம்பொண்டாட்டி கெனக்கா பெத்துராஜூ பட்ட கஷ்டம், கொஞ்ச நஞ்சமில்ல.

ஒவ்வொருத்தனும் வளந்து ஆளாகி அவெங், அவெம்பாட்டுல கல்யாணங் கட்டிக்கிட்டு பெத்துராஜ அனாதையா ஆக்கிட்டுப் போயிட்டாங்கெ...

ஆத்தா அப்பென் இல்லாம, அடுத்த வீட்டுல கஷ்டப்பட்டுக்கிருந்த பொன்னக்கா, அனாதையா நின்ட பெத்துராஜூக்கு ஒத்தாசையா இருந்தா. ஆதரவில்லாமக் கெடந்த சொரக்கொடிக்கு, படந்து வளரக் கட்டாப்பு கெடச்சமாரி... ஒருத்தருக் கொருத்தரு ஒத்தாசையா சேர்ந்து வாழ ஆரம்பிச்சுட்டாங்க.

அப்பன் ஆத்தா செத்துப் போனதுக்கப்பறம், அக்காதான் ஆதரவுன்டு ஒட்டிக்குத் திரிஞ்ச பொன்னக்கா தங்கச்சி சுப்பம்மா, சடங்காகி ஒரு வருஷங்கூட ஆகல... கண்ணுமையி மாரி அப்படி ஒரு கருப்பு. களையா தளதளன்டு திரிஞ்ச சுப்பம்மா மேல, பெத்துராஜூக்கும் ஆச… சபலம் தட்டிருச்சு... வயசு வித்தியாசம் பாக்காம, அவகிட்டயும் தொடுக்கு வச்சிக்கிட்டான்.

என்னாதான்… ஒரு தாய் வகுத்துல பெறந்தவகளா இருந்தாலும், ஒரே பாய ரெண்டுபேரும் பங்கு போடமுடியுமா? சடவும் சச்சரவும் அங்க ஆரம்பிச்சு பெருசாகி… நேருக்கு நேரா மல்லுக்கு நிக்கிறமாரி வளந்துருச்சு.

கட்டக்காளை வந்தது கூடத் தெரியாம, சுப்பம்மா வரிஞ்சக்கட்டிக்கிட்டு கத்துறா... கட்டக்காளை வாரான்டு ஒதுங்கி நின்ட பொன்னக்காவும் இப்பப் பதிலுக்குப் பதுலு பேச ஆரம்பிச்சிட்டா.

ஒரல்ல ஒக்காந்திருந்த கினிங்கட்டி மாயன், பொடிமட்டைய எடுத்து விரிச்சு, அதிலிருந்த இத்துனூன்டு மூக்குப்பொடிய… ரெண்டுவெரல்ல இருக்கிப்புடிச்சு எடுத்தான். இன்னொத்தக் கையில ஒதட்டப் பிதிக்கி, ரெண்டு கடவாயிலயும் தொண்டவரைக்கும் பொடியவச்சுத் தினுச்சுத் தடவி, ‘ப்ளீச்…ப்ளீச்…’ன்டு எச்சியத்துப்பினவன், வாயுக்குள்ள விட்ட வெரல்ல வடிஞ்ச சலவாய, தொடையிலயே தொடச்சுக்கிட்டான். அவென் இப்படிப் பண்ணுறத, அறுவெறுப்பா பாத்த கட்டக்காளை மூஞ்சியச் சுழிச்சான்.

 ‘இவகளுக்குள்ள தீயவச்சவனே இவெந்தான்… இவென வச்சிக்கிட்டு, எப்புடி சண்டைய ஓய்க்கிறது…? இங்கருந்து இவன எப்பிடியாச்சும் நகத்திப் பிடனுமே…’னு ஓசிச்சுக்கிட்டு….கினிங்கட்டி மாயனப் பாத்துக்கிட்டேருந்தான் கட்டக்காளை.

“என்னா மாமு, அப்பிடிப்பாக்கிற… அன்னைக்கி ராத்திரி அடிச்சுக் கீழ தூக்கிப் போட்டு வந்தம்மேங்… இவெங் எப்பிடி கல்லுக்கெனக்கா வந்து ஒக்காந்திருக்கான்டு ஓசிக்கிறீயா..?” கினிங்கட்டிமாயன் இப்படிக் கேட்டது கட்டக்காளை மூளக்குள்ள சுருக்கின்டுச்சு.

