கட்டக்காளை - 2

கட்டக்காளை - 2

கினிங்கிட்டிமாயி... நல்லாருக்கிற குடும்பம் நாசமாப் போகுதுன்டா, இவெந்தான் காரணம்… எவென் வீட்டுல வெட்டுக்குத்தாகி எழவு விழுந்தாலும், அதுக்கும் இவெந்தான் காரணமா இருப்பான். ஊராளுக பொறனியப் பேசி, குடும்பத்தக் கெடுக்கிறதில இவன மிஞ்ச ஆளில்ல…

கினிங்கிட்டிமாயி, நால்ர அடி ஒசரந்தான் இருப்பாங், மேல்ச்சட்ட போடுற பழக்கமே இல்ல… கினிங்கிட்டி அடிச்சு தண்டோரா போடுறவென் மாரி, ஆட்டி ஆட்டி நடக்கறதுனால, மாயின்ற இவெம் பேருக்கு முன்னாடி கினிங்கிட்டியும் ஒட்டிக்கிருச்சு.
இன்னிக்கு, கட்டக்காளை குடும்பம்... இவன் கண்ணுல சிக்கிருக்கு...

“ஏய்… ஏய் மாமோய்... என்னா மாமு திருழாப் பாக்கவா...? நானும் வண்டியில ஏறிக்கிரட்டா" சொல்லிக்கிட்டே... பதிலுக்கு காத்துக்கெடக்காம, படக்கின்டு சப்பரக்கட்டயில கைய ஊண்டி, குதிச்சு ஏறி வண்டிப் பெறத்துல ஒக்காந்துக்கிட்டான்.

"ஏலேய்… அதாங்… கூறுகெட்ட கினிங்கிட்டின்றது. வண்டிய நிப்பாட்டுறதுக்குள்ள ஒனக்கென்னா அம்புட்டு அவசரம்...? விழுந்து கிழுந்து எங்கமேல பலியப் போட்டுறாதடா…” ஒச்சுக்காளை அவன வய்ய…

“மாப்ள… ஆயிரந்தாங் இருந்தாலும் ஒனக்கு நா… மாமெங் இல்லயா…?”

கினிங்கிட்டிமாயி, சவங்கத் தனமா சப்பக்கட்டுக் கட்ட…

“நல்ல நோமெங்… இப்பிடித்தான் படக்கின்டு ஏறுவியாக்கும்... நேக்காத்தூக்கி மாட்டுக் கழுத்த தும்பு… இருக்கிப்பிடாதா?..." ஒச்சுக்காளை, கோவங்கொறையாம வய்ய…

"கோவிக்காத மாப்ள, ஒனக்கு பொண்ணுக் கட்டித்தரலாமின்டுக்கிருக்கேன்..." கினிங்கிட்டிமாயன், சவங்கயாப் பேசி ஒச்சுக்காளையோட கோவத்தத் தணிக்கப் பாத்தான்.

"என்னதாங் கோவிச்சாலும்… நீதான்டி ஏவ்வீட்டு மருமகென்... அத மறந்திராத...”

"ஓவ்வீட்டு மருமகனா வாரதுக்கு, எங்கிட்டாச்சும் மலங்காட்டுல போயி உருண்டுரலாம்“ வாத்தைக்கு வாத்த விடாம பேச…
"ஏய்… கினிங்கிட்டி மாயா... வாயப் பொத்திக்கிட்டு சும்மா வரமாட்டியா..? நல்ல நாளும் பொழுதுமா... வம்ப இழுத்துக்கிருக்க..." கட்டக்காளை கினிங்கிட்டி மாய அதட்டிப்பேச, மாயி கப்பு சிப்பின்டு அடங்கிட்டான்.

கட்டக்காளை அந்த ஏரியாவுலயே பெரிய சம்சாரி... புலிவாலுகெனக்கா சன்னமான மீசய லேசா முறுக்கி விட்டு, மிலிட்டிரி கட்டிங் வெட்டி, சுருட்ட முடிய ஏத்திச்சீவியிருப்பான்... நல்ல ஒசரம். கருப்பா இருந்தாலும் கலையான மொகம். ஒசரத்துக்குத் தக்கன ஒடம்பு. வட்டக்கழுத்துச் சிப்பாச் சட்டை, கை மடிப்ப சன்னமாச் சுருட்டி ஏத்திவிட்டு, சும்மா… ஜல்லிக்கட்டுக் காள மாரி... நெஞ்ச நிமித்தி நடந்து வந்தா, எதிர்ல வார ஆளுக பம்மி ஒதுங்கிருவாங்கெ...

ஊருக்குள்ளயும், தோட்டத்திலயும் சுண்ணாம்பு, கடுக்கா, கருப்பட்டி போட்டு, பல தலமொறைக்கு முந்திக் கட்டுன, பெரிய காரவீடு… தோட்டந்தொறவுன்டு ஏகப்பட்ட சொத்து.

