முதுமை எனும் பூங்காற்று 26: வசந்தமாகட்டும் வாழ்க்கை!

முதுமை எனும் பூங்காற்று 26: வசந்தமாகட்டும் வாழ்க்கை!

உலகில் ஒவ்வொரு நாளும் புது உயிர்களின் பிறப்பு நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4 குழந்தைகள் இந்தப் பூமிக்குப் புது மலர்களாக வருகை தருகின்றன. இந்தப் பூமியில் வாழ வந்திருக்கும் நம் அனைவருக்கும், வாழ்க்கையை இறுதிவரை தொடர்வதற்கான வாய்ப்புகள் இயற்கையின் கருணையால் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. அவற்றை நாம் எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம் வாழ்க்கை அமைகிறது.

விட்டுச் செல்லும் பாடம்

வாழ்க்கையின் தாத்பரியத்தை உணர்ந்தவர்கள், தங்கள் வாழ்நாளின் இறுதிக் கணம் வரை, மனிதப் பிறவியின் மேன்மையை உணர்த்தும் வகையில் வாழ்ந்து மறைகிறார்கள். அவர்கள் விட்டுச் செல்லும் நல்லுணர்வுகள் அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாக அமைகின்றன.

பிறப்பின் ரகசியம் குறித்துப் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் தண்ணீர் கரையில் வாழ்வு முடிவடைகிறது. அவ்வளவுதான். இடைப்பட்ட வாழ்க்கையில் நாம் நமக்கு நல்லவர்களாக, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உபயோகம் உள்ளவர்களாக இருந்தால் பிறப்பின் பயனை அடைந்துவிட்டோம் என்று அர்த்தம்.

பிரச்சினைகள் தீரட்டும்

‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும்… வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை’ – ஜெமினி கணேசன் நடித்த ‘சுமைதாங்கி’ படத்தில் இடம்பெற்ற ‘மயக்கமா கலக்கமா’ எனும் இந்தப் பாடலின் வரிகள்தான் எவ்வளவு சத்தியமானவை. எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. நாம் பிரச்சினைகளைக் கண்டு அஞ்சுவதால் அவை மறைந்துவிடுவதில்லை. எளிய வார்த்தைகளில் இதை உணர்த்திய கண்ணதாசன் எவ்வளவு பெரிய மேதை!

திரைத் துறையில் போதிய வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்ட கவிஞர் வாலி, ஒருகட்டத்தில் திரும்பிச் சென்றுவிட முடிவெடுத்தாராம். அந்தச் சமயத்தில் கண்ணதாசனின் இந்தப் பாடல், தனது மனதை மாற்றி வாழ்க்கைப் போராட்டத்துக்கு நடுவே வெற்றிப் பாதையை அமைத்துத் தந்தது என்று வாலி பதிவு செய்திருக்கிறார். ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ எனும் வரி தனது வாழ்க்கையின் போக்கையே மாற்றியது என்று வாலி கூறியிருக்கிறார்.

அவருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் உரிய வார்த்தைகள் அவை. ‘மருமகளுடன் மனஸ்தாபம்’, ‘மகனின் போக்கில் மாற்றம்’, ‘பேரப்பிள்ளைகள் என்னை மதிப்பதில்லை; ஆறுதலாகப் பேசுவதில்லை’, ‘பணம் சேர்க்க முடியவில்லை, பிள்ளைகளுக்கு அனைத்தையும் செலவழித்துவிட்டதால் இறுதிக்காலத்தில் கையில் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன்’, ‘உடலில் பல நோய்கள், சிறுநீர் நிற்காமல் போகிறது, மலம் இறுகி வர மறுக்கிறது’ என ஒவ்வொரு முதியவரின் மனதிலும் ஒவ்வொரு பிரச்சினை. ஆனால், மனது வைத்தால் இந்தப் பிரச்சினைகளை எளிதில் கடந்து மகிழ்ச்சியுடன் வாழலாம்.

நிம்மதி உங்கள் சாய்ஸ்

‘தாயின் சிந்தை கலங்க பூமிக்கு வருகிறோம். பிறப்பும் இல்லாமல் இறப்பும் இல்லாமல் நாளொன்று விடிவதில்லை எனப் புரிந்தால் நிம்மதி வரும். ஜனனமும் பூமியில் புதியது இல்லை, மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை, இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை, இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை’ என்றார் ஒரு கவிஞர். இயற்கைக்கு முன்னால் எதுவும் நிலையில்லை. நம்முடைய செயல்கள்தான் நம் நிம்மதியை, பிரச்சினையைத் தீர்மானிக்கின்றன. சக மனிதர்கள் மேல் ஏற்படும் கோபமும் வன்மமும் நம் நிம்மதியைக் குலைத்து விடுகின்றன. மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை. செய்த தவறை மன்னித்தல், அதைக் கடந்துவருதலே நிம்மதிக்கான வழிகள்!

நேர்மறை எண்ணங்கள்

பிறந்த குழந்தையின் கால் நுனியின் ரோஜா வண்ணத்தை ரசித்திருப்பீர்கள். அதுபோன்ற ஒரு அலாதியான மனநிலையுடன் எப்போதும் இருந்தால் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொண்டு மீண்டுவரலாம்.

