தொடாமல் தொடரும் - 22

தொடாமல் தொடரும் - 22

படபடவென்று பேசிவிட்டுஅறைக்குள் சென்று ஈரப் புடவையை அவிழ்த்து நைட்டி அணியத் தொடங்கினாள் அஞ்சலி.

அதிர்ந்துபோய் அப்படியேநின்றான் ரகு.

வேகமாக அறைக்குள் வந்து, “உன்ன ஒண்ணுமே கேக்கக் கூடாதா? மண்ணு மாதிரி இருக்கணும்னு சொல்றியா? சாதாரணமாதான கேட்டேன். அதுக்கு இப்படித்தான் திமிரா பதில் சொல்வியா?” என்று கத்தினான் ரகு.

“இப்ப ஏன் வாய்ஸ் ரெய்ஸ் பண்றே? நீ அதை சாதாரணமா கேக்கல. பட்டவர்த்தனமா சந்தேகப்பட்டுக் கேட்டே! அந்தக் கேள்வியால என் கேரக்டரையே கொச்சைப்படுத்திட்டே. நீ கேட்டதையே திருப்பிக் கேக்கறேன். நீ என்ன கேட்டாலும் நானும் மண்ணு மாதிரி இருக்கணுமா? நான் பதில் சொன்னது திமிரா இருந்திச்சின்னா… நீ கேள்வி கேட்டது அதிகாரத்தோட உச்சமா இருந்திச்சி ரகு!”
“பட்டிமன்றப் பேச்சாளரா போயிருக்க வேண்டியவடி நீ! பாய்ன்ட்டுக்குப் பாய்ன்ட் பதில் சொல்றியே ஒழிய… என் ஃபீலிங்ஸைப் புரிஞ்சிக்க மாட்டேன்ற!”

“என்னோட எத்தனை ஃபீலிங்ஸை சார் புரிஞ்சிட்டிருக்கிங்க?”

“என்ன புரிஞ்சிக்கல?”

“நான் உன்னை லவ் பண்ணி கல்யாணம் செஞ்சவ. லவ்வுக்கான முழு அர்த்தமும் உணர்ந்தவ. நீ மட்டும் லட்சம் லட்சமா சம்பா
திச்சா… சத்தியமா சொல்றேன்… நான் வேலைக்குப் போகவே மாட்டேன். பணத்துக்காகத்தான் வேலைக்குப் போக வேண்டி
யிருக்கு. வேலைக்குப் போறப்போ எல்லாரோடவும் நட்பா பழக வேண்டிருக்கு. அந்த நட்பு உரிமையில நான் செய்ற சில விஷயங்கள் உன்னை சந்தேகப்பட வெச்சா… என்னை நீ புரிஞ்சுக்கவே இல்லன்னுதானே அர்த்தம்?”

“தெரியும்டி. கடைசில நான் கேட்டதுதான் தப்புன்னு என்னை கார்னர் பண்ணி மன்னிப்பு கேக்க வெச்சிடுவே… தெரியாமதான் கேக்கறேன். உன் எம்.டியோட உனக்கு நட்பு ரீதியான பழக்கம் இருக்கறது நியாயமான விஷயம். அவனைப் பார்த்த அடுத்த நிமிஷமே நானும் அவனை அப்படியே நண்பனா ஏத்துக்கணுமா என்ன? அவனை வெச்சிக்கிட்டு என்னை மட்டம் தட்றதுக்கும் என் கொள்கைகளை விமரிசனம் செய்றதுக்கும் உனக்கு எந்த ரைட்ஸும் இல்ல. அங்க உனக்கு புருஷனைவிட நண்பன் பெருசா போய்ட்டான். எந்தச் சூழ்நிலையிலயும் புருஷனை விட்டுக்குடுக்கக் கூடாதுன்ற அடிப்படை நாகரிகத்தைக் காத்துல பறக்க விட்டுட்டே…”

“நான் சும்மா ஒரு ஹ்யூமருக்குதான்…”

“நீ எது சொன்னாலும் அதை நான் வெறும் ஹ்யூமர்னு சாதாரணமா எடுத்துக்கணும். நான் சொன்னா மட்டும் ஒவ்வொரு வார்த்தையையும் நீ அகழ்வாராய்ச்சி செய்வே… நல்லா இருக்குடி உன் நியாயம்.”

“இப்ப நான் எதுவும் பேசக் கூடாது. அவ்வளவுதான? பேசலப்பா” என்றவள் நைட்டியுடன் ஒப்பனை மேஜைக்குச் சென்று ஹேர் ட்ரையர் எடுத்து ஈரக் கூந்தலுக்குள் வெப்பக் காற்றைச் செலுத்தினாள்.