சிய்யான் பாட்டென் காலத்திலருந்து கட்டக்காளையோட குடும்பத்து மேல, ஊருச்சனம் வச்சிருக்கிற மதிப்பும் மருவாதையும் இன்னைக்கும் கொறயல...

ஒச்சுக்காளை… கட்டக்காளையவிட, பத்து வயசு எளையவன். கட்டக்காளைக்கு நல்லப்பன் மகந்தான் ஒச்சுக்காளை. 
சித்தப்பனத்தான் நல்லப்பன்டு சொல்லுவாக... இவனப் பெத்துப் போட்ட நேரம், அவுக ஆத்தாளும் செத்துபோயிட்டா. கொஞ்ச நாள்லயே அவுகப்பனும் சீக்குவந்து செத்துப் போக, அப்பெங் ஆத்தா இல்லாம அனாதயா தவிச்ச ஒச்சுக்காளைக்கு, கட்டக்காளையோட அப்பெங், ஆத்தாதான் எல்லாமே.

வகுறமுட்டக் கஞ்சிய குடிச்சுப்பிட்டு, வஞ்சகமில்லாம வேல செய்வான்... உழுகிறது, பரம்படிக்கிறது, வண்டிமாடு ஓட்டுறதுன்டு… எந்த வேலைக்கும் அசரமாட்டான் ஒச்சுக்காளை…

யாருமில்லாத பருக்குப் பயலா இருந்தாலும், கட்டக்காளைக்கு பெரிய பலமே ஒச்சுக்காளைதான்.

வண்டி உசுலம்பட்டிக்குள்ள நெருங்க முடியல... ரோடு பூராம் சனக்கூட்டம்… ஐஸ் வண்டிக்காரன், பலூன்காரன், வளைவிக்காரன்டு... எங்க பாத்தாலும் புதுசா மொளைச்ச ஏகப்பட்ட கடகண்ணிக.

தாவணி கட்டுன கொமரிப்புள்ளைக... தூக்கி முடிஞ்ச கொண்டக்குள்ள மரிக்கொழுந்த சொருகி, தல நெறயாப் பூவ வச்சுக்கிட்டு, தண்டட்டியும் சவுடியயும் போட்டு, காது பூராம் பொடிப்பொட்டு நகைகெ, கொப்பு, ஒனப்புத்தட்டு, உள்ளாங்கழுத்து சங்கிலியின்டு நகநட்டப் போட்டுக்கிட்டு… அப்ப்ப்டியே மினிக்கிக் கிட்டும்... ஒருத்தி கைய்ய, மத்தொருத்தி புடிச்சிக்கிட்டும்… அடிச்சிச் சிரிச்சுக்கிட்டும்… கூட்டங் கூட்டமா கும்மாளமடிக்கிதுக.

அதுக்கு எகனயா… எளந்தாரிக்கூட்டம் ஒருபக்கம், வீராப்புக் காட்டிக்கிட்டும்… முழுக்கைச்சட்ட கை மடிப்ப, சுருட்டி ஏத்திவிட்டுக்கிட்டும்… கைத்துண்ட மடிச்சு பின்னங்கழுத்துல சொருகிக்கிட்டும்… அரை கொறையா மடிச்சுக் கட்டுன வேட்டிய, கழத்திக் கழத்தி மடிச்சுக் கட்டிக்கிட்டும்… எண்ணையொழுக தேச்ச தலமுடியில, குருவிக்கொண்ட கர்ளிங் வச்சுக்கிட்டு, சாடமாடயாப் பாத்துக்கிட்டும்… நக்கலுப் பண்ணி, பேசிச் சிரிச்சுக்கிட்டும் திரிஞ்சாங்கெ.

வண்டி, பொத்துனாப்புல கூட்டத்துக்குள்ள போயிட்டுருக்கு. “ஏம் மாமு, ஒருச் சின்ன சமாச்சாரம்… ஒச்சுக்காளையும் பெறந்ததிலிருந்தே, ஒங்க வீட்டுலையே ஒழைச்சு கொட்டிக்கிருக்கான்...

மேக்குத் தோட்டம், கெழக்குத் தோட்டம், தெக்குத் தோட்டம், ஊரச்சுத்தி இம்புட்டு காடு கரை... இருக்கில்ல, இதுல எந்தெந்தச் சொத்த ஒச்சுக்காளைக்கு... தரப்போற ?"