பிள்ளைகள் செய்யும் குறும்பை ஏற்போம், மனைவியின் / கணவரின் தவறுகளைச் சகித்துக்கொள்வோம், முகமறியா மனிதர்களின் குறைகளைப் புறந்தள்ளுவோம்.  “முடிந்துபோன தவறுக்கு நியாயம் பேசுவதும், உண்ட சோற்றுக்கு ஊறுகாய் தேடுவதும் ஒன்று” என்று என் தோழியின் தந்தை அடிக்கடி கூறுவார். எதிர்மறையான எண்ணங்கள் நம்மை முன்னோக்கிச் செல்லவிடாமல் வாழ்க்கையையே நரகமாக்கிவிடும். ‘கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை / தரையில் விழும் மழைத்துளி அழுவதும் இல்லை / விதை ஒன்று விழுந்தால் செடி ஒன்று முளைக்கும்’ என்பன போன்ற வரிகளை நம் மனதில் இருத்திக்கொள்வோம்!
எண்ணங்களே நம் வாழ்க்கையில் நல்லது நடக்க பாலமாக அமையும். மனம்விட்டுப் பேசினால் எந்தப் பிரச்சினையும் தீரும். ஒருவரைப் பற்றி பேசுவதைவிட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதால் நன்மைகள் விளையும்!

தன்னம்பிக்கை கொள்வோம்

இன்று இளைஞர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எதற்கும் கோபப்படுகிறார்கள், பயப்படுகிறார்கள், ஆராயாமல் ஒரு முடிவை எடுத்துவிட்டு, தானும் கஷ்டப்பட்டு, பெற்றோரையும் கஷ்டப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு சரியான பாதையைக் காட்டி, வழிகாட்ட வேண்டிய பொறுப்பு பெரியவர்களுக்கு உள்ளது.

இத்தனை வருட வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சினைகளும், சவால்களும் நம் வாழ்க்கையைச் செழுமைப்படுத்தியிருக்கின்றன எனும் ஆக்கபூர்வமான சிந்தனை முதியோருக்கு வேண்டும். அந்தத் தன்னம்பிக்கை இறுதிவரை நிலைத்திருக்க வேண்டும்!
இளைஞர்களைப் புரிந்துகொண்டு வழிகாட்ட பெரியவர்களும், பெரியவர்களை மதித்துப் பின்பற்ற இளைஞர்களும் ஒரே புள்ளியில் இணையும்போது அங்கு எல்லாப் பிரச்சினைகளும் மறைந்துவிடும்.

இனி எல்லாம் சுகமே!

‘திருமணமே வேண்டாம். திருமணம் செய்தாலும் பிள்ளைகள் வேண்டாம்’ என்றெல்லாம் முடிவெடுக்கும் இந்தத் தலைமுறைக்கு தாம்பத்திய உறவின் உன்னதத்தை உணர்த்த முதியோரின் வெற்றிகரமான வாழ்க்கையே சாட்சி!

பிள்ளைகளின் நல்வாழ்வுக்காகத் தங்கள் சொந்தத் தேவைகளைக் குறைத்துக்கொண்டு, சுயநலத்தின் சுவடே இல்லாமல் வாழ்ந்த பெரியவர்களின் வாழ்க்கை இளம் தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடம். இன்றைக்கு, பெற்றோருடன் பேசக்கூட நேரமில்லை என்று ஓடிக்கொண்டே இருக்கும் இளம் தலைமுறையினர், கடின உழைப்புக்கு மத்தியிலும் தங்களைக் கனிவுடன் கவனித்துக்கொண்ட, கஷ்டத்துக்கு நடுவிலும் கல்வி பயிலவைத்த, சிக்கனத்துடன் குடும்பம் நடத்தி தங்களை நம்பியிருந்தவர்களைக் கரை சேர்த்த பெரியவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். பெரியவர்களின் முதுமைக் காலம் சுகமானதாக அமைந்திட இளம் தலைமுறையினருக்குப் பெரும் கடமை உள்ளது.

இலையுதிர் காலத்தில் இருக்கும் இந்தத் தோட்டம், ஒரு காலத்தில் பூத்துக் குலுங்கிய பூந்தோட்டம், காய், கனிகளைத் தந்து நம்மைக் காத்தருளிய பழத் தோட்டம் எனும் எண்ணம் இளம் தலைமுறையினருக்கு எப்போதும் வேண்டும்.

“முதுமை என்பது, நல்ல, இனிமையான விஷயம். முதுமை காரணமாக, (வாழ்க்கை) மேடையிலிருந்து நீங்கள் மெல்ல வெளியேற்றப்படுவீர்கள். ஆனால், வசதியான முன்புற வரிசையில் பார்வையாளருக்கான இடம் உங்களுக்கு வழங்கப்படும்” என்று சீனத் தத்துவவியலாளர் கன்பூசியஸ் கூறியிருக்கிறார். பெரியவர்கள் அதை மனதில் இருத்திக்கொண்டால், முதுமை என்பது நிச்சயம் வசந்தத்தின் வாசனை குறையாத பூங்காற்றுதான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in