“போதையில கெடந்ததுனால, என்னியத் தொட்டுப்பிட்டான் ஒச்சுக்காள. இல்லாட்டி… 

நானுன்ட்ற சண்டியரு… இந்த மாயனத் தொட்டுறுவானா ?” சொல்லிக்கிட்டே, கடவாயில ஒழுகன சலவாயத் தொடச்சு… எச்சியப் ப்ளீச்சி...ன்டு துப்பிட்டு கட்டக்காளைய ஏற்ட்டுப் பாத்தான் கினிங்கட்டி மாயன்.

அவென் பேசுனது கோபத்தக் கெளப்புனாலும் பொறுத்துக்கிற பக்குவத்திலருந்த கட்டக்காளை, “நீயி… பெரிய சண்டியருன்டு தெரியுமிடி மாப்ளே… ஒனக்கும் அவனுக்கும் என்னா பெரச்சனைன்டு எனக்குத் தெரியாது… ஆனா, பெத்துராஜூ வீட்ல நடக்கிற சண்டைக்கு நீதான் காரணமின்றது இப்ப தெரிஞ்சு போச்சு…” ன்டு சொல்லி கினிங்கட்டி மாயன் சிண்டுமுடிஞ்சு விட்டுக்கிருந்தத ஒடச்சுவிட்டுட்டான்.

கினிங்கட்டிமாயனோட மொள்ளமாரித்தனத்துலதான் இம்பிட்டுப் பெரச்சனையும் நடக்குதுன்டு ஒணந்த பெத்துராஜு, தாம்பொண்டாட்டிகள திரும்பிப் பாத்தான்… அவளுகளும் அத ஒணந்து பேசாம நின்றிருந்தாளுக.

தன்னோட குட்டு நட்டக் கண்டுபுடிச்சு மத்தவுகளுக்கும் சொல்லிப்புட்டான்ற ஆத்திரம்… ஒரல்ல ஒக்காந்திருந்த கினிங்கட்டி மாயன், விசுக்கின்டு தவ்வி எந்திரிச்சு நின்டான். கட்டக்காளைக்கு நெஞ்சொசரங்கூட இல்லாத கினிங்கட்டிமாயன் அவென அன்னாந்து பாத்து, “இங்கேரு மாமு… என்னியென்னா லேசா நெனச்சிட்டியா… இன்னக் கெழமைக்குள்ள என்னா நடக்கிதுன்டு பாக்குறியா…. ஒச்சுக்காளையச் சங்க அறுக்கிறனா இல்லையான்டு… பாரு”னு சொல்லிக்கிட்டே, கட்டக்காளை மூஞ்சிக்கு நேரா கைய நீட்டி, வெரலச் சொடக்கி சொட்டாங் போட்டான்.

“அரைப்படி ஒலக்கு கெணக்கா இருந்துக்கிட்டு பேச்சப்பாரு. போடா… யேய்… ஆளும் சைசயும் பாரு…” வக்கனயாச் சிருச்சுக்கிட்டுச் சொன்னான் கட்டக்காளை.

ஒண்ணுக் கொண்ணு வாத்த முத்தி, கைகலப்பாகிருமோன்டு பயந்து போன பெத்துராஜூ பொண்டாட்டிக, “நீ…யென்னாண்ணே வசமில்லாம வம்பிழுத்துக்கிருக்க… வாண்ணே…”னு சொல்லிக்கிட்டே கினிங்கட்டி மாயனக், கையப் புடிச்சு தரதரன்டு இழுத்துக்குப் போயி வாசப்படிக்கி அங்கிட்டு தெருவில விட்டுட்டாக.

“ஒங்களுக்காவண்டி… நாயம் பேசிக்கிருக்கிறவனயா வெளிய புடுச்சுத்தள்ளுவீங்க…? போங்க… ஒங்க புருஷன் இன்னொருத்திய கூட்டிக்காந்திரப் போறான்…” எனத்தையாச்சும் சொல்லியே வம்பிழுத்துப் பழக்கப்பட்ட கினிங்கட்டி மாயன் இப்பிடிச் சொன்னது, பெத்துராஜூ பொண்டாட்டிகளுக்கும் கோவத்தக் கெளப்பிரிச்சு.

“பேசாம போண்ணே அங்கிட்டு… அம்புட்டுத்தான் ஒனக்கு மருவாதி… மிச்சம் சொச்சம் பாக்கமாட்டோம்…” உண்மைய ஒணந்தவகளா… கினிங்கட்டி மாயனுக்கு எதிரா வீராப்பா பேசிட்டு வீட்டுக்குள்ள வந்தாளுக.