கினிங்கிட்டிமாயி சொல்லி முடிக்கிறதுக்குள்ள, கையில வச்சிருந்த சாட்டக் குச்சிய ‘டமார்ன்'னு வண்டிக் கூட்டுல அடிச்ச ஒச்சுக்காளை, "இந்த அடி, ஒம்மேல விழுகிறதுக்குள்ள எறங்கி ஓடிப்போயிரு, யாருகிட்ட ஓவ்… வேலையக் காட்டுற..." ஒச்சுக்காளை கோவிக்க, மெரண்டு போன கினிங்கிட்டி மாயி, வண்டியலருந்து தவ்வி, தொட தெறிக்க ஓடிப் போயிட்டான்.

சாமி பாக்கப் போற நேரத்தில சண்டைய இழுத்துவிடத் தெரிஞ்சானேன்னு, சத்தவடம் ஆரும் பேசல…

கினிங்கட்டி மாயி மேல உள்ள கோபத்தில, ஒச்சுக்காளை வண்டிமாட்ட வேகமாத் தட்டி ஓட்ட, அம்புட்டுக் கூட்டத்தயும் வெலக்கிக்கிட்டு, உசுலம்பட்டி கம்மாக்குள்ள வண்டி வந்து சேந்துருச்சு.

"ஏலே ஒச்சுக்காள... தெக்கோரமா வண்டிய நிப்பாட்டு, இங்கெனயே எறங்கிக்கிறோம்...” கட்டக்காளை சொல்ல.

வண்டிய நிப்பாட்டி ஆளுகள எறக்கிவிட்ட ஒச்சுக்காளை, ஆளொட்டாளா வேடிக்கப் பாக்க வந்துட்டான்.

பம்பக் கொட்டுச்சத்தமும்... பீப்பிச் சத்தமும்... வானத்துக்குள்ள சீரிப்பாஞ்சு வெடிக்கிற வேட்டுச்சத்தமும், ஒன்னோட ஒன்னாச்சேந்து கேக்குற சத்தத்தில, மேலோகத்திலருக்கிற சாமியெல்லாத்தையும், கீழ எறங்கி, வா…வா… ன்டு கூப்பிடுற மாரியே இருந்துச்சு…

அன்னம்பாரிப்பட்டி கொட்டுப்பூசாரி... கொட்டடிச்சுக்கிட்டு சந்தனம்பூசி, விபூதிப்பட்டையடிச்சு, குங்குமம் வச்சு, செவ்வந்திப் பூ மாலயப் போட்டுக்கிட்டு, அலங்காரம் செஞ்ச ஆச்சிகெழவியோட ஆபரணப் பெட்டிகள தூக்கிட்டு வார அழகப் பாத்த அம்புட்டுச்சனமும், தலைக்குமேல கையெடுத்துக் கும்பிட்டு… "ஆத்தா ஒச்சாயி... எங்களுக்கு நல்ல சொகத்தக் குடு தாயி..." வாயவிட்டு சொல்லிக்கிட்டு தன்ன மறந்து கும்பிடுதுகெ. சிறுசும் பெருசுமா அஞ்சு பெட்டி அலங்காரமா வருது...
"அந்தா... அந்தப் பெரியபெட்டிதான் ஆச்சிகெழவி பெட்டி...”

எந்தப் பெட்டி எந்தச் சாமிக்கு உரியதின்டு... சின்னஞ்சிறுசுக கிட்ட, பெரியாளுக அடையாளம் காமிச்சு வெவரஞ் சொல்லிக்கிட்டுருந்தாக...

“யே… மதினி அங்கென பாரு… பெரம்பு வெளாற முறுக்கிக்கிட்டு, ஆணி அடிச்ச பாதகட்டயில மாயாண்டிச்சாமி ஏறி வருது பாரு..."
நெகாத்தெரியாம அங்கிட்டிங்கிட்டும் பாத்த அன்னத்தாய, “நீ... எங்கிட்டுப் பாக்குறவ... அது அய்யங்கோடாங்கி, இந்தா பாரு..." மண்டயப் புடிச்சுத் திருப்பி, மாயண்டிச்சாமி வாரதுக்கு நேராக் காமிச்சா பின்னாயி.

"ஆமாத்தே..." சொல்லிக்கிட்டே அன்னத்தாயும் சாமியப் பாத்துக் கையெடுத்துக் கும்பிட்டா...

