கட்டக்காளை - 4

கட்டக்காளை - 4

வந்தவகளுக்கு ஒண்ணும் புடிபடல... என்னமோ ஏதோன்டு வண்டியில ஏறுன பின்னத்தேவன் வீட்டாளுக, எறங்கிட்டாக... கழுச்சியாத்தா, பின்னாயியெல்லாம் கூடியமட்டும் தன்னக்கட்டிப் பாத்தாக... லச்சுமாயி மசிய மாட்டென்டுட்டு ஒக்காந்துக்கிட்டு அழுகிறா.

தாம் பொண்டாட்டி அழுகிறதப் பாத்த கட்டக்காளை, என்னா சொல்றதுன்டு புரியாம நிக்கிறான்.

“வகுத்துப் பிள்ளக்காரி அழுகக் கூடாதுத்தே...” கழுச்சியாத்தாவும், பின்னாயும் கூடியமட்டும் சொல்லிப் பாத்தாக. தலயக் கவுந்தடிச்ச லச்சுமாயி பொலபொலன்டு கண்ணீர வடிக்கிறா, தேம்பித்தேம்பி அழுகுறா.

“ஓம்பொண்டாட்டிய நீதான் போயி என்னான்டு கேளு... நாங்கெல்லாம் தவிச்சுப் போனோம்” கழுச்சியாத்தா கட்டக்காளைகிட்ட சொல்ல, எப்பிடிச் சொல்றதின்று தடுமாறிக்கிட்டே, ”லச்சுமாயி... எந்திரிச்சுக் கெளம்பு ஆளுக பூராம் காத்துக்கெடக்கு...” வெளியில நின்டெமேனிக்க கட்டக்காளை கூப்பிட “எல்லாத்தயும் விட்டுட்டு, நா... 

ஊருக்கெல்லாம் போகமாட்டேன்...” லச்சுமாயி அழுதுக்கிட்டே சொன்னா.

“நெறமாத்தக்காரிய, பெறந்த வீட்டுக்கு கூட்டிக்குப் போற வழக்கத்த மாத்தக் கூடாதுத்தே... கெளம்பு” பெருமாயி சொல்ல... “இங்கனெ இருக்கிற ஊருக்கு ஒத்தெட்டுல வந்திரமாட்டனா... போயிட்டு வா”ன்டு கட்டக்காளையும் ஒரு வழியா, சொல்லிச் சமாளிச்சு மனசில்லாம லச்சுமாய வண்டியில ஏத்தி அனுப்பி வச்சான். ஆனாலும் கட்டக்காளை மனசு பூராம் லச்சுமாயிதான் நெறஞ்
சிருந்தா...

ஓனாப்பட்டியில ரெண்டு மூணு தலமொறயா சம்பந்தஞ்சாடி செஞ்சிருந்தாலும், கட்டக்காளைக்கு ஒருத்தங்கூட பொண்ணு தர மாட்டேன்டுட்டாங்கெ.

ஜல்லிக்கட்டு, சேவக்கட்டு, கெடாச்சண்டை, கம்பு சுத்துறதுன்டு சேக்காளிககூட சேர்ந்துக்கிட்டு, பொறுப்பில்லாம, எளந்தாரி முறுக்குல திரியிறான்டு பொண்ணு கட்டித்தர தயங்குனாங்க...

ஆனா, லச்சுமாயோட அப்பன் பின்னத்தேவன், என்னா நெனச்சாரோ தெர்ல, கட்டக்காளை மேல நம்பிக்கை வச்சு, பொண்ணக் கட்டிக்குடுத்தாரு.

கட்டக்காளைக்கு என்னைக்கு கல்யாணம் முடிஞ்சுச்சோ, அப்பருந்து ஆளே மாறிப்போயி, ஊரே மெச்சிப்போறளவுக்கு நல்ல மனுசனாவும், கெட்டிக்காரனாவும் ஆகிட்டான். அவர் இப்டி மாறிப்போவான்டு ஆருமே நெனச்சுப்பாக்கல...