“அதான் ஆசிட்ல டிப் பண்ணி எடுத்த மாதிரி நறுக் நறுக்குன்னு பேசி முடிச்சிட்டியே… இன்னும் என்ன பேசணும்?”
இரண்டு கைகளையும் சேர்த்து அவனைக் கும்பிட்டு, “ரகு… போதும். ப்ளீஸ்… நிறுத்திக்கலாம். எனக்குத் தலை வலிக்குது'' என்றாள் அஞ்சலி.

“நான் பேசினா உனக்குத் தலைதான் வலிக்குது. நீ பேசினா எனக்கு நெஞ்சே வலிக்குதே…”

“கடவுளே… நான் மழையில நனைஞ்சதால வந்த தலை வலியைச் சொன்னேன். எல்லாத்துக்கும் குதர்க்கமாவே அர்த்தம் கற்பிச்சிக்கறே நீ. இதை மட்டும் சொல்லிடறேன்…நல்லாப் புரிஞ்சுக்கோ. எனக்கு உன் சில பாலிசீஸ்தான் பிடிக்காது.
டோட்டலா உன்னையே பிடிக்காதுன்னு எப்பவும் சொன்னது

மில்ல… நினைச்சதும் இல்ல. லவ் பண்றதுக்கோ, செக்ஸுக்கோ எனக்கு இன்னொரு ஆம்பளை தேவைப்படலை. போதுமா?”
அமைதியாக அறையைவிட்டு வெளியே வந்தான் ரகு.

டீ எஸ்டேட் அலுவலகத்தில் டைப் செய்துகொண்டிருந்த அஞ்சலி சற்றுத் தள்ளி ஒரு ஸ்டேட்மென்ட்டை செக் செய்துகொண்டிருந்த சத்யாவைப் பார்த்தாள்.

“சத்யா… அதை முடிச்சிட்டு சொல்லு. கேன்ட்டீன் போலாம். உங்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.
“முடிச்சிட்டேன். வா… போலாம்.”

இருவரும் கேன்ட்டீன் வந்து பிஸ்கெட்டும், சமோசாவும் எடுத்துக்கொண்டு ஒரு மேஜையில் எதிரெதிரில் அமர்ந்தார்கள்.
அஞ்சலி தன் விரல்களைக் கோர்த்து… விடுவித்துக் கொண்டிருக்க… அவளே பேசட்டுமென்று அமைதியாக இருந்தான் சத்யா.
“சத்யா…பயமா இருக்கு” என்றாள்.

“என்னாச்சி?”

“ரெண்டு நாள் லீவு போட்ருந்தனே… வயிறு சரியில்லைன்னு அதுக்கு லீவ் லெட்டர்லயும், உங்கிட்டயும் சொன்ன காரணம் பொய் சத்யா.”
“பின்னே?”

“ரெண்டு நாள் முன்னாடி காலைல டிபன் செஞ்சிட்டிருந்தேன். திடீர்னு மயக்கமா வந்திச்சி. கண்ணு அப்படியே இருட்டிச்சி. ஹாலுக்கு வந்து சேர்ல உக்கார்ந்துடலாம்னு நினைச்சேன். அதைச் செயல்படுத்த முடியல. கொஞ்சம் நேரம் கழிச்சிப் பாக்கறேன்… கிச்சன்லயே படுத்துக் கிடக்கேன். ஐ மீன்… பிளாக் அவுட் ஆகி விழுந்திருக்கேன். என் பக்கத்துலயே கிரைண்டர் இருந்திச்சி. நல்ல வேளை அது மேல விழல. தரையில விழுந்திருக்கேன். முழங்கையில மட்டும் சின்னதா அடி. டைம் பார்த்தேன். இருபது நிமிஷமா மயக்கத்துல கிடந்திருக்கேன். அந்தச் சமயம் பரணி இன்னும் எந்திரிக்கல. அவன் மட்டும் முழிச்சிருந்தா பயந்து கத்திருப்பான். பக்கத்து வீட்லேர்ந்து ஓடி வந்திருப்பாங்க. பெரிய சீனாயிருக்கும். அப்பறம் முகம் கழுவிட்டு வந்தேன். வெரி மச் நார்மல். மறுபடி மயக்கம் வரலை.”

“மை காட்… டாக்டர்ட்ட போனியா இல்லையா?”

