இனி எல்லாமே ஏ.ஐ - 5: ஏ.ஐ வழங்கும் மருந்துச் சீட்டு!

இனி எல்லாமே ஏ.ஐ - 5: ஏ.ஐ வழங்கும் மருந்துச் சீட்டு!

எதிர்காலத்தில் மருத்துவத் துறையில், ஏ.ஐ நுட்பத்தின் துணையுடன் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் குறித்த தகவல்கள் வியப்பளிக்கக் கூடியவை.

இன்னும் சில தசாப்தங்களுக்குப் பிறகு, மருத்துவமனைக்குச் செல்லும்போது, மருத்துவரைப் பார்ப்பதற்கு முன், கணினியிடம் பேசி சில தகவல்களை நோயாளிகள் பகிர்ந்துகொள்ளலாம். அதன் மூலம், மருத்துவரை அவசியம் பார்க்க வேண்டுமா, வேண்டாமா என்பதையும் தீர்மானித்துக்கொள்ளலாம்.

அவசியம் எனில், மருத்துவரைச் சென்று பார்க்கவும் கணினியே பரிந்துரைக்கலாம். இப்படி கணினி மூலம் ஏற்கெனவே நோயாளியின் உடல்நலப் பிரச்சினைகள் குறித்த தகவல்கள் மருத்துவருக்குச் சென்றுவிடும். இதனால், மருத்துவர் மேலதிகக் கேள்விகளைக் கேட்டு நேரத்தை வீணடிக்காமல் உரிய சிகிச்சையை உடனே தொடங்கிவிடுவார்.

முதல் படியில்…

ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மையைச் சொன்னால், இது போன்ற நடைமுறைகள் இப்போதே வழக்கத்தில் இருப்பவைதான். உதாரணமாக, நோயாளியின் உடல்நிலை தொடர்பான குறிப்புகளைக் கேட்டறிந்து மருத்துவருக்குத் தெரிவிக்கக்கூடிய அரட்டை மென்பொருட்கள் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கின்றன.

உரையாடும் திறன் கொண்ட ‘சாட்பாட்’ மென்பொருட்களின் வகைமையில் அடங்கும் இந்த மென்பொருட்கள், சக மனிதர் போலவே உரையாடக்கூடிய திறன் பெற்றிருப்பது மட்டும் அல்ல, அந்தப் பதில்களைப் பகுத்துணரும் திறனும் பெற்றிருக்கின்றன. கணினி அல்லது செல்போன் செயலி திரையில் தோன்றும் வாசகங்கள் மூலமாக இவை உரையாடுகின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பதில்களை நோயாளிகள் டைப் செய்துவிட்டால் போதும், இயந்திரக் கற்றல் நுட்பத்தின் துணை கொண்டு, நோயாளிகள் அளிக்கும் பதில்களைப் புரிந்துகொண்டு மருத்துவப் பரிந்துரைகளை இந்த மென்பொருட்கள் வழங்கிவிடும்!

சிகிச்சையில் மேன்மை

அது மட்டும் அல்ல. இயந்திரக் கற்றல் திறனால், இவை நோயாளிகளுடன் உரையாடும் அனுபவத்தைக் கொண்டு காலப்போக்கில் மேலும் மேலும் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளலாம். இத்தகைய மென்பொருட்களைச் செயலி வடிவிலும் உருவாக்கலாம். இப்போது ‘இ-காமர்ஸ்’ தளங்களில் அரட்டை மென்பொருட்கள் வாடிக்கையாளர்களுடன் உரையாடுவது போல மருத்துவமனைகள் அல்லது க்ளினிக்குகளில் மருத்துவ மென்பொருட்கள் நோயாளிகளை வரவேற்று உரையாடலாம். இது நோயாளிகளின் நேரத்தை மிச்சமாக்கும். பணிச்சுமையைக் குறைத்து உடனடி சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மீது உரிய கவனம் செலுத்த மருத்துவர்களுக்கும் உதவும்.

நோய்க்கூறு சீராய்வுகளிலும் கூட, ஏ.ஐ சார்ந்த மென்பொருட்கள் உதவிக்கு வந்துள்ளன. புற்றுநோய்க் கட்டிகளைக் கண்டறிவதற்கான ஸ்கேன் படங்களைப் பகுத்துணர்வது என்பன போன்ற செயல்களுக்கான மென்பொருட்கள் தற்போது சோதனை முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. பல நேரங்களில் மருத்துவர்களையே மிஞ்சும் வகையிலும் இவை செயல்படுவதாக மருத்துவ உலகில் பேசப்படுகிறது. இந்த மென்பொருட்கள் கோட்டைவிடும் தருணங்களும் உண்டு என்றாலும், இவற்றை இயக்கும் அல்கோரிதம்களை மேம்படுத்தலாம் என்பதால், வருங்காலத்தில் இவற்றின் துல்லியம் இன்னும் அதிகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவர்களுக்கு மாற்றா?