பெறந்த வீட்டுக்கு லச்சுமாயக் கூட்டிக்குப் போன மக்காய்நாத்து, மருந்துக்களி குடுக்கப் போகணுமின்டு கட்டக்காளை வீட்டாளுக கெளம்பிக்கிட்டுருக்காக.

“வர்ணாசலப்படி என்னென்னா கொண்டுக்குப் போகணுமோ, அம்புட்டயும் எடுத்து வைய்ங்க...” கழுச்சியாத்தா சொன்னா.
வயக்காட்டுல வெளஞ்ச சம்பா பச்சரிசி, உழுந்து, தானியந்தவசமின்டு மருந்துக்களிக்கான சாமானெல்லாம் தனித்தனியா, செமயக் கட்டி அன்னத்தாயி எடுத்து வச்சா.

குளுச்சுட்டு தலயத் தொவட்டிக்காந்த ஒச்சுக்காளை, வீட்டுக்குள்ள போயி வெளுத்து வச்சிருந்த துணியெடுத்து மாத்திக்கிட்டு வந்தான். கட்டுத் தொறையில கட்டிக்கெடந்த வண்டி மாட்டக் கழத்தி, குழுதானித் தண்ணிய கையவிட்டு கலக்கிக் குடிக்க வச்சான்.
கழுச்சியாத்தா, பின்னாயி, அன்னத்தாயி, பக்கத்து வீட்டுப் பொட்டியம்மா, மாயக்கா-ன்டு, நறுக்கா நாலஞ்சு ஆளுக மட்டும், வண்டியில ஏறிக்கிட்டாக. ஒச்சுக்காள வண்டிய ஓட்ட, அவெம் பின்னாடி கட்டக்காளையும் ஏறி ஒக்கார... வண்டி மாடு ‘சல்லு சல்லு’ன்டு கெளம்பி, வண்டிப்பாதையக் கடந்து, உசுலம்பட்டி ரோட்டப் புடிச்சிருச்சு.

“சுத்தமான வட்டுக்கருப்பட்டி, மத்த சாமாஞ்செட்டெல்லாம் சந்தையில பாத்து வாங்கணும்பே மறந்திராத...” கட்டக்காள கிட்ட கழுச்சியாத்தா நாவகப்படுத்துனா.

ஆளாளுக்கு பகுமானமா பேசிக்கிட்டு வந்ததுல, உசுலம்பட்டி வந்ததே தெர்ல... அம்மச்சியம்மன் கோயிலுக்கிட்ட வண்டிய நிப்பாட்டி மாட்டக் கழத்தி விட்டான் ஒச்சுக்காளை.

“ஏம்பே... கட்டக்காள, ஒம்பொண்டாட்டிக்கும் மத்தவகளுக்கும், கொஞ்சம் உண்டனா பூ வாங்கிக்கெ... அப்பிடியே கொண்டக்குள்ள வக்கிறதுக்கு மரிக்கொழுந்தும் வாங்கிரு... சந்தைக்குள்ளருக்கிற செக்காஞ்செட்டிகிட்ட நல்லெண்ணெயும் வாங்கிக்க, வெத்தல பாக்க மறந்திராதப்பே... வாயி நமநமன்டுது...” கட்டக்காளை கிட்ட கழுச்சியாத்தா சொல்ல… சாக்குப் பைகள எடுத்துக்கிட்டு கட்டக்காளை கூட ஒச்சுக்காளையும் கெளம்பிப் போனான்.