பெரிய உத்ராச்ச மாலை, இடுப்புவரைக்கும் தொங்குறமாரி கழுத்துல கெடக்கு... செவ்வந்தி, மரிக்கொழுந்து கலந்துவச்சுக் கட்டுன மாலைய மாராடியாவும், கழுத்தலயும் போட்டுக்கிட்டு... காதுரெண்டுலயும் பள பளன்டு மின்னுர கடுக்கன், நெத்தி நெறயா சந்தனம் குங்குமம் வச்சு, கையி ரெண்டுலயும் தங்கக் காப்பும் வெள்ளிக் காப்பும் போட்டுக்கிட்டு, சனக் கூட்டத்தச் சுத்திச் சுத்தி உக்கிரமாப் பாத்துக்கிட்டே... ஆணிபதிச்ச பாத கட்டயில ஏறி, மாயாண்டிச்சாமி அருளோட ஆடிவாரதப் பாத்த சனம்… ‘கடலுக்கும் கரைக்கும் மல்லுக்கட்டுற அலைமாரி...’ மாயண்டிச்சாமிகிட்ட திந்நீறு வாங்க முண்டியடிக்கிற சனம்... முனுத்தலயும் பெறத்துலயும் போகமாட்டாம தத்தளிக்கிதுக.

தொணச்சாமியா ஆடி வார கோடாங்கிமாரும், கையில வச்சிருக்கிற வெளார வச்சு ‘சடீர்...சடீர்...'ன்டு அடிச்சு கூட்டத்த அண்டவிடாம தடுக்கிறாக.

“சாமி வெளாருல அடி வாங்குனா, நம்மளப் புடிச்ச பீட வெலகிறும் கால்ல விழுங்க” கூட்டத்தில யாரோ சத்தமாச் சொல்ல, மனசுல ஏகப்பட்ட பாரத்தோட வந்த சனமெல்லாம்... வெளஞ்ச கருது சாஞ்சமாரி திமுதிமுன்டு விழுந்து கெடக்குதுக...

விழுந்து கெடந்த சனத்த வெளாற வச்சு தட்டி எழுப்பி, வெத நெல்ல வீசியெறிஞ்ச மாரி, திந்நீறப் புடிச்சு கூட்டத்தில நிக்கிர அம்புட்டுச்சனத்து மேலயும் வீசி, மாயாண்டிச்சாமி சனங்களுக்கு அருளாசி வழங்கிட்டு வருது.

சாமி பக்கத்தில நின்னு திந்நீறு வாங்கமுடியலயேன்டு, லச்சுமாயி மனசு கலங்கிட்டுருந்துச்சு… கால்ல விழுந்து கெடந்த சனத்து மேலயும், கம்மாக்கரையிலருந்த கூட்டத்து மேலயும், மாயாண்டிச்சாமி, புடியாப்புடிச்சு எறிஞ்ச திந்நீறு… கட்டியா பறந்து வந்து லச்சுமாயி நெத்தியில ‘சடீர்’ன்டு விழுக, அவெ ஒடம்பெல்லாம் சிலுத்துப் போச்சு.

“ஆத்தா… ஆச்சிகெழவி, கொதிபானக்காரி… எங்க கொலங்காத்தவளே” சாமியோட அருளு முழுசாக் கெடச்சமாரி, லச்சுமாயி சத்தமாச்சொல்லி வணங்கி மகுந்துபோனா.

மாசிப்பெட்டி பாத்த கூட்டங் கலையிறத்துக்கு நெடு நேரமாயிப் போச்சு...

அதிரசம், சீரணி, வட, மிச்சரு, சீனிச்சேவு, காராச் சேவுன்டு... கட்டகாளை வாங்கியாரச் சொல்லி, ஒச்சுக்காளை ரெண்டு பெரிய பை நெறையா வாங்கியாந்த திம்பண்டத்த... லச்சுமாயிகிட்ட குடுக்க, வண்டியலிருந்த பின்னாயும், அன்னத்தாயும் ஒவட்ட திண்டும், ஊருல போயி அக்கம்பக்கத்து வீட்டாளுகளுக்கெல்லாம் கொடுத்தும், மிச்சங்கெடந்துச்சு.

அன்னைக்கு ராத்திரி, ஊரெல்லம் ஒடுங்கி நடுச்சாமம்.

ஒறங்கிக்கெடந்த லச்சுமாயி, திடீர்ன்டு வகுறு வலிக்கிதுன்னு கத்தி அழுக ஆரம்பிச்சுட்டா... பதறியடிச்சு எந்திரிச்ச கட்டக்காளை, என்னமோ ஏதோன்டு பயந்து, அக்கம்பக்கத்தில இருக்கிற பொம்பளயாளுகள எழுப்பிக்காந்திட்டான். “யாத்தே… வரமாங்கியாந்து வம்சத்த செமந்துக்கிருக்கவளுக்கு ஒருகொறையும் வரக் கூடாது சாமி…” பொம்பளைக நெஞ்சுல அடிச்சுக்கிட்டே பதறிச்சொல்ல… ‘கொறமாத்தையிலயே வகுற வலிச்சா… வசங்கெட்டுப் போயிருமே…’ன்டு பயந்துபோன கட்டக்காளை, பித்துப் பிடிச்சாமாரி, சொவத்தில சாஞ்சு நின்னான்.

 (தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in