ஸ்கேன் இயந்திரம், டிஜிட்டல் தெர்மாமீட்டர், இருதயத் துடிப்பைக் கண்காணிக்கும் ஸ்மார்ட் வாட்ச் என்பன போன்ற அதிநவீன சாதனங்கள் இன்றைக்கு மருத்துவத் துறையில் பயன்பாட்டில் இருக்கின்றன. எனினும், நோயாளிகளுடன் உரையாடுவது, நோய்க்கூறுகளைக் கண்டறிவது என்பன போன்ற செயல்பாடுகள் இயந்திரமயமாவது சரியா எனும் கேள்வி எழலாம். ஆனால், இதில் அச்சப்பட எதுவும் இல்லை. ஏனெனில், தரவுகளைக் கொடுத்தால் தர்க்கவியல் அடிப்படையில் அவற்றில் பொதிந்துகிடக்கும் அமைப்புகளையும், மறைத்தகவல்களையும் புரிந்துகொண்டு, உரிய தீர்வுகளை அளிக்கும் வகையிலான மென்பொருட் அமைப்புகளை நவீன ஏ.ஐ சாத்தியமாக்கி இருக்கிறது.

இயந்திரக் கற்றல், ஆழ் கற்றல் போன்ற நுட்பங்களே இந்த அமைப்புகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. பிற துறைகளைப் போலவே மருத்துவத் துறையிலும் ஏ.ஐ சார்ந்த தீர்வுகளும் சேவைகளும் உருவாக்கப்பட்டுவருகின்றன. ‘மருத்துவ ஏ.ஐ’ என்று இவை தனியே குறிப்பிடப்படுகின்றன.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, மருத்துவர்களின் இடத்தை ஏ.ஐ நுட்பம் பிடித்துக்கொள்ளுமோ என்றும் சந்தேகம் எழலாம். அதுவும் தேவையில்லாத அச்சம்தான். கல்வித் துறையில் ஏ.ஐ பயன்பாடு அதிகரித்தாலும், அவை ஆசிரியர்களுக்கு மாற்றாக மாறிவிடாமல், அவர்களுக்கு உதவக்கூடிய வகையில் அமையும் என்பதை முந்தைய கட்டுரைகளில் பார்த்தோம். அது போலவே, மருத்துவத் துறையிலும் உயிர் காக்கும் பணியில் மருத்துவர்களுக்கு உதவும் வகையிலேயே ஏ.ஐ சார்ந்த தீர்வுகள் அமைகின்றன.

போதாமைகளைக் களையும்

மருத்துவக் கட்டமைப்பில் நிலவும் இரண்டு விதமான போதாமைகளை எதிர்கொள்ள ஏ.ஐ நுட்பம் பெரும் உதவியாக அமையும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். முதல் போதாமை, மருத்துவமனைக் கட்டமைப்பு தொடர்பானது. பல நாடுகளில் போதுமான மருத்துவமனைகளும், மருத்துவர்களும் இருப்பதில்லை. ஏழை நாடுகளில் இந்த பிரச்சினை இன்னும் அதிகம். இந்தச் சூழலில், மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய பணிகளிலிருந்து மருத்துவர்களை விடுவித்து, நோயாளிகளுக்குச் சிறந்த சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்த ஏ.ஐ நுட்பம் உதவுகிறது.

இரண்டாவது போதாமை, நோய்க்கூறுகளைக் கண்டறிவதில் ஏற்படும் பிழைகளால் ஏற்படும் பாதிப்பு. ஒருசில நேரங்களில் மருத்துவர்களே நோய்க்கூறாய்வு விஷயத்தில் திணறுவது உண்டு. தவிர, திறன் படைத்த மருத்துவ வல்லுநர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாதது இன்னும் பிரச்சினையாக இருக்கிறது. இந்த இடத்திலும் ஏ.ஐ நுட்பம் கச்சிதமாகப் பொருந்துகிறது.
நோய்களைக் கண்டறிவதில் ஏ.ஐ எப்படி உதவுகிறது என்றும், இதற்குக் காரணமாக விளங்கும் மருத்துவ அல்கோரிதம்கள் பற்றியும் தொடர்ந்து பார்க்கலாம்.

புரட்சியைத் தொடங்கிய புரோகிராம்கள்!

மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் வழக்கமான தொழில்நுட்பங்களுக்கும், ஏ.ஐ சார்ந்த மருத்துவ நுட்பத்துக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு, தரவுகளைச் சேகரிப்பதிலும், அவற்றைப் பகுத்துணர்ந்து தீர்வுகளை முன்வைப்பதிலும் உள்ள திறன்தான். இத்தகைய திறன் கொண்ட நுட்பங்களே ‘மருத்துவ ஏ.ஐ’ என வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகையில், பிரச்சினைக்குத் தீர்வு காணும் வல்லுநர் அமைப்பு (expert system) புரோகிராம்கள் 1960-களிலேயே அறிமுகமாகிவிட்டன. டெண்ட்ரல் (Dendral) எனும் ஆய்வுத் திட்டமே இந்த வகையில் முன்னோடியாகக் கருதப்படுகிறது. வேதியியல் துறைக்கான ஆய்வு புரோகிராமாக இது உருவாக்கப்பட்டாலும், மருத்துவத் துறை சார்ந்த மென்பொருட் அமைப்புகளுக்கான அடிப்படையாக இது அமைந்தது.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in