கோயிலொட்டி பெரிய புளியமரம்... நீட்டி நிமிந்து படுக்கிறாமரி மரத்தடியில கெடந்த, பலகாக்கல்லுல, காத்தாட ஒக்காந்த பொம்பளைக... வெத்தலய மடிச்சு வாயில போட்டு மென்டு துப்பிக்கிட்டு, ஊருக்கதைய பேச ஆரம்பிச்சாக. அவுக பேசி முடிக்கிறதுக்குள்ள, சாமாஞ்செட்டு வாங்கப் போன கட்டக்காளையும் ஒச்சுக்காளயும் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துட்டாங்கெ.
தாம் பொண்டாட்டி லச்சுமாய, எப்படா பாக்கப்போறமின்ற நெனப்பு, கட்டக்காளை மூஞ்சியிலயே அப்பிடியே தெரியுது. மதினி நெனப்பாவே கட்டக்காளை இருக்கான்றத தெரிஞ்சுக்கிட்ட ஒச்சுக்காளை, கடகடன்டு வண்டியப்பூட்டி மாட்டு வாலத் தட்ட, மாடுரெண்டும், ஓனாப்பட்டிய நோக்கிச் சிட்டாப் பறக்குது.

புருசன் வீட்டுலருக்கப்ப, அப்பன் வீட்டாளுக எப்ப வருவாகன்டு, காத்துக் கெடந்த லச்சுமாயி, அப்பென் வீட்டுக்கு வந்ததிலிருந்து, புருசன் வீட்டுலருந்து ஆளுக, எப்ப வருவாகன்டு காத்துக்கெடந்தா...

ஓனாப்பட்டி, மேக்குத் தெருவிலருக்கிற… திண்ண வச்ச பெரிய ஓட்டு வீட்டு மின்னாடி வண்டி வந்து நின்னுருச்சு… எப்ப வருவாகன்டு திண்ணையில காத்துக்கெடந்த பின்னத்தேவன் வீட்டாளுக, “வாங்க...வாங்க” ன்டு ஓடியாந்து வந்தவகள வரவேத்தாக... வண்டியிலருந்த ஆளுக எறங்க, ஒச்சுக்காளையும், மத்தவுகளும் சாமாஞ் செட்டெல்லாம் எறக்கி வச்சாக.

லச்சுமாயி, வருசக்கணக்கில பிரிஞ்சிருந்தவ மாரி, அன்னத்தாயி, பின்னாயி, பொட்டியம்மா - ன்டு எல்லாரு கையயும் புடிச்சுக்குட்டு விடாமா மருகிறா... ஆளுகளச் சுத்திச் சுத்தி வாரதப் பாத்த மத்த பொம்பளைக… கேலி பேச, வந்த சிரிப்பயும் கண்ணீரயும் லச்சுமாயிக்கு அடக்க முடியல.

லச்சுமாயோட ஆத்தா பெருமாயிகிட்ட கழிச்சியாத்தா பலகாரத்தக் கொடுத்தா. கொண்டுக்காந்த பூவெடுத்து லச்சுமாயி கொண்டயில வச்சு விட்டா அன்னத்தாயி. மத்த பொம்பளைகளும் பூவயும், மரிக்கொழுந்தயும் வாங்கி, அவுகவுக கொண்டயில வச்சுக்கிட்டாக.

“பெறாக்குப் பாத்துக்கிருக்காமா, வந்தவுகளுக்கு மொதல்ல தண்ணிய மோந்து குடு” பின்னத்தேவன் சொல்ல, வீட்டுக்குள்ள ஓடிப்போயி சட்டி நெறயா மோர்த் தண்ணிய மோந்துக்காந்து “குடிங்கப்பே” ன்டு குடுத்தா பெருமாயி, ஆளுக்கொரு செம்பு வாங்கி குடுச்சவுக, வந்தவேலயப் பாக்க ஆரம்பிச்சிட்டாக.

பலகாரத்த தின்டுக்கிட்டே, மருந்துக்களி கிண்ட அரிசிய எடுத்து ஊரவச்சா பின்னாயி.

ஊருன பச்சரிசியக் கழுவி, அன்னத்தாயும், பக்கத்து வீட்டு மாயக்காளும் ஒரல்ல போட்டு, ஒலக்கயில குத்தி இடிச்சுக்காந்தாக. இடிச்ச மாவ, சொளகில போட்டு தெள்ளிச் சலிச்ச பின்னாயி, மாவு தனியா, குருண தனியா பிரிச்சு வச்சா.