வீட்டுக்கு வெளிய, தெருவில நின்டு கட்டக்காளையப் பாத்துக்கிட்டுருந்தான் கினிங்கட்டிமாயன். அங்கன எரம்மநாயக்கரு வந்தொடனே கினிங்கட்டிமாயனுக்கு ஏகப்பட்ட ஓசன… எனத்தையோ சொல்லி புதுசா ஒரு வில்லங்கத்த வெதச்சிட்டுருந்தான்.
பெத்துராஜூ பொண்டாட்டிகளுக்கு வீரியங் கொறஞ்சிருச்சு… இவுகளுக்குள்ள இப்பச் சண்ட ஓஞ்சாலும், போன சண்ட திரும்ப வந்திரக்கூடாதுன்டு நெனச்ச கட்டக்காளை, “கூடப் பெறந்தவளுக நீங்க… ஒண்ணுக்கொண்ணு விட்டுக்குடுத்துப் போகாம விக்கிக்கிட்டும்,வெடச்சுக்கிட்டும் திரியிறதுனாலதான் கண்ட நாயெல்லாம் கம்பெடுத்துப் போட்டு, வம்பெ இழுத்து விடுறாங்கெ…”ன்டு சொன்னான். ரெண்டு பொம்பளையும் பேசமாட்டாம, தலையத் தொங்கப் போட்டுக்கிருந்தாளுக.

“வயசில சின்ன ஆளாருந்தாலும் அவுக அப்பெங் கெனக்கா, கட்டக்காளை எம்புட்டு பொறுமைசாலியா இருக்குது…” தாம்பொண்டாட்டிககிட்ட பெத்துராஜூ பெருமையாச் சொல்ல,“விடுண்ணே… இதப்போயி…” ன்டு கட்டக்காளை சங்கடப்பட்டான்.

“இல்லப்பாய்…. கைக்குப் பத்தாதவெங்கூட, வம்பிழுத்து விடுறான்டு… தெரியாம, சண்ட பிடிச்சுக்குத் திரியிறாளுக. நீ வந்து சொல்லலென்டா, எங்களுக்கு என்னப்பா தெரியப் போது…”ன் டு பெத்துராஜு சொன்னான்.

“நாலா பக்கமும் போயிட்டு வாரவகளுக்கே செலநேரம் புத்திகெட்டுப் போவுது… காடுகரை... அதவிட்டா வீடுன்டு… இங்கனக்குள்ளயே இருக்கிறவகளுக்கு என்னா தெரியும்… நாமதாண்ணே, நல்லது பொல்லத எடுத்துச் சொல்லி, வசத்துக்குத் திருப்பணும்” மூணு பேத்துக்கும் கோளாறாச் சொன்ன கட்டக்காளை, வீட்டுக்கு வெளிய பாத்தான்… எனத்தையோ மும்மரமா பேசிக்கிட்டிருந்த எரம்மநாயக்கரும் கினிங்கட்டிமாயனும், பேச்ச நிப்பாட்டிட்டு, கட்டக்காளையத் திரும்பிப் பாத்தாங்க.

குருகுருன்டு பாத்துக்கிட்டே, எரம்ம நாயக்கருகிட்ட தீப்பெட்டிய ஓசி வாங்குனான் கினிங்கட்டிமாயன். தீப்பெட்டியிலருந்து ரெண்டு தீக்குச்சியெடுத்தான். ரெண்டயும் ஒண்ணாப் புடிச்சுக்கிட்டு ‘சரட்டு’ன்டு ஒரசி… தீயப் பொறுத்தி பீடியில பத்தவச்சான். வாயுக்குள்ள எனத்தயோ மொனங்குன கினிங்கட்டி மாயன், பீடிய வாயில வச்சு… ‘சர்ர்ர்…. சர்ர்ர்…’.ன்டு நாலுதடவை உறிஞ்சி இழுத்தான்.

தீக் கங்கு பறந்த பீடியையும்… அமராமருந்த தீக்குச்சியயும் அங்கனெ காய்ஞ்சு கெடந்த சோளத்தட்டையில போட்டான். தீ மளமளன்டு புடிச்சு எரிய ஆரம்பிச்சிருச்சு. கட்டக்காளை மனசயும் சேர்த்து!

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in