“அதுக்குதான் லீவு போட்டுட்டுப் போனேன். கம்ப்ளீட்டா ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப் செஞ்சிடலாம்னு சொன்னார். நேத்து ப்ளட், யூரின், எக்ஸ் ரே, ஈசிஜி, ட்ரெட் மில் அது இதுன்னு எல்லா டெஸ்ட்டும் முடியறதுக்கு முழு நாள் ஆயிடுச்சி.”
“ரிப்போர்ட்ல ஒண்ணும் இல்லையே?”

“இன்னிக்குதான் ரிப்போர்ட்ஸ் வருது. அதான் பயமா இருக்குன்னு சொன்னேன்.”

“நீ சதா ஸ்ட்ரெஸ்லயே இருக்கியா… பிபி ஏறியிருக்கும். வேற ஒண்ணும் இருக்காது அஞ்சலி. யாரு டாக்டர்?”
“ஆர்.ஜே ஹாஸ்பிட்டல். டாக்டர் ஜெரால்ட்.”

“தங்கமான டாக்டராச்சே… அதே ஹாஸ்பிட்டல்லதான் செக்கப் பண்ணிக்கிட்டியா?”
“ஆமாம்.”

“டாக்டரை எப்ப பாக்கணும்?”

“இன்னிக்கு ஈவினிங் ஆறு மணிக்கு.”

“நானும் உன்னோட வர்றேன். ஒண்ணும் இருக்காது அஞ்சலி. சும்மா டென்ஷனாகாத.”

“அப்படித்தான் நானும் எனக்குள்ளேயே சொல்லி சமாதானப்படுத்திக்கறேன். ஆனா பக் பக்குங்குது சத்யா. பரணி சின்னப் பையன். அவனைப் படிக்க வெச்சி ஆளாக்கிட்டாப் போதும். என் கடமை முடிஞ்சிடும். எனக்குன்னு வேற எந்த ஆசையும் இல்ல. இன்னும் பத்துப் பதினைஞ்சி வருஷம் எனக்கு வேணும் சத்யா.''

“பார்த்தியா? ஆரம்பிச்சிட்டே…”

“ஹார்ட்ல எதாச்சும் பிரச்சினை இருக்குமா சத்யா?”

“ஈவினிங் டாக்டரைப் போய்ப் பாக்கறவரைக்கும் இப்படித்தான் நெகடிவா பேசிட்டிருக்கப் போறியா? ஸ்டாப் ஐ ஸே. வா… போய் வேலையப் பார்க்கலாம். வேலையில கவனத்தைத் திருப்பு. நத்திங் வில் ஹேப்பன். எதுவா இருந்தாலும் இன்னிக்கு ட்ரீட்மென்ட்ஸ் இருக்கு. நீ சொன்னதை வெச்சிப் பாக்கறப்ப உனக்கு பிபி வந்திருக்கலாம்னுதான் தோணுது. வா… ஆபீஸ் போலாம்'' என்று அவளுக்குச் சொல்லிவிட்டாலும் உள்ளுக்குள் சத்யாவை ஒரு கவலை தொற்றிக்கொண்டது.


ரகு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியபோது, பால்கனியில் நின்றபடி பரணியைத் தோளில் சாய்த்து தட்டிக்கொடுத்து தூங்கவைத்துக்கொண்டிருந்தாள் அஞ்சலி.

அறைக்குள் வந்து முகம் கழுவி, உடை மாற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்து, “டின்னருக்கு என்ன டிபன் இன்னிக்கு?'' என்றான் ரகு.
குழந்தையைப் படுக்கவைத்தபடி, “இன்னும் பிளான் பண்ணல.”

“ஹோட்டலுக்குப் போலாம்னு சொல்லிடாத. ரொம்ப டயர்டா வந்திருக்கேன்.”

சோபாவில் அமர்ந்து அவன் ரிமோட்டை எடுக்க… அவனிடமிருந்து அதை வாங்கி ஒரமாக வைத்துவிட்டு, “கொஞ்சம் பேசணும் ரகு” என்று எதிர் சோபாவில் அமர்ந்தாள் அஞ்சலி.

“அந்த ஆர்க்யூமென்ட்டை அன்னைக்கே நான் மறந்துட்டேன் அஞ்சலி. அது சம்பந்தமா எதுவும் பேச வேணாமே.”
“அது சம்பந்தமா பேசணும்னு நான் சொல்லலையே…”

“வேற என்ன… சொல்லு?”

“பவித்ரா யாரு ரகு?” என்றாள் அஞ்சலி அமைதியாக.

ரகு அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.

(தொடரும்…)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in