கருப்பட்டியத் தட்டி நுனுக்கி வச்ச பொட்டியம்மா, அடுப்புல ஒக்காந்து வேலயப்பாக்க ஆரம்பிச்சிட்டா...

பொம்பளயாளுக செய்யிற வேலயில, நாம என்னத்தச் செய்யிறதின்டு, ஊருச்சாவடி ஆலமரத்தடியில கூடியிருந்த சோட்டாளிககிட்ட பேசுறதுக்கு கட்டக்காளையும்,ஒச்சுக்காளையும் போயிட்டாங்க.

மம்பானையில கொதிக்கிற தண்ணியில, பெருவட்டுக் குருணைய கொஞ்சம் கொஞ்சமா எடுத்து வேகவிட்டா பொட்டியம்மா. தெள்ளி வச்ச மாவக் கட்டிபடாம த்துனூன்டு த்துனூன்டாப் போட்டு, அகப்பய வச்சு பக்குவமா கிண்டக் கிண்ட, வந்த மணம், களி பக்குவமாக் கிண்டிருக்கின்றத சொல்லாமச் சொல்லுது.

"மருந்துக்களி கொடுக்கிற சடங்கு செய்யணும், எல்லாரும் வாங்க"ன்டு கழுச்சியாத்தா கூப்பிட... ஊருலருந்து வந்தாளுகளோட, உள்ளூராளுகளும் சேந்துக்கிட்டாக.

சொளக எடுத்துக்காந்த பெருமாயி, கழுச்சியாத்தாகிட்ட குடுக்க... “நாஞ்ச்சொல்றா மாரி செய்யு”ன்டு கழுச்சியாத்தா சொல்லச் சொல்ல, பின்னாயி அப்படியே செய்ய ஆரம்பிச்சா.

“ஏழு தளுக போடு...”

தயாரா வச்சிருந்த, சின்னச்சின்ன தாமர எலைய எடுத்து வச்சா பின்னாயி…

“எறக்கி வச்ச களிய கொஞ்சங் கொஞ்சமா எடுத்து, ஒத்தொத்த எலையிலயும் வையி...” கழுச்சியாத்தா சொன்னமாரி, பின்னாயி எடுத்து வச்சா...

“ஒரு தளுகயில மட்டும், அம்மங்கொழுந்தும் செந்தட்டி எலையும் நசுக்கி உள்ள வச்சிரு...”ன்டு கழுச்சியாத்தா சொல்ல...
“யாத்தே... வேப்பல கசக்கும், செந்தட்டி அரிக்குமில்ல, இதப் போயி வைக்கச் சொல்ற..?” வேடிக்க பாத்துட்டுருந்த அன்னத்தாயி புரியாம கேட்டா.

“பெரியாளுக சொல்லி வச்சிட்டுப் போனவழக்கத்துல, ஏதாச்சும் காரணமும், மருத்துவமும் இருக்கும்... தொனத்தொனண்டாம சும்மாரு...” பின்னாயி அமட்டுனா.

“நுனுக்கின கருப்பட்டிய களியில வச்சு, கொஞ்சம் நல்லெண்ணய ஊத்து...” கழுச்சியாத்தா சொல்ல...

அவ சொன்ன பக்குவத்த அச்சுப்பெசகாம அப்பிடியே செஞ்சு முடிச்சா பின்னாயி.

“லச்சுமாயி... இங்க வாத்தே, சாமியக் கும்புடு...” கழுச்சியாத்தா கூப்பிட்டா.

எல்லாரும் வந்து சாமியக் கும்பிட்டுட்டு, லச்சுமாயிக்கு திந்நீறு வச்சு விட்டாக.

“இங்கிட்டு வாத்தே...” லச்சுமாய, வீட்டுக்கு வெளியில கூட்டியாந்து வாசல்ல நிப்பாட்டுன கழுச்சியாத்தா, தளுக போட்டு வச்சிருந்த சொளகெடுத்து, லச்சுமாயிகிட்ட கொடுத்தா.

வேப்பலையும், செந்தட்டி எலையயும் நசுக்கி உள்ள வச்ச களியக் காமிச்சு, “சாமியக் கும்பிட்டு... நீயி இதச் சாப்பிடு” ன்டு சொல்லி சாப்பிடவச்ச கழுச்சியாத்தா, மத்த தளுகய அங்கனருந்த சின்னதுகளுக்கு குடுத்தா...

மடமடன்டு கழுச்சியாத்தா பக்குவம் சொன்ன அம்புட்டு வேலயும் சட்டுப்புட்டுன்டு முடிஞ்சிருச்சு. இதுக்குத்தான் வெவெரந்தெரிஞ்ச பெரியாளுக வீட்டுலருக்கணுமின்றது.

ஆலமரத்தடி சாவடியில பேசிக்கிருந்த கட்டக்காளை, ஒச்சுக்காளை அவங்களோட அங்கனருந்த வேண்டப்பட்டவகளயும் பின்னத்தேவன் வீட்டுக்குக் கூட்டிக்காந்து சாப்பிடச்சொன்னாரு.

எல்லாத்தயும் ஒக்காரச் சொல்லி, கிண்டுன களிய, சுடச்சுட அகப்பயில மோந்து, தாமரயெலயில வைக்கிறப்பவே அப்படி ஒரு மணம்...

களிக்குள்ள குழிய வெட்டி, குழிக்குள்ள கருப்பட்டிய வச்சு, நல்லெண்ணெய ஊத்தினப்பறம்... களியோட கருப்பட்டியும் எண்ணெயும் சேர்ந்து இன்னொரு மணம் மணக்கும் பாரு... எட்டு வீட்டுக்கு அங்கிட்டு இருக்கவகளையும் வா...வான்டு கூப்பிடும்.

சூடு பறக்கிற களிய, எலையில லேசா பெரட்டியெடுத்து வாயில போடுறப்ப கையிலயும், நாக்குலயும் ஒட்டாம எளஞ்சூட்டோட தொண்டக்குள்ள எறங்குறதே அம்பூட்டு எதமாருக்கும்.

“லச்சுமாயி... களிய வச்சே, வேலய முடிச்சிருவீங்க போல... சோறு தண்ணி ஆக்கிவச்சிருக்காகளா ? இல்ல அம்புட்டுத்தானா?” எகத்தாளமா, பொட்டியம்மா கேட்டு முடிக்கல...

கட்டுத்தொறப் பக்கமிருந்து, ஆக்கிவச்ச சோறு கொழம்பு, பானை பானையா வந்து எறங்கிருச்சு.

போனவுக, வந்தவுக, ஊருச்சனமின்டு பூராச்சனமும் சாப்பிட்டு முடிச்சு... வெத்தலபோட்டு, சந்தோசமா சிரிச்சு பேசிக்கிருந்தாக.
சொழட்டியடிக்கிற சூறாவளி கெனக்கா கத்திக்கிட்டு வந்த, அந்த மொரட்டுப் பொம்பள, "எவன்டா அந்த எடுவட்டவைங்க, என்னக் கூப்புடக்கூடாதின்டவேங்..." மட்டுமருவாதியில்லாம கத்திக்கிட்டே... வீட்டுக்குள்ள வந்துட்டா.

“நல்ல காரியம் நடக்கிறப்ப... இவ ஆருடி சீருல்லாம சத்தம் போட்டுக்காறா..? யாத்தே வசங்கட்டதனமா பேசிக்கிருக்காளே, என்னா நடக்கப்போதோ...”ன்டு மருந்துக் களிகுடுக்க வந்த அம்புட்டுச்சனமும் என்னா ஏதுன்டு தெரியாமா, திக்குமுக்காடிப்போயி நிக்கிதுக!

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in